Published:Updated:

``சிறை வேறு.. சிறைத் தண்டனை வேறு" - ஏழு பேர் விடுதலை தொடர்பாக தோழர் தியாகு

``சிறை வேறு.. சிறைத் தண்டனை வேறு" - ஏழு பேர் விடுதலை தொடர்பாக தோழர் தியாகு
``சிறை வேறு.. சிறைத் தண்டனை வேறு" - ஏழு பேர் விடுதலை தொடர்பாக தோழர் தியாகு

``சிறை வேறு.. சிறைத் தண்டனை வேறு" - ஏழு பேர் விடுதலை தொடர்பாக தோழர் தியாகு

``ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட  ஏழு பேரின் விடுதலைத் தொடர்பான முடிவை தமிழக அரசு எடுத்துக்கொள்ளலாம்" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது நாடெங்கும் பல விவாதங்களை எழுப்பிய நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் சார்பில் இதுதொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தோழர். தியாகு மற்றும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இருவரும் முக்கிய உரையாற்றினார்கள். 

சிறப்புரையில் தோழர். தியாகு `` `இந்த ஏழு பேர் பேர் விடுதலை செய்யப்படுவதால் அல்லது விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறையில் நீடிப்பதால் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன நன்மை அல்லது தீமை விளையப்போகிறது?.. மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்டிருக்கும் நாம் இதுபற்றி விவாதிக்கவேண்டிய தேவையென்ன? இவர்களுக்கு ஓர் அரசியல் சார்பு இருக்கிறது, இவர்களுடைய விடுதலையைக் கோருகிறவர்களுக்கும் ஓர் அரசியல்சார்பு இருக்கிறது, இவர்களுடைய விடுதலையை மறுப்பவர்களுக்கும் ஓர் அரசியல்சார்பு இருக்கிறது' என்பனவற்றின் அடிப்படையில் இந்தச் சிக்கலை நாம் அணுகக்கூடாது. சிறைகள், சிறைத் தண்டனைகள், அதனுடைய கால எல்லைகள் போன்றவற்றின் அடிப்படைகளில்தான் இதை அணுக வேண்டும். 

குற்றங்கள் என்பவை எவரோடும் உடன்பிறந்து வருபவை அல்ல. குற்றங்களில் அவர்களை ஆட்படுத்துவதே சூழல்தான் என்பதில் அடிப்படை நம்பிக்கை கொண்டிருக்கிறோம். கிருஷ்ணய்யர் போன்ற நீதியரசர்கள் வழங்கிய பல தீர்ப்புகளில் எடுத்துக்காட்டும் ஒரு வாசகம், 'பாவிகளுக்கு ஒரு வருங்காலம் உண்டு; புனிதர்களுக்கு ஒரு கடந்தகாலம் உண்டு' இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். பாவிகள், புனிதர்கள் என்று ஒருவரை பிறப்பு முதல் இறப்பு வரை அடையாளப்படுத்திவிட முடியாது. 

குற்றங்களுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பொருளியல் சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த காரணங்களும் இருக்கலாம். குற்றவாளியை மட்டும் நூறு விழுக்காடு அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பாளி ஆக்கிவிட முடியாது எனும்போது சிறை, சிறைத் தண்டனை என்பன எதற்காக. `சிறைகள்' என்ற அமைப்பு உண்மையில் குடிமைச் சமூகத்தின் அடையாளம். குடிமைச் சமூகம் தோன்றுவதற்கு முன்பும் சிறைகள் இருந்தன. ஆனால், சிறைத் தண்டனை இல்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. சிறை என்பது தண்டனைகளை நிறைவேற்றும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம் அல்லது பேரம் பேசி விடுதலை செய்வது வரை வைத்துக்கொள்ளும் இடம். சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி வந்தபிறகே காலவரையறையுடன் கூடிய சிறைத் தண்டனை வந்தது.

ஒருவரைக் குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்துவைக்க வேண்டிய நோக்கம் என்ன? ஒன்று தொல்லைப்படுத்துவது, அதைப்பார்த்து மற்றவர்கள் தப்பு செய்யாமலிருப்பது. மற்றொன்று பாதிக்கப்பட்டவன் திருப்திக்காக. அதனடிப்படையில் பழிவாங்கும் தன்மையும் உண்டு. இதையும் மீறி இதற்கு வேறொரு நோக்கம் இருக்கிறது. அவன் எந்தச் சமூகத்தின் மத்தியில் குற்றம் செய்தானோ, அதிலிருந்து அவனைப் பிரித்துக் கொண்டுவந்து தனியாக வைத்து அவனை யோசிக்க வைத்து, புதிய பயிற்சி கொடுத்து, உளவியலை மாற்றி, குற்றநீக்கம் செய்து சமூகத்துக்கு மீண்டும் பொருத்தமுள்ள மனிதனாக உலவவிடுவது. இந்தியாவில் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில்தான் இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. சிறைத் தண்டனை என்பது சீர்திருத்தத்தையும் நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டது.

குற்றத்துக்கான தண்டனையியலைப் பொறுத்தவரை, வல்லுநர்கள் கூற்றுப்படி நான்கு அம்சங்கள் இருப்பதாகக் கூறுவார்கள். வஞ்சம் தீர்த்தல், பழிக்குப்பழி, மனிதனைத் திருத்துவது, பின்னர் உடல்நலம் மற்றும் உளவியல் நலத்தோடு வாழவும் வழிசெய்தல். இந்த நோக்கத்தோடுதான் நாம் ஒவ்வொரு தண்டனையையும் அணுகவேண்டியுள்ளது. கன்விக்ஷன், செண்டன்ஸ், விடுதலை ஆகிய மூன்று நிலைகளைப் பற்றி மூன்று விதமான பார்வைகளையும் குற்றவியல் வலியுறுத்துகிறது. முதல்நிலையைப் பொறுத்தவரை குற்றவாளியை முடிவுசெய்ய சந்தேகத்துக்கு இடமின்றி சாட்சிகள் மட்டும் வேண்டும். இரண்டாவது நிலையில், குற்றவாளி மற்றும் சாட்சிகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். மூன்றாவது நிலையில் குற்றவாளி தண்டனைப்பெற்று என்னவாக ஆகியிருக்கிறான். இவற்றை இன்றும் தீர்ப்பில் எழுதி வருகிறார்கள்.

ஏழு பேர் விடுதலையை எதிர்த்துப் பேசக்கூடியவர்கள், `இது கொடூரமான கொலை, இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என்கிறார்கள். ஆனால், இதைக் காரணம் காட்டி விடுதலை செய்ய மறுத்தால் சிறைத் தண்டனையின் நோக்கம் அடிபட்டுப்போகிறது. மேலும், அவர் முன்னாள் பிரதமர் என்பது மாறாத உண்மை. அப்படியெனில், இந்த வழக்கில் சட்டவிதிகள் பொருந்தாது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். 'சிறைத்தண்டனையின் நோக்கம் பற்றியெல்லாம் பேசக்கூடாது. இவர்களைச் சிறையில் வைத்திருக்க வேண்டும், மேலும் தூக்கிலிடவேண்டும்' என்கிறார்கள். ஏழு பேரின் 11 ஆண்டு கால கருணைமனு கிடப்பில் இருந்ததால் நீதி மீறப்பட்டிருக்கிறது என சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் தண்டனையைக் குறைக்கிறோம் என்று கூறியபோது, அரசோ 'தூக்கிலிட வேண்டும்' என்று மீளாய்வு விண்ணப்பம் அனுப்பியது. முன்னாள் பிரதமர், கொடுமையான குற்றம், தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு போன்ற காரணங்களைச் சொல்லி விடுதலை செய்ய மறுக்கிறார்கள். எந்தக் காரணங்களைப் பார்க்க வேண்டுமோ அதை மறுக்கிறார்கள். இதுதான் இந்த வழக்கின் நிலை.

1980-ம் ஆண்டு கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, சந்திரசூட் போன்ற மூத்த நீதிபதிகள் ‘மாரூராம் தீர்ப்பு’ என்ற ஒன்றை வழங்கினர். மாரூராம் என்ற ஆயுள் கைதி சிறையிலிருந்து தொடுத்த வழக்கு இது. '14 ஆண்டுகள் ஒருவனைச் சிறையில் அடைப்பதால் என்ன கிடைத்துவிடும்' என்ற கேள்வி எழும்போது, அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர், 'எட்டாண்டு கருவறைகாலம் போதுமானது, சட்டப்புதிரை விடுவிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டே தவிர, சட்டம் இயற்ற அல்ல' என்றார். சிறைவாழ்க்கை கருவறை வாழ்க்கையோடு இங்கு ஒப்பிடப்படுகிறது. உருப்பெறாத உயிரை முழுமனித உயிராக மாற்றுகிற இடம் சிறை. குறைப்பிரசவமாக இருந்தாலும் ஆபத்து, அதிக காலம் இருந்தாலும் ஆபத்து. ஒரு வகையில் சமூக, அரசியல் வாழ்க்கையில் அக்கறையோடு இருப்பவர்கள். சக மனிதனுக்காகக் கொஞ்சமாவது கவலைப்படுகிறவர்கள் சிறையை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

அடிப்படை மனித உரிமைகளுக்கே போராடவேண்டியச் சூழல் உள்ள நாட்டில் சிறைகளைப்பற்றி, சிறை சீர்திருத்தங்களைப் பற்றி, தண்டனைமுறைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியுள்ளது. ஆகவே, மனித உரிமை சார்ந்து, ஜனநாயக உரிமை சார்ந்து, சிறை சீர்திருத்தங்கள் என்ற பார்வையிலிருந்து ஏழு பேர் விடுதலைக் கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டும்” என்று பேசினார்.

பேரா. ராமு மணிவண்ணன், ``குற்றவியல் சார்ந்து நீதி வழங்கும்போது ஒருமனிதரை சட்டத்தின்படி இரண்டு முறை தண்டிக்க முடியாது. முதலில் ஏழு பேருக்கு தூக்குத் தண்டனை அளித்தனர். பின்னர், தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றினர். 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் இருந்தவர்களின் தண்டனைக் காலம் முடிந்துவிட்டது. ஆனால், 27 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு ஏழு பேர் விடுதலைக் குறித்து முடிவெடுக்க உரிமையுள்ளது என்று கூறியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சட்டத்தின் நிலைதான் என்னவென்று பார்க்கவேண்டியுள்ளது. தமிழகம் என்கிறபோது ஆளுநரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் அடிப்படையானது. தமிழக அரசும் விடுதலையைத் தீர்மானித்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புகிறது, பரிந்துரைக்கு அல்ல. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. ஆளுநர், மத்திய அரசாங்கத்தைக் கேட்க வேண்டும் என்கிறார்.

'தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது' என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், இந்த ஒப்புதல் மீண்டும் மத்திய அரசுக்கே செல்கிறது என்றால், நாம் சட்டத்தின் முரண்பாட்டில் சிக்கியிருக்கிறோம் என்பதுதான் உண்மை. மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துதான் வந்திருக்கிறது. இப்பொழுது உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்பும் இந்தத் துறை எதிர்ப்பது 'எது அதிகாரம் மிக்கது?' என்ற கேள்வியை எழுப்புகிறது. 

இவர்கள் விடுதலை என்பது வெறும் தமிழர்களின் பிரச்னை மட்டும் கிடையாது. மேற்கு மாநிலங்களில் நர்மதாசாகர் அணை கட்டும்போது லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது உச்சநீதிமன்றம் 'தேசிய நலனுக்காக' என்ற வார்த்தையைக் கூறியது. தேசத்தின் நலன் யாருக்கு என்று நீதிமன்றம் சொல்லவேயில்லை. அணைகூட ஏழை மக்களுக்குப் பயன்படவே இல்லை. இப்போது இந்த ஏழு பேரின் நலனுக்காக அதே உச்சநீதிமன்றம் எதை நீதியாகப் பார்த்து பரிந்துரை செய்தது என்ற விளக்கத்தையும், அதற்கு மத்திய அரசின் நிலைப்பாடும், இன்றைய தமிழக அரசின் சூழலையும் வைத்துப் பார்க்கும்போது அசாதாரணமான ஒரு சூழலை நாம் உணரமுடிகிறது”. என்றார்.

அடுத்த கட்டுரைக்கு