Published:Updated:

பொது இடங்களில் 1 லட்சம் புகார் அட்டைகள்... ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதுச்சேரி போலீஸ் கிடுக்கிப்பிடி!

பொது இடங்களில் 1 லட்சம் புகார் அட்டைகள்... ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதுச்சேரி போலீஸ் கிடுக்கிப்பிடி!
பொது இடங்களில் 1 லட்சம் புகார் அட்டைகள்... ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதுச்சேரி போலீஸ் கிடுக்கிப்பிடி!

பொது இடங்களில் 1 லட்சம் புகார் அட்டைகள் வைத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் செக் வைத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

புதுச்சேரியில் ஆட்டோ கட்டணம் தாறுமாறாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அரசு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்தது. அதன்படி குறைந்தப்பட்ச கட்டணமாக 1.8 கிலோ மீட்டருக்கு 35 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயும், காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் 5 ரூபாயும் கட்டணமாக வசூலித்துக்கொள்ளலாம். இந்த புதிய கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் எனவும், கடந்த ஆண்டு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆட்டோ ஒட்டுநர்கள் வழக்கம்போலவே அரசின் உத்தரவைக் கடைப்பிடிக்காமல், பயணிகளிடம் தாறுமாறாகக் கட்டணம் வசூலித்துவருகின்றனர்.

இது தொடர்பான புகார்களைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்ந்து அனுப்பினர் பொதுமக்கள். அதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் பற்றி புகார் தெரிவிக்க, போக்குவரத்துத் துறை சார்பில் ஆட்டோ பயணிகள் குறை தெரிவிக்கும் அட்டை தயாரிக்கப்பட்டு, அதை ஆளுநர் மாளிகையில் வெளியிட்டார் கிரண்பேடி. அந்தப் புகார் அட்டையில், ஆட்டோக்களில் மீட்டர் கட்டணத்தைவிட அதிகமாக வசூல்செய்வது, பயணிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோவின் பதிவெண், சவாரிக்கு வர மறுத்தல், மீட்டர் சரிவர வேலை செய்யாததுகுறித்து புகார் தெரிவிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.



”பயணிகளுக்கான இந்தப் புகார் அட்டைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்படும். முதல் முறை புகாரில் சிக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதமும், மூன்று முறை தொடர்ந்து புகாரில் சிக்கினால் ஆட்டோ பர்மிட் மற்றும் ஓட்டுநர் உரிமம்  ரத்துசெய்யப்படும். முதல் கட்டமாக, 1 லட்சம்  புகார் அட்டைகள் அடிக்கப்பட்டுள்ளன” என்று இந்தத் திட்டம்குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டி.ஜி.ஜி.சந்திரன். அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரைச் சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் புகார் அட்டைகளை வைத்தது போக்குவரத்துத் துறை. பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் புதுச்சேரிக்கு வரும் அயல்நாட்டவர்கள் மத்தியிலும் அரசின் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.