பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

செல்லையா, சாத்தூர்.

ஆர்.கே. நகரில் வென்றது ஜனநாயகமா, பணநாயகமா?


ஜனநாயகத்தைக் கபளீகரம் செய்த பணநாயகம்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘ஆர்.கே. நகர் தேர்தலை வைத்து மட்டுமே கட்சிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது’’ என்று தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது குறித்து..?


உண்மைதான். மாநிலம் முழுக்க இதே அளவு செல்வாக்கு அனைத்துத் தொகுதிகளிலும் தினகரனுக்கு இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

கழுகார் பதில்கள்!

காந்திலெனின், திருச்சி.

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் வெளியான வீடியோ பற்றி..?


வாட்ஸ்அப்பில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வருகின்றன. அவை போலத்தான் இதுவும் ஆகிவிட்டது. மக்கள் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.ஒரு நிமிடத்தில் மறந்தும் போனார்கள்.

கழுகார் பதில்கள்!

ஏழாயிரம்பண்ணை எம்.ஆர்.கார்த்திகேயன், ஜோலார் பேட்டை.

டி.டி.வி.தினகரன் பற்றி உங்கள் கருத்து..?


தனி ஆளாக நின்று அனைத்தையும் சமாளிக்கிறார்; சமாளிப்பார்.

சம்பத்குமாரி, பொன்மலை.

‘ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குத் தலைமை வகிக்கக்கூடியவர் தினகரன்தான்’ என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சொல்லியிருக்கிறாரே?


திருநாவுக்கரசர், பி.ஜே.பி-க்குப் போனாலும், காங்கிரஸுக்குப் போனாலும் மனசுக்குள் அ.தி.மு.க கரை போட்ட வேட்டியைத்தான் கட்டியிருப்பார். அவரது வளர்ச்சிக்கு அதுவே தடை. அ.தி.மு.க-வுக்கு யார் தலைமை வகித்தால் அவருக்கு என்ன? இவரது பதவியே காங்கிரஸ் கட்சிக்குள் ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில் இது தேவையா? இதுதான் ஸ்டாலினுக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையே சிக்கலை உருவாக்கியுள்ளது.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு டி.டி.வி.தினகரன்தான்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே?


திருநாவுக்கரசருக்குச் சொன்னது மாதிரிதான்! ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசாக யார் இருந்தால் என்ன? திருமாவுக்கு அத்தகைய கவலைகள் தேவையில்லை. தி.மு.க அவரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க இதுதான் காரணம்!

கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

2018 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தன்று தன்னை வந்து சந்தித்தவர்களுக்கு வழக்கம் போல் 10 ரூபாய் நோட்டுகளை வழங்கினாரா கருணாநிதி..?


இல்லை. நிறையப் பேரைச் சந்தித்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் வழக்கமான புத்தாண்டு சந்திப்பு இந்த ஆண்டு நடக்கவில்லையாம். ஸ்டாலின் மட்டும் கோபாலபுரம் சென்று கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்று வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஜெ.பிரதாபன், சேங்காலிபுரம்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அம்பானி போட்டியிட்டிருந்தால் தினகரன் இரண்டாம் இடத்துக்குச் சென்றிருப்பார்தானே?


அம்பானிகள் இவ்வளவு செலவு செய்ய மாட்டார்கள்.

கழுகார் பதில்கள்!

ப.பாலா என்ற பாலசுப்பிரமணி, பாகாநத்தம்.

இரட்டை இலை தோற்றதற்கு யார் காரணம்?


இரட்டைத் தலைகள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

‘தந்திரபூமி’ என்று டெல்லியைச் சொல்வது சரியா?


இன்றைய சூழ்நிலையில் ஆ.ராசாவும், கனிமொழியும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் தகுதி படைத்தவர்கள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

சில சமயங்களில் தோல்விக்குக்கூட மரியாதை இருக்கிறது. வெற்றிக்கு அந்த மரியாதை இருப்பதில்லையே?


விலைக்கு வாங்கப்பட்டதாக இருந்தால் வெற்றிக்கு மரியாதை இருக்காது. அலட்சியப் படுத்தப்பட்டதாக இருந்தால், தோல்விக்கும் மரியாதை இருக்கும்.

ஜி.ரவிக்குமார், வீடுர்.

புத்தாண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை 230 கோடி ரூபாயாமே?


ஆமாம். தீபாவளியில் விட்டதை புத்தாண்டில் பிடித்துவிட்டார்கள். 2017 தீபாவளியில், அதற்கு முந்தையை ஆண்டைவிட 14 சதவிகிதம் குறைவாக மதுபானங்கள் விற்பனையானதால், டாஸ்மாக் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்சியாளர்களும் அதிருப்தி அடைந்து, புத்தாண்டு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்தனர். வார இறுதி விடுமுறையையொட்டி புத்தாண்டு வந்ததால், டாஸ்மாக் கல்லா வேகமாக நிரம்பியது. சனிக்கிழமை மாலையிலிருந்தே பெரும் கூட்டமாம். 2017, டிசம்பர் 31-ம் தேதி 139 கோடி ரூபாய்க்கும், 2018 ஜனவரி முதல் தேதி 91 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்றன. கடந்த ஆண்டைவிட 20 கோடி ரூபாய் அதிகம்.

‘நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு ஏராளமான கடைகள் மூடப்பட்டன. எனினும், ‘மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளில் நெடுஞ்சாலை மதுக்கடைகளை அமைக்கத் தடையில்லை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு நிறையக் கடைகளை மீண்டும் திறந்துவிட்டனர். இப்போது தமிழகத்தில் சுமார் 6,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடைகளின் எண்ணிக்கை உயர்ந்ததும் மது விற்பனை அதிகமானதற்குக் காரணம் என்கிறார்கள். எது எப்படியோ, ஆட்சியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மக்கள் போதையில் இருந்தால்தானே, ஆட்சியாளர்களின் தவறுகளைக் கவனிக்க மாட்டார்கள்.
இதேபோல், பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்யவும் எடப்பாடியார் முயற்சி செய்வார் என நம்புவோம்!

படம்: வி.ஸ்ரீனிவாசுலு

வி.ஐ.பி கேள்வி

கழுகார் பதில்கள்!

பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்

தமிழகத்தின் பெரும்பான்மையான ஆறுகளும் குளங்களும் ஓடைகளும் சாக்கடைகளாகவே மாறிவருகின்றன. தங்களது இளமைக் காலத்தில் இந்த நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தவர்கள்தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கிறார்கள். சீர்கெட்டு வரும் இந்தச் சுற்றுச்சூழலைச் சீர்படுத்துவது குறித்து இவர்களே சிந்திக்க மறந்து போனது எப்படி?


 சீரழிக்க வந்தவர்கள் எப்படி சீர்படுத்துவது பற்றி யோசிப்பார்கள்? ‘அமைதிப்படை’ படத்தில் ஒரு காட்சி வரும். அமாவாசை என்ற கேரக்டர், ஒரு பங்களா வாசலில் இருந்து தேங்காய் பொறுக்கும். ‘எப்படியாவது இந்தப் பங்களாவுக்குள் போய்விட வேண்டும், இந்த பங்களாவைக் கைப்பற்ற வேண்டும்’ என்று நினைக்கும். அத்தகைய சுயநல மனிதர்கள் கையில் அதிகாரம் போனால், ஆறுகளையும் குளங்களையும் ஓடைகளையும் ஆக்கிரமிக்கவே நினைப்பார்கள்; சீர்படுத்த நினைக்கமாட்டார்கள். இயற்கையைச் சீரமைக்காமல் இருப்பதே ஒருவிதமான சதிதான். நீர்நிலைகளைச் சுகாதாரமற்றதாக ஆக்குவதன் மூலமாக அவற்றைப் பயனற்றுப்போகச் செய்யலாம்; பிற்காலத்தில் ஆக்கிரமிக்கலாம். அது, அதன் இயற்கைத் தன்மையுடன் இருந்தால் ஆக்கிரமிக்க முடியாது. வெற்று மண் பள்ளமாக்கி, குப்பைகளை அவற்றில் கொட்ட அனுமதிப்பார்கள். அதிலிருந்து சீரழிப்பார்கள்.

காடுகள், ஆறுகள், குளங்கள் போன்ற இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அவற்றைப் பாதுகாக்க நினைப்பதும் சுயநல அரசியல்வாதிகளின் சிந்தனையிலேயே இருக்காது. அந்த ஞானமே இருக்காது. காட்டிலிருந்து பழங்குடியினரையும், கடற்கரையிலிருந்து மீனவர்களையும் அப்புறப்படுத்துவது மட்டும்தான் இவர்களது இயற்கை ஆர்வம். அப்படி அப்புறப்படுத்தப்பட்ட இடங்களை யாருக்காவது தாரை வார்ப்பது மட்டும்தான் வளர்ச்சி. ‘காசு கொடுத்து தண்ணீரையோ, காற்றையோ உற்பத்தி செய்ய முடியாது’ என்பதை இந்த மனிதர்கள் உணர்வதற்குள் என்னென்னவோ நடந்து முடிந்திருக்கும்.

கழுகார் பதில்கள்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு