Published:Updated:

`ராமதாஸுக்கும் சேர்த்துதான் அழைப்பு!' - ஸ்டாலின் முடிவுக்குக் காத்திருக்கும் திருமாவளவன்

காங்கிரஸ் கட்சியை மையப்படுத்திதான் `தேசம் காப்போம்’ மாநாடு நடத்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, டெல்லியில் ராகுல்காந்தியைத் திருமாவளவன் சந்தித்துப் பேசியதை ஸ்டாலின் தரப்பினர் ரசிக்கவில்லை.

`ராமதாஸுக்கும் சேர்த்துதான் அழைப்பு!' - ஸ்டாலின் முடிவுக்குக் காத்திருக்கும் திருமாவளவன்
`ராமதாஸுக்கும் சேர்த்துதான் அழைப்பு!' - ஸ்டாலின் முடிவுக்குக் காத்திருக்கும் திருமாவளவன்

டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். `தேசம் காப்போம்’ மாநாட்டில் ராகுல்காந்தி பங்கேற்க இருக்கிறார். கூட்டணி தொடர்பாகத் தி.மு.க எந்த முயற்சியும் எடுக்காததால், தோழமைக் கட்சிகளிடையே குழப்பம் நீடிக்கிறது' என்கின்றனர் வி.சி.க வட்டாரத்தில். 

திருச்சி மாவட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதி 'தேசம் காப்போம்' என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார் திருமாவளவன். இதற்காக ராகுல்காந்தியின் அப்பாயின்மென்டைக் கேட்டபோது, `முகுல் வாஸ்னிக்கோடு தொடர்பில் இருங்கள். உறுதியாக மாநாட்டில் கலந்துகொள்கிறேன்' என உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, மாநாட்டு நிகழ்வு குறித்து விவரிப்பதற்காக டெல்லி சென்றிருக்கிறார் திருமாவளவன். 

``காங்கிரஸ் தலைமையிலான அணியை உறுதிப்படுத்துவதில் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். அதற்காகத்தான் தேசம் காப்போம் மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 17-ம் தேதி திருமாவின் பிறந்தநாள் விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் கருணாநிதி இறந்துவிட்டதால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டார்கள். கடந்த 10-ம் தேதி பெரியார் திடலில் பிறந்தநாள் விழாவை நடத்தினர். அப்போது பேசிய திருமாவளவன், `இன்று நம்முடைய முதன்மையான கடமை, பா.ஜ.க-வை வீழ்த்துவது ஒன்றுதான். இதில் நமக்கு இடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட அதைப் பொருள்படுத்தாமல் பா.ஜ.க அல்லாத அனைவரும் ஒன்று திரள வேண்டும். அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்' என்றார். பா.ம.க-வுக்கும் சேர்த்துதான் இப்படியொரு கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, 'பா.ஜ.க-வை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் சேரலாம்' என்பதுதான் இதன் பொருள்" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், 

``நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், கூட்டணி குறித்து தி.மு.க முகாமில் எந்தப் பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. 'அணி சேர்க்கை எப்படி நடக்கும்?' என்பதில் தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளுக்கு இடையே குழப்பம் நீடித்து வருகிறது. அதேநேரம், அ.தி.மு.க முகாமிலும் கூட்டணி தொடர்பான பேச்சுகள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கான கூட்டணியை உருவாக்கும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 'அவருடன் யார் சேருவார்கள்?' எனத் தெரியவில்லை. தினகரனும் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறார். ஆனால், ஸ்டாலின் தரப்பில் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்காமல் மௌனம் காக்கின்றனர். தி.மு.க-வுடன் தோழமை அணியாக இருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை. இது கூட்டணியாக மாறுமா என்பதை தி.மு.க-வும் உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து மற்ற கட்சிகளும் பேசவில்லை. இன்னமும் இது ஒரு தேர்தல் கூட்டணியாக வடிவம் பெறவில்லை. காங்கிரஸ் கட்சியை மையப்படுத்திதான் `தேசம் காப்போம்’ மாநாடு நடத்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, டெல்லியில் ராகுல்காந்தியைத் திருமாவளவன் சந்தித்துப் பேசியதை ஸ்டாலின் தரப்பினர் ரசிக்கவில்லை. இப்போது மாநாட்டுக்கான முதல் அழைப்பு ராகுல்காந்திக்கு வழங்கப்பட இருக்கிறது. அடுத்தகட்டமாக, தி.மு.கவுக்கும் அழைப்புவிடுக்கப்பட உள்ளது. ` பா.ஜ.க-வை எதிர்ப்போம்' என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். 'தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி இல்லை' எனவும் அவர் உறுதியாகக் கூறிவிட்டார். அவரது இந்தக் கருத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்தான், காங்கிரஸ் கூட்டணியிலும் மாற்றம் உருவாகும்" என்றார் விரிவாக.