Published:Updated:

`அருண் ஜெட்லியின் பாஸ் இதைச் செய்ய விடமாட்டார்' - ராகுல் காந்தி காட்டம்

சுகன்யா பழனிச்சாமி
`அருண் ஜெட்லியின் பாஸ் இதைச் செய்ய விடமாட்டார்' - ராகுல் காந்தி காட்டம்
`அருண் ஜெட்லியின் பாஸ் இதைச் செய்ய விடமாட்டார்' - ராகுல் காந்தி காட்டம்

ரஃபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின்மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசுக் கேட்டுக்கொண்டதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹெலாந்த் தெரிவித்தார். ரஃபேல் விவகாரத்தில் பிராங்சுவாங்கின் கூறிய தகவல் சர்ச்சையைக் கிளப்பியது. இவரது, கருத்து இருநாட்டு உறவையும் பாதிக்கும் எனப் பிரான்ஸ் அரசு வருத்தம் தெரிவித்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `ரஃபேல் போர் விமானம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். அதற்காகக் குழு ஒன்றை அமைக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த வேலையை அருண் ஜெட்லியின் பாஸ் (நரேந்திர மோடி) செய்ய விடமாட்டார். பிரதமர் நரேந்திர மோடி அதிகமாகப் பேசி வருகிறார். ஆனால், ரஃபேல் குறித்து மட்டும் பேச மறுக்கிறார். ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தைகூட பிரதமர் இதுவரையிலும் பேசவில்லை. முக்கிய பிரச்னை என்னவென்றால் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரதமரை திருடன் என்று அழைத்ததுதான். இது குறித்து நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும்' என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.