Published:Updated:

“20 ரூபாய்க்கு யாராவது 10 ஆயிரம் தருவார்களா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“20 ரூபாய்க்கு யாராவது 10 ஆயிரம் தருவார்களா?”
“20 ரூபாய்க்கு யாராவது 10 ஆயிரம் தருவார்களா?”

தினகரன் கேள்வியால் அதிர்ந்த ஆர்.கே. நகர்

பிரீமியம் ஸ்டோரி

‘ஒருவித எதிர்பார்ப்புடன் வாக்களித்தவர்கள் காத்திருக்க’, ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல, ஜனவரி 3-ம் தேதி வந்தார் சுயேச்சை எம்.எல்.ஏ-வான டி.டி.வி. தினகரன், நாமும் அவருடன் ரவுண்டு அடித்தோம். தினகரன் வருகைக்காகக் காலை 11 மணியிலிருந்தே பெண்கள், பல்வேறு வரவேற்பு உத்திகளுடன் காத்திருந்தனர். கரகாட்டம், பேண்டு வாத்தியம், ஆடல்-பாடல் குத்தாட்டம், பத்தாயிரம் வாலா பட்டாசுகள் என்று களைகட்டியது.

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்திருந்தாலும், காலையில் சீக்கிரமே கிளம்பிவிட்டது சூரியன். அதனால், அனல் தாள முடியாமல் வரிசையில் காத்திருந்த பெண்கள் துடித்தனர். ‘அண்ணன் வந்துக்கிட்டே இருக்காரு. இருங்க... கிளம்பிடாதீங்க’ என்றபடி ஆட்களைப் பிடித்து நிறுத்தும் வேலையைச் சலிக்காமல் தொண்டர்கள் செய்துகொண்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு தினகரன் வந்தார். ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர்கள் மட்டும் கேமராவுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெளியில் தொடர்ந்து சலசலப்பு எழுவதைக் கேட்ட தினகரன், எல்லோரையும் உள்ளே அனுமதிக்கச் சொன்னார்.

“20 ரூபாய்க்கு யாராவது 10 ஆயிரம் தருவார்களா?”

வராந்தா, எம்.எல்.ஏ அறை தவிர இன்னொரு அறையும் அந்த அலுவலகத்தில் உண்டு. அது, ஸ்டோர் ரூம். தொகுதி மக்களுக்கான நலத்திட்ட உதவிப்பொருள்கள் அங்கே தான் வைக்கப்பட்டிருக்கும். அந்த அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. தினகரன் ஆதரவாளர்கள், ‘‘அறையின் சாவி எங்கே’’ என்று அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டனர். ‘‘ஆண்டுக்கணக்கில் பூட்டிக் கிடந்ததால், பூட்டும் சாவியும் பழுதாகிவிட்டன. அதைச் சரி செய்யக் கொடுத்துள்ளோம்’’ என்று அவர்கள் பவ்யமாகப் பதிலளித்தனர்.

இதற்கிடையில், தனிப் பேட்டி, மொத்தமாகப் பேட்டி என்று தினகரனிடம் ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சிகள் இழுபறியாகவே இருந்தன. தேர்தலின்போதே தினகரனுக்காக வ.உ.சி. நகரிலுள்ள பிரின்ஸ் அபார்ட்மென்ட்டில் ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தார் வெற்றிவேல். 3 மணிக்குக் கிளம்பி தினகரன் அங்கே போய்விட்டார். மாலை நான்கரை மணியளவில் புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் மற்றும் செரியன் நகரில் நன்றி அறிவிப்பு ஊர்வலம் நடக்கும் என்று சொல்லப்பட்டதால், அனைவரும் அந்த இடத்தில் காத்திருந்தனர். பிரசாரத்தைத் தொடங்கிய இடமும் இதுதான் என்பதால், பலர் பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர். சாலை விளக்குகள் எரியத் தொடங்கிய வேளையில் வந்தார் தினகரன். செரியன் நகர் கிராமக் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு, திறந்த ஜீப்பில் ஏறியவர், அப்படியே அரைவட்டமாக உடம்பைச் சுற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், ‘ஆளுங்கட்சியின் அரவணைப்பு, சுயேச்சையான உங்களுக்கு முழுமையாகக் கிடைக்குமா?’ என்று கேள்வியெழுப்பினர். “இது அம்மாவின் சொந்தத் தொகுதி என்பதை அவர்களும் (ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்) அறிந்திருப்பதால், நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நான் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசாங்கத்துடன் போராடி நிறைவேற்றித் தருவேன். பெரியகுளம் தொகுதி எம்.பி-யாக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தம்பி வீட்டில்தான் மாதத்தில் 15 நாள்கள் தங்கி, மக்கள் பணியாற்றினேன். அதேபோல் ஆர்.கே. நகர் தொகுதியில் வாரத்தில் மூன்று நாள்கள் வெற்றிவேல் வீட்டில் தங்கி மக்கள் பணியாற்றுவேன்” என்றார்.

அடுத்ததாக, நோட்டுக்கு ஓட்டு சப்ஜெக்ட்டுக்குள் போனார். “நான் இந்தத் தொகுதிக்கு வரமாட்டேன் என்று பொய்ப் பிரசாரம் செய்தார்கள். 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார்கள். 20 ரூபாய் நோட்டுக்கு யாராவது 10 ஆயிரம் ரூபாய் தருவார்களா?” என்று தினகரன் கேட்க... அங்கே 20 ரூபாய் நோட்டுடன் வந்து காத்திருந்தவர்கள், திருதிருவென விழித்தபடி அவசர அவசரமாகக் கலைந்து சென்றனர்.

“20 ரூபாய்க்கு யாராவது 10 ஆயிரம் தருவார்களா?”

டி.டி.வி.தினகரன் நன்றி சொல்ல அடுத்த தெருவுக்குள் நுழைந்தபோது, முதல் தெருவில் இருந்த கூட்டம் பாதியாகக் குறைந்திருந்தது. ‘பக்கத்துத் தெருவில் பணம் தருகிறார்கள்’ என்று கூட்டத்தில் இருந்த சிலருக்கு ரகசியத் (?) தகவல் பறக்க, அவர்கள் அந்தத் தெருவுக்கு ஓடினர். அங்கிருந்து இன்னொரு தெருவுக்கு வரச்சொல்லி தகவல் வர, அங்கும் ஓடினர். வரும்போது கையில் ‘அந்த’ 20 ரூபாய் நோட்டு இல்லை. அல்வா, பழைய மைசூர்பாகு போன்றவற்றை ‘கவர்’களில் வைத்து, ‘பத்தாயிரம், பத்திரம்’ என்று அனுப்பி வைத்ததையும், சிலர் அதுவும் இல்லாமல் ஏமாந்ததையும் ரகசியமாகச் சொல்லித் தலையில் அடித்துக் கொண்டனர். இன்னும் சிலர், ‘‘எதுக்கும் அவங்க சொன்ன மாதிரி வர்ற பத்தாம் தேதி ஒரு எட்டு வந்து பாத்துட்டுத்தான் போயிடுவோம்’’ என்று சொல்லிக்கொண்டனர்.

என்னவோ, தினகரனுடன் ரவுண்டு அடித்ததில் நமக்கு தலையைச் சுற்றியது.

- ந.பா.சேதுராமன்
படம்: வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு