Published:Updated:

`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

சுகன்யா பழனிச்சாமி
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். 

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான `ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். `உலகிலேயே, ஒரு நாட்டு அரசின் சார்பாக அந்நாட்டு மக்களின் மருத்துவ சேவைக்காகத் தொடங்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் இது என்றும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றும் விழாவில் பிரதமர் மோடி பேசினார். அதோடு, இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனப் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், `உலகில் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தன்னோடு இணைந்து கைகோருங்கள். `பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தால் ஏழை எளிய மக்களும் தரமான சுகாதார சேவைகளை பெறுவது உறுதியாகியுள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.