Published:Updated:

`நல்ல முடிவு வரும்னு நம்புறேன்!' - ஆளுநரை சந்தித்த பின் அற்புதம்மாள் நம்பிக்கை

கலிலுல்லா.ச
`நல்ல முடிவு வரும்னு நம்புறேன்!' - ஆளுநரை சந்தித்த பின் அற்புதம்மாள் நம்பிக்கை
`நல்ல முடிவு வரும்னு நம்புறேன்!' - ஆளுநரை சந்தித்த பின் அற்புதம்மாள் நம்பிக்கை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து மனு அளித்தார். அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விரைவில் நல்லமுறையில் முடிவெடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக ஆளுநரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து மனு அளித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மனு அளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த என்னுடைய மகன் பேரறிவாளன் நிலைமை குறித்தும், தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளேன்.  

அதில் நீதியரசர் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் உள்ளிட்டவர்களின் தீர்ப்பு குறித்த தகவல் மற்றும் குறுந்தகடு உள்ளிட்டவற்றை ஆளுநரிடம் அளித்தேன். அதேபோல் பேரறிவாளனுக்கு நன்னடத்தை காரணமாக வழங்கப்பட்ட பரோல் குறித்தும் அவரிடத்தில் மொழிபெயர்ப்பாளர் மூலம் எடுத்துக்கூறினேன். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர் எனது மனுவை முழுவதுமாக படித்தார். அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விரைவில் நல்லமுறையில் முடிவெடுப்பார்  என்ற நம்பிக்கை உள்ளது' என்று அவர் தெரிவித்தார்.