Published:Updated:

``விடைபெற்றார் தீபக் மிஸ்ரா..!" அவர் அளித்த தீர்ப்புகளும்... அதன் சர்ச்சைகளும் ஒரு பார்வை

பெண்களின் அடிப்படை மனித உரிமைகளுக்குத் தடைகளாக இருந்த மிகப்பழைமை வாய்ந்த பழக்கங்கள், நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றைத் தயக்கம் காட்டாமல் உடைத்தெறிந்து விட்டு பெண்ணுரிமைகளுக்கான தீர்ப்புகளை வழங்கினார்.

``விடைபெற்றார் தீபக் மிஸ்ரா..!" அவர் அளித்த தீர்ப்புகளும்... அதன் சர்ச்சைகளும் ஒரு பார்வை
``விடைபெற்றார் தீபக் மிஸ்ரா..!" அவர் அளித்த தீர்ப்புகளும்... அதன் சர்ச்சைகளும் ஒரு பார்வை

ந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு முக்கிய வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தின. அதில் முக்கியமாக ஆதார் வழக்கு, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, அயோத்தியா வழக்கு, தன்பாலின ஈர்ப்பு (பிரிவு – 377) தொடர்பான வழக்குகள். இந்த வழக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் அனைத்துமே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தவைதாம். தற்போது 65 வயதை எட்டும் இவர், நேற்று முந்தினம் (அக்டோபர் 1) ஓய்வு பெற்றார். 

இதுபோன்று பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் தீபக் மிஸ்ரா 1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார். இவர் 1977-ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி சட்டப்படிப்பு முடித்து பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியைத் தொடங்கினார். அதன்பிறகு, 1996 ஜனவரி மாதம், 17-ம் தேதி ஒடிசா உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். ஒரு வருடத்தில் மத்திய பிரதேசத்துக்கு மாற்றப்பட்ட இவர், 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2009-ம் ஆண்டு டிசம்பர்  23-ம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியானார். 2010, மே 24- ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தனது பணியைத் தொடர்ந்தார். 2011, அக்டோபர் 10- ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றுக்கொண்டார். அதன்பின், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். சுமார் 13 மாத பதவிக்காலத்துக்குப் பிறகு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெற்றார். 

உச்ச நீதிமன்றத்தின் 45 வது தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா, திரையரங்குகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தேசியகீதம் கட்டாயம் ஒலிக்கவிட வேண்டும் என்றார். குழந்தை ஆபாசப் படங்களைக் கொண்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். டெல்லி நிர்பயா வழக்கில், கொலைகாரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்தினார். `பசுப் பாதுகாவல்' என்ற பெயரில் படுகொலை செய்யப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளுக்கு இவரது தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இந்த ஆண்டு மட்டும், பல்வேறு முக்கிய வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். அதில் முக்கியமானதாகக் கூறப்படுபவை, ஜனவரியில் `பத்மாவத்' படத்துக்குத் தடை விதித்தார். ஆனால், மாநிலங்கள் அதை விலக்க முறையிட்டன.

அதேபோல், சபின்- ஹதியா திருமணத்துக்குக் கேரள உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அடக்குமுறைகளை எதிர்த்து சட்டம் இயற்றப் பாராளுமன்றத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இவர் தீர்ப்புகளால் அதிகம் சர்ச்சைக்கு ஆளான மாதமாக செப்டம்பரைக் கூறலாம். செப்டம்பரில், பிரிவு - 377 சட்டத்தை ரத்து செய்து, தன் பாலின உறவைச் சட்டபூர்வமாக்கினார். இதனால், பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. அதேபோல், பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய ஆதார் வழக்கில், அரசியலமைப்புச் சட்டப்படி ஆதார் செல்லும் என்று ஆணையைப் பிறப்பித்தார். நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும், வீடியோ பதிவு செய்யவும் அனுமதி அளித்தார். மாநிலங்கள் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பணி உயர்வுக்காக எந்தத் தனிப்பட்ட ஆய்வும் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டார். 

.

அது மட்டுமல்லாமல், தன் பாலின உறவைச் சட்டபூர்வமாக்கியதால் ஏற்பட்ட கலகத்தைத் தீர்ப்பதற்குள் பிரிவு - 497 நீக்கினார். திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றமில்லை. ஆனால், விவாகரத்திற்கு அதை காரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். மசூதிகள் இஸ்லாம் சமூகத்துக்குக் கட்டாயமானது அல்ல என்ற 1994 தீர்ப்பு நிலைகொண்டது. பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடமாக இருந்த, கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்ல இருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். 

பெண்களின் அடிப்படை மனித உரிமைகளுக்குத் தடைகளாக இருந்த மிகப்பழைமை வாய்ந்த பழக்கங்கள், நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றைத் தயக்கம் காட்டாமல் உடைத்தெறிந்து விட்டு பெண்ணுரிமைகளுக்கான தீர்ப்புகளை வழங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹாஜி அலி தர்கா தீர்ப்பு, குல்ராக் குப்தா வழக்கு, பிறப்புறுப்புச் சிதைப்பு வழக்கு, தவறான உறவு வழக்கு, முத்தலாக் வழக்கு ஆகிய வழக்குகளில் ஆணுக்குப் பெண் சமமானவர் என்ற பாலியல் நீதியின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது.

தன்னுடைய பதவிக் காலத்தில் பல்வேறு வழக்குகளுக்கு முக்கியத் தீர்ப்பை வழங்கிய இவருக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தது நீதித்துறையின் மீது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின. ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்று இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருகிற அளவுக்கு நீதித்துறையில் சிக்கல்கள் தீவிரமடைந்தன. 

பல்வேறு தீர்ப்புகளை வழங்கி பல தரப்பினரிடம் வாழ்த்துகளையும், எதிர்ப்பையும் பெற்றவர். இவர் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று பல தரப்பினர் கூறிவருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதால், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுள்ளார்.