Published:Updated:

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? - கொஞ்சம் இதப் படிச்சிருங்க!

`தம்பி, ஹெல்மெட் போட்டா மட்டும்  பத்தாது ஹெல்மெட்ல இருக்குற பெல்ட்டையும் போடணும்'

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? - கொஞ்சம் இதப் படிச்சிருங்க!
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? - கொஞ்சம் இதப் படிச்சிருங்க!

ரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். தேனாம்பேட்டையில் ரெட் சிக்னல் விழுந்தது. அப்போது என்னை நோக்கி ஒரு காவல் அதிகாரி வந்து கொண்டிருந்தார், நாம்தாம் ஹெல்மெட் அணிந்திருக்கிறோமே நம் பின்னால் இருப்பவரை நோக்கி வருகிறார் போல என நினைத்துக்கொண்டிருக்கையில், என் அருகில் வந்து `தம்பி, ஹெல்மெட் போட்டா மட்டும் பத்தாது ஹெல்மெட்ல இருக்குற பெல்ட்டையும் போடனும்' என்றார். `பெல்ட் போடலான நீ வண்டிய விட்டு கீழ விழுந்தா ஹெல்மெட்டும் விழுந்துரும், அது டோட்டலி வேஸ்ட்' என்றார்.  நம்மில் பலரிடம் உள்ள ஹெல்மெட்டில் பெல்டே இருக்காது அல்லது உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும். நல்லவேளை என் ஹெல்மெட்டில் பெல்ட் இருந்தது, `தேங்க் யூ சார்' என்று சொல்லிவிட்டு பெல்ட்டை மாட்டினேன், கீரின் சிக்னலும் விழுந்தது. புறப்பட்டேன்.

இளைஞர்கள் பலர், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவதைக் கெத்தாக நினைக்கிறார்கள். `நான் செத்தா போலீஸுக்கு என்ன கவலை?' என்ற கேள்வியைப் பிரதானமாக வைக்கிறார்கள். `நாம் வாழ்வதற்கான முழு உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால், இறப்பைத் தேடிக்கொள்ள நமக்குத் துளிகூட உரிமை இல்லை' என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம். ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கு பலரும் கூறும் காரணங்கள், `முடி கொட்டிடும்... வேர்த்துக் கொட்டுது... காது கேட்கவில்லை... சைட்ல வர வண்டி தெரியல' என்பதுதான். வியர்வையால் முடி கொட்டுகிறது என்பவர்களுக்கு 6 முதல் 8 ஏர் வென்டிலேட்டர்கள் கொண்ட தலைக்கவசங்கள் கிடைக்கிறது. பின்வரும் வாகனங்கள் தெரிவதற்கு தடையாய் இருப்பது ஹெல்மெட் அல்ல, சைட் மிரர்களை சரியாக வைத்துக்கொண்டால் பின்வரும் வாகனங்களை எளிதாகக் கடக்க முடியும் என்பது போன்ற விழிப்பு உணர்வுகளை செய்துவருகிறது  காவல்துறை. ஹெல்மெட் அணிவதில் எந்தவிதமான பிரச்னை இருந்தாலும், உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.


தமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஜனவரி - ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நடந்த விபத்துகளில் 40.53% இருசக்கர வாகன விபத்துகள்தாம். இதில் 73.14 சதவிகிதம் பேர் தலையில் அடிபட்டே உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில், 2016-ம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 28 பேர் தலைக்கவசம் அணியாததால் தலையில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றுக்கு 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அறிக்கை. தலைக்கவசம் அணிவதன் மூலம் 69 சதவிகிதம் தலையில் ஏற்படும் காயங்களையும், 42 சதவிகித உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு.  

தலைக்கவசம் என்பது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே 1914-ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டார் ரேஸ் நடைபெறும்போது பல உயிர்கள் தலையில் அடிபட்டுப் பிரிந்தது, இன்னும் சிலர் தலையில் அடிபட்டு  கோமாவுக்குச் சென்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமென நினைத்த டாக்டர் எரிக் கார்ட்னர் என்பவர் மோஸ் என்ற டிசைனரின் உதவியோடு தலைக்கவசங்களை உருவாக்கினார். முதலில் இதை அணிய மறுத்த வீரர்கள் பின்னர் இதன் மகத்துவம் உணர்ந்து அணியத் தொடங்கினார்கள். ஆனால் இங்கு இது தலைகீழாக நடக்கிறது சட்டம் வந்த சில நாள்கள் மட்டுமே நம்மவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

2015-ம் ஆண்டு  ஜூன் மாதம், ``மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழுள்ள 129-வது பிரிவின் படி, தலைக்கவசம் அணிவது அவசியம்" என்ற உத்தரவைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். அடுத்த 3 மாதங்களில் ஹெல்மெட் வியாபாரம் பலமடங்காக அதிகரித்தது. பற்றாக்குறை காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்தெல்லாம் விற்பனை நடந்தது. போகப் போக போலீஸாரின் கெடுபிடிகள் குறைய, பழைய நிலைக்கே திரும்பினர் வாகன ஓட்டிகள். தலைக்கவசம் அவசியம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து சரியாக ஓர் ஆண்டு கழித்து ``தமிழகத்தில் 50 சதவிகிதம் மட்டுமே கட்டாய தலைக்கவச உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் பலரும் தலைக்கவசம் அணியாமலேயே பயணம் செய்கிறார்கள்" என்று வருத்தம் தெரிவித்தது உயர்நீதிமன்றம். 


பின் இருக்கையில் இருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதுதான் நீதிமன்ற உத்தரவு. ஆனால் அது இன்றுவரை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இருந்தும் சாலைகளில் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் சிலர் தலைக்கவசம் அணிந்திருப்பதையும் காண முடிகிறது. சிலர் குழந்தைகளையும் தலைக்கவசம் அணியச் செய்திருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும், குழந்தைகளுக்கு ஏற்றத் தலைக்கவசங்கள் சந்தையில் கிடைக்கிறது. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு முதுகெலும்பு வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது என்பதால் தலைக்கவசம் அணியக் கூடாது. அவர்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச்செல்லாமல் தவிர்ப்பது நல்லது.

``நான் மெதுவாகத்தான் செல்கிறேன் எனக்கு ஹெல்மெட் தேவை இல்லை" என்கிறவர்கள் சிலரும் இங்கு இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்திலிருந்து உயிர் தப்பிய கதையும் இங்கு உண்டு என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மகாராஷ்டிர மாநில அரசு ``தலைக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடப்படாது" என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. அதேபோல தமிழகத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால் ஹெல்மெட் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தலைக்கவசம் அணியாததற்கு ``தலைக்கவச  நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம், போலீஸாருக்கு லஞ்சம் பெற நல்ல வாய்ப்பு" என்பதையே காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்காமல்,  நம் உயிரையும், நம் குடும்பத்தினரின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு ஹெல்மெட் அணிவது அவசியம். ஹெல்மெட்டிலிருக்கும் பெல்ட்டை அணிவதும் அவசியம். 

போர்க் காலங்களில், படைவீரர்கள் அனைவரும் தலைக்கவசங்கள் அணிந்து போர்க்களத்தில் சண்டையிடுவார்கள் என்று பழைய புராணங்கள், இலக்கியங்களில் படித்திருப்போம். இன்றும் எல்லையில் இருக்கும் நம் வீரர்கள் தலைக்கவசம் அணிந்தே போர் புரிகிறார்கள். தினசரி காலையில்  வாகன நெரிசல்களுக்கிடையே அவசர அவசரமாக நாம் அலுவலகங்களுக்குச் சென்றடைவதும் ஒரு போர்ச்சூழல் போலவே இருக்கிறது. சாலைகளை போர்க்களமாகக் கொண்டால், வாகனங்களில் செல்லும் நாம்தான் வீரர்கள். வீரர்களான நாமும் தலைக்கவசம் அணிவது அவசியம் தானே? 

பதிலை கமென்ட்டில் சொல்லிவிட்டு, ஹெல்மெட்டை ரெடி பண்ணுங்கள்!