Published:Updated:

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

ஓவியம் : பிரேம் டாவின்ஸி

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

ஓவியம் : பிரேம் டாவின்ஸி

Published:Updated:
சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

‘சீமென்’ சண்முகம் கட்டையான உருவம்கொண்டவர். தனது எல்லா பாடுகளையும் ஒரு சிரிப்பில்

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

கடந்துவிடுபவர்.  நடிகர் திலகத்தின் தீவிர வெறியர். ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே’ என்று குழந்தைகளைத் தூக்கி சிவாஜியாகவே கொஞ்சி அழிச்சாட்டியம் செய்பவர். சரக்கடித்துவிட்டால் போதும், ‘வசந்த மாளிகை’ சிவாஜிபோல, மன்மத அம்புகளைப் பெண்களின் மீது சரமாரியாக ஏவிக்கொண்டிருப்பார். ‘மதன மாளிகையில்... மந்திர மாலைகளாம்...’ தண்ணீர்க் குடத்தைச் சுமந்து செல்லும் அன்னக்கிளியின் இடுப்பைக் கிள்ளிக் கண்ணடிப்பார் சிவாஜி. (பேட்டையில் அவரை நாங்கள் சிவாஜி என்றே அழைப்பதால், இங்கேயும் சிவாஜியை சிவாஜியாகவே நாம் உருவகித்துக்கொள்ளலாம்). ‘இன்னா பெர்சே எட்த்துப் போட்டுக்கினு அடிக்குதா... வயசாகியும் அடங்குறியா... இரு இரு... உன்ன வெச்சிக்கறேன்’’ சிவாஜியின் மீது குடத்துத் தண்ணீரைத் தெளித்து ஒரு பொய்க்கோபத்தைக் காட்டுவாள். “அடிங்... சக்கன்னானா... உன் வாயாலயே வெச்சிக்கிறன்ட்டல... அப்போ மஸ்த்த ஏத்திர வேண்டியதுதான்...” -சிவாஜி உதட்டைச் சுழித்து, ‘தனது வெட்கத்தைக் காட்டுகிறேன் பேர்வழி’ என்று தனது சுண்டு விரலில் இல்லாத நகத்தைக் கடித்துக்கொண்டிருப்பார். அன்னக்கிளி சிரித்தபடியே நகர்ந்துவிடுவாள்.

பேட்டையில் புறா பந்தயம் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கலாசார நிகழ்வு. தன் குழந்தையைக் கவனிக்கிறார்களோ இல்லையோ, புறாவைத் தனது நெஞ்சாங்கூட்டில் வைத்துப் பொத்திக் கொண்டிருப்பார்கள். புறா ரேஸ் தேதியை அறிவித்துவிட்டால் போதும், ஒரு நாடோடியாகப் புறாவுடன் லயித்துக் கிடப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

மாறனும் ‘அடிவிடும் பந்தய’த்துக்காகப் புறாவைத் தயார் செய்துகொண்டிருந்தான். அடிவிடுவதென்றால், பத்துப் புறாக்களைப் பத்துப் பேர் வட்டமாக நின்றுகொண்டு வானம் நோக்கி விடுவார்கள். புறாக்கள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வட்டமாக ஒரே லயமாகச் சுற்றிக்கொண்டிருக்கும். தாவு தீர்ந்த புறாக்கள் கீழே வந்துவிடும். கடைசியாக நின்று விளையாடும் புறாதான் வெற்றிபெறும். இப்படியாக அடிவிடும் போட்டியில் கடைசியாக மாறனின் புறாவும், நிஜாமின் புறாவும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எல்லோரும் பரபரப்போடு வானம் பார்த்துக்கொண்டிருந்தோம். நிஜாமின் புறா, தாவு தீர்ந்ததைப்போல அல்லாடிக்கொண்டிருந்தது. மாறனின் முகம் வெற்றியின் களிப்பில் மலர்ந்துகொண்டிருந்தது. அப்போதுதான் யாரும் எதிர்பாராவண்ணம் அது நடந்தது. சிவாஜியின் மதிவதனி புறா, மாறனின் புறாவைக் கடந்து பறந்துசென்று ஒரு மாடத்தில் அமர்ந்துகொண்டது. மாறனின் புறா, மதிவதனியைக் காதலோடு பார்த்தது. நிஜாமிற்குப் புரிந்துவிட்டது, மாறனின் புறாவை ‘மஸ்து’க்கு விடவில்லை என்று. மாறனின் புறாவுக்கு ‘மஸ்து’ கூடி, மதிவதனியை நோக்கி மாடத்திற்குச் செல்ல மதிவதனி வெட்கத்தில் ‘குருக் குருக்’ என்றது. கடைசியில் நிஜாமின் புறா தாவு தீர்ந்தாலும் கடமையோடு சுற்றிக்கொண்டிருந்தது.

நிஜாம் வெற்றிக்களிப்பில் தனது புறாவை முத்திக்கொண்டிருந்தான். மாறன் வெறியோடு தனது புறாவைப் பார்த்தான். அது மாடத்தில் மதிவதனியோடு காதலாகிக் கசிந்துகொண்டிருந்தது. “டேய் புறாவுக்கு சோறு வைக்கிறதோ, பேரு வைக்கிறதோ முக்கியம் இல்லடா... அப்பப்போ மஸ்துக்கும் வுடணும்... அணைப்பப் போட்டாதாண்டா அடிவுட முடியும்” என்று சிவாஜி நக்கல்விட்டார். சிவாஜி, அன்னக்கிளியிடம் ‘மஸ்த்தை ஏத்திர வேண்டியதுதான்’ என்று சொன்னது, சமாசாரத்தின் குறியீட்டுச் சொல்லாக இப்போதும் பேட்டையில் புழங்கிக்கொண்டிருக்கிறது. ‘மஸ்து’ என்பதை வீரம் என்றும் சொல்லலாம்.

பேட்டையில் ‘சீமென்’ என்றால் சிவாஜிதான். எங்களுக்கெல்லாம் கடல் மனிதனாக அவரே இருந்தார். கடற்கதைகளையும் தேவதைமார் கதைகளையும் தேசம்மாக்களின் கதைகளையும் சிவாஜிதான் சொல்வார். கண்கள் விரிய விரிய வேம்புலிச் சுறாவின் வேட்டையை சிவாஜி சொல்லிக்கொண்டிருக் கும்போது எனக்குள் அலையடித்து நுரை ததும்பும். கப்பலின் இண்டு இடுக்கு வரை சீமெனுக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆங்கர் போடுவதிலிருந்து திசை பார்ப்பது வரை எல்லாம் தெரிந்த மனிதர் சீமெனாகத்தான் இருக்க முடியும். கடல் தண்ணீரைப் பார்த்தே கடலின் தன்மையைக் கண்டறிந்துவிடுவார். “கேப்டன்... தண்ணி ஒரப்பா இருக்கு. ஆங்கர போட்ருலாம்” என்பார்.

“ஒரப்புன்னா இன்னா சிவாஜி...?”

“கடல் தண்ணி பளுவா ஆய்டும்... அதான்டா பையா ஒரப்பு”

“அப்போ நீகூட ஒரப்பான ஆளுதான் சிவாஜி” என்பேன். என்னை முத்திவிட்டு நிஜாரிலிருந்து ஒரு தேன்மிட்டாயைப் பரிசளித்துப் போவார் சிவாஜி.

வடசென்னை மொழியைக் கடல்சார் மொழியோடும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

“ஏண்டா பையா... பாடுக்குப் போலியா..?”

சின்னாரு கேட்டதும், “போன பாட்ல டீசலுக்கே மூஞ்சி இல்ல... மூஞ்சி வந்துச்சுன்னா, போட்ட உட்ற

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

வேண்டியதுதான்” என்று சலித்துக்கொள்வான் மாறன். மீன், வலையில் மாட்டவில்லை என்பதை ‘மீன் படல’ என்று சொல்வதும் பணத்தை ‘மூஞ்சி’ என்று சொல்வதும் போகிறபோக்கில் வழக்காகிப் போனது.

நல்ல மழை நேரம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்றத்தில் சப்பணமிட்டபடி உட்கார்ந்துகொண்டு நாட்டுச்சாராயத்தை ருசித்துச் சப்பிக்கொண்டிருந்தார் சிவாஜி. நாவின் சுவைநரம்புகளுக்குத் தோதாக, மட்டை ஊறுகாயும் தேன்மிட்டாய்களும் கைவசம் இருக்கும். ஹனுமான் நாடகத்தில் வரும் தாராசிங்போலவே உருண்டு திரண்டிருப்பார் சிவாஜி. அன்று, ‘செல்லக்கிளிகளாம் பள்ளியிலே... செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே...’ என்று நிறுத்தி, ஒரு லோட்டா சாராயத்தைச் சப்பிக்கொண்டார். ஆள்காட்டி விரலால் மட்டையைத் தொட்டு உள்நாக்கில் தடவிக்கொண்டார். பின்பு, அந்தக் காரத்திற்கு வாகாக, தேன்மிட்டாயை ஒரு கடி கடித்துக்கொண்டார். அந்த மழையில் சிவாஜியோடு தேன்மிட்டாய் சாப்பிடுவது என்பது ‘மிட்டா’வாக இருந்தது. ‘மிட்டா’ என்றால் இதமாக இருக்கிறது என்று அர்த்தம் என்று சொல்லவா வேண்டும்.

‘’சிவாஜி, நீ ஆயாவ உசார் பண்ணித்தானே கட்டிக்கின” தேன்மிட்டாயின் ஜீரா ‘மிட்டா’வாகத் தொண்டைக்குழிக்குள் இறங்கியது.

“டேய் குஸ்மி... உங்க ஆயாதாண்டா என்னை உசார் பண்ணிச்சு... அப்போலாம் சீமென் மாப்ளன்னா சும்மாவா... செனாக்குனிக் கூட்டம் மாரி சிவாஜியப் பொண்ணுங்க தொறத்தும்... குட்டிங்க போட்ற வலைய அட்த்துகினுப் போற வேம்புலிச் சுறாடா இந்த சிவாஜி... ஆனா, செவுலு செவந்த ஜிலேபி மாரி ஒரு பார்வைய உட்டா பாரு உங்க ஆயா... அந்தகாரமும் ஆடிப்போயி உக்காந்தண்டா... அப்றம் ஒரே லவ்வுதான்... எங்க லவ்வுக்கு அவுங்க அப்பந்தான் சிக்கம். பக்காவா கெட்ச்சு போட்டு சிலேவா அலமேல அபேஸ் பண்ணோம்... பொண்ண அபேஸ் பண்டண்ணு வூட்டாண்ட வந்து ஜப்ரு காட்னானுங்கோ... பொட்லத்த எடுத்து கைல குத்துல்லான்னுதான் பாத்தேன்... அழுவுன கசாறத் தொட்டு நம்ம கையி நாறனுமானு உட்டன்” - சிவாஜி தனது காதல் கதையை மனமகிழ் மன்றத்திற்குள் ஒரு வசந்த மாளிகையாகக் கட்டிக்கொண்டிருந்தார். சிவாஜிக்கு ஒரு லோட்டாவை நிரப்பினேன். ‘எந்த மனதில் பாசம் உண்டோ... அந்த மனமே அம்மா அம்மா...’ என்று சிவாஜி, நடிகர் திலகமாகவே மாறிக்கொண்டிருந்தார்.

வடசென்னை வட்டார மொழியின் பேராசிரியராகவே சிவாஜி இருந்தார். உதாரணத்திற்கு, சிவாஜி சொன்ன தனது காதல் கதையின் வழக்குச் சொல்லையே நாம் எடுத்துக்கொள்ளலாம். பேட்டையில் சிறுவர்களைக் ‘குஸ்மி’ என்றே அழைப்பார்கள். என்னை சிவாஜி, பெயர் சொல்லிக் கூப்பிட்டதாகவே நினைவில்லை. சண்டை கட்டிக்கொண்டாலும் “நீலாம் எனக்கு குஸ்மி மாரி...” என்று ‘ஜப்ரு’ காட்டுவார்கள். ‘ஜப்ரு’ என்றால், ‘உதார் விடுவது’ என்று பொருள். ‘உதார்’ என்றால் சீன் போடுவது என்றும் சொல்லலாம்.

துறைமுகத்தில் சரக்கு ஏற்றியிறக்கும் லோடுமேன்களின் வழக்கு அபாரமாக இருக்கும். அப்படியான ஒரு வழக்குதான்  ‘அரியாவுடு... அபேஸ்வுடு’. ‘அரியா’ என்றால் பொருள்களை இறக்க வேண்டும். ‘அபேஸ்’ என்றால் தூக்க வேண்டும். பேட்டை மக்களுக்குச் சொற்கள் புதிதாகவும் அர்த்தம் சட்டென விளங்கிக்கொள்ள முடியாதபடிக்கும் இருந்தால் அந்த வார்த்தையைச் சிக்கெனப் பற்றிக்கொள்வார்கள். அப்படி இறுகப் பற்றிக்கொண்டதுதான் ‘அபேஸ்’ எனும் வழக்கு. “பொண்ண அபேஸ் பண்ணிட்டானுங்கப்பா” என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்தானே? இப்படித்தான்  ‘சிலேவாக’ சில வார்த்தைகள் இப்பொழுதும் மக்களின் மொழியோடு புழங்கிக்கொண்டிருக் கின்றன. ‘சுலபமாக’ என்ற வார்த்தைதான் ‘சிலேவாக’ என்று மாறியிருக்கிறது. குடல், குந்தானி எல்லாம் ஒரே வார்த்தையாக, ‘பொட்லமாக’ வடிவம் கொள்கிறது.

`ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்... ஏன்? ஏன்? ஏன்...? பல எண்ணத்தில் நீந்துகின்றேன்... ஏன்...?’ - சிவாஜி மதமதப்பின் உச்சத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தார். போதையின் ஒளியில் மிதந்துகொண்டிருந்த அவரின் கண்கள் கருணையைப் பொழிந்துகொண்டிருந்தது. இப்போது அவரிடம் எதைக் கேட்டாலும், கர்ணனாக மாறித் தனது கவச குண்டலத்தை அறுத்துக் கொடுத்துவிடுவார். தக்க சமயம் என்பதால், நானும் கேட்டுவிட்டேன்.

சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்

“சிவாஜி, உனக்கு ஏன் ‘சீட்டா கை சிவாஜி’னு பேரு வந்தது?” இப்படி யாராகிலும் கேட்டால், அடுத்த நொடியே சிவாஜி, எம்.ஜி.ஆராகி பெண்டை நிமிர்த்திவிடுவார். என்னை ஏறிட்டுப் பார்த்தார். முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் ஒரு லோட்டாவைச் சப்பிக்கொண்டார்.

“டேய் குஸ்மி... என் சினேகக்காரனுங்கோ வெச்ச பட்டப்பேர்டா அது... நா சின்ன வயசா இருக்கும்போது பேட்டையில கப்பல் வர்றதுன்றது தேர் வர்றா மாதிரிடா... சின்ன வயசுலர்ந்தே கப்பல்ல வேலை செய்யணும்ங்கிறது எங்கனவு. அதுக்கோசறம்தான் சீமெனா வேலைக்குப் போனேன். மொத வாட்டி கப்பல்ல கால் வைக்கச்சொல்லோ, சும்மா ஜில்லுன்னு இருந்துச்சு... அப்போதான் ஏழுமல கண்ல அது பட்டுச்சு... சீமச்சாராயம்... எல்லாம் சோகேஸ்ல வைக்கிற பூந்தொட்டி மாரியே அவ்ளோ அழகா இருந்துச்சு... ஏழுமலைக்கு இருப்பே கொள்ளல... அந்தப் பாட்ல எப்படியாவது லாவிடனும்னு நெனச்சான்...  ‘இது இன்னாடா பிரமாதம்’னுட்டு நாந்தான் டவுசர்ல சொருவிக்கினேன்?”

இடையில் நிறுத்திய சிவாஜி, பீடியைப் பற்றவைத்து ஓர் இழுப்பு இழுத்துக்கொண்டு ஆரம்பித்தார். “ஒரு குதிரையில பெரிய வாளோட ஒரு ராஜா உட்காந்து இருக்குறா மாதிரி படம் போட்ட பாட்லு... கப்பல்லருந்து இறங்கச்சொல்ல பாட்லு கீழ உளுந்துட்டுது, கேப்டன் பாத்துட்டான். துரை கத்த ஆரம்பிச்சுட்டான்... ‘ Cheat guy... Cheat guy’னு குரல உட்டான்... அங்க புட்ச்ச ஓட்டம், வூட்டாண்டதான் வந்து நின்னம். அப்டி ஏழுமலைக்காக எடுக்க போயி நா ‘சீட்டா கை சிவாஜி’யா மாறிட்டேன்...” - பீடியை நன்கு இழுத்துப் புகையை விட்டார்.

வெள்ளைக்காரக் கேப்டன் Cheat guy என்று சொன்னதுதான் மருவி ‘சீட்டாகை’-யாக மாறியது என்பதை சிவாஜியிடமே தெரிந்துகொண்டேன். ‘சீட்டா கை’ என்றால்,  ‘ஏமாற்றுபவன்’. எங்கள் சிவாஜி, ஏமாற்றுபவரில்லை. நிறையப் போத்தல்கள் வைத்திருந்த கேப்டனிடமிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டார். ஏமாற்றுவது வேறு... எடுத்துக்கொள்வது வேறு.

சிவாஜி எழுந்தார். கொஞ்சம் தள்ளாடினார். மன்றத்திலிருந்து வெளியே வந்தோம். ஒரு முன்னாள் அரசியல்வாதி, சிவாஜியைப் பார்த்து, ‘வணக்கம்’ வைத்தார். மந்திரி, வெள்ளையில் தேங்காய்ப்பூ கைக்குட்டையோடு தகதகவென்று எங்களைக் கடந்து சென்றார். அப்போது சிவாஜி சொன்னார்,

 “சிவாஜியப் பாத்து ‘சீட்டா கை’யினு சொல்றானுங்கோ... ங்கோத்தா, இவன் பெரிய ஜோப்டாடா” என்று சிரித்தார். உண்மைதான்!

“ ‘சீட்டா கை’னா ஏமத்துக்காரன். ‘ஜோப்டா’னா திருடன்... மொள்ளமாரி... மொத்தத்துல கொள்ளக்காரன்” என்று சிவாஜி அன்று சிரித்த சிரிப்பு இன்று விளங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism