Published:Updated:

கன்னியாகுமரி வரலாறு மலையாளிகளால் திரிக்கப்படுகிறது: ராமதாஸ்

கன்னியாகுமரி வரலாறு மலையாளிகளால் திரிக்கப்படுகிறது: ராமதாஸ்
கன்னியாகுமரி வரலாறு மலையாளிகளால் திரிக்கப்படுகிறது: ராமதாஸ்
கன்னியாகுமரி வரலாறு மலையாளிகளால் திரிக்கப்படுகிறது: ராமதாஸ்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு மலையாளிகளால் தொடர்ந்து திரிக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு மலையாளிகளால் தொடர்ந்து திரிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடி மக்கள் நாடார்கள்தான் என்ற நிலையில், நாயர்கள்தான் குமரி மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் என்றும், நாடார்கள் வந்தேரிகள் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தயாரித்த 9-ஆம் வகுப்பு பாடநூலில் திரித்து எழுதப்பட்டிருந்தது.

ஜானகி நாயர் என்ற மலையாள பேராசிரியர்தான் இதை திரித்து எழுதினார் என்பதை கடந்த ஆண்டு நான் அம்பலப்படுத்தினேன். அதன்பின்னர் ஒட்டு மொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்ததை அடுத்து, இந்தத் தவறை திருத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

அதற்குப் பிறகும் நாடார் சமுதாயத்தை சிறுமைப்படுத்தி, நாயர் சமுதாயத்தை உயர்த்திப் பிடிக்கும் செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

1741-ஆம் ஆண்டில் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற டச்சுக்காரர்கள், அடுத்தக் கட்டமாக இந்தியாவை கைப்பற்றும் நோக்குடன் குளச்சல் துறைமுகம் மீது படையெடுத்தனர். அவர்களை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனின் தளபதியாக இருந்த தமிழரான அனந்த பத்மநாபன் நாடார் தமது படைகளுடன் சென்று போரிட்டு வீழ்த்தினார்.

##~~##
இதற்காக அவரை பாராட்டி பல நினைவிடங்களை அமைத்த மன்னன் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயரே இவரது நினைவாக சூட்டப்பட்டதுதான்.
அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் போதும், வேறு சில நிகழ்வுகளின் போதும் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அனந்த பத்மநாப நாடாரின் நினைவை சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் கேரள நாயர்கள் அழித்தனர்.இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேலுத்தம்பி தளவாய் நாயர் என்ற மலையாளி.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர்தான் 1809-ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசியவர். தமிழர்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப்படுத்தியவர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தவரும் இவர்தான். தமிழினத்தை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டிருந்த இவரை ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரன் என்று ஒருபுறம் போற்றிக் கொண்டு, மறுபுறம் அனந்த பத்மநாப நாடாரின் சாதனை வரலாற்றை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் நாயர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் நாயர்களை பெருமைப்படுத்தி, நாடார்களை அவமதிக்கும் வகையில் வரலாற்றைத் திரிக்கும் நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்கக்கூடாது. குமரி மாவட்டத்தில் வேலுத்தம்பி தளவாய் நாயர் உள்ளிட்ட மலையாளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும்; புதிதாக எதையும் அமைக்கக் கூடாது.
அதேநேரத்தில் டச்சுப் படையை வென்ற அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவு இல்லமும், நுழைவு வாயிலும் அமைக்கப்பட வேண்டும். களியக்காவிளையில் உருவச் சிலை அமைப்பதுடன், அஞ்சல் தலையும் வெளியிடச் செய்ய வேண்டும்.
மேலும், குமரி மாவட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சுய மரியாதைக்காகவும் போராடிய அய்யா வைகுந்தர், மார்ஷல் நேசமணி, வெள்ளையன் நாடார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.