Published:Updated:

சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!
சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!

சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!

பிரீமியம் ஸ்டோரி

முதல்வர் எடப்பாடி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளைச் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கும் ஆர்.கே. நகர் சுயேச்சை எம்.எல்.ஏ-வான டி.டி.வி.தினகரன், ஜனவரி 8-ம் தேதி தமிழக சட்டசபைக்குள் என்ட்ரி  கொடுக்கப்போகிறார். முதலில் ஆர்.கே. நகர் தொகுதிப் பிரச்னைகள்; அடுத்து, தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள்; பிறகு அமைச்சர்களின் ஊழல்கள் என்று மூன்று விஷயங்களைப் பேசி அதிரடிகளை அவர் சட்டமன்றத்தில் அரங்கேற்றப் போகிறார்.

சட்டமன்றத்துக்குள் ஐந்து கமாண்டர்கள் புடைசூழ தினகரன் வரப்போகிறார். அவர் பக்கம் போன எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்க விவகாரத்தில் சிக்கியுள்ளனர். அவர்களின் தொகுதிகள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், தகுதிநீக்க விவகாரத்தில் சிக்காத அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், அ.தி.மு.க சின்னத்தில் நின்று வென்ற கூட்டணிக் கட்சியினரான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர்தான் அவர்கள். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்த்து 11 வருடங்கள் எம்.பி-யாக இருந்தவர் தினகரன். தேனி மாவட்ட மக்களின் பிரச்னைகளை டெல்லியில் ஓங்கி ஒலித்துப் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். இப்போது முதன்முறையாக சட்டபைக்குள் எம்.எல்.ஏ-வாக நுழைகிறார்.

சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!

இந்த வாரத்தில் ஆர்.கே. நகர் சென்ற தினகரன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போதே, அங்கு அரசுத் திட்டங்கள் பலவும் ஊழலால் முழுமையடையாமல் நிற்பதைக் கேள்விப்பட்டு, ஏகத்துக்கும் டென்ஷன் ஆனார். வெற்றிவேல் உதவியுடன் ஆர்.கே. நகரில் மக்கள்நலத் திட்டங்கள் பாதியில் முடங்கிக் கிடப்பதன் பின்னணியை ஆராய்ந்தார். அந்தப் பணிகளை எடுத்த கான்ட்ராக்டர்கள், எந்தத் துறை தொடர்பான திட்டம், அதில் தொடர்புடைய அதிகாரிகள் யார் யார் என்பதையும் லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறார் தினகரன். ஏன் இவை முடங்கியுள்ளன என்ற ரகசியத்தை சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தப் போகிறாராம்.

தொகுதி மக்களின் பெரிய பிரச்னையே... குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதுதான். பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர்க் குழாய்கள் பழுதாகிவிட்டன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, புதிய குழாய்களை அமைக்க உத்தரவிட்டாராம். சமீபத்தில், அந்தக் குழாய்களைச் சந்தடியில்லாமல் அக்கம்பக்க ஏரியாக்களுக்கு அதிகாரிகள் இடம்மாற்றினர். இந்தக் குழாய்க் கடத்தலைத் தினகரனின் ஆட்கள் செல்போனில் படம் எடுப்பதைக் கவனித்த அதிகாரிகள் பதறிப்போய்விட்டனர். இரவோடு இரவாக ஒரு டிவிஷனுக்குத் தேவைப்படும் குழாய்களை மட்டும் திரும்பிக் கொண்டுவந்து வைத்துவிட்டார்களாம். இதை தினகரனிடம் வெற்றிவேல் சொல்ல... ‘‘எப்படியோ, மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!’’ என்று சொல்லிச் சிரித்தாராம் தினகரன்.

சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!

தினகரனின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களை அலசி ஆராய்கிறாராம் தினகரன்.

தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை 14 ஏக்கரில் அமைந்துள்ளது. இதை மருத்துவக் கல்லூரி அளவுக்கு அந்தஸ்தை உயர்த்த ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். அவருக்குப் பிறகு, அந்தத் திட்டத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். பெட்ரோலியம் நிறுவனங்களின் குடோன்கள் ஆர்.கே. நகரில் உள்ளன. இவற்றால் டிராஃபிக் ஜாம், விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பதால், பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குடோன்களை சென்னைக்கு வெளியே இடம் மாற்ற வேண்டும் என்பது தினகரனின் இலக்கு. இந்தப் பிரச்னைகளையும் சட்டமன்றத்தில் பேசப்போகிறாராம் தினகரன்.

“பிரச்னைகளைத் தீர்க்கும்படி சட்டமன்றத்தில் பேசுவேன். அங்கு நியாயம் கிடைக்காவிட்டால், தொகுதி மக்களைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து போராடுவேன்” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் தினகரன். ஒருவேளை அவரைச் சட்டசபையில் பேசவிடாவிட்டால், சபைக்கு வெளியே மீடியாக்களிடம் விரிவாகப் பேசவும் ரெடியாகிறார் அவர். 

சட்டசபை அதிரடிக்கு தினகரன் ரெடி!

தினகரனைச் சமாளிக்கும் வழிகள் பற்றி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்தனர். அதில் பேசிய முதல்வர் எடப்பாடி, ‘‘தினகரன் வம்படியாகப் பிரச்னைகளைப் பேசி மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க நினைப்பார். அதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. அவர் சொல்லப்போகும் பிரச்னைகளுக்கு, தொடர்புடைய அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். மற்ற உறுப்பினர்கள் யாரும் கூச்சல் குழப்பம் செய்யக்கூடாது. அமைதி காக்கவும்’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

தமிழக சட்டசபை சுவாரஸ்யக் காட்சிகளைச் சந்திக்கப்போகிறது.

- கனிஷ்கா
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு