Published:Updated:

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்
பிரீமியம் ஸ்டோரி
பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

ஓவியம் : வெங்கடேசன் - படங்கள் : சி.சுரேஷ் பாபு, ரா.ராம்குமார்

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

ஓவியம் : வெங்கடேசன் - படங்கள் : சி.சுரேஷ் பாபு, ரா.ராம்குமார்

Published:Updated:
பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்
பிரீமியம் ஸ்டோரி
பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

மானுட வரலாறு என்பது பெண்களால் உருவானது. ஆனால், நீண்ட நெடுங்காலம் வரலாற்றில் பெண்களுக்கான இடம் வழங்கப்படவேயில்லை. நவீனச் சிந்தனைகள் மேலெழுந்துவந்தபோது வரலாறு, அரசியல், தத்துவம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றில் பெண்களுக்கான இடம் என்ன என்பது குறித்த காத்திரமான விவாதங்கள் எழுந்தன. அதுவரை எழுதப்பட்ட வரலாறு, இலக்கியம், உருவான சமூகக் கட்டமைப்பு, மதம், சடங்குகள் என எல்லாவற்றையும் பெண்களின் நோக்கில் கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும் வழக்கமாயின. சாதி, மதம், வர்க்கம் எனப் பல்வேறு வடிவங்களில் தொடரும் அதிகாரத்தின் சுமை பெண்கள்மீதுதான் அதிகம் இறங்குகிறது. எனவே, பெண்களுக்கான விடுதலையும் பெண்களுக்கான உரிமையும் எல்லாச் சமூக அதிகாரங்களையும் கேள்விகேட்பதின் வழியாகவே நிலைபெற முடியும் என்ற புரிந்துணர்வும் ஏற்பட்டது.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

19-ம் நூற்றாண்டில் உருவான புதிய சிந்தனைகளும் புதிய தொழில்நுட்பங்களும் பெண்களுக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தின என்பது எவ்வளவு தூரம் உண்மையோ, அவ்வளவு தூரம்  பெண்ணடிமைத்தனத்தில் பல்வேறு அலகுகள் உருவாகின என்பதும் உண்மை. ‘சமைப்பதற்குப் பெண், சம்பாதிப்பதற்கு ஆண்’ என்ற சமூகக் கட்டமைப்பு மாறி, பெண்கள் படிக்கவும் வேலைபார்க்கவும் வீட்டு வாயிற்படிகளைத் தாண்டத் தொடங்கினர். அதேநேரம் சமைப்பது, சம்பாதிப்பது என்ற இரட்டைச் சுமையைப் பெண்கள் சுமக்க வேண்டிய அவலம் உருவானது. வீட்டைவிட்டு வெளியே வந்தாலும் தனக்கான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையைப் பெண்களுக்கு வழங்கச் சாதியச் சமூகம் தயாராயில்லை. சாதியத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் சுமை, பெண்களின் தலைமீதே சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்திய எதார்த்தம் எனில், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் தாராளவாத வாழ்க்கை முறையும்கொண்ட மேற்கத்திய நாடுகளில்கூட, பெண்கள் அதிகாரத்துக்கு வருவது இன்னமும் எளிதானதில்லை என்பதற்கு, கடந்த அமெரிக்கத் தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்பல்வேறு தினங்களைப்போலவே ‘மகளிர் தினம்’ என்பதும் ஒரு சம்பிரதாய தினமாகக் கடக்கப்படும் சமகாலச்சூழலில், அதை அர்த்தமுள்ள தினமாக மாற்றுவதற்கான முயற்சியே இந்தக் கட்டுரைகள். அரசியல், இலக்கியம், வரலாறு, திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் பெண்களுக்கான இடம் என்ன என்பது குறித்த கேள்விகளை எழுப்பி, சிந்தனை உசுப்பலுக்கு வழிவகுக்கின்றன இந்தக் கட்டுரைகள்.

புனைவிலக்கியத்தில் பெண் கதைமாந்தர்கள்

ந.முருகேசபாண்டியன்

தமிழ்க் காப்பியங்கள் சித்திரிக்கிற கதைகள், பெரிதும் மதங்களின் கருத்தியலுக்கு முக்கியத்துவம் தந்திருந்தாலும் பெண்களை முன்வைத்து உருவாக்கியுள்ள புனைவுகள் காத்திரமானவை. இளங்கோவடிகள் புனைந்துள்ள சிலப்பதிகாரத்தின் கதையாடல் முழுக்க, கண்ணகியைச் சுற்றிச் சுழல்கிறது. சம்ஸ்கிருதம், சீனம், கிரேக்கம் போன்ற மொழிகளில் அதியற்புதமான கடவுளர் கதைகள் காப்பியமாக எழுதப்பட்டபோது, தமிழில் கண்ணகி என்ற குடும்பப்பெண் காப்பியத் தலைவியான புனைவு, முக்கியமானது. கண்ணகியைத் தமிழ்ப் பெண்களின் அடையாளமாகக் கருத முடியுமா? ஈழம், கேரளப்பகுதிகளில் இன்றும் நாட்டார் மரபில் கண்ணகி பற்றிய தொன்மக்கதைகள் வழக்கினில் நிலவும்போது, தமிழகத்தில் கண்ணகி வழிபாடு இல்லாத நிலை கவனத்திற்குரியது. மறு உற்பத்தியில் ஈடுபடும் ஆற்றல்மிக்க பெண்ணை, திடீரெனப் பத்தினிக் கடவுளாக்குகிற அரசியலை ஏன் சிலப்பதிகாரக்கதை முன்னிறுத்தியது எனும் கேள்வி தோன்றுகிறது.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

புத்த மதத்தின் கருத்தியல் பிரசாரத்திற்கு முன்னுரிமை தருகிற, சாத்தனார் இயற்றிய காப்பியத்தின் பெயர் ‘மணிமேகலை’ என்று (பெண்ணின் பெயரால்) இருப்பது, தற்செயலானது அல்ல. மாதவி - கோவலன் ஆகிய இருவருக்கும் பிறந்த பெண்குழந்தையின் கதையைச் சொல்வது போல மேலோட்டமாகத் தோன்றினாலும், புத்த சமய அரசியல் அதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கணிகையர் குலத்தில் பிறந்த எளிய பெண்ணான மணிமேகலைக்கு முன்னுரிமை தந்திருப்பது, ஒருவகையில் புரட்சிகரமானது. எனினும், பூமியில் மனித இருப்புக்கு ஆதாரமான மனித உடல்களைக் கேவலமாகக் கருதுவதுடன், புலன்களை ஒடுக்குவதை வலியுறுத்திட மணிமேகலைக் கதாபாத்திரம் பயன்பட்டுள்ளது. பெண்ணுடல் பற்றிய இழிவான படிமத்தை உருவாக்கிட மணிமேகலை என்ற பெண்ணைப் பயன்படுத்தியுள்ளது, மத அரசியலின் வெளிப்பாடாகும்.

வணிகர் குலத்தைச் சேர்ந்த குண்டலகேசி என்ற பெண், தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பின்னர் புத்த மதத் துறவியாகி, புத்தரின் போதனைகளைப் பரப்பிய கதை, ‘குண்டலகேசி’ காப்பியத்தின் கதையாகும். கணவன் என்றால், புனிதன் எனப் பொதுப்புத்தியில் ஆண் மைய நோக்கில் புனைந்துரைக்கப்பட்டதற்கு மாற்றாக, குண்டலகேசியின் கொலைமுயற்சி காப்பியமாகியுள்ளது. கலைஞரின் கதை - வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ திரைப்படம், ‘குண்டலகேசி’ கதையைத் தழுவியது. குண்டலகேசியின் புத்தசமயப் பிரசாரத்திற்கு எதிராகப் பழையனூர் ஊரைச் சேர்ந்த நீலி என்ற பேயை, நீலகேசி என்ற பெண்ணாக்கி, ஜைன சமயக் கருத்தினைப் பரப்பிய நீலகேசி காப்பியத்தின் கதை சுவராஸ்யமானது. பொதுவாக, பெண் கதாபாத்திரங்கள் லேபிள்கள்போல சமயக்காப்பியங்களில் பயன்பட்டுள்ளன. பெண்களுக்கு முன்னுரிமை தந்து முதன்மைக் கதாபாத்திரமாக்கிப் படைக்கப்பட்டுள்ள காப்பியங்கள், யதார்த்தத்தில் மதக் கருத்தியல் பிரசாரக் கருவிகள். அவ்வளவே.

சங்ககாலத்துக்குப் பிந்தைய அற நூல்கள் எனப்படுகிற ‘பதினென்கீழ்க்கணக்கு’ நூல்கள் தொடங்கி, பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கருத்தியல் வலியுறுத்தப்பட்டது. பக்தி இயக்கக்

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

காலகட்டத்தில் வலுவடைந்த பெண்ணுடல் பற்றிய பிம்ப உருவாக்கத்திற்கு, வைதீகச் சமயக் கருத்தியல் பின்புலமாக அமைந்திருந்தது. பெண்ணுடல் என்பது ஆணுக்கான துய்ப்பு நிலம் என்ற பார்வையில், பெண் மனம் குறித்த பேச்சுக்கு இடமில்லை. பால் சமத்துவமின்மை ஒருபுறம் எனில், கல்வி, சொத்து போன்றன இல்லாமல் ஆணைச் சார்ந்து அடிமையாக  வாழ வேண்டிய நெருக்கடியான சூழல் இன்னொரு புறம் என, பெண்கள் ஆயிரமாண்டுகளாகத் தவித்தனர். தீட்டு என்று பெண்ணை ஒதுக்கிய ஆண்களின் பார்வையில், பெண்ணுடல்கள் என்பவை போகத்திற்காகக் காத்திருக்கிற உடல்கள்தான். இத்தகைய காலகட்டத்தில், ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தின்போது  அறிமுகமான நவீனக் கல்வியினால், அதுவரை வைதிக சமயம் உருவாக்கியிருந்த பெண் பற்றிய சனாதன மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாயின. குழந்தைத் திருமண எதிர்ப்பு, உடன்கட்டை ஏறுவதற்குத் தடை, தேவதாசிமுறை ஒழிப்பு, இளம் விதவை மறுமணம், பெண் குழந்தைகள் கல்வி என மாறிய சமூகச் சூழலில், பெண்களின் சமூக வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதுவரை கதையைக்கூடச் செய்யுளில் சொல்வதுதான் இலக்கியம் என்பதற்கு மாற்றாக, வசனத்தில் எழுதுவதும் அங்கீகரிக்கப்பட்டநிலை உருவானது. 1879-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ கதையாடலில், முதன்மைப் பெண் பாத்திரமான ஞானாம்பாள், தனித்துவமாக வேதநாயகம் பிள்ளையினால் படைக்கப்பட்டிருந்தது, ஆங்கிலக் கல்வியின் விளைவாகும். ‘‘ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால், அந்தத் தேசம் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக்கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கின்ற வரையில், இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்’’ என ஞானாம்பாள் பேசுவது நாவலாசிரியரின் கருத்து. எனினும், கதைகளுக்கும் சமூக மாற்றத்திற்குமான தொடர்பினைப் பெண்ணாகிய ஞானாம்பாள் குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

அன்பும் பண்பும் பொறுமையும் மிகுந்த பெண்ணாகச் சித்திரிக்கப்படும் கமலாம்பாள் என்ற பிராமணப் பெண்ணை முன்வைத்து, ராஜம் ஐயர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ (1896) நாவல், மரபான கதைசொல்லலுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. அதே காலகட்டத்தில் வெளியான அ.மாதவய்யா எழுதிய ‘முத்து மீனாக்ஷி’ (1903) நாவல், குழந்தைப் பருவத் திருமணம், இளம் விதவை சமூகத்தில் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பதிவாக்கியுள்ளது.

 தமிழின் முதல் வட்டார நாவலான  ‘நாகம்மாள்’ (1942) கிராமத்துப் பெண்ணான நாகம்மாளை முன்வைத்து, ஆர்.சண்முக சுந்தரத்தினால் படைக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான நாவல்களில், பெண் பெரிதும் ஆணைச் சார்ந்து இயங்குவது குறித்தும் அவள் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்தும் சித்திரிக்கப்பட்டிருந்தன. நாகம்மாள் சுயமான அடையாளத்துடன், தன்னியல்பை வலியுறுத்தும் வகையில், அதிகாரத்திற்கு எதிரான கலக மனப்பான்மையுடன் விளங்குகிறாள்.

‘சுந்தரி’ (1934), ‘கோதைத் தீவு’ (1946) ஆகிய நாவல்களை எழுதிய வ.ரா.வின் பெண் கதைமாந்தர்கள், நவீனப் பெண் பற்றிய கருத்தியலுக்கு வித்திட்டுள்ளனர். பெண்ணான மாணிக்கக் கோதையார் ஆட்சி செய்கிற கோதைத் தீவில், பால் சமத்துவம் நிலவுகிறது என்ற புனைவிற்குப் பின்னால், ‘ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடப் பெண்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்’ என்பதை நாவல் வலியுறுத்துகிறது.

பெண் கதைமாந்தர்கள் உருவாக்கத்தில் தனிப்பட்ட அடையாளங்களுடன் தொடர்ந்து எழுதிய புனைகதையாளர்களில் ஜெயகாந்தனும் தி.ஜானகிராமனும் தனித்துவமானவர்கள். பெண்ணின் மன விகாசங்களுக்கு ஜெ.கே முக்கியத்துவம் தந்தபோது, தி.ஜா நிகுநிகுவென ஆகிருதியான பிராமணச் சாதிப் பெண்ணுடல்களை ஈர்ப்புடன் விவரித்துள்ளார். ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (1964) நாவல், விளிம்பு நிலையில் வாழ்கிற பெண்ணான  ‘தங்கத்’தின் துயர வாழ்வை, சென்னைச் சேரிப் பின்புலத்தில் சித்திரித்திருந்தது. ‘பாரிஸுக்குப் போ’ (1966) நாவல் முழுக்கச் சாரங்கன் என்ற இசைக் கலைஞனைச் சுற்றியிருந்தாலும் அவனுடன் நெருக்கமாகப் பழகிய சிநேகிதியான லலிதா பற்றிய சித்திரிப்பு, தமிழுக்குப் புதியது. குடும்பப் பெண் என்று வலுவாக உருவாக்கப்பட்டுள்ள கருத்தியலை லலிதாவின் பாத்திரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1973) கதையில் வரும் கங்கா, சூழலின் காரணமாக அறிமுகமற்ற ஆடவனுடன் பாலியல் உறவுகொண்டாலும், காலப்போக்கில் தனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமெனச் சுயமாக முடிவெடுக்கிறாள். ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ (1971) நாவலில் கல்யாணி என்ற நாடக நடிகையின் தனித்துவமான மனநிலையும், அதற்கு எதிராகச் செயல்படுகிற கணவனான ரங்காவின் செயல்பாடும் முரண்படுகிற சூழல் நுணுக்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் சுயமான முடிவெடுக்கிற திறனை, அறிவுஜீவியான ரங்காவினால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ஜே.கே-யின் கதைசொல்லல், பெண் பற்றிய புதிய வெளிப்பாடு. ஜெ.கே-யின் பெரும்பாலான நாவல்களில் பெண் கதைமாந்தர்கள் சுயமாக முடிவெடுப்பதுடன், தங்களுடைய உலகைத் தாங்களே நிறுவுகின்றனர்.

‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் வாரப் பதிப்பில் தொடர்கதையாக வெளிவந்த தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ (1964) நாவல், யமுனா என்ற பெண்ணின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் ஏற்படுத்திய மோகம், இன்றளவும் வாசகர்களிடம் தொடர்கிறது. பாலியல் விழைவு, இருப்பின் ஆதாரமாக எப்படி நுட்பமாக வினையாற்றுகிறது என்பதற்கு யமுனா பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது. ஆசாரமான குடும்பத் தலைவியான அலங்காரத்தின் குடும்பத்திற்கு வெளியிலான பாலியல் உறவின் பின்புலத்தில் விரிந்திடும் ‘அம்மா வந்தாள்’ நாவல், குடும்ப ஒழுங்கிற்கு அப்பால் பெண்ணின் மனம் சிறகடிப்பதைப் பதிவாக்கியுள்ளது. உடலுறவு என்பது சாதாரணமானது என்ற கருத்துடைய அனுசுயா, உலகத்தின் புதிய போக்குகளைத் தழுவிட வேண்டுமெனத் துடிப்பது ‘உயிர்த்தேன்’ (1967) நாவலாகியுள்ளது. கட்டுப்பாடுகள் எதையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக வாழ்ந்திட முயலுகிற அம்மணி பாத்திரத்தை முன்னிறுத்துகிற ‘மரப்பசு’ (1975) நாவல், அன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான முயற்சி. தி.ஜானகிராமனின் நாவல்கள் சித்திரிக்கிற பெரும்பாலான பெண்கள், பாத்திர உருவாக்கம் காரணமாகப் பரவலாகக் கவனம் பெற்றனர்.

ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’ (1963) நாவல், பாலியல் தொழில் செய்கிற பெண்களைப் புனைவாக்கியுள்ளது. சூழல் காரணமாக விபசாரத்தில் உடலையும், தான் காண்கிற கனவுக்கு மனதையும் கொடுத்து வாழ்கிற தங்கம் என்ற பெண்ணின் வலிகளைச் சித்திரிக்கிறது குறுநாவல். செண்பகம், செல்லம், மரகதம், மீனாட்சி, தேவயானி என நாவலில் இடம் பெற்றுள்ள பெண் பாலியல்தொழிலாளர்கள் தங்களுக்கே உரித்தான பிரச்னைகளுடன் காமமும் காதலும் மிகுந்திட காத்திருக்கின்றனர். தன்னை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கிறவனையும் காதலிக்கிற மரகதம் அன்புக்காகவும் உறவுக்காகவும் ஏங்குகிறாள். அதற்கு அவள் தருகிற விலை அதிகம். ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலில் வரும் பாலியல்தொழில் செய்கிற மீனா, தனது கணவன்மீது அதீதப் பிரியமானவளாக இருக்கிறாள்.  ‘இப்படியெல்லாம் பெண்கள் இருக்கின்றனர்’ என்று ஜி.நாகராஜன் புனைந்துரைப்பதில் ஒருவித அதீதப் புனைவு தொனிக்கிறது.

ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ (1959) நாவலில் இடம்பெற்றுள்ள மரகதம் பாத்திரம் நுட்பமான படைப்பு. அவள்  செல்லையாவை அளவுக்கு அதிகமாக நேசித்தாலும், தந்தையின் ஒப்புதலுடன்தான் திருமணம் செய்திட விரும்புகிறாள். மரகதம்  தனது காதல் குறித்துச் செல்லையாவிடம் தெரிவிக்கிற  இறுதி முடிவு, பெண் மனதின் மறுபக்கத்தைச் சுட்டுகிறது. ‘புயலிலே ஒரு தோணி’ (1972) நாவலில் கதாநாயகி எனத் தனியாக எந்தவொரு பெண்ணையும் ப.சிங்காரம் படைக்கவில்லை. ஆனால், நாவல் முழுக்க ஏகப்பட்ட பெண் கதைமாந்தர்கள். வாழ்க்கையின் உன்னதங்களை முன்னிறுத்துகிற ஆச்சிகள் ஒருபுறம் எனில்- விசாலினி, ஆயிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட தன்னிச்சையாக வாழ்கிற பெண்கள், விபசாரிகள் என இன்னொருபுறம் பெண்கள் பற்றிய புனைவுகள் கட்டற்றுப் பொங்குகின்றன.

நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’ நாவலின் கதைநாயகியான பூரணியின் லட்சியச் சித்திரிப்பு, எழுபதுகளில்கூடத் தமிழகத்து இளைஞர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காதல் பின்புலத்தில் ஆண் - பெண் உறவின் உன்னதத்தைப் போற்றிய பூரணி போன்ற பெண் பாத்திரம், ஒருவிதமான குறிக்கோள் மனநிலையின் வெளிப்பாடு. பூரணி கதாபாத்திரம் தமிழ் நாவல் வரலாற்றில் என்றும் தனித்து விளங்கும்.

‘ஆனந்த விகட’னில் தொடர்கதையாக வெளியான, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவல், அன்றைய காலகட்டத்தில் வாசகர்களால் கொண்டாடப்பட்டது. சதிர் நடனமாடுகிற பெண்ணான மோகனாம்பாளை மையமாக வைத்து, ஒரு காலகட்டத்தின் இசையையும் நாட்டியத்தையும் பதிவாக்கியுள்ள நாவலில், பெண் கலைஞரின் வாழ்க்கை பதிவாகியுள்ளது. அதீதமான புனைவுடன் கலைப் பின்புலத்தில் எழுதப்பட்ட நாவலில், அன்றைய தேவதாசிகளின் நிலையும் பதிவாகியிருந்தது. ‘மிட்டா மிராசுகளின் அதிகாரம் செல்வாக்குச் செலுத்திய தஞ்சை டெல்டாவில் நாட்டியக்காரி அடைந்த அனுபவங்கள்’ என்றும் நாவலை வாசிக்கலாம்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

அசோகமித்திரனின் பெரும்பாலான பெண் பாத்திரங்கள், நடுத்தர வர்க்கத்துப் பின்புலத்தில் ஒடுங்கிய குரலில் வாழ்வின் அவலத்தையும் கொண்டாட்டத்தையும் பேசுகின்றன. ‘தண்ணீர்’ நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ள சாதாரணக் குடும்பப் பின்புலத்திலிருந்து வந்த சாயா, ஜமுனா என்ற இரு சகோதரிகளின் பிரச்னைகள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக உள்ளன. ஏழ்மை, இயலாமை, அவலம், கசப்பு ததும்பிடும் வாழ்க்கையை வாழ நேர்ந்திடும் சூழலிலும், ஒருவகையான பகடியானது அசோகமித்திரன் எழுத்தில் வெளிப்படுகிறது.

பிரபஞ்சனின் நாவல்கள், பெண்ணை மையப்படுத்தி அவள் எதிர்கொள்கிற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. ‘சந்தியா’ நாவலில் சந்தியா, ‘ஒரு சிநேகத்தின் கதை’யில் மதுமதி, ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ கதையில் சுமதி, ‘கனவுகளைத் தின்போம்’ கதையில் நூதனா என விரிந்திடும் பெண் பாத்திரங்கள், எப்போதும் தங்களுடைய அடையாளத்தையும் சுயத்தையும் பேணுகின்றன. ஆணின் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான மனநிலையுடன் செயல்படுகிற பெண்களைப் பிரபஞ்சன் பெரிதும் படைத்துள்ளார். ஒருவகையில் பெண்ணியக் கருத்தியலுடன் இசைந்துபோகிற பிரபஞ்சனின் பெண் கதைமாந்தர்கள் இடம்பெற்றுள்ள நாவல்கள், வெகுஜன இதழ்களில் வெளியானபோது, பெரிதும் கவனம் பெற்றன. பெண் என்று தன்னை அறிந்து, உடலை மீறிச் சிந்திக்கும் பெண், நடப்பில் எதிர்கொள்கிற பிரச்னைகளை மையமிட்டு வலுவான பெண் கதைமாந்தர்களைப் பிரபஞ்சன் படைத்துள்ளார்.

இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவல், விளிம்புநிலையினரான புதிரை வண்ணார் சாதியைச் சார்ந்த ஆரோக்கியம் என்ற பெண்ணின் வாழ்க்கைப் பின்புலத்தில் விரிந்துள்ளது. மனித உயிர் என்ற அக்கறை இல்லாமல் அடக்கியொடுக்கப்படுகிற பெண்ணின் கண்ணீரும் துயரமும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. ‘ஏன் இப்படியெல்லாம் சாதியின் பெயராலும் வறுமையாலும் ஒடுக்கப்படுவது நிகழ்கின்றன’ என்பதைச் சோக நாடகத்தின் காட்சிகளாக ஆரோக்கியத்தின் வாழ்க்கையின் மூலம் இமையம் அழுத்தமாகச் சித்திரித்துள்ளார். அவருடைய பிந்தைய நாவல்களான ‘ஆறுமுகம்,’ ‘செடல்’ ஆகியன பெண்ணை முதன்மைப் பாத்திரமாக்கிப் படைக்கப்பட்டிருந்தாலும் செயற்கையான கதைசொல்லல் காரணமாகத் தட்டையாக இருக்கின்றன.

கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘வடக்கே முறி அலிமா’, இஸ்லாமிய வாழ்க்கைப் பின்புலத்தில் அலிமா என்ற பெண்ணின் கதையைப் பதிவாக்கியுள்ளது. நாவலின் முதல் அத்தியாயத்தில் அலிமா பற்றிய பிம்பம் 13 வேடங்களில் புனையப்பட்டுள்ளது. பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சி.ஐ.டி ஆபீசர், வாழ்ந்து கெட்டவள், காதலனால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எய்ட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்த்ரீகம் செய்பவள், சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் போன்ற புனைவுகளை மீறி, அலிமாவின் வாழ்க்கை இயங்குகிறது. நாடோடியாகப் பயணமான அலிமா, கக்கூஸ் சுவர்களில் தனது வாழ்க்கைக் கதையைக் கரித்துண்டுகளால் எழுதுகிறாள். அலிமா, மனநிலை பிறழ்ந்தவள் என்பதைவிட அவள் விரும்பிய செயல்களைச் செய்யும்போது, சூழலுடன் ஏற்படுகிற முரண், நாவலின் அடியோட்டமாக பேசப்பட்டுள்ளது.

சு.தமிழ்ச்செல்வியின் ‘அளம்,’ ‘மாணிக்கம்’, ‘ஆறுகாட்டுத்துறை’, ‘கற்றாழை’, ‘கீதாரி’, ‘பொன்னாச்சரம்’ போன்ற நாவல்கள், பெண் பாத்திரப் படைப்பாக்கத்தில் தனித்து விளங்குகின்றன. கிராமத்தில் கடுமையாக உழைக்கிற பெண்களின் அடிப்படையான குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகிடும்போது, அவள் அடைகிற மன உளைச்சல் அளவற்றது. பெண் பற்றிச் சமூகம் கட்டமைத்திருக்கிற புனைவிற்கு ஏற்ப ‘அளம்’ நாவலில் சுந்தராம்பாளும் ‘மாணிக்கம்’ நாவலில் செல்லாயியும் வாழ்கின்றனர். ‘ஆறுகாட்டுத்துறை’ நாவலில் இரு கணவன்கள் இருந்தால் என்னவென்று கேட்கிறார் சமுத்திரவல்லி. கணவன், மகன் ஆகியோரால் புறக்கணிக்கப்பட்ட கண்ணகி, தனக்கான வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்கிறாள். இருப்பினைச் சகித்தல், வேறு வழியில்லாமல் எதிர்த்தல், தனக்கான வாழ்வைச் சுயமாகத் தேர்ந்தெடுத்தல் எனப் பெண் கதைமாந்தர்களைத் தமிழ்ச்செல்வி வடிவமைத்துள்ளார். கதையோட்டத்தில் பெண்கள் உருவாக்கிடும் வெளியில், ஆண் முழுக்க மறுதலிக்கப்படுவதுடன் அவனுக்கான இடம் இல்லாமலிருப்பது தமிழ்ச்செல்வியின் நாவல்களில் இயல்பாக இடம்பெற்றுள்ளது. பெண்களின் மனம் குறித்து நுட்பமான முறையில் பதிவுசெய்துள்ள தமிழ்ச்செல்வியின் நாவல்கள், முழுக்கப் பெண்களை மையமிட்டிருப்பது தற்செயலானது அல்ல.

ஆர்.அபிலாஷ் எழுதிய ‘கால்கள்’ நாவல், போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத மது என்ற சிறுமியின் கதையாக விரிந்துள்ளது. மாற்றுத் திறனாளியான பெண்ணின் தனிப்பட்ட பிரச்னைகளும் பொதுச் சமூகவெளியில் கலக்க இயலாத நிலையும், இடைவிடாமல் துரத்திடும்போது என்ன செய்ய முடியும்? வெறுமனே இரக்கமான பார்வையுடன் கடந்துபோகிறவர்கள் மத்தியில், பெண்ணின் அவஸ்தைகளையும் வலிகளையும் மது என்ற பெண்ணை முன்வைத்து அபிலாஷ் சித்திரித்துள்ள பாத்திரம், தமிழுக்குப் புதியது.

மூவலூர் ஆ.ராமாமிர்தம்மாளின் ‘தாஸிகளின் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ (1936), இந்திராவின் ‘சித்திரக் கூடு’, நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’, இ.ஜோ.ஜெயசாந்தியின் ‘சங்கவை’, தமிழ்மகனின் ‘ஆண்பால் பெண்பால்’, உமா மகேஸ்வரியின் ‘அஞ்சாங்கல் காலம்’ போன்ற நாவல்கள், கதையோட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளன. இந்தப் பட்டியல் இன்னும் நீளும்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் தொடங்கி லட்சுமி, குமுதினி, இந்துமதி, ஜோதிர்லதா கிரிஜா, சிவசங்கரி, ரமணிச்சந்திரன் எனப் பெண் எழுத்தாளர்கள், வெகுஜன ரீதியில் பெண்களை மையமிட்டு நாவல்களை எழுதிக் குவித்திருந்தபோதிலும், பெண் கதைமாந்தர் ஆக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை. அவை வாசக ரசனைக்குத் தீனிபோட்ட அளவில் கரைந்து போய்விட்டன.

90-களில் வீச்சாகப் பரவிய பெண்ணியச் சிந்தனை காரணமாக, பெண்ணின் தனிப்பட்ட பிரச்னைகளையும் அனுபவங்களையும் ஆண் படைப்பாளர்கள் ஒருபோதும் படைக்கவியலாது என்ற கருத்து வலுப்பெற்றது. பெண்சார்பு நிலையில் எழுதிய மூத்த எழுத்தாளர்கள் ஓய்ந்த நிலையில், புதிதாக எழுத வந்த இளம் தலைமுறையினர், பெண் பாத்திரங்களைத் தங்கள் கதையோட்டத்திற்கு ஏற்ப எழுதினர். அதுவரை சமூகம் கட்டமைத்திருந்த பெண் பற்றிய மரபும் விழுமியமும் சிதைந்த நிலையில், பெண்ணுக்கு முக்கியத்துவம் தந்து எழுதுவது குறைந்தது. சல்மா, வா.மு.கோமு, விநாயக முருகன், செல்லமுத்து குப்புசாமி, அர்ஷியா, சரவணன் சந்திரன், லட்சுமி சரவணகுமார், இரா.முருகவேள், ஏக்நாத், தமிழ் மகன் போன்ற சமகாலத்திய நாவலாசிரியர்கள் பெண்-ஆண் உறவு, பெண்களின் நிலை, பாலியல் முரண்கள் குறித்து எழுதியிருந்தாலும், பெண்ணை முன்னிலைப்படுத்தி அழுத்தமான கதைமாந்தர்களை உருவாக்கவில்லை. நவீன வாழ்க்கையின் நெருக்கடிகளில் பெண் பற்றிய பேச்சுகள் உருவான அளவில், பெண்கள் குறித்த காத்திரமான பதிவுகள் அண்மைக்காலத் தமிழ் நாவல்களில் இல்லை.

இன்று பெரும்பாலான நாவல்கள் ஆண் மைய நோக்கில் ஆண்களின் உலகுக்கு முன்னுரிமை தருவதால், காத்திரமான பெண் கதைமாந்தர்கள் உருவாக்கப்படவில்லை. ஆணை மையமிட்ட சமூக வாழ்வில் பெண்கள் படுகிற அவலத்தை கொண்டாட்டத்தை முன்னிறுத்துகிற நாவல்களில், பால்ரீதியில் பெண் எதிர்கொள்கிற சம்பவங்கள், ஒடுக்குமுறைகள் இரண்டாம் நிலையில் பதிவாகியுள்ளன. இன்னொரு புறம் பெண் கவிஞர்களின் எண்ணிக்கை பெருகிய அளவில் நாவலாசிரியைகள் பெருகிடாத காரணத்தினால், சமகாலத்து நாவல்களில் பெண் கதைமாந்தர்கள் உருவாக்கம் வலுவாக இல்லை. கதையின் மைய நீரோட்டமாகப் பெண்ணை முதன்மைப்படுத்தி, அவளுடைய இருப்பை முன்வைத்து எழுதப்படுகிற நாவல்கள், ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்குக் காரணம், மாறிவரும் ஆண்-பெண் உறவுகள் என்று சொல்ல முடியுமா? அல்லது பெண்ணியத்தின் தாக்கத்தினால் ஆண் படைப்பாளர்களிடம் ஏற்பட்ட விலகலா? யோசிக்க வேண்டியுள்ளது!

தையலின் பால்வெளி காணீர்! (பரிணாமத்தின் மூன்று சொல்லாடல்கள்)

பக்தவத்சல பாரதி

மானுடத்தில் சரிபாதி பெண்கள். ஒவ்வோர் ஆணுக்குப் பக்கத்திலும் ஒரு பெண். உண்மையில் ஒவ்வொரு பெண்ணைச் சார்ந்தும் ஓர் ஆண் என்பதே இயற்கை நியதி. ஆணும் பெண்ணும் வலம் இடம்போல் இந்த மானுடச் சங்கிலி உலகம் விரிய வியாபித்துச் செல்கிறது. நம்முடைய அம்மாவும் நம்முடைய மனைவியும் பெண் என்றாலும், பெண்ணினுடையது ஒரு தனியுலகம். அது நம்முடைய கண்திறப்புக்கு அப்பாலும் விசாலமானது, ஆழமானது.

மானுடத்தின் அத்தனை வெளிகளிலும் நாம் பயணித்துவிடவில்லை. அதனால்தான் ‘தமிழை ஆண்டாள்’ எனும் அண்மைக் காலச் சர்ச்சை பூதாகரமாகக் கிளம்பியது. நாம் அறியாத பால்வெளிகள் உண்டு. பெண் பற்றிய பெண் சொல்லாடல்கள் அனைத்தும் ஆணுலகம் அறியாதது.

நம்முடைய சமூகங்களில் ‘வெகுசனச் சமூகம்’ கட்டுகளை விடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய பின்நவீனத்துவ, உலகமய, மின்னணு யுகங்கள் உலகைக் கவ்விக்கொண்டுள்ளன. நிலம், சாதி, மதம், நாடு என அத்தனை எல்லைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பெண்ணுலகம் புதுவெளியைக் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் வெகுதொலைவினைத் ‘திக்குத் தெரியாத காடு’ என்பார்கள். இன்றோ உலகமே சிறிய கிராமமாகச் சுருங்கிவிட்டது. இதில் நாம் எதைக் கண்டுகொள்கிறோம், எதைக் காணாமல்விடுகிறோம்? எல்லாமே வரையறைக்கு அப்பால் நிற்கின்றன. அவரவர் காண்பது அவரவருக்கு!

சுருங்கிய எல்லைக்குள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. வாழ்வின் அத்தனை எல்லைகளும் கரைந்துகொண்டிருக்கின்றன. எல்லைகளை விரும்பும் பழைமை விரும்பிகளும் ஆசார மக்களும் இருக்கிறார்கள், இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், எல்லைகள் விரியும்  இந்தத் தமிழ்ச் சமூகத்தில், பெண்ணுக்கான புதிய வெளிகள் புலப்படத்தான் செய்கின்றன. அதேசமயம், தமிழ்ச் சமூகம் ஒரு பழைமைச் சமூகம். அது நீண்ட காலவெளியில் பயணித்து வந்துகொண்டிருக்கிறது. ஏறக்குறைய மனிதகுலத்தில் தோன்றிய அத்தனை வகையான சமூகவடிவங்களும் தமிழ் மண்ணில் தோன்றியுள்ளன. சாதி என்ற ஒரு தனி வகையும் இங்குண்டு. உலகில் வேறெங்கும் இல்லை. வீரயுகத்தில் தோன்றிய 18-க்கும் மேற்பட்ட பாண் சமூகங்கள் மேலுமொரு தனி வகை. இவை எல்லாமும் சேர்ந்து காலகதியில் பெண்ணுக்கான கருத்தாடல்களையும் சொல்லாடல்களையும் மீண்டும் மீண்டும் உற்பத்திசெய்து வந்துள்ளன.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

மானுட இருப்பே சொல்லாடல் களில்தான் உறைந்துள்ளது. இதில் பெண் பற்றிய தமிழ்ச் சொல்லாடல்கள் காலப்பரிமாணம் கொண்டவை. இன்றைய சூழலில் நவீனப் பெண்வெளி எப்படியாக உருமாற்றம் கண்டுவருகிறது என்பது ஆர்வமூட்டுவதாக உள்ளது. இங்கு குறைந்தது மூன்று வகையான பெண்ணுலகங்களைக் குறித்துச் சற்று விரிவாகக் காண வேண்டும். அப்போதுதான் இன்றைய தமிழ்ச் சமூகத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும். இந்த மூன்றிலும், முழுவதுமாக மாறுபட்ட  மூன்று பெண்நிலை வடிவங்களை நாம் காணலாம். 

பழங்குடிப் பெண்கள்

உலகம், குழந்தையாகத் தோன்றியதிலிருந்து வாழ்ந்து வருபவர்கள் பழங்குடிகள் (Tribes). இன்று

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

தமிழகத்தில் 37 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களுடன் 30-க்கும் மேற்பட்ட நாடோடிச் சமூகத்தார் ஊர் சுற்றும் வல்லுநர்களாகத் தமிழகக் கிராமப்புறங்களில் (நகரங்களிலும்கூட) கலைச்சேவை செய்து வாழ்கிறார்கள். இவர்கள், சங்ககாலத்தில் ஐந்து திணைகளிலும் சுற்றி வந்த 18-க்கும் மேற்பட்ட பாண் சமூகத்தாரின் இன்றைய தொடர்ச்சியாக உள்ளவர்கள். பழங்குடி மக்களும் நாடோடிகளும்தான் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் பழைமையைப் பேசுபவர்கள். இவர்களுடைய பெண் நிலைப்பாடும் பாலினப் பாகுபாடும் எப்படியானது என்பதைக் கவனத்தில் கொண்டால் மட்டுமே, அதற்கடுத்து உருவான பெண் நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

பழங்குடி உலகில், பெண்களே உயர்ந்தவர்கள். அவர்களின் சமூகத்தகுதி ஆண்களைவிட அதிகம். காரணம், ஆதியில் பழங்குடி வாழ்க்கை, வேட்டையாடி உணவு சேகரித்தலாகும். இதில் வேட்டை ஆணுக்கு உரியது. சேகரித்தல் பெண்ணுக்கு உரியது. வேட்டை என்பது பட்டா பட்டா பாக்கியம். குழுவாகச் செல்ல வேண்டும். காட்டுக்குச் சென்றவுடன் வேட்டை கிடைக்கலாம்; ஓர் இரவு தங்கி வேட்டையாட வேண்டிய சூழலும் எழலாம். இதனால், வேட்டை நிலையான உணவு ஆதாரமாக அமையவில்லை. ஆனால், இறைச்சியானது  ‘விலங்கினப் புரதம்’ எனும் வகையில் ஆசை உணவாக இருந்தது.

ஆண்களுக்கு மாறாகச் சேகரிப்பில் ஈடுபட்ட பெண்கள், காட்டுக்குச் சென்றுவிட்டால் கிழங்குகள், பட்டைகள், தண்டுகள், இலைதழை கீரைகள், தேன், கொட்டைகள், பழங்கள் என விதவிதமான காடுபடு பொருள்களைச் சேகரித்துக் கொண்டு அன்றே விரைந்து திரும்பலாம். இவையெல்லாம் நிலையான உணவு ஆதாரத்தைக் கொடுத்தன. ஒவ்வொரு நாளும் உண்டுமகிழ்ந்து பசியாறலாம். நிலையான உணவு ஆதாரத்தை ஈட்டிய பெண்களுக்கு உயர்ந்த சமூகத்தகுதி கிடைத்தது.

சேகரிப்புக்குப் பிந்தைய காலகட்டத்திலும் பெண்கள் உயர்தகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்கள். புதிய கற்காலம் வரை ஆண்கள் வேட்டையிலும், பெண்கள் சேகரித்தலிலும் ஈடுபட்டது போய், புதிய கற்காலத்தில் ஓரிடத்தில் குடியிருக்க ஆரம்பித்தார்கள். அப்போது பெண்கள் காட்டுக்குப்போய்ச் சேகரித்தலை விடுத்து, அத்தகைய வகையினங்களைத் தாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகிலேயே பயிரிடத் தொடங்கினார்கள். அதனால் மனிதகுலத்தில் பெண்ணே முதல் விவசாயி என்ற  இன்னுமொரு புதிய தகுதிப்பாட்டையும் பெற்றாள்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

பெண்கள் பயன்படுத்திய முதல் விவசாயக் கருவி என்ன தெரியுமா, தோண்டுகழி (Digging Stick). அது ஒரு நான்கைந்து அடி நீளமுடைய ஒரு முனையில் கூர்மையான, சன்னமான கம்பு (இன்றைய கைத்தடி போன்றது). மலைச்சரிவுகளில் காட்டை எரித்து, மழை பெய்தவுடன் தோண்டு கழியால் துளையிட்டு விதைகளை நட்டார்கள். விதைகள் முளைத்துப் பயிரானபோது அங்கு முளைத்த களைகளைக் கூர்மையான முனையின் இரு பக்கத்திலும் சற்று வளைவான அமைப்பைக் கட்டிக் (இன்றைய சூலாயுதம் போன்றது) களையெடுத்தனர். பின்னர், அதைக் கொண்டும், முழவு, பறை முதலானவை கொண்டும் பரண் அமைத்து, பறவை விலங்குகளிடமிருந்து தினைப்புனம் காத்தனர். சங்க இலக்கியத்தில் தோண்டுகழி ‘விழுக்கோல்’ எனப்பட்டது (பெரும்பாண் 91-92).

ஆதியில் பெண் பொருளாதாரத் தளத்தில் பயன்படுத்திய அந்தக் கருவியே, பழந்தமிழகத்தில் பெண் - கொற்றவையாகவும் கானமர்ச்செல்வி, காடுகிழாள், பழையோள், மூத்ததேவி (இன்று மூதேவி) என்றெல்லாம் தாய்த்தெய்வமாகப் பண்பேற்றம் செய்யப்பட்டபோது, அவளுக்கான வேளாண் ஆயுதம் அப்படியே சடங்கியல் ஆயுதமாக உருவகப்படுத்தப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த முதல் விவசாயக் கருவி இன்றும் தமிழ் மண்ணில் தாய்த்தெய்வங்களிடம் எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

பெண்கள் விவசாயத்தைக் கண்டெடுத்த அதேவேளையில், ஆண்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடுவதைவிடுத்து, வீட்டைச் சுற்றியே அந்த விலங்குகளை வளர்க்கத் தொடங்கினார்கள். இந்த வகையான வேலைப் பகிர்வில் பெண்கள் அதிகமான சமூகத்தகுதி கொண்டவர் களாகவும் தன்னாட்சித்தன்மை கொண்டவர் களாகவும் விளங்கினார்கள். நாடோடி சமூகத்துப் பெண்களும் சுயாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருந்தார்கள். அலைகுடிகளாக ஊர் சுற்றிக் கலைச்சேவை செய்த காலத்தில், நிலைகுடிகளாக விளங்கிய கிழார்களும் ஆண்டைகளும் உணவா தாரங்கள் கொடுத்து ஆதரவு கொடுத்தார்கள். சில வேளைகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது பெண்கள் அண்டை வீடுகளுக்குச் சென்று இரந்து வருவார்கள். பசிப் பட்டினிக் காலத்தில் பிச்சை எடுத்து உயிரைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெண்கள் செய்ததால், அலைகுடிகளிடமும் பெண்ணே உயர்ந்தவள்.

இத்தகைய பெண் சுயாட்சித்தன்மையை இன்று நெய்தல் நிலத்திலும் காணலாம். இங்கும் காட்டைப்போன்றே கடல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கும் உடைமையில்லை. மீனவர்கள் பயன்படுத்தும் கட்டுமரத் தொழில்நுட்பம் (அல்லது கைவினை சார்ந்த மீன்பிடித்தல்) ஜனநாயகத்தன்மை வாய்ந்தது. ஆக, குறிஞ்சியிலும் நெய்தலிலும் சமூகவுடைமை, சமத்துவத் தொழில்நுட்பம் நிலவுகின்றன. இதனால், இவ்விரு இடங்களிலும் பாலினச் சித்தாந்தம் தனித்துவமானது.

நெய்தலில் ஆண்கள் மீன்பிடித்துக் கொண்டு கரை சேர்ந்ததும் அவர்களுடைய வேலை முடிந்துவிடுகிறது. நேராகச் சென்று நல்ல தண்ணீரில் குளித்துவிட்டு, பரோட்டா கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டுச் சாராயக் கடைக்குச் சென்றுவிடுவார்கள். மாலையில் கரைபோங்கில் வலை பொத்துவதுதான் அவர்களுடைய வேலை.

வலையிலிருந்து மீன்களைச் சேகரித்து அவற்றை ஏலம்விடுவதும் அல்லது அவற்றை அங்காடிகளில் விற்றுப் பணமாக்குவதும், அல்லது வீதிகளில் சுற்றித் திரிந்து விற்பதும் பெண்களின் வேலைப்பகிர்வு. விற்றுக் கிடைத்த பணத்தைக்கொண்டு வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிக் குடும்பத்தை நிர்வகிப்பது பெண்கள்தான். அதனால் உடைமையற்ற குறிஞ்சி, நெய்தல் மக்களிடம் பெண் சுயாட்சித்தன்மை அதிகமாக உள்ளது. இது அடுத்தடுத்த சமூக வடிவங்களில் தொடரவில்லை.

கைவினைப் பெண்கள்

படிநிலைப்பட்ட சாதியச் சமூகத்தில் சேவைச்சாதிகள் மிகவும் முக்கியமானவர்கள். கைவினைகளைக்கொண்டே அவர்கள் பிழைக்கிறார்கள். குயவர், வண்ணார், கொல்லர், தட்டார், தச்சர், கூடை, முறம், பாய், ஓலைப்பெட்டி, பிரம்புவேலை முதலான கைவினைப் பொருள்களைச் செய்யும் பெண்களின் தொழிற்பகுப்பும் வேலைப் பிரிவினையும் தனித்துவமானவை. இவை பற்றி நாம் இதுவரை நுட்பமாகக் கவனித்ததில்லை. கவனித்தால், தமிழ்ச் சமூகத்தின் பாலினப் படிநிலையின் பரிணாமத்தை அறியலாம். இங்குதான் பாலினப் படிநிலை தொடங்குகிறது.

இந்தச் சேவைச்சாதிகள் செய்யும் மேற்கூறிய தொழில்களில் சிலவற்றைப் பெண்களே முழுவதும் பங்கேற்றுச் செய்கிறார்கள். இதற்கடுத்து, வேறு சில தொழில்களில் ஆணும் பெண்ணும் சமமாகப் பங்கேற்கிறார்கள். இறுதியாக, சில தொழில்களில் ஆண்கள் முழுமையாகப் பங்கேற்கிறார்கள், இவற்றில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவு. இந்த மூன்று படிநிலைகளில் ஆண், பெண் வேறுபாடுகளின் ஒட்டுமொத்தப் பரிணாமமும் அடங்குகிறது.

பெண்கள் முழுமையாகப் பங்கேற்கும் தொழில்கள் முறம் கட்டுதல், கூடை முடைதல், பாய் பின்னுதல், மூங்கில் பொருள்கள் செய்தல், ஓலைப்பெட்டிகள் செய்தல், கீற்று பின்னுதல், மரச்சீப்பு செய்தல், தாவரங்களின் நடுத்தண்டிலிருந்து கிடைக்கும் மென் சோற்றிலிருந்து மாலைகள் செய்தல், அழகுபொருள்கள் செய்தல் முதலானவை. பரவலாக அறிந்தவை. இத்தொழில்களில் ஆண்கள் பங்கேற்பது என்பது ஆர்வத்தின் பொருட்டாகும்; பொழுதை வீணாக்க வேண்டாம் என்பதற்காகும். அவர்கள் பங்கேற்கவில்லை என்றால், அந்த வேலை தடைப்பட்டுப் போகாது.

அடுத்ததாக, ஆண்களும் பெண்களும் சேர்ந்து செய்யும் தொழில்கள் - நெசவு, துணிவெளுக்கும் வண்ணார் வேலைகள், பானை, சட்டி முதலான மண்பாண்டங் களைச் சக்கரத்தில் ஆண்கள் வனைந்த பின்னர் மீதமுள்ள வேலைகள், இரும்பைப் பழுக்கக் காய்ச்சுவதற்குக் கைத்துருத்தி ஊதுதல் உள்ளிட்ட இன்னும் சில வேலைகளைப் பெண்கள் செய்கிறார்கள்.

மரங்களைக்கொண்டு செய்யும் தச்சுத் தொழில், இரும்பைக்கொண்டு செய்யும் கம்மாளர் தொழில், தங்கம், வெள்ளிகொண்டு செய்யும் தட்டார் தொழில், கல்லைக்கொண்டு செய்யும் கல்தச்சர் தொழில் முதலானவற்றை ஆண்கள் மட்டுமே செய்கின்றனர்.

மேற்கூறிய ஆண், பெண் தொழிற் பகுப்பின் ஊடாகப் பாலினப் பாகுபாடு சில தர்க்கங்களைச் சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்றன. அவை பண்பாட்டில் பல்வேறு அர்த்தங்களைத் தாங்கி நிற்கின்றன.

பெண்கள் முழுமையாக ஈடுபடும் பாய் பின்னுதல், மூங்கில் பொருள்கள் செய்தல், பிரம்பு வேலை செய்தல், ஓலைப்பெட்டி செய்தல், நெசவு செய்தல் முதலான தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் ‘நாடு’ எனப்படும் புழங்கும் நிலப்பகுதியிலிருந்து கிடைக்கின்றன. சதுப்புப் பகுதியில் கோரையும், ஆற்றங்கரையில் பிரம்பும், விளைநிலங்களில் பருத்தியும் ஓலைகளும், தோட்டக்காலில் மூங்கிலும் விளைகின்றன. இப்பகுதிகள் யாவும் மக்கள் நாடு, காடு எனப் பிரித்துக் காணுகின்ற வகைப்பாட்டில் ‘நாடு’ எனும் பகுதிக்குள் வருகின்றன.

அடுத்து, ஆணும் பெண்ணும் பங்கேற்கும் மட்பாண்டத்திற்கான மூலப்பொருளும், துணி வெளுப்பதற்கான உலர்மண்ணும் நாடு, காடு இரண்டும் சந்திக்கும் இடைப்பட்ட இடமான ஏரி, உலர்மண் படுகையிலிருந்து பெறப்படுகின்றன.

மூன்றாவதாக, பெண்கள் முற்றிலும், பங்கேற்காத தச்சுவேலை, இரும்புவேலை, பொன் வேலை, பித்தளைப் பாத்திர வேலை, சிற்ப வேலை ஆகியவற்றுக்கான மூலப்பொருள்கள் ‘காடு’ எனக் கருத்தாக்கம் செய்யப்படும் பகுதியிலிருந்து பெறப்படுகின்றன.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

பெண்கள் முதன்மையாக ஈடுபட்டுச் செய்யும் பொருள்களாகிய ஓலை, கோரை, மூங்கில் பட்டை முதலான பொருள்களை வளைத்து முடைவதற்கு நீர் தெளிப்பது முக்கியம். நீரே பெண்கள் செய்யும் பொருள்களுக்கு அடிப்படை. மாறாக, இரும்பைக் காய்ச்சி அடிப்பதற்கும், வனைந்த மட்பாண்டங்களைச் சுடுவதற்கும், பித்தளை, பொன் போன்றவற்றை உருக்கிச் சிலைகள், நகைகள் செய்வதற்கு ‘நெருப்பு’ அடிப்படை. ஆக, பெண்கள் நீரையும் ஆண்கள் நெருப்பையும் அடிப்படையாகக்கொண்டு புழங்குபொருள்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

பெண்கள் ஈடுபடும் தொழில்களில் மூங்கில், பனை, ஓலை, கோரை, பிரம்பு முதலான மூலப்பொருள்களை வெட்டுதல், பிரித்தல், சீவுதல் ஆகியன மட்டுமே அடிப்படையான செயல்கள். இவற்றைச் செய்வதற்கு ஒரு கத்தி இருந்தால் போதுமானது. ஆண்கள் மண் வனைய சக்கரத்தையும், கருமார் உலையில் காற்று ஊத சக்கரமும், தட்டார் பட்டறையில் இயங்கும் சுழற்சியும் ஒரு சக்கர வடிவிலான இயக்கத்தைக் காட்டுகின்றன.

பெண்கள் செய்யும் புழங்குபொருள்கள், நீண்டகாலம் உழைக்காதவை. அதனால் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. பெண்களே உற்பத்திக் கானவர்கள், மறுஉற்பத்திக்கானவர்கள் என்பதை இது உணர்த்துகிறது. ஆண்கள் செய்யும் புழங்குபொருள்கள் நீண்டகாலம் உழைக்கக்கூடியவை. மறுஉற்பத்தியை எதிர்நோக்காதவை. இவ்வாறு, புழங்கு பொருள்கள் உற்பத்தியில் காணக்கூடிய ஆண், பெண், பாலினப் படிநிலைக் கருத்தாக்கங்கள் பண்பாட்டின் பிற தளங்களிலும் வெளிப்படுகின்றன. கைவினைச் சாதிகளில் ஏற்பட்ட இந்தப் பாலினப் படிநிலை, நிலவுடைமைச் சாதிகளில் மேலும் வலுவடைந்துவிட்டது.

நகரப் பெண்கள்

‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்பது பழங்கதை. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியச் சமூகம் தொழில்மயம், நகரமயம், மேற்கத்தியமயம் எனும் மூன்று புதிய கூறுகளோடு அசைவியக்கம் கொண்டது. இன்று 45 சதவிகிதம் தமிழகம் நகரமயமாகி விட்டது. இது நமது கவனத்தைப் பெரிதும் கோருகிற நவீனத்துவமாகும். இதனூடாக மாறிவருகின்ற நகர்ப்புறச் சமூகம், ஒரு புதிய வடிவமாகும். நவீனக்கல்வி, நவீன வேலைவாய்ப்புகள், நடுத்தர வர்க்கம் முதலான புதிய அசைவியக்கங்களும் பாரதூரமானவை.

இன்றைய நகரச் சமூகத்தில் பெண்கள் இரண்டு துருவங்கள். ஒரு துருவத்தில் அவர்கள் குடும்ப பாரத்தில் மூழ்கிவிட்டவர்கள், வெளியே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வாய்ப்பில்லாதவர்களாக முடங்கிவிட்டவர்கள். இன்னொரு துருவத்தில், திருமணமான பெண்கள் வேலைக்குச் சென்று திரும்பிய பிறகு, வீட்டில் இரண்டாம் ஷிஃப்டாக வேலை செய்தாக வேண்டியவர்கள். என்றாலும், இரண்டு துருவங்களிலும் அவள் உயிரியல் ரீதியாகக் குழந்தைகள் பெற்றெடுத்தாக வேண்டும். பண்பாட்டு ரீதியாக அந்தக் குழந்தைகளை வளர்த்தெடுத்தாக வேண்டும்.

இந்த இரண்டும் கண்ணுக்குப் புலனாகாத வாழ்நாள் உழைப்பு. இவற்றில் கரைந்துவிடும் பெண்கள் காலகதியில் ஆண் சுயத்தால் வசியப்படுகின்றனர். மாட்டுப் பெண்ணாக வந்தவள், காலம் ஓட ஓடத் தன் கணவனின் சுயத்தில் கரைந்துவிடுகிறாள்; கணவனின் மறுபிரதியாகவே மாறிவிடுகிறாள். அவளே முன்னின்று, ‘தன் மகனுக்கு இவ்வளவு வரதட்சணை வேண்டும், இவ்வளவு நகைகள் வேண்டும்’ எனும் ஆண் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறாள். இந்த ஆண் ஓர்மை பெண்கள் வழி வெளிப்படுவது, பெண்களின் சுயமிழந்த வெளியாகும். நகர்ப்புற வாழ்வின் ஆடம்பரங்களுக்கு அவள் ஆண் சுயத்தில் கரைந்துவிடுகிறாள். கிராமச் சமூகத்தை விடவும் இது ஓர் ஆண்முகம் நோக்கிய உருமாற்றமாகும். இந்தச் சூழல், குடும்பப் பெண்களை ஆண் மையத்தில் வசியப்படுத்துகிறது. அதிலேயே லயமடையச் செய்கிறது. மானுட மூலதனக் கோட்பாட்டின்படி பார்த்தால், அவர்கள் ஓர் இலவசமான வாழ்நாள் தொழிலாளியாகவே ஒப்பந்தமாகி விடுகிறார்கள்.

இந்திய உழைப்புச் சந்தையில் ஆண், பெண் இடைவெளி விசாலமாகவே இருக்கிறது. அமெரிக்காவைவிட பிரான்ஸில் ஆண், பெண் சம்பள விகிதத்தின் இடைவெளி குறைவு. ஆனால், அமெரிக்கப் பெண்களைப் போன்றே பிரான்ஸிலும் பெண்களுக்கு நல்ல தொழில்களில் ஈடுபட வாய்ப்புகள் கொடுப்பதில்லை. பிரான்ஸில் உள்ள 455 தொழில்களில் 45 சதவிகிதம் பெண்கள் 20 வகையான தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர். இந்தியச் சூழல் ஐரோப்பிய நிலையை எட்டிப்பிடிக்கவில்லை. இப்போதுதான் பெட்ரோல் நிலையம், இராணுவச்சேவை, ஆட்டோ ஓட்டுநர் முதலான தளங்களில் பெண்கள் இறங்கியுள்ளனர். ஆனால், சீனாவில் 1978-லேயே சந்தை சோசலிசம் வந்துவிட்டது.

தமிழ்ச் சூழலில் பாலின வேறுபாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக விசாரணைசெய்ய வேண்டுமென்றாலும் ஒரு மையமான கருத்தை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. உலக நாடுகளிலேயே நார்வேயிலும் சுவீடனிலும்தான் பாலினச் சமத்துவம் அதிகம். இந்த நாடுகளில், பொதுவெளியில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் இந்த நிலை கண்ணுக்குப் புலனாகாமலேயே உள்ளது. முடியாட்சி மறைந்து குடியாட்சி வந்தாலும் இன்றும் நிலப்பிரபுத்துவ மனநிலை நம்மிடம் உள்ளது.

இந்தியாவில் பொதுச்சமூகம் சார்ந்த,  பெண் சார்ந்த கொள்கைகள் வகுக்கப்பட வில்லை. பெண்களின் ‘தொழிலை’யும் ‘குடும்ப’த்தையும் இணைத்து அவர்களுக்கு உதவும் வகையில் புதிய கொள்கை சார்ந்த மாற்றங்களை உருவாக்க வேண்டும். ஆனாலும் உலக அளவில் பார்க்கும்போது, தமிழ்ச்சூழல் உள்ளிட்ட இந்தியப் பெண்களின் நுண்பொருளாதாரச் சிந்தனை, எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறது.

உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, ஏராளமான மாத வருமானக் குடும்பங்கள் அதனால் அப்பளமாக நொறுங்கிவிட்டபோது, கிராமியப் பெண்களின் சீட்டுக் கட்டிச் சேமிக்கும் பழக்கம் நெருக்கடிகளைத் தீர்க்கவல்லது என்பதைப் பொருளாதார மேதைகள் உணர்ந்துகொண்டார்கள். நவீனத்துவத்திற்கு, பழைமை வழங்கும் கொடையாகப் பெண்களின் நுண்பொருளாதாரம் முன்னோடிச் செயல்பாடாக அமைந்துள்ளது. இன்றைய பிந்தைப் பெண்ணிய யுகத்தில் பெண்களுக்கான தற்சார்பு வளர்ந்து வந்துள்ளது என்றாலும், பெண்களுக்கான பால்வெளி சுயம் இழந்த ஒன்றாகவே இருந்துவருகிறது. மாற்றங்களை நோக்கிய நகர்வு யாரின் மனதிலிருந்து தொடங்க வேண்டும் நண்பர்களே...

மகா ஜனங்களின் கதாநாயகிகள்

ஜா.தீபா

கறுப்பு - வெள்ளைத் திரைப் படங்களின் சுவரொட்டிகளைத் தொகுப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு விஷயம் கவனம் ஈர்த்தது.

40-களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள், புராணக்கதைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ராஜா காலத்துக் கதைகள், சமூகக் கதைகள் எனப் பேசத் தொடங்கிய படங்களின் தலைப்புகளில் பல, பெண்களை மையப்படுத்திய தலைப்புகளாகவே அமைந்திருந்தன. ‘பர்மா ராணி’, ‘சகுந்தலை’, ‘மனோன்மணி’, ‘மிஸ் மாலினி’, ‘சந்திரலேகா’, ‘தாசி அபரஞ்சி’ இப்படியாக...

அதிலும் ‘மனோன்மணி’ படத்தின் சுவரொட்டி இப்படிச் சொன்னது, ‘கலை உலகம் புகழ்ந்த காரிகை... திரை உலகில் திக்விஜயம் செய்ய வருகிறாள்! தரிசிக்கத் தயாராகுங்கள்’. இப்படியான அறிமுகம் அப்போதைய கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரிக்குக் கிடைத்திருந்தது. நாயகனாக பி.யு.சின்னப்பாவும் நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியும் நடிக்க வேண்டும் எனப் பெருவாரியானவர்களின் விருப்பத்தின் பேரிலேயே இவர்கள் நடித்திருந்தனர். படத்தைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், நாயக - நாயகி வேடங்களுக்கு யார் பொருந்துவார்கள் என மக்களிடம் பத்திரிகை விளம்பரங்கள் மூலமாகக் கருத்து கேட்டிருந்தது. இந்த விளம்பரத்துக்கு டி.ஆர்.ராஜகுமாரிக்கு எந்த மாதிரியான  வரவேற்பு ரசிகர்களிடமிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் அந்தப் படத்தின் சுவரொட்டி வாசகங்களினால் தெரிந்துகொள்ளலாம்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

40-களில் வெளிவந்த படங்களில்,  தன்னைவிட்டு வேறொரு பெண் மேல் கணவன்கொண்ட ஆசையால் தவிப்புறும் பெண்களின் கதைகள் அநேகம். அதேசமயம் கணவனை இழந்த விதவைப் பெண்களின் துயரங்கள்கொண்ட கதைகளும் எடுக்கப்பட்டிருந்தன. இயக்குநர் கே.சுப்ரமணியனின் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக இருந்தனர். உதாரணத்துக்கு ‘சேவாசதனம்’, ‘தியாக பூமி’ போன்ற படங்களைச் சொல்லலாம். எல்லிஸ் ஆர்.டங்கன் அப்போதைய மிக முக்கியமான இயக்குநர். டங்கனின் கதைகளில் சிலப்பதிகாரத்தின் தாக்கத்தைப் பார்க்க முடியும். அவருடைய சில படங்களில் பெண் கதாபாத்திரங்கள், தன்னைவிட்டுப் பிரிந்துபோன கணவனுக்காக ஏங்குபவர்களாக இருந்தனர். மாதவியின் கதாபாத்திரம்போலவே டங்கனின் கதாநாயகன் தேடிப்போகும் பெண்ணும் நடனமாடுபவராகவே இருந்தார். இந்தக் கதாபாத்திரங்களுக்காக அவர் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நடிகையை அழைத்துவந்தார். ‘சகுந்தலை’ படத்தில் நீரிலிருந்து வரும் தேவதைக் கதாபாத்திரத்துக்காக, சென்னை நட்சத்திர விடுதியில் நடனமாடிய ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்கு, உடலை ஒட்டிய ஆடையை அணியச்செய்து படமெடுத்ததாக தனது சுயசரிதைக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.

டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி மூவரும் ஒரே சமயத்தில் நடிக்க வந்திருந்தார்கள். மூவருக்குமே சமமான வரவேற்பைக் கொடுத்திருந்தனர் ரசிகர்கள். ‘சகுந்தலை’ படத்தின் காதல் காட்சிகள் பெரிதும் ரசிகர்களால் விரும்பப்பட்டன. அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் மறப்பதற்கு முன்பாகவே, அவர் நடிப்பில் ‘சாவித்திரி’ படம் வெளிவந்தது. அப்போது அவருக்குத் திருமணம் முடிவாகியிருந்தது. அதனால், அதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆண் வேடமிட்டு நாரதராக நடித்திருந்தார். திருமணத்துக்குப் பின் வெளிவந்த ‘மீரா’ படத்தின் பாடல்களும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை பக்த மீராவாகக் காட்டியவிதமும் அவரை ஒரு தெய்விகத்தன்மைகொண்ட பெண்ணாக மக்கள் மத்தியில் இப்போது வரை நிலைநிறுத்தியிருக்கிறது. 

டி.ஆர்.ராஜகுமாரியோ தொடர்ந்து நடித்து ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’ ஆனார். திருமணமான நாயகனைத் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு பெண்ணாக நடித்தவர், கணவனை இழந்து - சூழல் காரணமாக சுற்றத்தாரால் இன்னலுக்கு உள்ளாகும் பெண்ணாகவும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இவர் நடித்த படம் ‘பணக்காரி’. இந்தப் படம் லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரினீனா’வைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படம் தோல்வியடைந்தது. காரணம், அன்னா கரினீனாவின் பாத்திரத்தை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே. கதாநாயகி என்பவள் நாயகனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதை ‘பணக்காரி’ உறுதிசெய்திருந்தது. 50-களில் வெளிவந்த படங்களின் பெண் கதாபாத்திரங்கள் அநேகமும், கதாநாயகன் வந்து மீட்டெடுக்கக் காத்திருக்கும் பெண் கதாபாத்திரங்களாக அமைந்திருந்தன.

60-களில் கணிசமான பெண்கள், கல்லூரி வரை படிக்கவும் வேலைக்குச் செல்லவும் தொடங்கிய காலகட்டமாக இருந்தது. திரைப்படங்களிலும் இதுபோன்ற கதாபாத்திரங்கள் வரத் தொடங்கின.

70-களின் இறுதி வரை இப்படியான கதாபாத்திரங்களை நாம் பார்க்க முடியும். ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் கதாநாயகியான சரோஜா தேவி கல்லூரிக்குச் செல்லும் ஒரு பெண்ணாக வருவார்.  இதே படத்தில் கிராமத்தில் சிலம்பம் கற்றுத்தரும் வாத்தியாரின் இரு பெண்களும் சிலம்பம் ஆடிப் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். ‘அட பரவாயில்லேயே, அப்போதே இப்படியெல்லாம் பெண்களைக் காட்டியிருக்கிறார்களே’ என்று நாம் நினைக்கும்போதே வந்துவிடுகிறது ‘பாரப்பா பழனியப்பா’ பாடல். ‘நாட்டுக்குத்தான் ராணியப்பா... வீட்டுக்கு அவ மனைவியப்பா’ என்று நாயகன் பாட,  சுற்றியுள்ள கிராமத்துப் பெண்கள் எல்லோரும் இந்தக் கருத்தைச் சிரித்து ஆமோதிப்பார்கள். சிலம்ப ஆட்டத்தில் தேர்ச்சிபெற்ற பெண், திருமணம் ஆனதும் படத்தின் இறுதி வரை ஒரு வசனமும் பேசாமல் குனிந்த தலை நிமிராமல் அமைதியாகவே வந்துபோவார்.

பெண்கள் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் தயாராகிறார்கள் என்றால், அவர்களை எப்படிக் கையாளுவது என்கிற பதற்றத்தினால் ‘திருமணம் வரைக்கும் உன் விருப்பப்படி இருக்கலாம்’ என்கிற சமாளிப்பில் எடுக்கப்பட்ட படங்களின் ஒரு உதாரணம்தான் ‘பெரிய இடத்துப் பெண்’.

இதே காலகட்டத்தில்தான், படித்த பெண்கள் தங்களது குடும்பத்துக்காக எப்படித் தங்களைத் தியாகம் செய்துகொள்கிறார்கள், வேலையில்லாத் திண்டாட்டம் எப்படிப் படித்த பெண்களைப் பாதிக்கிறது, முதிர்கன்னிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைச் சொல்லும் படங்களும் வெளிவந்தன.

இங்கு மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழ்ப் படம் பேசத் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே அதனுடன் பயணித்த கலைவாணர் - மதுரம் ஜோடியைத் தவிர்த்துவிட முடியாது. பல படங்களை மதுரம் தனது ஆளுமையால் நிறைத்திருக்கிறார். நகைச்சுவைக் கதாபாத்திரங்கள்தான் என்றாலும், எந்த இடத்திலும் தனது உடல்மொழியை அசட்டுத்தனமாக மாற்றிக்கொள்ளாமல் மிகுந்த கம்பீரத்துடன் நகைச்சுவையில் உயரம் தொட முடியும் என நிரூபித்தவர்களில் முன்னோடி மதுரம். பிறகு இவர் வழி வந்தார் மனோரமா.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்


50-களில் தொடங்கி 60-களின் இறுதி வரை பல்வேறு விதமான பெண் பாத்திரங்களைக் கதையாசிரியர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். ‘மிஸ்ஸியம்மா’ மற்றும் ‘கை கொடுத்த தெய்வம்’ சாவித்திரி, ‘அன்னை’ பானுமதி, ‘சித்தி’ பத்மினி, ‘அன்பே வா’ சரோஜா தேவி இப்படி ஒரு பட்டியல் இடலாம். இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கிய படங்களின் பெண் கதாபாத்திரங்கள், அப்போதைய பெண்களின் வாழ்க்கைக்கு அருகில் அழைத்துக்கொண்டு வரப்படவர்கள். மேற்சொன்ன பட்டியலில் ‘அன்பே வா’ சரோஜா தேவியைச் சேர்த்த காரணம், மேல்தட்டுச் சமூகத்திலிருந்து கல்லூரி  சென்று படித்த ஒரு பெண் அன்றைய காலகட்டத்தில்கொண்டிருந்த மனநிலையை ஓரளவுக்கு இந்தக் கதாபாத்திரம் பிரதிபலித்தது என்பதே.

அடுத்து வந்த 70-கள், பெண் கதாபாத்திரங்களுக்குச் சோதனையை ஏற்படுத்தியவை. கொண்டாடப்பட்ட நாயகர்கள் வயதாகிய பின்னரும் நாயகக் கதாபாத்திரத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில், கவர்ச்சிகரமான இளம் கதாநாயகிகள் அவர்களுடன் ஜோடி சேரத் தேவைப்பட்டனர். அதேநேரம் கே.பாலசந்தர் தனித்த பாதையில் பயணித்துக்கொண்டிருந்தார். இவருடைய கதையின் பெண்  கதாபாத்திரங்கள் தீவிரத் தன்மையுடன் எதையும் அணுகுபவர்களாக, சுள்ளென்று கோபப்படுபவர்களாக, தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்றவர்களாக, எள்ளல் தன்மை கொண்டவர்களாக நமக்குக் காட்டப்பட்டார்கள்.

80-களில் கல்லூரி காலக் கதைகள் அதிகம் வந்தன. ஆண்-பெண் இருபாலர் பயில்கிற கல்லூரிகளில் நாயகி, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். மத்தியதரக் குடும்பத்திலிருந்து படிக்கப் போகிற நாயகன், அவளை அடக்கி, காதலித்துக் கைபிடித்த கதையைப் பல படங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தன. இந்தப் படத்தின் நாயகிகளை அடக்குவது என்பது ஒன்றும் பெரிய காரியமாக நாயகர்களுக்கு இருந்ததில்லை. ஒரு முத்தம், கன்னத்தில் ஓர் அடி, மிஞ்சிப்போனால் ஒரு நீண்ட வசனம் இவையே நாயகிகளை அடக்கப் போதுமானதாகயிருந்தன.

80-களின் இறுதியில் வெளிவந்த ‘ஆடிவெள்ளி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த 20 வருடங்களுக்கு அம்மன் படங்கள் வந்தபடி இருந்தன. கோபக்கார அம்மன், அப்பாவிப் பெண்ணுக்கு உதவுவதையும் நேரடியாக அம்மனே களமிறங்கி வில்லனுக்கு எதிராகச் சண்டைபோடுவதையும் பார்ப்பதற்காகப் பெண்கள் திரையரங்குக்கு மீண்டும் அதிகமாக வரத் தொடங்கினர். அடுத்த தலைமுறை இயக்குநர்கள் முக்கியமான படங்களைத் தமிழுக்குத் தந்தார்கள். ‘ஜானி’ ‘முந்தானை முடிச்சு’ ‘முதல் மரியாதை’ ‘ஆண் பாவம்’ ’மூன்றாம் பிறை’ எனப் பெண் கதாபாத்திரங்களுக்கான இடத்தை இந்தப் படங்கள் தந்திருந்தன. இவ்வகையில் எடுக்கப்பட்ட 80-கள் முதல் 2000-ம் ஆண்டு வரை பல படங்கள் வெற்றி கண்டன. கதாநாயகிகளுக்கான கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டு, அவர்களையும் மையமிட்ட கதைகள் பல வெளிவரத் தொடங்கின. அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படமாக ‘மகளிர் மட்டும்’ (1994) அமைகிறது. வேலைக்குச் செல்லும் அப்போதைய பெண்களின் பிரச்னைகளைச் சிரிக்கவைத்தபடி சொன்ன படம்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

2000-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே காதல் படங்கள் வரத் தொடங்கின. அடுத்த பத்து வருடங்களுக்குப் பெரும்பாலான படங்கள் காதலைப் பற்றியே விதவிதமாகப் பேசின. காதல் படங்கள் எனும்போது கதாநாயகிகளும் வேண்டுமென்பதால் அவர்களும் கதையில் பங்குகொண்டார்கள்.அதன் பிறகான இந்தச் சமகாலகட்டத்தில் புதிய இயக்குநர்கள் வெவ்வேறு கதைக் களங்களோடு வந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களைக் கவர்ச்சியாக ஆடவைப்பதில் ஒப்புதல் இல்லாத இயக்குநர்களைப் பார்க்க முடிகிறது. ‘பெண்ணை மட்டுமே மையமாகக்கொண்டு எடுக்கப்படும் கதைகள் வெற்றிபெறும்’ என்று நிரூபணமாகி வருகிறது. ‘அம்மன்’ படங்கள் காலாவதியாகி, அதற்குச் சமமாக கதாநாயகிகள் பேயாக வந்துகொண்டிருக்கும் காலகட்டமாக மாறியிருக்கிறது.

தமிழ்ப் படங்களின் நூற்றாண்டுச் சரித்திரத்தில், பெண் கதாபாத்திரத் தன்மை என்பது ஒரு கலவையாகவே இருந்து வந்துள்ளது. அந்தந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அக-புறச்சிக்கல்களைச் சில இயக்குநர்கள் ஆழமாகவும் பலர் மேலோட்டமாகவும் கடந்தபடி இருக்கின்றனர்.

‘வணிக ரீதியான வெற்றி மட்டுமே நோக்கம்’ என்று கருதிய சில இயக்குநர்களின் பெண் பாத்திரப் படைப்பு, திட்டமிட்டுக் கீழ்த்தரமாகவும் உணர்வுகளற்ற ஒரு பொம்மைபோலவும் படைக்கப்பட்டிருந்தன. பாலியல் வன்முறைக் காட்சிகளைக்கூட ஆண் ரசிகர்களை ஈர்ப்பதற்கு என, படங்களில் தவறாமல் சேர்த்த இயக்குநர்களும் உண்டு. படித்த, பொருளாதார வசதிகொண்ட பெண்களை - ஆணவம் பிடித்த  பெண்ணாக மட்டுமே காட்டும் வழக்கத்தினை, வசூலை வாரிக்குவித்த நடிகர்களின் படங்களில்தான் அதிகமாகப் பார்க்க முடியும். இப்போதும்கூடச் சில படங்கள் இதே சாயலில் வெளிவருகின்றன. ஆனால், அலுத்துச் சலித்த பெண் பாத்திரப் படைப்பு என்பதாலோ என்னவோ, அவை ரசிகர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதுமில்லை; வெற்றி பெறுவதுமில்லை.

காதல் தோல்விப் பாடல்கள் பல்லாண்டுகளாய்ச் சினிமாவின் ஓர் அங்கமாக இருந்துகொண்டிருக்கின்றன என்றாலும், காதலை ஏற்காத பெண் வாழத் தகுதியற்றவள் என்ற ரீதியில் தொடர்ந்து பாடல்கள் வெளியாகி, அனைத்தும் வரவேற்பையும் பெற்றுவருகின்றன. இந்த உளவியல் எப்போதும் கூர்மையான ஆய்வுக்கு உரியது.

ஒரு பெண்ணின் கதாபாத்திர வடிவமைப்பு எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்கிற கேள்வி, இயல்பாகவே எழக்கூடியதுதான்.  இயல்பானதாக அமைய வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இன்றைய நவீனச் சூழலில் பெண்கள் சந்தித்துவரும் அனுபவங்களின் பரப்பும் அதிகரித்திருக்கிறது. அவற்றை எடுத்துக்காட்டும் கதாபாத்திரங்கள் நம்மிடம் குறைவே. வெறும் காதலிக்கப்படும் பெண்ணாக மட்டும் வந்துபோவதை இப்போதுள்ள முன்னணிக் கதாநாயகிகளும் விரும்புவதில்லை. ஒரு காலகட்டம் வரை பெண்களுக்கு எனத் தனி ‘டிக்கெட் கவுன்டர்’ அமைந்த அளவுக்குப் பெண்கள் கூட்டம், திரையரங்குக்கு வரத் தொடங்கியிருந்தன. தொலைக்காட்சியின் வருகை அவர்களைத் திரையரங்கிலிருந்து பின்னுக்கு இழுத்திருக்கிறது. பெண்கள் திரையரங்குக்கு வருவதைக் குறைத்துக்கொண்ட காலகட்டத்தையும் திரையில் பெண்களின் கதாநாயகச் சித்திரிப்பு எப்படிக் காட்டப்பட்டது என்பதையும் ஒரு சேரப் பார்த்தோமானால் தமிழ் சினிமா, பெண் ரசிகர்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளதைப் புரிந்து கொள்ளலாம். இதே காலகட்டத்தில் வெளிவந்த தொலைகாட்சித் தொடர்கள் பெரும் வெற்றிபெற்றன. அவை வெற்றி பெற்றதற்கான காரணம், விதவிதமான பெண் பாத்திரங்களைத் தொடர்களில் நம்மால் பார்க்க முடிந்ததுதான். மிகத் தாமதமாகத்தான் தொலைக்காட்சித் தொடர்கள், ஒரே மாதிரியான அலுப்பூட்டும் கதைகளைச் சொல்லத் தொடங்கின; தொடர்கின்றன.

இன்று மீண்டும் பெண்கள் திரையரங்கு நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள். வார இறுதியில் திரையரங்குக்குச் சென்றால் இதை உணர்ந்துகொள்ள முடியும். அதனாலேயே, இயல்பான பெண் கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு கிடைக்கின்றன. திரைப்படங்களும் ஒரு சுழற்சிக்கு உட்பட்டதே. 40-களின் படங்கள் எப்படிப் பெண் பாத்திரங்களை மையமிட்டனவோ, அதேபோல் இப்போது மீண்டும் அதுபோன்றதான நிலை தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில் எது வேண்டுமானாலும் செய்து ஒரு பெண்ணைக் காதலிக்க வைக்கலாம், அழகில் குறைந்த பெண்களைத் தரக்குறைவாக ‘நகைச்சுவை’ என்ற பெயரில் கிண்டல் செய்யலாம் என்பதான படங்களும் வரத்தான் செய்கின்றன. அவற்றின் வெற்றி என்பது அந்தக் காலத்தின் வெற்றியல்ல.

தொடக்க காலந்தொட்டே, இந்தித் திரைப்படங்கள் ஏற்படுத்துகிற பாதிப்பின் சலனங்கள் தமிழிலும் நிகழும். பாலிவுட்டில் காத்திரமான பெண் கதாபாத்திரப் படைப்புகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன, வெற்றியும் பெறுகின்றன என்பதுதான் முக்கியம். ‘36 வயதினிலே’ ‘அறம்’ ‘அருவி’, ‘மகளிர் மட்டும்’ எனத் தமிழ்த் திரையுலகமும் அதற்காகத் தயாராகிக்கொண்டே வருகிறது.

‘அந்தக்’ காலகட்டம் வரும் வரை நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் ஆறுதல்-  நாணிக்கோணி, குனிந்த தலை நிமிராத, அடக்கத்தை அணிகலனாகக் கொண்டிருக்கும் பெண் கதாபாத்திரப் படைப்புகள் இல்லாமல் போகும் என்பதுதான். இதில், சினிமா சமூகத்தைப் பிரதிபலிக்கிறதா, சமூகம் சினிமாவைப் பிரதிபலிக்கிறதா, என்கிற ஆய்வு கூர்மையாக பல்வேறு தரவுகளோடு செய்யப்பட வேண்டியது. அந்தந்தக் காலகட்ட சினிமாவைக்கொண்டு அன்றைய சமூகநிலையை மதிப்பிட முடியுமா? அதன்  சாதகபாதகங்கள் என்னென்ன என்பதைச் சேர்ந்து சிந்திப்போம்; விவாதிப்போம்!

‘பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ!’

அ.கா.பெருமாள்

எழுத்தாளர் ஜெயமோகன், பழைய திருவிதாங்கூரின் தலைநகரமான பத்மநாபபுரத்தில் தங்கியிருந்த சமயம். மாத இறுதி வெள்ளிக்கிழமை மாலையில் பத்மநாபபுரம் கோட்டைக்கு வெளியே மையக்கோட்டை வழி நடந்து போனோம்.  ஒரு காலத்தில் அரச குடும்பத்தின் அருகாமையாக இருந்த இடம் அது.  ஆளரவம் இல்லாத இடம்.

ஒரு புங்கமரத்தின் கீழே பெண் தெய்வத்துக்கு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. சாமி, பொங்கல் பானை, அடுப்பு எல்லாம் தற்காலிகம். சாவல் அறுத்த அடையாளம் தெரிந்தது. வயதான பெண் ஒருவர், பூசை முடித்துப் படைப்புச் சோறு சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றாள். நான் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். தமிழும் மலையாளமும் கலந்த மொழியில் மெதுவாகப் பேசினாள்.  அப்போது நடந்தது மாதிரியான சோகம் அவளது பேச்சில் வீசியது.

பழைய கதை, 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.  பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு பக்கத் தளபதியாகப் பாண்டிக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அந்தப் பெண்ணின் மேல் ஆசை. ஒருமுறை அவனிடம் மாட்டிக்கொண்ட அவள் பிணமாகக் கோட்டைக்கு வெளியே கிடந்தாள். வேணாட்டரசர்கள் நீதிமான்கள்தாம். ஆனால், அவனைக் குற்றம்சாட்ட ஆதாரங்கள் இல்லை.

அந்தக் கதையை விரிவாகச் சொல்லிக்கொண்டேபோனாள்.  இப்படியான கதைகளைத் தென்தமிழ்நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக நிறையவே கேட்டுவருகிறேன்.  தமிழ்நாட்டில் பரவலாக வழிபாடுபெறும் நாட்டார் தெய்வங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதில் சந்தேகமில்லை. நான் கன்னியாகுமரி மாவட்டத்துக் கிராமங்களில் நடத்திய கள ஆய்வில் 316-க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் பெயர்களைச் சேகரித்தேன்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இன்னும் அதிகம் கிடைக்கலாம். பாளையப்பட்டு குறுநில மன்னர்கள், ஜமீன்தாரர்கள் ஆண்ட பகுதிகளில் இன்னும் அதிகம் கிடைக்கலாம். பெண் தெய்வங்கள் உருவாகக் காரணமாயிருந்தவர்களில் இவர்களுக்கு அதிகம் பங்குண்டு. இப்படியாகக் கணக்கிட்டால், மொத்தத் தமிழகத்தில் பத்தாயிரத்துக்கு மேல் பெண் தெய்வங்கள் இருக்கலாம். ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உள்ள கன்னித் தெய்வங்களையும் சேர்த்தால், இன்னும் அதிகமாகலாம்.

20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில், சென்னை ஆர்ச் பிஷப்பாக இருந்த ஹென்றி ஒயிட் ஹெட் வெளியிட்ட (1921) ‘தென்னிந்திய நாட்டார் தெய்வங்கள்’ என்ற நூலிலிருந்து, காவ்யா சண்முகசுந்தரம் அண்மையில் வெளியிட்ட (2015) ‘நாட்டுப்புற தெய்வக் களஞ்சியம்’ என்னும் நூல் வரையிலும் உள்ள நூல்கள், மனிதவள மேம்பாட்டு நிறுவன அறிக்கைகள், ஆய்வேடுகள் எல்லாவற்றிலும் பெண் தெய்வங்களின் உருவாக்கத்துக்கு என்று பொதுவான சில காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை மேலோட்டமாகத் திருப்பினாலே தெரியும் அதன் வரலாற்றுப் பாதை.

நாட்டார் வழக்காற்று வகைமைகளில், பெண்களின் மீதான ஆணாதிக்கம் குறித்த செய்திகள், முழுமையாகச் சேகரிக்கப்படவில்லை. பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கலைகள், தெய்வங்கள்... என எல்லா வகைமைச் செய்திகளிலும் பெண்களின் நிலை, ஆண்களின் பார்வையில் உருவாக்கப்பட்ட தொன்மங்கள் பற்றிய செய்திகள் நிரம்பக் கிடைக்கின்றன.

நெறிப்படுத்தப்பட்ட செவ்வியல் மரபிலிருந்து நாட்டார் மரபின் எல்லா கூறுகளும் வேறுபட்டு நின்றாலும், பெண் குறித்த சிந்தனையில் பல இடங்களில் ஒருமைத் தன்மை இருப்பதை மறுக்க முடியாது. ஒற்றைப் பண்பாடுடைய நேர்கோட்டுச் செவ்வியல் சிந்தனை மரபுக்கு, பல்வகை வட்டாரப் பண்புடைய நாட்டார் மரபு, பெண் குறித்த பார்வையில் பெரிய அளவில் வேறுபடவில்லை.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்


‘ஒரு கொடம் தண்ணீர் ஊத்தி... ஒரு பூ பூத்துச்சாம்’ என்னும் சிறுமிகளின் விளையாட்டுப் பாடல், தென் மாவட்டங்களில் பரவலாக இன்றும் பாடப்படுகிறது. விளையாடிக்கொண்டே பாடப்படும் இந்தப் பாடலின் பத்தாவது வரி முடிந்ததும், தொடர்ந்து கேள்வி - பதில், உரையாடல் என நிகழும்.  இவை அன்றைய பாலியல் வன்கொடுமையைச் சுட்டுவன என்பதை 17, 18-ம் நூற்றாண்டு வரலாற்றுடன் இணைந்து பார்த்தால் புரியும். அன்று தமிழனுக்கு அந்நியமாக இருந்த எதிரிகள், கன்னிகளைக் கவர்ந்து செல்வது என்னும் நிகழ்வை இவை சுட்டுவன. இது போன்ற செய்திகளை வேறு வகைமைகளிலும் தேட முடியும்.

முந்தைய காலங்களில், நாட்டார் கலை நிகழ்வில் பெண்கள் பங்குகொள்வது என்னும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. கரகாட்டம் எனச் சிலவும், நாடோடிகளின் கலைகள் சிலவும் இதற்கு விதிவிலக்கு. இக்கலைகளை நிகழ்த்துபவர்களில் பெண் கலைஞர்கள் படும்பாடு இன்றும் தீரவில்லை. இக்கலைஞர்கள் தங்கள் பிரச்னைகளை உரையாடலாகவும் நிகழ்ச்சி வெளிப்பாடாகவும் நுட்பமாகக் காட்டுவது சாதாரணப் பார்வையாளனுக்குத் தெரியாது.

‘தோல்பாவைக்கூத்து’ என்னும் கலையின் இடைநிகழ்ச்சியில் காட்டப்படும் கரகாட்ட நிகழ்வு 20 நிமிடங்கள் நிகழும்.  இதில் கரகப் பெண்களை ஊர்த் தலைவர்கள், கணக்கர்கள், பார்வையாளர்கள் படுத்தும்பாடும் அவர்களின் வக்கிரமும் கிண்டலாக விமர்சிக்கப்படும்; நிகழ்த்தியும் காட்டப்படும். 70-களில் இது நிகழ்ந்தது.  கலைமாமணி பரமசிவ ராவ் இந்நிகழ்சியைக் கொஞ்சம் காட்டமாகவே நடத்தினார். பின்னர் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆண் பார்வையாளர்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததால் நிறுத்திக்கொண்டார்.  இப்போதும் கொஞ்சம் மாற்றங்களுடன் நடக்கிறது.

கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சிகளாகவும் தனிக்கலையாகவும் நிகழ்த்தப்பட்ட ‘கப்பல் பாட்டு’, ‘கல்யாண காமிக்’ எனச் சில கலைகளில், ஆண்களின் வக்கிரமும் பெரிய மனிதர் என்ற போர்வையில்  உறவில் உள்ள சிறுமிகளிடம் முறை தவறி நடப்பதுமான செயல்கள், உரையாடல்கள் சைகை வழி காட்டப்படும். இது சூசகமாக இருக்கும்.  அதேசமயம், கிண்டலாக மட்டுமே வெளிப்படும்.  இந்திய அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது, இவை போன்ற கலைகள் ஆபாசம் எனச் சொல்லித் தடை செய்யப்பட்டன.

நாட்டார் வழக்காற்று வகைமைகளில் நாட்டார் வழிபாடும் அடங்கும். இதன் முக்கியக்கூறான பெண் தெய்வம் பற்றிய செய்திகள் முழுதுமாகப் பதிவு செய்யப்படவில்லை, 17 முதல் 19-ம் நூற்றாண்டுப் பண்பாட்டு வரலாற்றுக்கு இவை பெரிதும் உதவும். தமிழகத்தின் அரசியல் பண்பாட்டு வரலாறு எழுத கல்வெட்டுகள்,  செப்பேடுகள், ஆவணங்கள், இலக்கியங்கள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.  பெண்ணியவாதிகள் இவற்றிலிருந்து தங்கள் கருத்தாக்கங்களுக்கு ஆதாரங்களைத் தேடிக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று வழிபாடுபெறும் நாட்டார் தெய்வங்கள் எல்லாமே, வட்டார ரீதியாக அமைந்தவை. இவற்றின் வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும்கூட அப்படித்தான்.  வட தமிழ் மாவட்டங்களில் பரவலாக அறியப்பட்ட ரேணுகா தேவி, துரௌபதை அம்மன், அங்காளம்மன் போன்றவற்றைத் தென் தமிழ்க் கிராமத்து மக்கள் அறியமாட்டார்கள்.  தென்மாவட்டத்தில் வழிபாடுபெறும் முத்தாரம்மன், இசக்கியம்மன் பொன்னிறத்தாளம்மன் போன்றவற்றைக் கிழக்கு, மேற்குப் பகுதி கிராமத்தார்கள் அறியமாட்டார்கள்.

தமிழக நாட்டார் வழிபாட்டுச் செய்திகளில் பிரபந்தம், பிரம்மம், உயிர், மாயாவாதம் போன்றவை குறித்த விளக்கம் கிடைக்காது. ஆனால், இந்தப் பூமியின் பண்பாடு குறித்த சிக்கல்கள், இன்னும் தொடர்வதற்குரிய முடிச்சுகளைத்தேட முடியும்.

தமிழக நாட்டார் பெண் தெய்வங்களின் வைதீக மரபின் செல்வாக்கு, மிக அண்மையில் உருவானது. முக்கியமாகப் பெண்களின் தற்கொலை, பிறரால் செய்யப்படும் கொலை என்னும் காரணங்களே இத்தெய்வத் தோற்றத்தின் முக்கியக் காரணிகளாகக் கதைப்பாடல்களும் வாய்மொழிச் செய்திகளும் சடங்குசார் நிகழ்ச்சிகளும் காட்டுகின்றன. பெண் தெய்வங்களின் உருவாக்கத்துகுக் காரணமான கொலை, தற்கொலைச் செய்திகளை இன்னும் விரிவாக இப்படிக் கூறலாம்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

1. சாதி, இனம், அந்தஸ்து காரணங்களால் திருமணத் தடை; இதன் காரணமாகக் கொலை அல்லது தற்கொலை.

2. கணவனோ, விரும்பிய ஆடவனோ மரணம் அடையும்போது தானாகவோ, பிறர் தூண்டுதலுக்காகவோ உயிரை மாய்ப்பது.

3. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலைப்படுதல்.

4.புதையல் எடுப்பதற்கோ, புதிய கட்டுமானம் ஆரம்பிப்பதற்கோ, கன்னிகளையோ, கர்ப்பிணிகளையோ பலி கொடுத்தல்.

5. குறிப்பிட்ட வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட கன்னிகள், மன  உளைச்சலால் செய்துகொண்ட தற்கொலை.

இன்று ஊடகங்களால் ஆணவக்கொலை, கௌரவக்கொலை என்று கூறப்படும் சாதிய மணமறுப்பால் ஏற்பட்ட கொலையில் உதித்த பெண் தெய்வங்கள் பற்றிய செய்திகளும் கதைப்பாடல்களில் உள்ளன.

வேணாட்டு அரசன் ஒருவன், வலங்கை சாதிப் பிரிவு வெங்கலராசனின் மகளை விரும்பி, பெண் கேட்டபோது வெங்கலராசன் மறுத்தான். அதனால், போர் வந்தது.  வெங்கலராசன் தன் கோட்டையைப் பாதுகாக்க நினைத்து, மகளின் தலையை வெட்டி அரசன் முன் எறிந்தான். 

பூலங்கொண்டாளின் தந்தை, தன் சாதி உட்பிரிவைச் சார்ந்த ஒருவன் பெண்கேட்டு வந்தபோது மறுத்தான்.  அதனால் ஏற்பட்ட பூசலால், பூலங்கொண்டாள் கிணற்றில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்.

தென்மாவட்டங்களில், குறிப்பாகத் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழ்கின்ற ‘செட்டு’ சமூகத்தினர் பூம்புகாரிலிருந்து தாங்கள் குடி பெயர்ந்ததற்குக் காரணமாக, சோழன் தங்களிடம் பெண்கேட்டு மறுத்த காரணத்தைக் கூறுகின்றனர். மணமறுப்பால் கொல்லப்பட்ட இந்தப் பெண் இப்போது வழிபாடுபெறுகிறாள். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலின் மையமே இதுதான்.

குறுநில மன்னர்கள் மட்டுமல்ல, போர்த்துக்கீசிய படைத் தலைவர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட இதில் விதிவிலக்கில்லை. தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சாதியினரிடம் வழிபாடுபெறும் பாலாம்பாள் என்ற தெய்வம் ஒரு சான்று. இவள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவள். வரி வசூலிக்கும் பொறுப்பிலிருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி, குதிரையில் வந்து பாலாம்பாளின் ஏழு அண்ணன்மார்களிடம் பெண் கேட்டான். அவர்களுக்கு விருப்பமில்லை. அதிகாரியிடம் சொல்ல பயம். அதனால், பாலாம்பாளை ஆழக் குழியில் தள்ளி, மூடிக் கொன்றுவிட்டார்கள். இப்போது அவள் தெய்வம். சிலர் பெண் கேட்டவனை அவமானப்படுத்த, பெட்டை நாயை அவனிடம் அனுப்பிவிட்டு, மகளைக் கொன்றனர். இப்படியாக நடந்த கொலைகளைத் தனிப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டும் செய்யவில்லை, அந்தச் சாதியினரின் ஒத்துழைப்புடனேயே அவை நடந்தன.

நாயக்க அரசு தமிழகத்தில் ஆட்சி செய்தபோது, நிர்வாக வசதிக்காகப் பாளையப்பட்டு முறை உருவானது. இதன் தலைவர்களான ஜமீன்தார்கள், இவர்களின் அதிகாரிகள் சிலரின் வக்கிரத்தாலும் பெண் தெய்வங்கள் உருவாகியிருக்கின்றன.

கிராமத்தின் அழகான சிறுமிகள் பருவமடைந்த செய்தி, அப்பகுதி ஜமீன்தார், தலைவனுக்குப் போய்விடும். இந்தச் செய்திகளைச் சொல்வதற்கு என்று வயதான பெண்கள் இருந்தார்கள். இவர்கள் அந்தச் சிறுமி வெட்டவெளிக் கழிப்பிடத்தில் இருக்கும்போது நோட்டமிடுவார்கள். அவள் உடல்வாகு வக்கிரத்தைத் தாங்கும் என்பதையும் அறிந்துகொள்வார்கள். இதன் பிறகு, எதாவது ஒருநாள் அதிகாரப் பூர்வமாகவோ, சூழ்ச்சியாகவோ அவள் கடத்தப்படுவாள். குறிப்பிட்ட ஓர் ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், ஊர்த் தலைவனுக்கு முதலில் விருந்தாக வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. இதற்கெல்லாம் மறுத்த சிறுமிகள் கொலை செய்யப்பட்டனர்; பலாத்காரத்தாலும் இறந்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் தாலுகாவின் ஒரு குக்கிராமத்தில், பஞ்ச கன்னியர் அம்மன்களின் வழிபாட்டுக்கான ஒரு கதையைக் கேட்டேன். பாளையப்பட்டு தலைவன் ஒருவனின் வக்கிரத்துக்கு ஐந்து பேரும் ஒரே சமயத்தில் பலியானார்களாம். அவர்கள் வேறு வேறு சாதியினரும்கூட.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இப்படியாகக் கொல்லப்பட்டவர்கள், கொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதையும், கொலை செய்தவர்கள், கொல்லப் பட்டவர்களை வழிபடுவதையும், பாதிக்கப்பட்ட குடும்பம் பாதிப்புக்கு உள்ளானவர்களை வணங்குவதையும் கதைப்பாடல்கள் கூறுகின்றன.

இப்படி வழிபாடு பெற்றவர், ஆரம்பத்தில் குறிப்பிட்ட குடும்பத்துக்கோ சாதிக்கோ மட்டுமே உரியவராக இருந்து, நம்பிக்கை காரணமாக எல்லோரும் வழிபடும் நிலைக்கு வந்துவிடுவர். அப்போது அவர், பழைய பெயரில் அழைக்கப்படுவதில்லை. அவர் வழிபடப்படும் இடத்திலுள்ள மிகப் பிரபலமான நாட்டார் தெய்வத்துடனோ, வைதீகச் சார்புள்ள தெய்வத்துடனோ இணைந்துவிடுவர். நாளாக நாளாக இத்தெய்வத்தின் வடிவம், சடங்கு, வழிபாடு எல்லாம் மாறிவிடும். இதை ஒரு கோட்பாடாகவும் கொள்ளலாம்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

காதலனால் கொல்லப்பட்டு, நீலிப்பேயாக மாறி, அவனைக் கொன்ற பின் வழிபாடு பெற்ற இசக்கியம்மன் தென்மாவட்டங்களில் பிரசித்தமானவள். இவளுடன் கொலையில் உதித்த தெய்வங்கள் பல இணைந்துள்ளன. வட தமிழ்ப் பகுதிகளில் இதுபோன்று இணைக்கப்பட்ட தெய்வங்கள் துரௌபதை அம்மன், அங்காள பரமேஸ்வரி, ரேணுகா தேவி, காளி போன்றவை.

தீயில் தள்ளப்பட்டோ, தானாகச் சாடியோ உயிர்விட்டு தெய்வமாகித் தனிப் பெயரில் வழிபடப்பட்ட பல தெய்வங்கள், ‘தீப்பாய்ந்த அம்மன்’ என்னும் பெயரில் வழிபாடு பெறுகின்றன. வட தமிழ் மாவட்டங்களில் இது பரவலாக உள்ளது.  கணவன் இறந்ததும் அவனது சிதையில் சாடி உயிர்விட்ட பெண்ணின் சேலை முந்தானையும் தலையில் அணிந்த பூவும் நெருப்பில் கருகாது என்பது நம்பிக்கை. சிதையிலிருந்து இந்தப் பொருள்களைச் சேகரித்து, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பது நம்பிக்கை.

இயல்பாக இறக்கும் சுமங்கலிப் பெண்ணின் சிதையில் இப்படியான மங்கலப் பொருள்கள் எரியாமல் கிடைத்தால், அவளும் தெய்வமாகும் தகுதியைப் பெற்றுவிடுவாள். இப்படியான அம்மன்களுக்குத் தீமிதிப்பவர்கள் மங்கலப் பொருள்களை மடியில் எடுத்துக்கொண்டு நடப்பது இன்றும் நிகழ்கிறது. தீப்பாய்ந்த அம்மன்களில் சில, ராமாயண சீதையுடனும் பாரத துரௌபதையுடனும் இணைந்துவிட்டன. இவர்களில் ஒருத்தி தீயில் பிரவேசம் செய்தவள்; ஒருத்தி தீயில் தோன்றியவள்.

மிகப் பிரமாண்டமான புதிய கட்டுமானங்களின் அஸ்திவாரக் குழியில் கன்னி அல்லது கர்ப்பிணியைப் பலி கொடுப்பது என்ற வழக்கம் நாயக்கர் காலத்தில் இருந்தது. இதற்காகப் பெண்களை ரகசியமாக தானம் செய்பவரின் குடும்பத்துக்கு நிலம், வீடு தோட்டங்கள் கொடுக்கப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், மங்கலம் கண்மாயில் பெரும் உடைப்பு ஏற்பட்டபோது, நிறைமாத கர்ப்பிணியைப் பலி கொடுத்தனர்.  இந்தப் பெண் பின்னர், ‘பொன் மருது காளி’ எனப்பட்டாள் என்ற கதை உண்டு. இது பிற்காலச் சோழர்கால நிகழ்வு.

திருமலை நாயக்கர் காலத்தில் புதிய கட்டுமானம் நடந்தபோது, தங்கள் சாதியினரைப் பலிகொடுக்கப் போகிறார்கள் என்னும் செய்தியைக் கேட்டு, ஒரு சாதியினர் திருவிதாங்கூருக்குக் குடிபெயர்ந்தனர் என்ற கதை 70-களில்கூட வழங்கியது. நல்ல உடல்வாகுடைய இளம் கன்னிப் பெண்களைத் தாந்த்ரீகச் சடங்கில் நிர்வாணமாக அமர்த்தி வழிபடுவதற்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தேர்வு செய்தார்களாம். இதற்கு அஞ்சி திருவிதாங்கூரில் இவர்கள் குடிபெயர்ந்தனர். என்றாலும், இவர்களில் சில பெண்கள் இப்படி வழிபடப்பட்டு மன உளைச்சலால் தீப்பாய்ந்தனர். இது தொடர்பான ஒரு பழமொழியை இச்சாதியினரிடம் நான் கேட்டிருக்கிறேன். தாந்த்ரீகச் சடங்கால் தற்கொலை செய்துகொண்ட பெண், தெய்வமாகி வழிபாடு பெறுகிறாள். இது நாயக்கர் ஆட்சிகால நிகழ்வு.

வட தமிழகத்தில் துரௌபதை வழிபடு தெய்வமாக உள்ளாள். பாலியல் துன்பத்தால் தன்னை மாய்த்துக்கொண்ட ஒரு பெண் துரௌபதை வழிபாட்டுடன் இணைந்த செய்தியைக் கடலூர் பகுதியில் கேட்டேன். நாட்டார் வழக்கில் துரௌபதை முந்தைய ஜென்மத்தில் சீதையாக, நளாயினியாகப் பேசப்படுகிறாள்.

நாட்டார் பாடகன் துரௌபதையைக் கௌரவர் துகிலுரிந்ததைப் பாலியல் துன்புறுத்தலாகவே கருதுகிறான். இதனால்தான் பாலியல் துன்புறுத்தல் வழி இறந்து தெய்வமானவர் துரௌபதையுடன் இணைந்தனர். ஒரு கும்மிப்பாடல்  ‘பெண்ணின் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ’ என்கிறது.

பின்னே, அழியாதோ!?

