Published:Updated:

"நீங்களும் அர்பன் நக்ஸல்தானா?" காந்திக்கு ஒரு இந்தியனின் கடிதம்! #150yearsofGandhi

"நீங்களும் அர்பன் நக்ஸல்தானா?" காந்திக்கு ஒரு இந்தியனின் கடிதம்! #150yearsofGandhi

இந்துகளுக்கோ இஸ்லாமியருக்கோ தலித்துகளுக்கோ இடதுசாரிகளுக்கோ வலதுசாரிகளுக்கோ மட்டுமேயான தலைவர் அல்ல. நீங்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான தலைவர் காந்தி என்பதுவே உண்மை

"நீங்களும் அர்பன் நக்ஸல்தானா?" காந்திக்கு ஒரு இந்தியனின் கடிதம்! #150yearsofGandhi

இந்துகளுக்கோ இஸ்லாமியருக்கோ தலித்துகளுக்கோ இடதுசாரிகளுக்கோ வலதுசாரிகளுக்கோ மட்டுமேயான தலைவர் அல்ல. நீங்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான தலைவர் காந்தி என்பதுவே உண்மை

Published:Updated:
"நீங்களும் அர்பன் நக்ஸல்தானா?" காந்திக்கு ஒரு இந்தியனின் கடிதம்! #150yearsofGandhi

மகாத்மா காந்தி அவர்களுக்கு,

வணக்கம், இந்திய  மக்களின் நலனுக்குப் பாடுபட்ட அனைத்துத் தலைவர்களையும் ஏதேனும் ஒரு சாதிய, மத, இன அரசியலுக்குள் அடக்கி விடுகிறார்கள். ஆனால், உங்களை அவ்வாறு ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட இயலாது. ஏனெனில், நீங்கள் இந்துகளுக்கோ, இஸ்லாமியருக்கோ, தலித்துகளுக்கோ, இடதுசாரிகளுக்கோ, வலதுசாரிகளுக்கோ மட்டுமேயான தலைவர் அல்ல. நீங்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான தலைவர் என்பதுவே உண்மை.

எனது சிறு வயது முதல் உங்களின் பிறந்த தினம் வரும் பொழுதெல்லாம் நீங்கள் இந்த மக்களுக்கு விட்டுச் சென்ற கொடைகளான உங்கள் வாழ்வனைத்தும் நீங்கள் எடுத்துரைத்த, பின்பற்றி அகிம்சை, எளிமை, மத நல்லிணக்கம், பொது வாழ்வில் தூய்மை, கிராமப்புற மேம்பாடு போன்ற விழுமியங்களைப் பற்றி ஊடகம் தொடங்கி ஊர் மக்கள் வரையில் உரையாடல் நிகழும். ஆனால், இப்பொழுதெல்லாம் அவை குறைந்து' இந்தியாவின் தூய்மைப் ( மண்ணில் உள்ள தூய்மை மட்டுமே மற்றவற்றில் அல்ல ) பற்றிய உரையாடல்களும், அதற்கான விமர்சனங்களுமே மேலோங்கி நிற்கின்றன. இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க போராடிய உங்களை வெறும் தூய்மையின் அடையாளமாக `தூய்மை வாத'த்தின் அடையாளமாக மட்டுமே மாற்ற முயன்றுகொண்டிருக்கும் வேளையில்தான் இதனை எழுதுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நீங்களும் அர்பன் நக்ஸல்தானா?" காந்திக்கு ஒரு இந்தியனின் கடிதம்! #150yearsofGandhi

``இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை" என நீங்கள் எடுத்துரைத்தீர்கள். ஆனால், இன்று அதன் நிலை ஆங்கிலேயன் ஆட்சி செய்த போது இருந்ததை விட நலிவுற்று இருக்கிறது. நலிந்துகொண்டிருப்பது விவசாயம் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான விவசாய மக்களின் வாழ்வும்தான் என்பதை எடுத்துரைக்க உங்களைப் போன்ற ஒரு தலைவர் இல்லை. 1916 - இல் வேளாண் குடிகளுக்கு நீங்கள் நடத்திய `சம்பாரண் சத்தியாகிரகம்' புரட்சி ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்டது. உங்கள் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஓராண்டை நீங்கள் அந்த வேளாண் குடிகளின் வாழ்வுக்காக அப்போராட்டத்தில் அர்பணித்தீர்கள். ஆங்கிலேயரே அதற்கு அடி பணிந்து விட்டனர். ஆனால், எம் தமிழக விவசாயிகள் தலைநகரில் `நிர்வாணப் போராட்டம் `நடத்தினாலும், உத்திரபிரதேச விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தினாலும் கண்டு கொள்ள ஆள் இல்லை. மாறாக, சுட்டுக் கொல்ல இந்த சுதந்திர இந்திய அரசு இருக்கிறது. வேளாண்மையின் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பதே உங்களது கனவு. ஆனால், விவசாயம் பொய்த்த பின் அந்த எளிய மக்கள் பிழைக்க என்ன வழி. பிழைப்புக்காக மிகப் பெரிய புலம்பெயர்தல் கிராமத்திலிருந்த நகரத்தை நோக்கி நடைபெற்றது, நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நகரத்தின் ஆடம்பர வாழ்க்கைக்கு உழைக்கும் அடிமைகளாக கிராமங்கள் மாறிவிட்டன. அரசும் கிராமங்களை `ஸ்மார்ட் சிட்டி'க்குப் பலியிட துணிந்துவிட்டன.

அகிம்சையும் சத்தியாகிரமும் உங்களின் அடையாளக் கொள்கைகளுள் ஒன்று; அதுதான் உங்களது போராட்டங்களை வெற்றி பெறச் செய்தது. ஆனால், இப்பொழுதெல்லாம் தங்களது சனநானயக உரிமைக்காக, வாழ்வியல் சிக்கல்களை எதிர்த்துப் போராடும் மக்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். மேலும், அமைதியான வழியில் இந்த மண்ணுக்காக மக்களுக்கா இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுக்காக்க அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோர் எல்லாம் `அர்பன் நக்ஸல்கள்' என முத்திரை குத்தப்படுகிறார்கள். எனில், வாழ்நாள் முழுமையும் ஆங்கில ஏகாத்தியபத்தியத்தை அதன் எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடிய நீங்களும் `அர்பன் நக்ஸல்' தானா காந்தி அவர்களே. மக்களின் நலனுக்காகப் போராடுகையில் எல்லாம் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம். இது இந்திய அரசு தானா என்ற ஐயம் எங்களுக்கு ஏற்படுகிறது.
  
ஆங்கிலேயர் எவ்வாறு இந்தியாவின் வளங்களைச் சுரண்டி தங்களது நாடுகளை வளப்படுத்தினார்களோ அதுபோலவே உலகமயமாக்களுக்குப் பிறகான இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து இம்மண்ணின் இயற்கையை கபளீகரம் செய்து கனிம வளங்களைக் கொள்ளையடித்து தங்களை வளப்படுத்திக் கொள்கின்றன. அதற்கு துணை நிற்பது இந்தச் சுதந்திர இந்திய அரசுதான். நீங்கள் `மேட் இன் இந்தியா ' கேட்டீர்கள் இந்திய அரசு கொடுப்பதோ `மேக் இன் இந்தியாவைத்தான் `காலனியாதிக்கச் சுரண்டலுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை காந்திஜி.
  
கிராம சுயராஜ்ஜியம் மீது நீங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தீர்கள். ஆனால், கிராமங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கி கிராம சபை ஏற்படுத்தவே விடுதலை இந்திய அரசுக்கு 25 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன் மூலம் பல நன்மாற்றங்கள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அவை முழுமூச்சில் இயங்கவில்லை. தங்களது இயலாமையை மறைக்க `உள்ளாட்சி தேர்தல்' நடத்த அஞ்சும் ஓர் அரசின் தலைமையின் கீழ் இயங்கும் மாநிலத்திருந்துதான் நான் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

சாதி குறித்தான உங்கள் பார்வையின் மீது எனக்கும் பல கருத்து முரண்பாடு உண்டு என்ற போதிலும் பெரியார், அம்பேத்கர் போன்ற எத்தனையோ சீர்திருத்தவாதிகள் வந்த பிறகும் கூட சாதியின் வீரியம் இங்கு குறையவில்லை. அவ்வாறு இருக்க உங்கள் காலத்தில் அதன் வீரியம் எப்படியானதாக இருக்கும் என்பதனை உணர முடிகிறது. நம் சாதியில் சென்று கடல் கடந்து செல்லக் கூடாது எனத் தடுத்த போதும் , அவ்வாறு சென்றால் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவீர் எனத் தெரிந்தும் நீங்கள் சாதியைத் தூக்கியெறிந்து கல்வி கற்கச் சென்றீர்.  அம்பேத்கருக்கு முன்பிருந்தே நீங்கள் தீண்டாமை கொடுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தீர்கள். ஆயினும் உங்கள் பார்வையில் பல குறையிருந்ததுதான். ஆனால், அதிலிருந்தெல்லாம் உங்களை நீங்களே தொடர்ந்து சீர்திருத்திக் கொண்டிருந்தீர்கள். அதனால்தான், பூனா ஒப்பந்தத்ததை ஆதரித்து பம்பாய் மாநாட்டில் பேசிய அண்ணல் அம்பேத்தகர் ``சமரசப் பேச்சு வார்த்தை மகாத்மா காந்தி அவர்களால் தான் சாத்தியப்பட்டன. வட்டமேசை மாநாட்டில் எனக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தவர் இங்கே எனக்கு உதவி புரிந்துள்ளார்" என உரையாற்றினார். இதனையெல்லாம் ஆராயாமல் பலர் உங்களை விமர்சிப்பது பெரும் ஆதங்கம்தான்.

``நாம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்காகப் போராடுகிறோம். ஆனால், நம்மில் பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல், தீண்டாமைக் கொடுமையால் பிரித்துவைத்திருக்கிறோம். தீண்டாமை தொடரும் வரை நமக்கு சுயராஜ்யம் சாத்தியமே இல்லை.” எனக் கூறினீர்கள் அல்லவா. விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் சாதி தீண்டாமை ஓய்ந்தபாடில்லை. உத்தரபிரதேசத்தில் கோயிலுக்கு வந்த தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அடிப்பதும், தலித் ஆணையும் பெண்ணையும் நிர்வாணமாக்கி ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடச் செய்வதும், சாதி மாறி திருமணம் செய்தால் `ஆணவக் கொலை' செய்வதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை இந்திய தேசத்தின் முதல் குடிமகனையும் கூட விட்டு வைப்பதில்லை.
 
பொது வாழ்வில் தூய்மையை வலியுறுத்தியதோடு அல்லாமல் கடைபிடித்தவரும் தாங்கள். ஆனால், இன்று பொது வாழ்வில் நேர்மை, எளிமை, தூய்மை எல்லாம் நகைப்புக்கு உரிய சொற்கள். ஆயுத விமானம் வாங்குவது தொடங்கி அனைத்திலும் ஊழல் மிகுந்துவிட்டது. நேர்மையோடு வாழும் அதிகாரிகளுக்கு அதிமாகக் கிடைக்கின்றன டிரான்ஸ்வர்கள். அவரவரின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்பது உங்கள் எண்ணம் அதன் பொருட்டே நீங்கள் `இராட்டை' சுழற்றினீர்கள். இன்றும் தலைவர்கள் ' இராட்டையைச் சுழற்றுகின்றனர். ஆனால், அதில் நூர்க்கப்படுவது தங்க நூல் ஆடைகள்.

"நீங்களும் அர்பன் நக்ஸல்தானா?" காந்திக்கு ஒரு இந்தியனின் கடிதம்! #150yearsofGandhi


 இவை அனைத்தையும் விட மிக முக்கிமான ஒன்று. மதநல்லிணக்கம் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடியவர் தாங்கள். எப்போதும் அடக்குமுறைக்குள்ளாகும் மதத்துக்கு ஆதரவாய் நின்றவர் தாங்கள். பாக்கிஸ்தான் பிரிவினையை நேரு, அம்பேத்கர், படேல் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்ட போதும் அதைத் தடுக்க பெருமளவிலான முயற்சியைச் செய்தவர் தாங்கள். `பிரிவினை என்பது ஒரு வயிற்றில் பிறந்த இரு தாய் பிள்ளைகள் வெட்டிக்கொண்டு சாவதாகத்தான் ஆகும்' என்றீர்கள். ஆனால், முரணாக பிரிவினைக்கு முழு முதற் காரணம் தாங்களென்று சில பல காவிகள் உங்கள் மீது பழிச் சாற்றிக்கொண்டிருக்கிறார்கள். விடுதலையை அனைவரும் பிற மதத்தினரை கொன்று கொண்டாடிக்கொண்டிருந்த போது அதன் வீரியத்தை குறைத்த ஒற்றை மனிதன் தாங்கள் என்பவை எம் தோழர்கள் என்று அறிவரோ. பசு இந்துக்களுக்குத்தான் புனிதம். பசு வதையை இந்துக்கள் செய்யக் கூடாது என இந்துக்கள் விரும்பலாம். ஆனால், அது ஒரு நல்லுணர்வின், புரிந்துணர்வின் அடிப்படையில் நிகழ்தல் வேண்டும். இஸ்லாமியர்கள் `மாட்டுகறி' உண்ணக் கூடாது என நீங்கள் திணிப்பீராயின் அது ``இந்துயிசம்" அல்ல ``சாத்தானிசம்" என்றீர்கள் அல்லவா. ஆனால், உங்கள் கருத்துக்கு எதிராகத்தான் இங்கு சில வடஇந்திய மாநிலங்களில் பசு வதை தடை செய்யப்பட்டிருக்கிறது. தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தியா முழுக்க அதை அமல்படுத்த முயன்று மூக்குடைபட்டது இந்த அரசு. `இராம ராஜ்ஜியம்' அமைய வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டாலும், எப் இராமன் புராண காலத்தவன் அல்ல அது சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட எல்லோருக்குமான இராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என விரும்பீனீர்கள். ஆனால், இராமனின் பெயரில் இங்கு நடந்தேறும் வன்முறை, படுக்கொலைகளை எழுத்தில் வடித்தல் கடினம். இரத யாத்திரையின் பெயரில் பல உயிர்கள் பறிக்கப்பட்டன. கொள்கைக்காக உயிரைக் கொடுப்பேன் எனச் சொல்வோர் உண்டு உண்மையாக உங்கள் படுகொலை இந்தியாவை `இந்து பாக்கிஸ்தானாக' மாற்றுவதிலிருந்து தவிர்த்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார். நீங்கள் உங்கள் கொள்கைக்கு உயிரையே ஈந்துள்ளீர்கள்.

தாய்மொழியைப் போற்றியவர் நீங்கள். ஓர் ஆங்கிலேயன் கூட இந்தியனாக இருக்க முடியும் அவன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்தால் எனக் கூறினீர்கள். எங்கள் தாய்மொழியில் கல்வி கற்க விரும்பி, எங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தால் நாங்கள் இந்தியராக இருந்தாலும் தேசத் தோரோகி ஆகிவிடுகிறோம்.

`பாரத் மாதாகி ஜே ' என முழங்கக் கட்டாயப்படுத்தினால் அது ``இந்திய தேசத்துக்கு செய்யப்பட்ட கல்லறையில் அடிக்கப்படும் இறுதி ஆணி" என்றீர்கள் அல்லவா அந்த ஆணி இப்பொழுதெல்லாம் பலமுறை அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடும் போதெல்லாம் அந்த அரசு உங்களை `அரசு துரோகத்தில்' கைது செய்தது. இப்பொழும் தங்கள் உரிமைகளுக்காக அரசை எதிர்த்துப் போராடும் தலைவர்கள் `அரசு துரோகம்' பிரிவின் கீழே கைது செய்யப்படுகின்றனர். எனில், ஆங்கிலேய அரசும் விடுதலைப் பெற்ற இந்திய அரசும் ஒன்று தானோ எனத் தோன்றுகிறது.

என்னால் ஏற்கவே இயலாதது ஒன்றுதான், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் துளிகூட பங்கேற்காத இயக்கங்கள் எல்லாம் `தேசியம்' பேசிக்கொண்டு இம்மக்களையை ஏய்த்துப் பிழைப்பதையும் உங்களைக் கொன்ற கயவன் ``கோட்சே"விற்கே சிலையமைத்து மாலை மரியாதையிடுவதையும் சகிக்க இயலவேயில்லை. ஆனால், நீங்கள் இந்த `கோட்சேவின் புதல்வர்களுக்கும்' சேர்த்தே போராடினீர்கள். இன்று இருப்பினும் அவர்களையும் அரவணைப்பீர்கள் அதனால்தான் நீங்கள் மகாத்மா .
   

                                   இப்படிக்கு ,
                 ஒரு சாமானிய இந்தியன்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism