Published:Updated:

“அ.தி.மு.கவை விட்டு பா.ம.கவில் இணைந்தது ஏன்?" நடிகர் ரஞ்சித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அ.தி.மு.கவை விட்டு பா.ம.கவில் இணைந்தது ஏன்?" நடிகர் ரஞ்சித்
“அ.தி.மு.கவை விட்டு பா.ம.கவில் இணைந்தது ஏன்?" நடிகர் ரஞ்சித்

சாதிப் பிரிவினையை இப்போதைய ஆட்சியாளர்கள் உண்டாக்குகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கட்சி வேண்டாமா. அதுதான் பா.ம.க. இவர்களிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்துச் சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அது திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தை ஆளும் தலைமைப் பதவியை ஏற்றால்தான் முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மீபத்தில் நடிகர் ரஞ்சித் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். ரஞ்சித்தின் அரசியல் பார்வை, ரஜினி கமல் அரசியல் பிரவேசம் ஆகியவை குறித்து அவரிடம் பேசினேன். 

திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வரவேண்டுமென்கிற உணர்வு எப்படி வந்தது? 

சிறு வயதிலிருந்தே என் நண்பர்களுடன் சேர்ந்து, குறிப்பாக கடந்த 25 வருடங்களாக நிறைய சமூக சேவை செய்திருக்கிறேன். நாட்டில் நடக்கும் கலாசார சீரழிவை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் அரசியலில் இறங்கி அதைத் தீர்க்க வேண்டுமென நினைக்கிறேன். 

அ.தி.மு.க-விலிருந்து விலகி வந்ததற்கான குறிப்பிட்ட காரணம்? 

தர்மயுத்தம் நடத்திய மதிப்பிற்குரிய ஓ.பி.ஸ் அவர்களுக்கு ஆதரவாகப் பேசினேனே தவிர கட்சியில் இணைந்துப் பணியாற்றவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தை மக்களுக்காகச் செய்ய வேண்டுமென்கிற ஏக்கத்தில்தான் அவர்களுக்கு ஆதரவாகப் பேசினேன். ஆனால், அதற்கு அங்கே சாத்தியமில்லை எனத் தெரிந்துவிட்டது. 

பா.ம.க-வில் எந்தவித அரசியலில் ஈர்க்கப்பட்டு அந்தக் கட்சிக்குச் சென்றீர்கள்? 

மது, புகையிலை ஒழிப்பில் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போதுவரை அது முற்றிலுமாக ஒழிய மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் காட்டிய ஆர்வம்தான் பா.ம.க-வுக்கு துணை நிற்க வேண்டுமென ஆர்வம் காட்டியது. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது, நாட்டின் பங்குச்சந்தை கீழ் இறங்கிவிட்டது. சாதிப் பிரிவினையை இப்போதைய ஆட்சியாளர்கள் உண்டாக்குகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கட்சி வேண்டாமா. அதுதான் பா.ம.க. இவர்களிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்துச் சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அது திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தை ஆளும் தலைமைப் பதவியை ஏற்றால்தான் முடியும். 

நடிகர்கள் அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து எதிர்த்து வந்தார் அன்புமணி, இப்போது நடிகராகிய உங்களைக் கட்சியில் சேர்த்திருப்பதில் உள்ள முரண் குறித்து.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்று அவர் இதுவரை சொன்னதில்லை. அன்புமணி ராமதாஸ் அவர்கள் நல்ல சினிமா ரசனை கொண்டவர். நடிகர்களின் மாயையில் தமிழகம் மீண்டும் சிக்கிவிடக் கூடாதென்றுதான் அவர் கவலைப்படுகிறார். அந்த மாயைப் பயன்படுத்தி அவர்கள் கட்சி ஆரம்பித்து மக்களை முட்டாள் ஆக்க நினைப்பதை மக்கள் உணர வேண்டுமென்றுதான் கூறுகிறார். சமூக விழிப்பு உணர்வு இல்லாமல் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்குத்தான் அவர் எதிரானவர். 

ரஜினி கமல் அரசியல் வருகை குறித்து? 

இந்த வயதில் இப்போதாவது அரசியலுக்கு வந்தார்களே... அவர்களை வரவேற்கிறேன். ஆனால் அவர்கள் செய்யப்போவது சேவையாக மட்டுமே இருக்க வேண்டும். 

மோடியின் இந்த 4 ஆண்டுக்கால ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

ஏமாற்றம். பெருத்த ஏமாற்றம். மக்களை சரியாகப் புரிந்துகொள்ள முடியாத ஆட்சி. மக்களின் வாழ்வாதாரத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோனதற்கான எந்த முகாந்திரமும் இதுவரை இல்லை. ஜி.எஸ்.டி, டிமானிடைசெஷன், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என மக்களை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டார்கள். 

பா.ம.க மாநில துணைத் தலைவராக உங்களுடைய முதன்மைச் செயல்பாடுகளாக என்னவெல்லாம்
எதிர்பார்க்கலாம்? 

நான் செய்த சமூக சேவையைப் பாராட்டி என்னை ஊக்குவிக்கும் வகையிலே எனக்கு மருத்துவர் ஐயா கொடுத்திருக்கும் இந்தப் பதவியை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். கட்சியின் கொள்கைகளை கிராமந்தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறேன். அதுதான் எங்கள் வெற்றிக்கான அடிப்படைத் திட்டம். வருகின்ற தேர்தல்களில் என் தலைவன் அன்புமணி ராமதாஸ் அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க களத்தில் குதித்திருக்கிறேன். அவரை அடுத்த முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டேன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு