Published:Updated:

`எம்.ஜி.ஆர் விழாவுக்கு டி.டி.வி.தினகரனை அழைத்தது ஏன்?’ - அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

சுகன்யா பழனிச்சாமி
`எம்.ஜி.ஆர் விழாவுக்கு டி.டி.வி.தினகரனை அழைத்தது ஏன்?’ - அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்
`எம்.ஜி.ஆர் விழாவுக்கு டி.டி.வி.தினகரனை அழைத்தது ஏன்?’ - அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

எம்எல்ஏ என்ற முறையிலேயே டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனத் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஆண்டு தொடங்கி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இது தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், நூற்றாண்டு நிறைவு விழா நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் வாழ்த்துரை வழங்குகிறார்கள் எனத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், இந்த அழைப்பிதழ் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கருணாஸ் கைது மற்றும் ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு, `முதல்வர் தெளிவாகக் கூறியுள்ளார். சட்டம் தம் கடமையைச் செய்யும் என்று. எந்த நாளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோ அதே நாளில் நிச்சயம் காவல்துறை அவரை ஆஜர்படுத்தும். இதில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதுபோல் ஒருவருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடு கிடையாது. சட்டம் தம் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது' என்றவரிடம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் தொடர்பான கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இதற்கு,`கன்னியாகுமரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பொ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அதேபோல், சில இடங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-கள் கலந்து கொண்டுள்ளனர். இது அரசு நிகழ்ச்சி. அதனால், எம்.எல்.ஏ, எம்.பி என சில பேரை அழைப்பது கடமை. அந்த வகையில், டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். விழாவில் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது' என்று கூறினார்.