Published:Updated:

"நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்கா... எடப்பாடி பழனிசாமிக்கா?" - எ.வ.வேலு

``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்காக இல்ல எடப்பாடி பழனிசாமிக்கானு தெரியல?’’ என்று அ.தி.மு.க-வை விளாசித் தள்ளியுள்ளார் எ.வ.வேலு.

"நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்கா... எடப்பாடி பழனிசாமிக்கா?" -  எ.வ.வேலு
"நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்கா... எடப்பாடி பழனிசாமிக்கா?" - எ.வ.வேலு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர தி.மு.க சார்பில், அ.தி.மு.க அரசின் ஊழலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 4-ம் தேதி நடந்தது. இதில், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு, முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு, ``14,470 கோடி ரூபாய் அளவில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது. இந்தத் துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. அப்படியென்றால் தமிழக அரசு ஊழலில் ஊறித் திளைத்து வருகிறது என அர்த்தம்.

சட்ட ஒழுங்குக்கு ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று இரவு பகலாகக் கண்விழித்துப் பார்ப்பது முதலமைச்சரின் பணி. எந்த ஒரு முதல்வரும் நெடுஞ்சாலைத் துறையையும் பொதுப்பணித்துறையையும் வாங்கிக்கொண்டதில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையை வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஏன் இன்னும் அவர் அந்தப் பதவியை வைத்திருக்கிறார் என்றால் 'நல்ல பசையுள்ள' பதவி, விட்டுக்கொடுக்க எடப்பாடிக்கு மனம் வலிக்கிறது. ஓமந்தூர் ராமசாமி முதல் ஜெயலலிதா வரை தமிழகத்தின் எந்த முதல்வரும் இந்தத் துறைகளை வைத்திருந்தது இல்லை. வைத்திருக்கவும் மாட்டார்கள். கமிஷனுக்காக, கரப்ஷனுக்காக மட்டுமே இந்தத் துறைகளைத் தன்னுடன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 4,70,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி, செப்டம்பர் மாதம் 'உலக முதலீட்டாளர் மாநாடு' 100 கோடி ரூபாய் செலவழித்து நடத்தினார். அப்போது ஸ்டாலின் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கிறார், '100 கோடி செலவழித்து 3 நாள்கள் உலக முதலீட்டாளர் மாநாடு என்னும் பெயரில் மக்களின் வரிப் பணத்தை வீணடித்திருக்கிறீர்களே?' என்று, அதற்கு ஜெயலலிதா, `தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்குதான் 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை கையெழுத்தாகி உள்ளன. இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடி பணம் வரப்போகிறது' எனப் பதிலளித்தார். ஆனால், இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திடீர் என 75 கோடியில் வெளிநாட்டு முதலீட்டாளர் மாநாடு நடத்தப்போகிறோம் என்கிறார். இதை எதிர்த்து ஸ்டாலின் கேட்கும்போது, அதற்கு முதல்வர் சொன்ன பதில் என்ன தெரியுமா?' அது அம்மாவோட போச்சு, இப்போ நாங்க புதுசா போடுறோம்' எனச் சொல்கிறார்.

`அமைச்சர் பெருமக்கள் சரியாக வேலை செய்கிறார்களா?' எனக் கண்காணிப்பது முதலமைச்சரின் வேலை. அதுதான் சரியாக நடக்கிறதா என்றால் இல்லை. இதைவிட பெரிய கூத்து, ஜெயலலிதா இறந்தவுடன் நடந்த மானிய சபைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, `எங்கம்மாவின் மறைவால் விலாசத்தைத் தொலைத்துவிட்ட எங்களுக்கு, விலாசமாக வந்தவரே, விசுவாசத்தின் அடையாளமே, நமக்கு விட்டுச் சென்ற அருட்கொடை, எங்கம்மாவுக்கு வரமாகக் கிடைத்தவரே, வலது கரமாக இருந்தவரே, செவிலித் தாயே, எங்க அம்மாவை காத்த கற்பக விருட்சமே, அம்மா சின்னம்மாவின் காலைத் தொட்டு வணங்கி என்னுடைய உரையை ஆரம்பிக்கின்றேன்' என்றார் பவ்யமாக.

சமீபத்தில் பேசிய அவர், `எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சியால், அவர்களின் ஆற்றலால் நம் மதுரைக்கு 'எய்ட்ஸ்' மருத்துவமனை வரப்போகிறது' எனச் சொல்கிறார். 'எய்ம்ஸ்' என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. இவர் மட்டுமல்ல, நிறைய அமைச்சர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்.ஈ.டி லைட், நிலக்கரி, போக்குவரத்து, நெடுஞ்சாலை... என்று அவர்களின் ஊழல் மிகப்பெரிய அளவில் சென்றுகொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்காக நடந்ததா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா என்று தெரியவில்லை, அத்தனை பெரிய பேனரில் ஸ்டாம்ப் சைஸில் எம்.ஜி.ஆர் போட்டோ, எடப்பாடி பழனிசாமியின் போஸ்தான் பெரியதாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் மற்ற அமைச்சர்கள் வரை நாட்டைப் பற்றியோ, தொகுதியைப் பற்றியோ சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. நாட்டை எப்படிக் கொள்ளை அடிக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.

உனக்கு 15%, எனக்கு 17% என கமிஷன், கரப்ஷன் என்று தமிழ்நாட்டை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என எல்லோரும் கமிஷன் அடிப்படையில்தான் வேலை செய்து வருகிறார்கள்" என்று முடித்தார்.