Published:Updated:

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

ஆபரேஷன்... கோஆபரேஷன்!

நா
டாளுமன்ற மாநிலங்களவை  கடந்த செவ்வாய்க்கிழமை ஓர் அரிதான சாதனையைச் செய்தது. 15 ஆண்டுகள் கழித்துக் கூச்சல் குழப்பங்கள் எதுவுமில்லாமல், அன்றைக்குப் பட்டியலிடப்பட்ட 15 கேள்விகளும் கேட்கப்பட்டு, 18 உறுப்பினர்கள் பேசவும் செய்தார்கள். வேடிக்கை என்னவென்றால், ‘எப்படியும் கொஞ்ச நேரத்தில் அவை ஒத்தி வைக்கப்படும்’ என்ற நம்பிக்கையில், கேள்விகள் கொடுத்திருந்த 10 எம்.பி-க்கள் அன்று வரவே இல்லை. இருந்தாலும், அந்தக் கேள்விகள் எடுக்கப்பட்டு, அமைச்சர்கள் பதில் தந்தார்கள்.

பொதுவாக, கேள்விகளைக் கேட்கும் எம்.பி-க்களும் நீண்ட நேரம் பேசுவார்கள். அமைச்சர்களும் நீளமாகப் பதில் சொல்வார்கள். வெங்கைய்யா நாயுடு அவைத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, எல்லோரையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் நேரடியான விஷயங்களை மட்டும் பேசுமாறு வலியுறுத்துகிறார். ‘‘உங்க கோஆபரேஷன் நன்றாக இருந்தால் என் ஆபரேஷன் சிறப்பாக இருக்கும்’’ என பன்ச் டயலாக் பேசி, அனைத்து உறுப்பினர்களையும் அன்று பாராட்டினார் அவர்.

ஆன்மிக அரசியல் சர்ச்சையில் கம்யூனிஸ்ட்கள்!

மிழ்நாட்டை மட்டுமில்லை... திரிபுராவையும் விடவில்லை ‘ஆன்மிக அரசியல்’ சர்ச்சை. விரைவில் திரிபுரா சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு முறை தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்று, அசைக்க முடியாத செல்வாக்கோடு மாணிக் சர்க்கார் அங்கு முதல்வராகப் பதவியில் தொடர்கிறார். இம்முறை அவரை வீழ்த்திவிடும் வெறியோடு அங்கு களமிறங்கியிருக்கிறது பி.ஜே.பி. வழக்கம்போல மாற்றுக் கட்சிகளிலிருந்து ஆள் பிடிக்கிறது. காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து ஏழு எம்.எல்.ஏ-க்கள் இதுவரை பி.ஜே.பி பக்கம் வந்துள்ளனர். இதுவரை திரிபுராவில் ஒரு வெற்றிகூட பெறாத பி.ஜே.பி, இதனால் இங்கு பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட்டது. 

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

இந்த நிலையில், ‘அனுகுல் தாக்குர்’ என்ற இந்து அமைப்பு சமீபத்தில் தலைநகர் அகர்தலாவில் மாநாடு நடத்தியது. இதில் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். ‘‘மதச்சார்பற்ற அரசியலைப் பேசும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர், தேர்தல் ஆதாயத்துக்காக மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்’’ என பி.ஜே.பி தலைவர்கள் இதை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், ‘‘அனுகுல் தாக்குர் அமைப்பின் மதச் சடங்குகளில் முதல்வர் பங்கேற்கவில்லை. அவர்கள் நடத்திய மருத்துவ முகாமுக்கு மட்டுமே சென்றார். மத அமைப்புகள் சமூக அக்கறையோடு செய்யும் தொண்டுகளில் பங்கேற்க எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை’’ எனப் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். 

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

தூர்தர்ஷன் மட்டும் பார்க்கணும்!

கா
ல்நடைத் தீவன ஊழல் வழக்கில் மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அங்கு நல்ல கம்பெனி கிடைத்திருக்கிறது. அவர் இருக்கும் சிறைத் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய எம்.எல்.ஏ-க்கள் என ஆறு பேர் கைதிகளாக இருக்கிறார்கள். ஆனால், யாருமே அவர் கட்சிக்காரர்கள் இல்லை. ‘முக்கியமான கட்சித் தலைவர் என்பதால், சிறை விதிகளைத் தளர்த்தி அவரை நிறைய பேர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என லாலு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை மாநில பி.ஜே.பி அரசு மறுத்துவிட்டது. அதனால் லாலு சோகமாக இருக்கிறார்.

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

மரக்கட்டில், கொசு வலை, ஒரு டி.வி ஆகியவை மட்டுமே அவர் அறையிலிருக்கும் ஆடம்பரப் பொருள்கள். கேபிள் கனெக்‌ஷன் இல்லை என்பதால், தூர்தர்ஷன் செய்திகளை மட்டுமே அவர் பார்க்க முடியும். சமைத்துக் கொடுப்பதற்கு மட்டும் அவருக்கு ஓர் உதவியாளரை நியமித்திருக்கிறார்கள்.

எம்.பி சீட்டை விற்றார்களா?

டெ
ல்லி மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மூன்று எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 66 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், மூன்று எம்.பி-க்களையுமே அந்தக்கட்சி முடிவு செய்ய முடியும். இந்நிலையில் கட்சிக்குத் தொடர்பில்லாத இரண்டு நபர்களை எம்.பி-க்களாக்க கெஜ்ரிவால் முடிவு செய்ய, பதவிகளை அவர் விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேஷனல் ஹைவே! - டெல்லி வாலா

மாநிலங்களவைக்கு முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-க்கள் போகிறார்கள். கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங்கோடு சேர்த்து, கட்சிக்கே தொடர்பில்லாத சுஷில் குப்தா, என்.டி.குப்தா ஆகியோர் வேட்பாளர் களாக்கப்பட்டுள்ளனர். இதில், சுஷில் குப்தா 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்றவர். என்.டி.குப்தா பணக்கார ஆடிட்டர். ‘‘இவர்கள் இருவருக்கும் எம்.பி ‘சீட்’கள் விற்கப்பட்டுள்ளன’’ என ஆம் ஆத்மி இரண்டாம் கட்டத் தலைவர்கள் கொதிக்கிறார்கள். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இதை மறுத்துள்ளார். ‘‘முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா என மத்திய அரசைப் பல்வேறு கட்டங்களில் விமர்சனம் செய்தவர்களை எங்கள் எம்.பி-க்களாக அனுப்பவே விரும்பினோம். இப்படி நாங்கள் அணுகிய 18 பேரும் ‘ஆட்சியாளர்களின் நேரடிக் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என மறுத்துவிட்டார்கள். கட்சியில் சஞ்சய் சிங் தவிர மற்றவர்களுக்குப் பதவி கொடுக்க பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆகவே, சமூக சேவகர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம்’’ என்கிறார் அவர். இந்த விவகாரம் ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தும் போலிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு