Published:Updated:

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: டெசோ தீர்மானம்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: டெசோ தீர்மானம்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: டெசோ தீர்மானம்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: டெசோ தீர்மானம்

சென்னை: 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என பிரகடனப்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டெசோ அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் லந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

ராமேஸ்வரத்தை ஒட்டிய ஆதாம் பாலம் மற்றும் நாகை மாவட்டம் கோடியக்கரை ஆகிய பகுதிகளின் இடையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடற்பகுதி பாக் ஜலசந்தி என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முழு உரிமையோடு இக்கடற்பரப்பு முழுமையிலும் மீன்பிடித்து வந்தனர். 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயகாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பிரிவு 6ன்படி இரு நாட்டு மீனவர்களுக்கும், மீன்பிடிக்கும் உரிமை தொடர்ந்து வழங்கப்பட்டது. அதாவது பாக் விரிகுடா கடலில் இரு நாட்டு மீனவர்களுக்கும் காலங்காலமாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை எந்த மாறுதலுக்கும் உட்படுத்தப்படாமல் தொடர்ந்து நீடிக்கும் என்ற வகையிலேயே மேற்படி ஒப்பந்தம் அமைந்தது.

ஆனால் இலங்கை அரசு நாள்தோறும் இந்திய மீனவர்கள் பாரம்பரிய உரிமையின் அடிப்படையில் மீன் பிடிப்பதை ஏதாவது ஒரு வகையில் தடை செய்து வருகிறது. இந்திய மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல், அவர்களுடைய மீன் வலைகளை அறுத்து சேதப்படுத்துதல், மீனவர்களை கைது செய்தல், மற்றும் அவர்கள் பிடித்த மீன்களை கைப்பற்றிக்கொள்ளுதல் போன்ற சர்வதேச சட்டத்திற்கு புறம்பான செயல்களில் இலங்கை அரசின் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கை அரசு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியமான மீன் பிடிக்கும் உரிமையையும் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்ற கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்ற நோக்கிலும், வரலாற்று அடிப்படையில் உருவான பாக்-விரிகுடா பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அவசியத்திலும், 1974ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அறவே ரத்து செய்திட இந்திய அரசு முன் வரவேண்டும் என்று டெசோவின் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

##~~##
மேலும் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டு கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக்கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 368வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கச்சத்தீவை பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்த கூட்டம் தீர்மானிக்கின்றது.
காரைக்கால் பகுதியை சேர்ந்த 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறைச்சாலையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசு ஈடுபட வேண்டுமென்று இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்குகின்ற வகையில், சென்னை திருவான்மியூரில் வரும் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.