Published:Updated:

சென்னை விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரா? குழப்பம் ஏற்படுத்தும் என்கிறார் கருணாநிதி

சென்னை விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரா? குழப்பம் ஏற்படுத்தும் என்கிறார் கருணாநிதி
சென்னை விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரா? குழப்பம் ஏற்படுத்தும் என்கிறார் கருணாநிதி
சென்னை விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரா? குழப்பம் ஏற்படுத்தும் என்கிறார் கருணாநிதி

சென்னை: சென்னை உள்நாட்டு முனையத்திற்கு ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பெயரைச்சூட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை கொண்டுவந்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக அதனை நிறைவேற்றியிருக்கிறார்கள். தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்பதாக கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் என் நினைவு 1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறது. வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்றபின், எனது அழைப்பின் பேரில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோதுதான், நான் பேசும்போது மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு அண்ணா பெயரும், காமராஜர் பெயரும் சூட்டப்பட வேண்டுமென்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

உடனடியாக பிரதமர் வி.பி.சிங் மேடைக்கு சற்றுத்தொலைவில் பிரதமருக்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசியில் டெல்லிக்கு தொடர்பு கொண்டு, தொடர்புடைய அதிகாரிகளிடம் பேசினார். பின்னர் மேடைக்கு வந்து உரையாற்றும்போதுதான் சென்னையில் உள்ள உள்நாட்டு விமானத்தளத்துக்கு காமராஜர் பெயரும்; வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என்று அறிவித்தார். அந்த பெயர்கள்தான் இன்றளவும் விளங்கி வருகின்றன.

##~~##
அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரைச்சூட்ட வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின் சார்பில் முயற்சியெடுத்து, அதற்கு தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்ப வேண்டுமென்று மத்திய அரசின் அமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தின்படி நேற்றையதினம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விமான நிலையம் என்றால் அங்கே உள்நாட்டு முனையம் என்றும், வெளிநாட்டு முனையம் என்றும் இரண்டுதான் இருக்க முடியும். உள்நாட்டு முனையத்திற்கு ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு, அது நடைமுறையிலே இருந்து வருகிறது. தற்போது விரிவாக்கம் மட்டுமே செய்யப்பட்டிருப்பது உள்நாட்டு முனையம்தான். அதற்கு மற்றொரு பெயர் என்பது சற்று குழப்பமாக உள்ளது. இந்த கருத்தை நான் மாத்திரமல்ல; பெருந்தலைவர் காமராஜரிடம் அன்பு கொண்டவர்களும் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமே மிகவும் உயர்ந்த நிலையில் வைத்துக்கொண்டாடி இன்றளவும் போற்றி பாராட்டி வரும் ஒரு தலைவரின் பெயரைச்சூட்ட நினைக்கும்போது, அதனால் எந்தவிதமான குழப்பங்களோ, கருத்து வேறுபாடுகளோ ஏற்படாத வகையில் அனைத்துத்தரப்பினரும் மனமுவந்து வரவேற்கத்தக்க நிலையில் செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.