Published:Updated:

இது ரஜினி ஆர்மி!

இது ரஜினி ஆர்மி!
பிரீமியம் ஸ்டோரி
இது ரஜினி ஆர்மி!

தமிழ்ப்பிரபா, படங்கள்: ஸ்ரீனிவாசுலு, ஓவியம்: ஷண்முகவேல்

இது ரஜினி ஆர்மி!

தமிழ்ப்பிரபா, படங்கள்: ஸ்ரீனிவாசுலு, ஓவியம்: ஷண்முகவேல்

Published:Updated:
இது ரஜினி ஆர்மி!
பிரீமியம் ஸ்டோரி
இது ரஜினி ஆர்மி!

ந்தேவிட்டார் ரஜினி! ஏற்கெனவே எதிர்பாராத திருப்பங்களோடு அனல் கூட்டிக்கொண்டிருந்த அரசியல் நிகழ்வுகளில் ஃபைனல் டச் ரஜினியின் அரசியல் என்ட்ரி அறிவிப்பு. முதல்நாளில் ```31ஆம் தேதி அறிவிக்கிறேன்’’ என சஸ்பென்ஸ் வைத்து, ஆறாவது நாள் அத்தனை பேர் முன்னிலையிலும் ‘‘234 தொகுதிலயும்...’’ என வானம் பார்த்து விரல்காட்டியது வரை அத்தனையும் பரபர நிமிடங்கள்! அந்த அதிரடி நாள்களின் நேரடி ஹைலைட்ஸ் இங்கே...

கோடம்பாக்கத்தில் ஒரு சேப்பாக்கம்!

ஆறு நாள்களும் ராகவேந்திரா மண்டபமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சேப்பாக்கம் ஸ்டேடியம்போலப் பரபரப்புடன் காட்சியளித்தது. மண்டபத்தை ஒட்டிய சாலையோரங்களில் ரஜினியின் விதவிதமான புகைப்படங்கள், கீ செயின், கொடி ஆகியவை அமோகமாய் விற்பனை ஆகின.  சுவர்களில் ஓட்டப்பட்ட போஸ்டர்களுக்கு ரசிகர்கள் பயபக்தியோடு சூடம் காட்டிக் கொண்டிருந்தார்கள். சுவரோடு சுவராக ரஜினி போஸ்டரில் முகம் புதைத்து ‘தலைவாஆஆ’ என்று ஆனந்தக் கூச்சலிட்டார் ஒரு ரசிகர். இன்னொரு பக்கம், ரஜினியின் முகம் பொறித்த கொடியைக் கையில் பிடித்தபடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர் சில ரசிகர்கள்.

இது ரஜினி ஆர்மி!

காத்திருந்த காவலர்கள்

திருநெல்வேலியிருந்து கடந்த ஒருவாரமாக சென்னையில் வந்து தங்கியிருக்கும்  ரசிகர் கூட்டம், புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகும் தினமும் ரஜினி மண்டபத்திற்குள் நுழையும் காட்சியைப் பார்ப்பதற்காகவே வாசலில் நின்று காத்திருந்தனர். புகைப்படம் எடுக்க முன்பதிவு செய்யாதவர்கள்கூட ஆர்வமிகுதியினால் வெளியூரிலிருந்து நள்ளிரவுப் பேருந்து, ரயில் ஏறி ராகவேந்திரா மண்டப வாசலில் நின்று வாயில்காவலர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

இது ரஜினி ஆர்மி!

முறையான அட்டவணைப்படி ஒரு ராணுவ ஒழுங்குடனேயே நடந்தது ரசிகர் சந்திப்பு. காலை ஏழு மணிக்கு அடையாள அட்டைப் பரிசோதனைகளுக்குப் பிறகு ரசிகர்கள் வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டார்கள்.  ரஜினியின் வருகைக்கு முன் அமைப்பாளர்கள் ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் விடுத்த கோரிக்கைகளில் சில: “தயவு செய்து தலைவர் கால்ல விழாதீங்க, அவருக்குப் பிடிக்காது”, “அவர் பேசும்போது குறுக்கே கத்தாதீங்க, மத்தவங்களுக்குப் புரியாது”, “வந்தவங்க எல்லோரும் நிச்சயம் சாப்பிட்டுவிட்டுப் போகணும்”, “நேத்து வர முடியாதவங்க இன்னைக்கு வர வேண்டாம். வாய்ப்பு முடிந்தது, ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.” இந்த அறிவிப்புகளை மீறுகிறவர்களைக் கவனித்துக் கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தனர் அமைப்பாளர்கள்!

தத்துவ பாட்ஷா

முதல் ஐந்துநாள்கள் ரஜினியினுடைய பேச்சு பெரும்பாலும் அரசியல் அமைப்புகளைச் சாடாமல் ரசிகர்கள் தங்களின் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும், ஒழுக்கம், கட்டுப்பாடு, தியானம் என்று பொதுவான விஷயங்களை மையப்படுத்தியே இருந்தது. தன் கலைப்பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர்களைப் பற்றியும் பேசினார். மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்திப்பதால் அந்த மாவட்டத்துடன் தனக்கு இருக்கும் உறவையும் பகிர்ந்துகொண்டார்.

இது ரஜினி ஆர்மி!

தெய்வ தரிசனம்!

ரசிகர்கள் ரஜினி அருகில் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது தன்னிலை மறந்து நடந்துகொண்டனர். ஒருவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் ரஜினியைப் பார்த்தபடி இருகரம் கூப்பி நின்றுகொண்டேயிருந்தார். சுற்றியிருந்தவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்க எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து உடனடியாக அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டார். பிறகு, ரஜினி அவரைத் திரும்பவும் புகைப்படம் எடுப்பதற்கு அழைக்க, அந்த ரசிகர் அதேபோல ரஜினியைப் பார்த்துக் கைகூப்பிய படியேதான் நின்றார். அந்த ரசிகரிடம் தனியாகப் பேசினோம், “நான் போட்டோ எடுக்க வரலை சார். என் கடவுளைப் பார்க்க வந்தேன்” என்றார்.

எங்கெங்கு காணினும்...

ரசிகர்களில் பலரும் ரஜினி மாதிரியே ஹேர்ஸ்டைலில் இருந்தனர். வெள்ளை பேன்ட், வெள்ளை ஜிப்பாவுடன் கையில் பாபா சிலையை வைத்துக்கொண்டு ராகவேந்திரா மண்டபம் இருக்கும் சாலையைச் சுற்றி வந்தவர், பாட்ஷா படத்தில் வரும் ஆட்டோக்கார மாணிக்கம், தென்மதுரை வைகைநதி பாடலில் வரும் கோட் சூட் ரஜினி,  காலா காவி வேட்டி ரஜினி, என்று பலவித ரஜினிகளை மண்டபத்திற்கு வெளியே பார்க்க முடிந்தது. புகைப்படம் எடுக்க வாய்ப்பு இல்லாமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்த ரசிகர்கள், ரஜினிபோல வேடமிட்டவர்களின் தோள்மீது கைபோட்டுப் படமெடுத்தபடி தங்கள் ஆசையைத் தீர்த்துக்கொண்டனர்.

உயிரினும் மேலான...

தன்னைப்போலவே ஆடை அணிந்து வந்தவர்களை மெலிதாக ரஜினி ரசிப்பதை உணர முடிந்தது. முத்தாய்ப்பாக ‘கண்டக்டர்’ வேடத்தில் மேடையேறிய ஒருவர், ரஜினி முன்பு வந்து நிற்க, ஒரு வரலாற்றுப் புன்னகையுடன் ரஜினி அவரோடு படமெடுத்துக்கொண்டார். சிலர் தாங்கள் கொண்டுவந்த செயின், மோதிரம் ஆகியவற்றை ரஜினியிடம் கொடுத்துப் போடச்சொல்லி மகிழ்வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வேலூரிலிருந்து  வந்திருந்த ஒரு ரசிகர் அழுக்கு படிந்த கோட் சூட் ஒன்றை அணிந்தபடி `அபூர்வ ராகங்கள்’ ரஜினி கெட்டப்பில் மண்டப வாசலில் நின்று ரஜினிக்காக எழுதி எடுத்துக்கொண்டு வந்த பாடலைச்  சத்தம்போட்டுப் பாடிக் கொண்டிருந்தார்.

“பைரவில இருந்து கபாலி வரைக்கும் தலைவர் படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வரேன் தம்பி. எந்தப் படத்துல இருந்து எந்த சீனைக்கேட்டாலும் சொல்லுவேன்...” என்று மெலிதாகச் சிரித்தவரிடம் “பைரவில இன்ட்ரோ சீன் சொல்லுங்க” என்று கேட்டோம். வெற்றிடத்தில் எதையோ தேடுவதுபோலத் தேடியவர் “கரும்புக்காட்டுல திருடிட்டு ஓடுறவனை சவுக்கால அடிக்கிற சீன்!” என்று அவர் சொன்னதும் உடன் வந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.

“இந்த வருஷம் தலைவர் பொறந்த நாளுக்கு  168 பால்குடம் எடுத்தோம், 168பேர்க்கு ஹெல்மெட் கொடுத்தோம், 168பேர்க்குப் புடவை கொடுத்தோம்” என்று சொல்லிக்கொண்டே போன ரசிகரை இடைமறித்து, “எதுக்காக, குறிப்பிட்டு 168ன்னு செஞ்சீங்க” என்று கேட்டோம். “தலைவருக்கு இப்போ அறுபத்தெட்டு வயசு பொறந்திருக்குது தம்பி. அவர் இன்னும் நூறு வருஷம் உயிரோட இருக்கணும்னு நூத்தி அறுபத்தெட்டுன்னு கணக்கு வெச்சு செஞ்சோம்” என்றவரை சற்றுத் தள்ளிவிட்டு இன்னொருவர் வந்து குரலுயர்த்தி சண்டைபோடுவதுபோலச் சொன்னார் “சார், எங்களுக்குப் புதுவருஷம் ஜனவரி ஒண்ணாந்தேதிலாம் கிடையாது. எங்க தலைவர் அரசியல் முடிவைத் தெரிவிக்கிற டிசம்பர் 31-ந்தேதிதான் எங்களுக்குப் புதுவருஷம். தமிழ்நாட்டுக்கு அப்போதான் சார் விடிவுகாலம்” என்றார் ஆவேசத்துடன்.

சஸ்பென்ஸ் முடிவு!

இது ரஜினி ஆர்மி!

ரசிகர்கள் சந்திப்பு நடந்த ஐந்து நாள்களும் அவருடைய அரசியல் முடிவைப் பற்றி ரசிகர்களே சரியான தெளிவில்லாமல் இருந்தாலும் அவர் அரசியலில் குதிக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்பினர். பெரும் எதிர்ப்பார்ப்புடன் ஆறாவது நாள் அதிகாலையிலேயே பெருங்கூட்டம் மண்டபத்தை முற்றுகையிட்டது. சரியாய், ஒன்பது மணிக்கு ‘சிங்க நடைபோட்டு, சிகரத்தில் ஏறு’ என்கிற பாடல் மண்டபத்தில் ஒலிக்க, ரஜினி மேடையேறினார். தன்னுடைய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

“யுத்தம் செய்ய மாட்டேன்னு சொன்னா உன்னைக் கோழைன்னு சொல்லுவாங்க. நான் எல்லாத்தையும் ஏற்கெனவே முடிச்சுட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி” எனச் சொல்லிவிட்டு ரஜினி தன் தாடியைச் சொறிந்து கண்ணாடியைக் கழற்றி மாட்ட, ஒட்டுமொத்த அரங்கமே கைத்தட்டல்களாலும் விசில் சத்தங்களாலும் அதிர்ந்து மீள நெடுநேரம் பிடித்தது.

ஆறு நாள்கள் ஏறத்தாழ ஆறாயிரம் ரசிகர்களோடு ரஜினி கலந்துகொண்ட பெரிய திருவிழா, அவரின் அரசியல் பிரவேசத்தில் உச்சம் அடைந்த தருணம் அது. பல ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர்விட்டு அழுதனர்.

“சார், ரஜினி ரசிகர்கள்னாலே ஏதோ வயசானவங்கன்னுதான் நெனச்சுட்டிருக்காங்க. நிச்சயமா அப்படி இல்ல. கபாலி படம் வந்தப்போ ஃபேஸ்புக், ட்விட்டர், ஐ.டி கம்பெனி, காலேஜ் மாஸ் பங்க்னு ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுனது யங்ஸ்டர்ஸ்தான். பப்ளிசிட்டி பண்ணுனா இதெல்லாம் க்ரியேட் ஆகிடுமா? உண்மை என்னன்னா இன்னைக்கும் குழந்தைகளிலிருந்தது பெரியவர் வரைக்கும் தலைவர் மேல பெரிய ஈர்ப்பு இருக்கு. அவர் மேல இவ்ளோ நாள் இருந்த விமர்சனம் அவர் தன்னோட அரசியல் வருகையைப் பற்றி சரியா சொல்ல மாட்டேங்கிறார்னுதான். இப்போ அதுவும் போய்டுச்சு. இனி தலைவர்தான் மாஸ்” என்று சொல்லிவிட்டு, அதிர்வெடியே போட்டது இளைஞர்கள் டீம் ஒன்று.

ரஜினி நிறையமுறை பால்கனியில் நின்றபடி தன் ரசிகர்களுக்கு ஒரு நடிகனாகக் கையசைத்திருக்கலாம். ஆனால், ஓர் அரசியல் கட்சித் தலைவராக அவர் தன் இருகரங்களையும் உயர்த்தி வெற்றிக் குறியீடு காட்டியது, அவரின் ரசிகர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த ஒரு வரலாற்றுத் தருணம். ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததையே வெற்றியாகக் கருதுகிறார்கள் அவர் ரசிகர்கள். ஆனால், ரஜினியின் அரசியல் என்ட்ரி வெற்றிபெறுமா என்று சொல்லவேண்டியது, ரஜினி ரசிகர்களைத் தாண்டி விரிந்திருக்கும் தமிழக மக்கள்தாம்.