பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து அறநிலையத்துறையின் அனைத்து அதிகாரிகளும் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்டெடுக்க `ஆலய மீட்புக் குழு' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அறநிலையத்துறை குறித்து ஹெச்.ராஜா தொடர்ச்சியாகப் பேசி வந்தார். இதையடுத்து, கடந்த 2-ம் தேதி, இந்து அமைப்பினரை ஒருங்கிணைத்து, வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாளப் போராட்டம் நடத்தியிருக்கிறார். அப்போது, ''சிலை மோசடியில் ஈடுபட்ட அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபாலை நடுரோட்டில் வைத்து தோலை உரிக்க வேண்டும்'' என்று பேசியிருக்கிறார். இதற்கடுத்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசுகையில், ``அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் சொத்துகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கிறார்கள்" என்றும் அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகள் வீட்டுப் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினார்கள். இதையடுத்து, நாகர்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறநிலையத்துறையில் உள்ள பெண்கள் குறித்தும், அதிகாரிகள் வீட்டுப் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹெச்.ராஜாவைக் கண்டித்து, நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் தமிழகம் முழுதும் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முத்தரசன், பழ.நெடுமாறன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