காலந்தோறும் பெண்கள்

சுகுணா திவாகர்

ஜனநாயகம், சுதந்திரம், விடுதலை அரசியல், குடியரசு, போராட்டம், மக்கள்திரள் போன்ற நவீனக் கருத்தாக்கங்களின் அடிப்படையிலேயே நவீன அரசியல் காலம் உருவானது. இந்த நவீன அரசியல் காலமே, வரையறுக்கப்பட்ட குறுகிய வெளி என்றாலும் பெண்களுக்கான பொதுவெளியை உருவாக்கித் தந்தது. அதற்குமுன்பு அறியப்பட்ட வரலாற்றில் பெண்களுக்கான இடம் மிகமிகக் குறைவு. இந்த நவீன அரசியல் யுகத்தில் இந்தியாவில் தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம், பார்ப்பனரல்லாதார் இயக்கம், தலித் இயக்கங்கள் எனப் பல்வேறு அரசியல் இயக்கங்கள் தோன்றிப் பல்வேறு அரசியல் கருத்துநிலைகளை முன்வைத்து இயங்கின. இவற்றினூடாகப் பெண்கள் அரசியலில் பங்குபெறுவது என்ற நிலையும் உருவாகிவந்தது.

குறிப்பாக பெரியாரின் சுயமரியாதை இயக்கம், பெண்ணியம் என்பதைத் தன் அடிப்படைக் கருத்தியல் தளங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது என்பதால், பெண்களின் நிலைமை குறித்தும் பெண்விடுதலை குறித்தும் விரிவான உரையாடல்கள் சாத்தியப்பட்டன.

1928-லிருந்து 1935 வரை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிய பெண் ஆளுமைகள் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெண்ணியச் செயல்பாடுகள் குறித்த சில அம்சங்களைப் பார்ப்போம்.

பெரியாரின் முதன்மைத் தளபதியாக விளங்கிய குத்தூசி குருசாமியின் மனைவியான குஞ்சிதம் குருசாமி, வரலாற்றில் தனித்துப் பார்க்கத்தக்க ஆளுமை. இசைவேளாளர் சாதியில் பிறந்த குஞ்சிதம் அம்மையார்,

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

இந்தியாவின் முதல் பெண் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். முதல் பார்ப்பனரல்லாத இளைஞர் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசியவர். “கோயில்களை மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும்” என்றும் “கோயில் வருமானத்தைக்கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு முழுமையான இலவசக் கல்வி அளிக்க வேண்டும்” என்றும் 30-களில் பேசினார். பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் குருசாமி - குஞ்சிதம் அம்மையாருடைய திருமணம். குருசாமி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை. திருமண நாள் அன்று குருசாமியின் தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று தந்தி வந்தது. பெரியாரும் மற்றவர்களும் பதறிப் போனார்கள். “எங்கள் குடும்பத்திலேயே துணிச்சலான பெண் அவள்தான். இது திருமணத்தை நிறுத்துவதற்கான சதி” என்றார் குருசாமி. திருமணம் முடிந்த பிறகு அவரது அனுமானம் உண்மைதான் என்று தெரியவந்தது. இருவரின் திருமணத்தின் போது குஞ்சிதம், ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதை மொழிபெயர்த்தவர், “இதுவரை யார் யார் உரைகளையோ மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு பெண் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்ப்பது பெருமையாக இருக்கிறது” என்றார். திருமணத்துக்குப் பிறகு, தாலி அணியாமலும் பொட்டுவைக்காமலும் இருந்ததால் குஞ்சிதம் அம்மையாருக்குக் கல்வித்துறையில் பணிபுரியும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. பாரதிதாசன் கவிதைகளை முதன்முதலில் பதிப்பித்த பதிப்பாசிரியர் குஞ்சிதம் அம்மையார்தான்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள், சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தை மண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தை ஒட்டி சமீபகாலமாகத்தான் பேச்சு உருவாகியிருக்கிறது. ஆனால், 1928 செங்கல்பட்டு ‘முதல் சுயமரியாதை மாகாண’ அழைப்பிலேயே, ‘தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்’ என்று பெரியார் எழுதினார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கும் வசதிசெய்து தந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.

மூன்றாவது தஞ்சை மாவட்ட  சுயமரியாதை மாநாட்டில், 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை முன்வைக்கப் பட்டது.  விடுதியில் இடம் கேட்டு வைக்கப்பட்ட கோரிக்கை அது. 50 வயதான ஓர் ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரது கணவர் கட்டாய உறவுகொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி, பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.

சுயமரியாதை இயக்க ஆதரவாளரான டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியை ஆதரித்து தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்குத் துணை நின்ற சுயமரியாதை இயக்கம்தான், “பெண்களுக்குச் சமயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் பேசியபோது எதிர்க்கவும் செய்தது. இதை எதிர்த்துக் குடியரசுவில் எழுதியவர் தி.சு.மாசிலாமணி என்ற பெண்தான்.

“ ‘பல மனைவிகளுடைய கடவுள்’களை விமர்சிக்கும் சுயமரியாதை இயக்கம், ‘ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது, இன்னொரு பெண்ணையும் மணந்து கொள்வதை ஏற்றுக்கொள்கிறதா?” என்ற கேள்வி, ஒரு கூட்டத்தில் பெரியாரிடம் கேட்கப்பட்டது. “கடவுள்களை விமர்சிப்பதாலேயே அவர்களின் எல்லா செயல்களையும் கண்டிப்பதாக ஆகாது. கடவுள் மூச்சுவிடுவதாகப் புராணத்தில் இருப்பதால், நாம் மூச்சுவிடுவதை எதிர்க்கிறோமா என்ன? அதனால், பல தார மணத்தை நாங்கள் ஏற்கிறோம். இதே உரிமை பெண்களுக்கும் இருக்க வேண்டும்” என்று பெரியார் பதில் அளித்தார். ‘திருமணமான பெண் இன்னொரு ஆணை விரும்புவதைக் குற்றமாகக் கொள்ளக் கூடாது’ என்று மக்கள்திரள் கூடிய மாநாட்டிலேயே தீர்மானமும் போட்டார் பெரியார்.

சுயமரியாதை இயக்க முன்னணி வீரர் அ.பொன்னம்பலத்தாரின் மனைவி சுலோசனா, ஏற்கெனவே திருமணமானவர். முன்னவரோடு வாழ விருப்பமில்லாததால் கணவரின் சம்மதத்துடன் பொன்னம்பலத்தாரைத் திருமணம் செய்துகொண்டார்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனார், சிவகாமி என்ற விதவையைத் திருமணம் செய்துகொண்டார். ‘தமிழன்’ இதழை நடத்திய தங்கவயல் அப்பாதுரையார் ஒரு தலித். அவரது மகள் அன்னபூரணி அம்மையார் சுயமரியாதை இயக்க வீராங்கனை. அவர் சைவ வேளாளரான அ.ரத்தினசபாபதியைத் திருமணம் செய்தார். 1935-ல் மாநில சுயமரியாதைச் சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார். இப்படிச் சுயமரியாதை இயக்கம் தொடர்ச்சியாக நடத்திய பண்பாட்டு நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு முக்கியமாக இருந்தது.

1930-களில் கருத்தடை பற்றிய கட்டுரைகளைக் ‘குடியரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. அதை வெறுமனே மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற கண்ணோட்டத்தில் அல்லாது, குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் தனிப்பட்ட உரிமை என்ற கண்ணோட்டத்தில் சுயமரியாதை இயக்கம் அணுகியது.

காத்ரின் மேயோ எழுதிய ‘பாரத மாதா’ என்ற புத்தகம் இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து அம்பலப்படுத்தியதால், அது இந்தியர்களை இழிவுபடுத்துவதாகத் தேசியவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அதை மொழிபெயர்த்து ‘குடியரசு’ தொடராக வெளியிட்டது.

சோவியத் ரஷ்யாவில் பெண்களின் நிலை குறித்த கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. ‘துருக்கிப் பெண்கள்’ விடுதலை குறித்து ஹாவிட் ஹானும் என்பவர் ஆற்றிய உரை வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக நவீனச் சிந்தனைகளும் பெண்ணியச் சிந்தனைகளும் அயல்நாடுகளில் பேசப்படும்போது, சாத்தியப்பட்டவரை அதை மொழிபெயர்த்து, ‘குடியரசு’ இதழ் வெளியிட்டு விவாதித்தது. ‘ஆண் - பெண் வித்தியாசம்’ குறித்து 1935-ல் நாகை முருகேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஏங்கெல்ஸ் தொடங்கி பாகோபென், ஹூம்போல்ட் ஆகிய மானுடவியலாளர்களின் ஆய்வுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

 சுயமரியாதை இயக்கத்துக்காரர்களால் பல பத்திரிகைகள் நடத்தப்பட்டன. அதில் ’அறிவுக்கொடி’ என்ற இதழை நடத்தியவர் எஸ்.சி.சிவகாமி அம்மாள் என்ற பெண்.

பெண்ணுரிமை தொடர்பாக ‘குடியரசு’ இதழில் வெளியான சில கட்டுரைகள்:  ‘தேவதாசிகளுக்கு ஒரு வேண்டுகோள்’,  ‘ரஷ்யாவில் ஆண்-பெண் ஒழுக்கம்’, ‘ஆண்மை அழியவேண்டும்’, ‘சமதர்மத்துக்குப் பெண்கள் விடுதலை அவசியம்’, ‘முஸ்லீம் பெண்களும் அடிமைகளேதான்’, ‘பர்தாவின் கொடுமை’, ‘கத்தோலிக்க மதமும் பெண்களும்’, ‘பெண்கள் நாடு - ஆண்களுக்கு வேலையில்லை’, ‘சோசலிசமும் பெண்களும்’,  ‘சோசலிச உலகில் பெண்கள்’, ‘பெண்களும் தொழிலாளிகளே’, ‘பெண்களும் சங்கமும்’.

சுயமரியாதை இயக்க மாநாடுகளோடு தனியாகப் பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டன. ஆனாலும், பெண்களுக்கு என்று தனித்துவமான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதத்தை நீலாவதி அம்மையாரும் ராகவனும் தொடங்கிவைத்தார்கள். அதேபோல், பெண்கள் நிலையம் ஒன்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிவந்த, தொடர்ச்சியாக ‘குடியரசு’ இதழில் எழுதிவந்த பெண்களில் குறிப்பிடத் தக்கவர்கள்: தி.சு.மாசிலாமணி, பினாங்கு ஜானகி, நீலாவதி அம்மையார், ஜெயசேகரி, லட்சுமி, கிரிஜாதேவி, அன்னபூரணி, சுப.விசாலாட்சி, சிதம்பரம் அம்மாள், பண்டிதை ரங்கநாயகி, வள்ளியம்மாள், குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ், தருமு அம்மாள், நீலாம்பிகை, கே.ஏ.ஜானகி அம்மாள்.

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்

இந்த சிறிய அளவிலான குறிப்புகளை வாசித்தாலே கருத்தியல் ரீதியாக சுயமரியாதை இயக்கம் எத்தகைய செயல்பாடுகளைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். மேலும், ஒருபுறம் சனாதனம் உச்சத்திலும் இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு உச்சத்திலும் இருந்த காலத்தில் இத்தனை பெண்கள் கற்பு, குடும்பம், குழந்தைப்பேறு ஆகியவை குறித்துச் சுதந்திரமாகவும் சுய சிந்தனையோடும் விவாதித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமானது. இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு புதிதாக உருவான ‘இந்திய தேசம்’ என்னும் கட்டமைப்பு, மத்திய அரசு - மாநில அரசு என்னும் அதிகாரப் பிரிவுகள், இந்தியத் தேசிய அரசியல், திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறித் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் செல்வாக்குப் பெற்ற வெகுமக்கள் இயக்கம் உருவானது ஆகியவை, பெரியாரின் இயக்கச் செயல்பாடுகளில் பாரியத் தாக்கத்தை ஏற்படுத்தின. 30-களில் சுயமரியாதை இயக்கத்தில் கருத்தியல் ரீதியலாகப் பெண்கள் பங்குபெற்ற அளவுக்குப் பிற்காலத்தில் இல்லை என்பதை உணரலாம். என்றபோதும், பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகத்துக்குத் தலைமை தாங்கிய மணியம்மைதான், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் தலைமை எனலாம். ராவணலீலா, மிசா எதிர்ப்பு போன்ற முக்கியமான அரசியல் செயற்பாடுகளையும் மணியம்மை மேற்கொண்டார்.

சுயமரியாதை இயக்கம், பின்னாளில் திராவிடர் கழகம் செயற்பட்ட காலத்திலேயே தேசிய இயக்கமான காங்கிரஸிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்கள் தொடங்கிப் பல்வேறு பிரிவுகளிலும் பெண்கள் இருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி நிலப்பிரபுகளுக்கு எதிராக நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றது முக்கியமானது. ஆனால், தேசிய இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெண்கள் பங்குபெற்றபோதிலும் சுயமரியாதை இயக்கம் அளவுக்குக் கருத்தியல் உருவாக்கத்தில் பங்குபெறவில்லை.

உலகளவில் தனித்துவமான பெண்ணியச் சிந்தனைகள் கொண்டவராகப் பெரியார் இருந்தபோதிலும், அவரிடமிருந்து உருவான திராவிடக் கட்சிகள் பெண்ணியச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ளவில்லை. அவை ஆண் மையக் கட்சிகளாகவே இன்னமும் தொடர்கின்றன. தி.மு.க-வில் சத்தியவாணிமுத்து போன்ற பல பெண் தலைவர்கள் இருந்தபோதும் பெரும்பாலும் இன்றளவிலும் முன்னணித் தலைவர்களாக ஆண்களே இருக்கின்றனர்.

அ.தி.மு.க-வில் வலுவான பெண் தலைமையாக ஜெயலலிதா உருவாகி வாழ்ந்தார். அவரது அடாவடி அரசியல் நடவடிக்கைகளும் ஆண்களைக் காலில் விழவைத்ததும் பெண்ணியச் சாதனைகளாகச் சிலாகிக்கப்பட்டன. ஆனால், அடிப்படையில் அவை முதிர்ச்சியற்ற தன்னகங்கார (ஆண் மனோபாவச்) செயல்பாடுகளே. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் சிதம்பரம் பத்மினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது முதல் விழுப்புரத்தில் காவல்துறையினரால் இருளர் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதுவரை தொடர்ந்தன. இன்னொரு புறத்தில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் பெண்கள் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகின்றனர். தலைவர்களின் குடும்பங்களிலிருந்து வரும் பெண்களும் அல்லது அவர்களுக்கு நெருக்கமான பெண்களுமே கட்சிகளில் முக்கிய இடம் வகிக்கின்றனர். அரசியலில் ஈடுபடும் பெண்களை அவதூறாகப் பேசுவதற்கென்றே எல்லாக் கட்சிகளிலும் நாலாந்தரப் பேச்சாளர்கள் இருக்கின்றனர். பல முன்னணித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கட்சி சார்பாக எழுதுபவர்களுக்கும் கூட இப்படிப்பட்ட கண்ணோட்டம்தான் இருக்கிறது.

இன்னமும் பெண் தலைமைக்கான பிரதிநிதித்துவம் எல்லாக் கட்சிகளிலும் உருவாகவில்லை. அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவது முக்கியம் என்றால், அதைவிட முக்கியம் பெண்ணரசியல் தொடர்பான கருத்தியல் மாற்றத்தை உருவாக்குவது!

பெண் காலங்களும் களங்களும் - வெய்யில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism