மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்!- கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்!”

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்ஹாசன்

"அரசியல் அறிவிப்புக்கு என்னென்னமாதிரியான எதிர்வினைகள் வருகின்றன...?’’

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

முழுநேர அரசியல்வாதியாகப்போகிறேன் என்றதும் திசையெங்கிலுமிருந்து விசாரிப்புகள், விமர்சனங்கள், கேள்விகள்... அவற்றில் சிலவற்றுக்கு இந்த வாரம் பதிலளிக்கலாம் என்று இருக்கிறேன்.

‘`ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி விமர்சனம் வைக்கும் நீங்கள் ஏன் அதில் பங்கெடுக்கவில்லை’’ என்கிறார்கள். அது எப்படிப் போகும் என்ற வியூகம் உணர, பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. இன்றைய சூழலில் அது எப்படித் தொடங்கி எப்படி முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவிதமான எதிர்பார்த்த விபத்து. அது, நிகழப்பார்த்தோம் என்பதுதான் நமக்கான அவமானம். அந்த அவமானத்தைக் காலாகாலத்துக்கும் தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இதை நான் சொன்னதற்காக ஒரு தனிப்பட்ட மனிதர், தனிப்பட்ட கட்சி கோபித்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மொத்தமாக எல்லோரும் கோபித்துக்கொள்ள வேண்டும், வருத்தப்பட வேண்டும். வேண்டுமானால் என்மீது கோபித்துக்கொள்ளுங்கள். வருத்தம் இல்லை. ஆனால், யாராவது நினைவுபடுத்தவேண்டும் இல்லையா? ‘அப்படித்தாங்க நடக்கும்’ என்ற மெத்தனம் எங்கு கொண்டுபோய் விடும்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்


‘கையைக் கழுவிவிட்டு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதைக் கிண்டலடித்துக்கொண்டிருந்தால் எப்படி வியாதி குணமாகும்? ‘`எங்க ஊர்ல தண்ணியே இல்லை. எங்குபோய்க் கையக்கழுவுறது? ஆறு வேற தூரமா இருக்கு. பைப்லயும் தண்ணி வரமாட்டேங்குது. ஏதோ போங்க. இல்லைனா நீங்க கையக்கழுவிட்டு எனக்கு ஊட்டி விடுங்க’’ என்று என் விமர்சனத்துக்கு வீம்புபிடித்தால் எப்படி? நோயை நீங்கள் உணவாக உட்கொண்டபடியிருந்தால் எப்போது குணமாவீர்கள்?

ஆமாம், நடந்த அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்வதன்மூலம் நான் என்னையே அவமானப்படுத்திக்கொள்கிறேன்.

ஆர்.கே.நகரில் குடியிருந்து டோக்கன் வாங்கியிருந்தால்தான் அசிங்கமா? வெளியில இருந்து அது நிகழப் பார்த்துக்கொண்டு இருந்தேனே, அந்தக் குற்றவுணர்வு எனக்கும் உண்டே. அதைத் தடுக்க என்ன செய்தோம். அதில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்களின் முயற்சி என்ன ஆனது? இதை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய ஊடகங்கள் ஓரளவுக்குச் செய்தன. ஆனால், இன்னும் செய்ய வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் என்பது மக்களின் மனசாட்சி. ஆனால், அவையும் சேர்ந்து உளறிக்கொட்டினால் ஒருவிதமான தீர்க்கமுடியாத நோயாக மாறிவிடும். அதை நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டும் என்பதே என் விமர்சனத்தின் உள்ளர்த்தம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். அதற்கு எதிர்க் கருத்து சொல்லாமல், உருவ பொம்மை எரிப்பு, வழக்கு என்று சென்றனர். அவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நற்பணி மன்றத்தாரையும் ‘தலைமையின் அனுமதியின்றிச் செய்யாதீர்கள்’ என்கிறீர்கள். ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அனுமதியளிக்காத இதுவும் சர்வாதிகாரம்தானே?’’ இப்படியும் சொல்கிறார்கள் சிலர்.

இதில் சர்வாதிகாரம் ஒன்றும் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்தவேண்டியது என் கடமை. தேவையின்றி அந்த 500 பேரைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்றால் அவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது; இந்த ஆர்ப்பாட்டத்தினால் சாதிக்கப்போவது என்ன; மக்களுக்கு என்ன லாபம்? இவையே என் கேள்வி. சிறை செல்லாமல் எப்படி நாம் வளர முடியும் என்கிறார்கள். நான் ஒரு கருத்து சொன்னேன். அதற்கு அவர் பதில் கருத்து சொல்லியிருக்கிறார் என்ற அளவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு பேருக்குள் முடியும் இந்த விஷயத்தில் நாம் மக்களை ஈடுபடுத்தவேண்டியதில்லை. இந்தப் பிரச்னையே ஆக்கபூர்வமான விவாதமாக வடிவெடுக்கும்போது, அப்போது கலந்துபேசி, கூட்டங்கள் நடத்திக் கருத்துகளைச் சொல்லலாமே தவிர, நேர் செய்யும் வெற்றுக் கூச்சல், வெட்டி பந்தா தேவையற்றது.

“ஏ
கப்பட்ட தயாரிப்புகள்... சந்திப்புகள்... ஆலோசனைகள்... கட்சி தொடங்கும் திட்டம் எப்படிப் போய்ட்டிருக்கு’’ என்று கேட்கிறார்கள். இப்படிக் கேட்பது, படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே, ‘`என்ன கதை?’’ என்று கேட்பதற்கு சமம். ‘`ஜேம்ஸ் பாண்டு படம் மாதிரி பண்றோம். த்ரில்லர், காமெடி, சமூக சிந்தனை அதிகம் உள்ள படம்...’’ இப்படியெல்லாம் சொல்லலாம். ஆனால், ‘`இதில் உங்கள் தோற்றம் என்ன? முகத்தில் ஒரு வடுவோடு வரப்போவதாகப் பேச்சு இருக்கிறதே’’ என்ற கேள்விக்குப் பதில் சொன்னால் முழுக்கதையும் சொல்லிவிட்டதாக ஆகிவிடுமே. சொல்வதைப்பற்றி ஒன்றும் இல்லை. இதில் ரகசியமும் இல்லை. பிரகடனத்துக்காகத்தான் இவ்வளவு பிரயத்தனங்களும்.

ஆனால், சினிமாவில் நாம் எடுத்து முடிப்பதற்குள் வேறொருவர் எடுத்து ரிலீஸ் பண்ணிவிடுவார்களே என்ற பயம். இங்கேயும்கூட அது நடக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது. அதனால் சொல்வதை மிகச்சரியாகச் சொல்லவேண்டும். சொல்லிவிட்டுத் திருப்பி வாங்கவேண்டிய நிலைமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிசகு நடந்தால், தவறு நடந்துவிட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டு, மாற்றித் திருத்திக்கொள்ளவேண்டும். அந்த வேலைகள்தான் போய்க்கொண்டிருக்கின்றன. 

‘`ம
ய்யம் விசில் செயலி ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்றீர்களே, என்ன ஆனது’’ என்கிறார்கள் வேறு சிலர். இது, ``விஸ்வரூபம்-2, எந்திரன்-2 எப்ப ரிலீஸ்’’ என்று கேட்பதுபோல் இருக்கிறது. அதனால், ரிலீஸ் தேதி சொல்லிவிட்டேன் என்பதற்காக சினிமாபோல் எப்படியாவது கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்பது கிடையாது. இது, ‘`பொங்கலுக்குக் கொடுக்குறேன்னு சொன்னீங்க. இன்னும் கரும்பே கொடுக்கலையே’’ என்பதுபோன்ற விஷயம் கிடையாது. சிலருக்கு இது கரும்பாகக்கூட இருக்காது, கசக்கும் மருந்தாக இருக்கும். அதனால் இதை ஜாக்கிரதையாகப் பண்ணவேண்டும், இதில் நேர்மை இருக்கவேண்டும். நல்லவிதமாக வேலை செய்யவேண்டும். வேறு தவறுகள் வந்துவிடக்கூடாது.

ஏனெனில், இதுபோன்ற விஷயங்களைப் பலமுறை முயற்சிசெய்து பார்த்தவன் நான். அதனால் எப்படிச் செய்யக்கூடாது என்பதில் எனக்கு நிறைய நல்ல அனுபவங்கள் உண்டு. அதனாலேயே சரியாகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தொழில்நுட்ப ரீதியாக எல்லாம் சரியாக அமைந்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும். சினிமா போன்று இதுவும் தொழில்நுட்பம் சார்ந்ததுதான். ஆனால், அது பொழுதுபோக்கு. இது மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இந்த அத்தியாவசியத்தைப் போட்டிக்காக அவசரப்படுத்த முடியாது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போல் போட்டிபோட இது வியாபாரமில்லை. அதையும்தாண்டி முக்கியமான மக்கள் சேவைக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி. அதை மிகச்சரியாகப் பண்ணவேண்டியது கடமை. அதற்கான எல்லா டெஸ்டிங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இதை வெளியில் விட்ட பிறகு ஒவ்வொருவராகப் பிழைகளைச் சொல்லச் சொல்லத் திருத்துவதைவிட, அதற்கு முன்னரே திருத்திக்கொண்டு பிறகு மக்களிடம் கொண்டுபோனால், உடனடியாகப் பயன்பாட்டுக்கு வரும். இது பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லைதான். ஆனால், சயின்ஸ் சம்பந்தப் பட்டிருப்பதால் அறிவார்ந்த கூட்டம், ஆராய்ச்சியை அதிகப்படுத்தி சரியாகக் கொண்டுவந்து சேர்த்தால்தான் பிரயோஜனப் படக்கூடிய கருவியாக இருக்கும். அதற்காகத்தான் இந்தத் தாமதம்.

‘`ந
ண்பர்கள் பகைவர்களாவார்கள். எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?’’ - இது பெரும்பாலானோர் கேட்கும் முதன்மையான கேள்வி. இதற்கான பதிலை, என் வாழ்க்கையிலிருந்தே எடுத்தாள்கிறேன். நான் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் சக நடன மணிகளின் பாராட்டும் பொறாமையும் ஒருங்கே வர ஆரம்பித்தன. ‘`என்னைவிட நல்லா ஆடுறானா, எவன் அவன்’’ என்று பல நடனமணிகள் அன்று கேட்டதும் காதுக்கு வந்தன. அந்தக் கோபம், பொறாமைக்கூட ஒருவிதமான பாராட்டுதான் என்று எடுத்துக்கொண்டு கடந்துவிடவேண்டும்.

‘`நான் எப்போதும் நடனமணிதான், உங்களைத் தோற்கடிக்க வந்த நடனமணி’’ என்று நினைத்துக்கொண்டிருந்தால், ‘`இந்த வருட டிசம்பர் சீசனில் ஆர்.ஆர். சபா, மியூசிக் அகாடமி,  கிருஷ்ணகான சபாவில்  எப்போது சான்ஸ் தருவார்கள்’’ என்று சதா நேரமும் அந்தப்போட்டியிலேயே காலத்தைக் கடத்தியிருப்பேன். அடுத்த கட்டமாக சினிமாவில் நடன உதவியாளராக, உதவியாளனாக, இயக்குநரின் உதவியாளனாக, சினிமா எழுத்தாளனாக, நடிகனாக, பிறகு ஆசைப்பட்ட சினிமாவை எடுக்க முற்படும் தயாரிப்பாளனாக என்று... இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்திருக்கவே முடியாது.

இப்படி உயர்மட்டம் என்பதை அடைவதற்கு எல்லோரும் போன அதே பொதுவழி என்பதும் இல்லவே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் வந்து சேர்வார்கள். அரசியலையும் அப்படித்தான் பார்க்கிறேன். தவிர போட்டி, பொறாமை வந்துவிடும் என்பதற்காக முன்னேறாமலேயே இருக்கமுடியுமா? அதுவும் நான் பேசுவது என் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமா? போதும் என்ற மனமே பொன் செய்யும். உண்மைதான். ஆனால் ‘இது போதும்’ என்று நினைத்திருந்தால் இந்த உலகமே தொழில்மயமாகியிருக்காது; வளர்ந்திருக்காது. தவழ்ந்துகொண்டிருந்த நாம் எழுந்து நடைபோடும் குரங்காக மாறியிருக்க மாட்டோம், நடைபோட்டது போதாது என்று சக்கரத்தைக் கண்டுபிடித்திருக்க மாட்டோம். விசை, திசை, வேகம் அறிந்திருக்க மாட்டோம். அண்ணாந்து பார்த்து, பறவையைக் கண்டு விமானம் செய்திருக்க மாட்டோம்.

ஆம், இவற்றை நிகழ்த்திய அந்தக் காலகட்டங்களின் தொடர்ச்சியும் அதன் அடுத்தடுத்த கட்டங்களும்தாம் என் பேராசை. அதுவே என் கொள்கை. அது வெல்லலாம், வெல்லாமலும் போகலாம்.
தவறில்லை.அதைநோக்கிய பயணம்தான் என் அரசியலாக இருக்கும். ஆனால், இந்தப்பயணத்தில் நண்பர்களைப் பகைவர்களாக்கி, அந்தப் பகையைப் பெரிதாக்கி, அதை விளம்பரமாக்கி, அதை வியாபாரமாக்கி, அதன்மூலம் என் இருப்பை நிலைநிறுத்தி... இப்படி வழக்கமான பாரம்பர்யத்தில் வரும் அரசியல்வாதியாகத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஒரு தலைமையின் கீழ் தொடரவும் இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை.

‘`இது என் கொள்கை. இது, அதன் கீழ் வரும் திட்டம். செயல்படுத்துகிறேன். தவறா, எடுத்துச்சொல்லுங்கள், திருத்திக்கொள்கிறேன்...’’ என்று நெகிழும் தன்மையுள்ள ஓர் ஒருங்கிணைப்பாளனாக இருக்கவே விருப்பம். இதை, மூத்த முன்னோர்கள், நண்பர்களுக்குள்ளும் தொடர முயல்வேன். ஆனால், அவர்களைச் சுற்றியுள்ளோரின் அகோரப் பசிக்கும் மீடியாக்களின் தினப்படி தீனிக்கும் இரையாகி, நம் பேச்சுக்கு, கருத்துக்குத் தவறான பொழிப்புரை சொல்லப்பட்டு, வேறாக மொழிபெயர்க்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டால்... அதற்கு நாம் பொறுப்பல்லர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

‘`அரசியல் அறிவிப்புக்கு என்னென்னமாதிரியான எதிர்வினைகள் வருகின்றன’’ என்கிறார்கள். ஏகப்பட்ட எதிர்வினைகள். இவை, என் மகள் ஸ்ருதி கேட்டவை. ‘`அப்ப, எங்க கமல்ஹாசன் என்ன ஆவார், எனக்குத் தெரிஞ்ச என் அப்பா என்ன ஆவார்?’ என்றார். `‘அவர் அப்படியேதாம்மா இருப்பார். கொஞ்சம் நரைகூடிட்டா அப்பா இல்லைனு  சொல்லிடுவியா’’ என்றேன். ‘`என்னை உனக்கு அப்பாவாகத் தெரியுமா, உலக நாயகனாகத் தெரியுமா? அதே அப்பாவாகத்தான் எப்பவுமே இருப்பேன்’’ என்றேன்.

``நான் ஆரம்பிக்கும்போது உலக நாயகன் என்ன, உள்ளூர் நாயகன்கூட கிடையாது. ‘அந்தப் பையன் பேர் என்னப்பா’ என்றுதான் என்னைத் தேடினார்கள். பிறகு வளர வளர வேறுவேறு பட்டம் கொடுத்தார்கள். அவை பறந்து போரடித்துவிட்டது என்றதும், அந்தப் பட்டத்தை இறக்கிவிட்டு வேறுபட்டம் ஏற்றினார்கள். புதுக்காற்று அடிக்க அடிக்க புதுப்பட்டங்கள் வந்து சேர்ந்தன. அவ்வளவுதான். அதைப்போய் சீரியஸா எடுத்துக்காதம்மா.’’ என்றேன்.

‘`நீங்க கலைஞன் என்பது முக்கியமில்லையா’’ என்றார் ஸ்ருதி விடாமல். ‘`அது மாறவே மாறாது. இப்ப கலைஞரைப் பார்க்கலையா’’ என்றேன். மலேசியாவில் சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன். ‘`உங்களின் வசனங்களிலேயே உங்களுக்கு ரொம்பப் பிடித்தது எது’’ என்று கேட்டார்கள். எனக்கு நடிக்கத் தெரியும் என்பதை உணர்த்த அந்த ஜாம்பவான் பேசிய வசனத்தைப் பேசிக்காட்டியவன் நான். பிறகு அவரே, நான் எழுதிய ‘விதை நான் போட்டது’ வசனத்தைப் பேசினார். இந்த முழுவட்டப் பிரயாணம்தான் கலைஞனாக எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

‘இனி’ என்றதற்கான பதிலே என் அரசியல் பயணம். ‘`என்ன செய்யப்போற, என்ன கொள்கை’’ என்று கேட்பார்கள். கேட்கிறார்கள். அது என்னையும் தாண்டி வாழும் மேனிஃபெஸ்டோவாக இருக்கவேண்டும் என்பதே என் பேரவா. ஏனெனில், அது தன்னையும் தாண்டி இருக்கவேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்கள்தாம் கட்சியையே ஆரம்பிக்கவேண்டும் என்பது என் கருத்து. ஒரு தலைமுறையுடன், இரண்டு தலைமுறையுடன் போகக்கூடிய கட்சியாக இருந்தால் மிகக்குறுகிய காலகட்டத்துக்குத் தற்காலிகமாக ஆரம்பிக்கப் படும் பைபாஸாகத்தான் நினைக்கவேண்டும். பைபாஸிலேயே பாலம் கட்டி முடிக்கவேண்டும் இல்லையா, கடலே ஆர்ப்பரித்தாலும் பாம்பன் நிற்கிறதில்லையா? அந்தமாதிரி கட்டவேண்டும். அதற்கு எத்தனை நாள் ஆகும் என்பதை மக்களே புரிந்துகொள்வார்கள். நான் தாமதப்படுத்துவது, சந்தேகத்தினாலோ பயத்தினாலோ அல்ல. சிரத்தையினால்.

“எங்களை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?’ இது பொதுவாக மக்கள் கேட்கும் கேள்வி. மறதிதான் உங்களை ஏய்ப்பவர்களின் மூலதனம். அதனால் வல்லாரை வஸ்துக்களை வழித்துத் தின்னாவது அரசியல் நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள். கழுத்தளவு தண்ணீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களே டிசம்பர் மழையை மறந்துவிட்டார்களே. அவர்களுக்குக்கூட முன்னெச்சரிக்கை செய்யவேண்டியதாக இருக்கிறதே. அவதிப்பட்டவர்களுக்கே அப்படியென்றால், மற்றவர்களுக்கு?

அப்படி, கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துள்ளன. அதிலும் 2017-ல் ஏகப்பட்ட மாற்றங்கள், மல்லுக்கட்டுகள். அதில் பலவற்றை ஊடகங்கள் அவ்வப்போது ஊட்டிக்கொண்டே இருந்தன. அவர்கள் அப்படி ஊட்டிய அந்தத் துரித உணவுகளை அவர்களும் மறந்துவிட்டனர். அவர்கள் மேலும் மேலும் திகட்டத் திகட்ட ஊட்டிய செய்திகளால் மக்களையும் மறக்கடிக்கச் செய்துவிட்டனர். முன்பு செய்திகள் அபூர்வமாக வரும். அப்படி வருபவையும் வாரத்துக்கு ஒருமுறைதான் புதிதாகும். ஆனால், இன்று கடற்கரையில் போய் நின்றால் அடிக்கும் காற்றைப்போல் நாம் வெளியே வந்தாலே கேட்காமலேயே நம்மீது செய்திகள் கொட்டப்படுகின்றன. அதுவும் மணிக்கொருமுறை அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன.

ஆங்கிலத்தில் துர் சொப்பனங்களை `நைட் மேர்’ என்பார்கள். அது நினைவிருக்கும். ஆனால், அற்புதமான சந்தோஷக்கனவுகள், காதல் கனவுகள் நினைவிருக்காது. ஏனெனில், தினமும் கண்டுகொண்டே இருப்பதால். அதனால் நமக்கு துர் சொப்பனங்கள் மட்டுமே நினைவில் உள்ளன. அவை மேலும் மேலும் அதிகரிக்கும்போது அபாயங்களையே மறந்துவிடுகிறோம். ஆகவே, செய்திகளைப் பொழுதுபோக்காகக் கடந்துவிடாமல் அதன் பின் உள்ள அரசியலைப் பகுத்தறியப் பழகுங்கள். அவ்வளவுதான்.

- உங்கள் கரையை நோக்கி!

- கமல்ஹாசன்

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.