Published:Updated:

பூவா, தலையா போட்டுப் பார்க்க வேண்டுமா நிதியமைச்சரே? - ரஃபேல் விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி

சுகன்யா பழனிச்சாமி
பூவா, தலையா போட்டுப் பார்க்க வேண்டுமா நிதியமைச்சரே? - ரஃபேல் விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி
பூவா, தலையா போட்டுப் பார்க்க வேண்டுமா நிதியமைச்சரே? - ரஃபேல் விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி

``ரஃபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க உரிய விசாரணை தேவை'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் நடைபெற்ற ஊழலை ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளன. அதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சமீபத்தில் ரஃபேல் விவகாரம்குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலுக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரிலையைன்ஸ் நிறுவனத்தையும் கூட்டாளியாகச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹெலாந்த் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதையடுத்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ``எந்தக் காரணத்திற்காகவும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட மாட்டாது. பா.ஜ.க அரசுமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை' என்று தெரிவித்தார். இவரது கருத்தை விமர்சித்துள்ள ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், `உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதியமைச்சர், ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படிக் கண்டுபிடிப்பது. இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதியமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ. ரஃபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை'' என்று தெரிவித்துள்ளார்.