Published:Updated:

``தயார்தானா ஸ்டாலின்?" அழைப்பு ஒருபுறம்... சவால் மறுபுறம்!

``தயார்தானா ஸ்டாலின்?" அழைப்பு ஒருபுறம்... சவால் மறுபுறம்!
``தயார்தானா ஸ்டாலின்?" அழைப்பு ஒருபுறம்... சவால் மறுபுறம்!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது, அ.தி.மு.க தரப்பு. இந்த விழாவுக்குத் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு... மறுபுறம், சவாலையும் கொடுத்து தி.மு.க-வை ஆழம்பார்க்க ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க-வின் அரசு.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஆண்டு முதல், மாவட்ட வாரியாகக் கூட்டங்கள் நடத்திக் கொண்டாடி வருகிறது அ.தி.மு.க தலைமையிலான மாநில அரசு. நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிறைவுவிழா பொதுக்கூட்டத்துக்குப் பிரதமர் உள்ளிட்டவர்களை அழைக்கும் திட்டத்துடன், ஆரம்பத்திலிருந்தே தயாராகி வருகிறது மாநில அரசு. ஆனால், சமீபத்தில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டு வரும் பிணக்கால், பிரதமர் வருகைக்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்த அ.தி.மு.க தலைமை, மாற்று ஏற்பாட்டைக் கையில் எடுத்தது. அதன்படி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நிறைவு விழாவை நடத்தி முடிக்க முடிவாகிவிட்டது. இந்த விழா அழைப்பிதழும் தயாராகிவிட்டது. இந்த அழைப்பிதழைப் பார்த்த அனைவருக்குமே ஆச்சர்யம். காரணம், இந்த நிறைவு விழா அழைப்பிதழில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களின் பெயர்களோடு சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பெயர்களும் வாழ்த்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

“பொதுவாக அரசு விழாக்கள் என்றால், அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பெயரை அழைப்பிதழில் போடுவார்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் அவரது பெயர் அழைப்பிதழில் இடம்பெறும். ஏன், சைக்கிள் வழங்கும் விழா முதல் அரசுத் திட்டங்கள் தொடக்க விழா வரை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ-க்கள் பெயரைப் போடுவது மரபு. அந்த அடிப்படையில், மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன” என்கிறார் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். அமைச்சர் பாண்டியராஜன், “தமிழக அரசு சார்பில் இந்த விழா நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர் புகழுக்குக் களங்கம் இல்லாத வகையில் சில நபர்களை அழைக்க வேண்டியது கடமை” என்று மறைமுகமாகத் தி.மு.க-வினரை அழைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

`இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வாரா... மாட்டாரா' என்ற மில்லியன் டாலர் கேள்வி இதுவரை இருந்துவருகிறது. அவர் கலந்துகொண்டால் மட்டுமே, கனிமொழி உள்ளிட்ட பிற தி.மு.க-வினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அதேபோல், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி இதுவரை தினகரன் தரப்பு முடிவு செய்யவில்லையாம். அவர் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சென்னை வந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான `நமது புரட்சித் தலைவி அம்மா'  நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ஒரு கட்டுரை தி.மு.க-வினருக்குச் சவால்விடும் வகையில் அமைந்துள்ளது.

`` `அழைத்துவிட்டது அரசு... ஸ்டாலின் தயாரா' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க-வில் நடந்துகொண்டிருக்கும் உட்கட்சி  பூசல்கள், குத்துவெட்டுகள், குழிதோண்டும் துரோகச் செயல்கள் எங்கெங்கு நடக்கின்றன. யாரை எதிர்த்து யார் குழி தோண்டுகிறார்கள். கவிழ்க்க நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் அக்கட்சியின் தலைவராக முடிசூடிக் கொண்ட ஸ்டாலின் தீர விசாரித்துப் பார்த்தால், நன்றாகப் புரிந்துவிடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க எத்தனை கோஷ்டிகளாகப் பிரிந்து அவர்களுக்குள்ளேயே கவிழ்க்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஸ்டாலினுக்குத் தெரியவில்லை என்றால், அதுபற்றி தீர விசாரித்துத் தெரிந்துகொண்டால் தி.மு.க-வில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்குச் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும். 

தன் முதுகில் அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் ஸ்டாலினுக்கு அழகும் அல்ல... அருகதையும் இல்லை” என்று தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் விமர்சித்துச் செல்கிறது இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் இறுதியில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்த வருமாறு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடியாரும் ஓ.பி.எஸ்ஸும் தங்கள் பெருந்தன்மையை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே பெருந்தன்மையோடு தன் தந்தையாரின் 40 ஆண்டுக்கால உயிர்நண்பரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அவரின் சகோதரியாரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்பாட வர வேண்டும். அதை, தமிழகம் எதிர்பார்க்கிறது. தயார்தானா ஸ்டாலின்” என்று முடிகிறது இந்தக் கட்டுரை. 

''அழைப்பிதழில் பெயர் அடித்துவிட்டு, எங்களை விமர்சித்து கட்டுரையைத் தீட்டுவதே நாங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான். நிகழ்ச்சி அழைப்பாளர்களுக்கு இந்தப் பண்பாடுகூடத் தெரியாமலா இருக்கும். அழைப்பு கொடுத்துவிட்டு, சவால்விடுவது எதற்காக” என்று பொங்குகிறார்கள் தி.மு.க-வினர். ''தி.மு.க தலைமைக்குச் செக் வைக்கவே அழைப்பிதழில் பெயர் அடித்து சவால் விட்டுள்ளது அ.தி.மு.க'' என்கிறார்கள் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள்.