Published:Updated:

`புலி' முதல் `சர்கார்' வரை... விஜய் பேச்சு உணர்த்தும் உண்மை!

இவ்வளவு காலமாக `அரசியலுக்கு விஜய் வருவாரா மாட்டாரா?' என்ற கேள்வி, ஒரு தெளிவில்லாத சித்திரமாகவே மக்கள் முன் நீடித்தது. ஆனால், நேற்றைய நிகழ்வின் சூழல், விஜய் பேசிய விதம் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும்போது, அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றே தோன்றுகிறது.

`புலி' முதல் `சர்கார்' வரை... விஜய் பேச்சு உணர்த்தும் உண்மை!
`புலி' முதல் `சர்கார்' வரை... விஜய் பேச்சு உணர்த்தும் உண்மை!

டிகர் விஜய், இதற்கு முன்பு நிறைய மேடைகளில் பேசியிருந்தாலும் `சர்கார்' திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் நேற்று பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட வேண்டியது. தன்னுடைய திரைப்படங்கள் தொடர்பான பாடல் வெளியீட்டு விழா அல்லது விருது வழங்கும் விழாக்களைத் தாண்டி, நடிகர் விஜய்யை வேறெந்த மேடைகளிலும் நாம் காண முடியாது. அப்படியே அவர் பங்கேற்றாலும் அந்த நிகழ்வுக்குத் தொடர்பான விஷயங்களை மட்டுமே பேசுவார் அல்லது வாழ்க்கையின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய தத்துவங்கள் பற்றிப் பேசுவார். 

அந்த வகையில் விஜய், கடந்த காலங்களில் சில திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் என்ன பேசினார் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.... 

தெறி:

``என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களைத் தொடணுங்கிறதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை. அடுத்தவங்க தொட்ட உயரங்களை உங்களோட இலக்காக எடுத்துக்காம, நீங்க தொட்ட உயரங்களை மத்தவங்களுக்கு இலக்காகக் கொடுங்க. நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய உயரத்தைத் தொடணும். உங்கள் வாழ்க்கையில் கர்வங்களை விட்டுவிட்டு வாழக் கத்துக்கோங்க". 

புலி:

``எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். பொய்யா ஒருத்தரை நேசிக்கத் தெரியாது. நமக்குப் பின்னாடி, யார் என்ன பேசறாங்கன்னு நினைச்சுக் கவலைப்படக் கூடாது. அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நம் வாழ்க்கை. இருக்கறவரைக்கும் எல்லாரையும் சந்தோஷப்படுத்தணும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சுத்தான் பழக்கம்".

மெர்சல்:

``வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் நீங்க, எப்படி எடுத்துக்கிறீங்கன்னு கேக்குறாங்க. அதவிட்டு விலகி இருக்கிறதுதான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக நம்மை வாழவிடமாட்டாங்க. நம்ம கடமைய, நம் வேலையைச் செய்வது மட்டும்தான் அதற்கு ஒரேவழி. எதிரிகளே இல்லைன்னா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா"...என இம்மாதிரி தத்துவங்களாகவேதான் இருக்கும் நடிகர் விஜயின் இதுவரையிலான பேச்சு.

ஆனால், `சர்கார்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்காக விஜய் மேடையேறியபோது, அவருக்கென தனியாக `ஸ்டாண்டிங் மைக்' வைக்கப்பட்டபோதே, அவர் வழக்கமான தத்துவங்களைத் தாண்டி நிறைய பேசவிருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. ``என் நெஞ்சில் குடியிருக்கும்..." என அவர் பேசத் தொடங்கியதுமே அரங்கில் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க வெகுநேரமானது. 

`சர்கார்' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ``மத்தபடி வேற ஒண்ணுமில்ல, வந்திருக்கிற என் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றிகள்" என்று தன் பேச்சை முடிக்கும் தொனியில் இருந்தவர், அப்போதுதான் ஆரம்பித்தார் என்றே சொல்லலாம். 

``இந்தத் தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டு, பிரசாரம் பண்ணி ஜெயிச்சு..., அதுக்கப்புறம் `சர்க்கார்ன்னு' அமைப்பாங்கள்ல.. ஆனா, நாங்க முதல்ல சர்கார் அமைச்சுட்டு தேர்தல்ல நிக்கப்போறோம்" என்றதும், அரங்கில் திரண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரம் மீண்டும் ஆரம்பித்தது. `நான் படத்தைச் சொன்னேங்க' என்று அவர் சொன்னபோதும் கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு அடங்கவில்லை. 

நடிகர் விஜய்யின் அரசியல் தொடர்பான `அதிரடியான கவுன்ட்டர்' அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தது. ``உண்மையாகவே முதலமைச்சரானா, முதலமைச்சரா நான் நடிக்க மாட்டேன்" என்றார். ``ஒருவேளை முதலமைச்சரானால், முதல் விஷயமாக ஊழல், லஞ்சத்தை ஒழிப்பேன்" என்றதுடன், அதுகுறித்த ஒரு குட்டிக் கதையையும் கூறினார் அவர். ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டுமென்பதன் சாராம்சமாக இருந்த அந்தக் கதையைச் சொல்லி முடித்த பின், `ஒரு மாநிலத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்' என்றார். 

``ஒரு தலைவன் நல்லா இருந்தா, ஆட்டோமெட்டிக்கா கட்சி நல்லா இருக்கும். காந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ், இப்போது ஏன் அப்படியில்லை?" என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான காரணத்தையும் அவரே கூறினார். ``மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி" என்றார். ``இயற்கையின் போக்கில் ஒரு நல்ல தலைவன் உருவாவான். அவனுக்குக் கீழே நடக்கும் பாருங்க, ஒரு சர்க்கார்" என முத்தாய்ப்பாக விஜய் முடிக்க, `ஒரு நாயகன் உதயமாகிறான்...' என்கிற பாடல் பலருக்கும் பின்னணியில் ஒலித்திருக்க வாய்ப்பு அதிகம்.

இதுபோன்று அரசியல் வசனங்கள் பேசுகிற விஜய்யை திரைப்படத்தில் அதிகம் பார்த்திருக்கிறோம் என்றாலும், மக்கள் சூழ்ந்திருக்கிற மேடையில் அவர் இவ்வாறு பேசுவது இதுவே முதல்முறை. அவர் பேசியது, சமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினை தருவதுபோல் இருந்ததுடன், `நானும் விரைவில் அரசியலில் இறங்கப்போகிறேன்' என்கிற சமிக்‌ஞைக்கான சான்றளிப்பது போன்று இருந்தது.

விஜய்க்கு முன்னர் பேசிய நடிகர் ராதாரவி, ``இது ஆடியோ லாஞ்ச் மாதிரி இல்ல. ஒரு சின்ன மாநாடு மாதிரி இருக்கு. இந்த சமுதாயத்துக்கு விஜய் போன்றவர்கள் தேவை" என்றார். கலாநிதி மாறன் பேசுகையில், `ரஜினி சார், அந்த விஷயத்தைப் பண்ணிட்டாரு... இனி நீங்கதான் பண்ணணும்" என்றார். இவர்கள் உட்பட நேற்று பேசியவர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்தையொட்டியே சூசகமாகப் பேசினார்கள்.

தவிர, நேற்று நடந்த விழாவில் கவனிக்கத்தக்க விஷயங்கள் என்றால் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உட்பட பெரும்பாலானோர், நடிகர் விஜய்யைப் பெயர் சொல்லி அழைக்காமல் `தளபதி' என்றே அழைத்தனர். எப்போதுமில்லாத அளவுக்கு அரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே இருந்தது. விஜய் படம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிகள் ஆங்காங்கே அரங்கில் அசைந்து கொண்டிருந்தன. இவ்வளவு காலமாக `அரசியலுக்கு விஜய் வருவாரா மாட்டாரா?' என்ற கேள்வி, ஒரு தெளிவில்லாத சித்திரமாகவே மக்கள் முன் நீடித்தது. ஆனால், நேற்றைய நிகழ்வின் சூழல், விஜய் பேசிய விதம் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும்போது, அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றே தோன்றுகிறது. அதுமட்டுமன்றி, விஜயின் சமீபகாலத் திரைப்படங்கள் முழுவதும் பொழுதுபோக்கை மட்டுமே மையப்படுத்தி இல்லாமல், அதனூடாக நாட்டில் நடக்கும் சமூக அவலங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்கு சமீபத்திய உதாரணங்களாக `மெர்சல்', `கத்தி' திரைப்படங்களின் செய்தியாளர் சந்திப்புக் காட்சிகளைச் சொல்லலாம்.

ஒருவேளை, `விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா' என்பது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவற்றுகூட இருக்கட்டும். ஆனால், தான் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதை விஜய் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். `ஓர் அரசியல்வாதி என்பதற்கு அடிப்படையே சிறந்த மேடைப் பேச்சுதான்' என்று எடுத்துக்கொண்டால், விஜய் அதற்கான தீவிரப் பயிற்சியில் இருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு திரைப்படத்தின் உச்சக்காட்சியைப் போல விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்காக மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மைக்காலமாகத் திரைப்படங்களைவிடவும், தமிழக அரசியலில் அதிகப் பொழுதுபோக்குக் காட்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும், புதிய புதிய அறிமுகங்களும் நடந்துகொண்டிருப்பதால் மக்களின் எதிர்பார்ப்புகளும் புரிந்து கொள்ளக்கூடியவைதாம்.