பிரீமியம் ஸ்டோரி

‘‘இங்கே இருந்தால்தான் சம்பாதிக்க முடியும்!’’

ரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா, ‘மரியாதை நிமித்தமாக’ டி.டி.வி.தினகரனைப் பார்க்க இருப்பதாக இந்த வாரம் பரபரப்புக் கிளம்பியது. இப்போது எடப்பாடி அணியில் இருக்கிறார் கீதா. ஆனால், இவர், தினகரன் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியால் அரசியலுக்கு வந்தவர். அணிகள் பிரிந்தபோது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இவரை முதல்வர் அணியில் இருக்க வைத்தார். அரசு விழாக்கள், மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கீதாவை கூடவே அழைத்துப்போனார். ஆனால், இரட்டை இலைச் சின்னம் கிடைத்தபிறகு கீதாவை அமைச்சர் தரப்பினர் ஓரங்கட்டத் தொடங்கினார். இந்தக் கடுப்பில்தான், தன் அரசியல் குருவான செந்தில்பாலாஜி மூலம் தினகரன் அணிக்குத் தாவ முடிவெடுத்திருக்கிறார் கீதா. இதைத் தொடர்ந்தே தகவல் பரபரவெனப் பரவியது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இந்த நிலையில் மீடியாவை அழைத்த கீதாவின் கணவர் மணிவண்ணன், ‘‘கீதா இப்போது முதல்வர் அணியில்தான் உள்ளார். அவர் அணியெல்லாம் மாறமாட்டார்’’ என்று பேட்டி கொடுத்தார்.

எம்.எல்.ஏ கீதா எதுவும் பேசவில்லை. ‘‘இப்போது முதல்வர் அணியில் இருந்தால்தான் சம்பாதிக்க முடியும். அதனால், ‘நான் முதல்வர் அணியில்தான் உள்ளேன்’ எனச் சொல்லுங்கள் என்று கீதாவை அவரின் குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவர் தயங்கவே, கணவர் மணிவண்ணன் பேட்டி கொடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க-வினர்.

உள்ளே நுழைய முடியுமா?

தி
னகரன் பக்கம் போன பலரையும் எலிமினேஷன் லிஸ்ட்டில் சேர்த்துவருகிறது எடப்பாடி - பன்னீர் தரப்பு. தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியிலிருந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் நீக்கப்பட்டார். ‘‘கட்சியே எங்களோடதுதான்… இதுல என்னை நீக்க அவுங்க யாரு?’’ என்று பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். முன்னதாக ஜெயலலிதா நினைவு நாளில் ‘கட்சி அலுவலகம் எங்களுடையது’ என்று தங்க தமிழ்ச்செல்வன் தரப்பினர் பன்னீர் தரப்பினரிடம் மல்லுக்கட்ட முயன்று, இப்போது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற, இப்போதே போட்டி நடக்கிறது. முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் மற்றும் பன்னீரின் விசுவாசி முருக்கோடை ராமர் ஆகிய ஐந்து பேர் பதவி கேட்டு தொடர்ந்து பன்னீரிடம் பேசிவருகிறார்கள். பன்னீரின் தம்பி ஓ.ராஜாவும் மாவட்டச் செயலாளர் பதவி கேட்க, கடுகடுத்தாராம் பன்னீர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

யார் பதவி வாங்கினாலும், அவரைக் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல தங்க தமிழ்ச்செல்வன் தரப்பினர் அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, ‘புதிய அலுவலகம் கட்டிக்கொடுப்ப வருக்குத்தான் மாவட்டச் செயலாளர் பதவி’ என்று பன்னீர் அறிவித்தாலும் அறிவிப்பார் என்கிறார்கள் சிலர்.

ட்விட்டரிலிருந்து போஸ்டருக்கு...

மிழக அரசுக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை எம்.பி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், ஓட்டு வாங்குவதற்காக ‘மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன்’ என்று கூறினார் சுவாமி. இப்போது, ‘ஓபிஎஸ்-எடப்பாடி அரசு, இதற்குத் தடையாக இருக்கிறது’ என்று சுவாமி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். 

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இந்த போஸ்டரை ஒட்டிய ‘விராத் இந்துஸ்தான் சங்க’ மதுரை மாவட்டத் தலைவர் சசிக்குமாரிடம் பேசினோம். ‘‘ஜனவரி 2-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் சுப்ரமணியன் சுவாமி இந்தக் கோரிக்கையை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, ‘தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினால் உடனே நிறைவேற்றுகிறோம்’ என்று கூறியுள்ளார். சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயரைச் சூட்ட பஞ்சாப்-அரியானா சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளார்கள். இதுபோல் செய்யாமல் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இனியும் தாமதம் செய்தால், நாங்கள் போராட்டங்களை நடத்துவோம்’’ என்றார்.

ட்விட்டரிலிருந்து போஸ்டருக்கு மாறி, தமிழக அரசுக்கு எதிராக ஏதோ திட்டத்துடன் சுவாமி களமிறங்குகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

ராசாவை வரவேற்காத நேரு!

2ஜி
வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை, சென்னையில் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார் மு.க.ஸ்டாலின். கோவைக்குச் சென்றபோது, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். திருச்சி வழியாக ராசா தனது சொந்த மாவட்டமான பெரம்பலூருக்கு வந்தபோது, திருச்சி தி.மு.க-வினர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. விமானத்தில் திருச்சிக்கு வந்த ராசாவை, மாவட்டச் செயலாளர்கள் கரூர் நன்னியூர் ராஜேந்திரன், அரியலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் குன்னம் ராஜேந்திரன், திருச்சி மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் மிஸ்ஸிங். இது ராசாவின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ‘‘ஆரம்பத்திலிருந்தே ராசாவும் நேருவும் எதிரும்புதிருமாக இருந்தார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நேரு பொறுப்பாளராக இருந்தபோது இந்த உரசல் பெரிதானது. இதனால்தான் ராசாவை வரவேற்க நேருவும் அவரின் ஆதரவாளர்களும் வரவில்லை’’ என அவர்கள் புலம்பினர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஆனால், நேருவின் ஆதரவாளரும் திருச்சி மாநகர தி.மு.க செயலாளருமான அன்பழகன், ‘‘அன்று நேரு, அவரின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்னையில் இருந்தார். திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனுக்கும் ஒரு நிகழ்ச்சி இருந்தது. இதனால்தான் அவர்கள் வரவில்லை’’ என்றார் சாதாரணமாக.

- செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார், துரை.வேம்பையன், எம்.கணேஷ்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித், வீ.சதீஷ்குமார், நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு