Published:Updated:

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை
பிரீமியம் ஸ்டோரி
News
சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை

படங்கள் : வீ.சக்தி அருணகிரி

துவரை அம்மாவின் நினைவையும் அவள் தந்துபோயிருக்கும் ருசியையும் சேர்த்து எழுத்தில் மீட்டெடுக்காமல், உணவைப் பற்றி என்னால் ஒரு வரியையும் எழுதிவிட முடியாது. நேரம் தவறாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, இரண்டு வேளை காபி, டீ, என்ற வரையறைகள் நல் உணவிற்கு எதிரானவை. எப்போது ஒரு ருசியான உணவின்மீது ஆர்வம் மேலிடுகிறதோ, அதன் தேவை வேண்டி நாக்கு நம்மிடம் யாசிக்கத் தொடங்கும்முன், அவை நம் உணவுத் தட்டிலிருக்க வேண்டும்.

எப்போதும் அப்படித்தான் எங்கள்முன் ருசியான உணவை வைத்தாள் என் அம்மா. பலகாலம் ருசியால் எங்களை அடைகாத்து வைத்திருந்தவள் அவள். அந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஒரு துளியை மட்டும் இப்போது நான் வெளியே எடுக்கிறேன். அது குறைந்துவிடாமல், இன்னும் பல ஆண்டுகளுக்கு என் சொந்தச் சேமிப்புக் கிடங்கிலிருக்க மனம் விரும்புகிறது.

நிலப்பரப்பின் பொருட்டு உணவை வகைப்படுத்தலாம். அந்த நிலப்பரப்பில் எதன் விளைச்சல் அதிகமோ, அதுவே அந்தப் பிரதேச உணவையும் தீர்மானிக்கிறது. எங்கள் பூமியில் ‘மல்லாட்டை’, (வேர்க்கடலை அல்லது நிலக்கடலை) துவையலில் தொடங்கி முருங்கைக்கீரை, கருவாட்டுக் குழம்பு வரை அதன் இருப்பின்றி ஒரு சாப்பாட்டையும் நாங்கள் ருசித்ததில்லை. இரவுச் சாப்பாடு பெரும்பாலும் மண் தரையில் பாய்போட்டு, தெருப் பசங்களோடு சேர்ந்துதான். சுடுசாதம் வடித்த பாத்திரத்தை அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி வந்து வைக்கோலால் ஆன பிரமனையின்மீது கிடத்துவாள் அம்மா.

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை

ஒரு பெரும் தாம்பாளத் தட்டில் அம்மியில் அரைத்து உருட்டப்பட்ட மல்லாட்டைத் துவையல் உருண்டை இருக்கும். அது ஒரு சிறு பூசணிக்காய் அளவிற்கானது. பத்து இருபது எவர்சில்வர் தட்டுகளும் இரண்டு மூன்று குடிநீர்ச் சொம்புகளும் அதனருகே இறைந்து கிடக்கும். அவ்வளவுதான் இரவு உணவு. லேசாகக் குழைக்கப்பட்ட ஆவி பறக்கும் சுடுசோறும் எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக்கொள்ளும்படியான மல்லாட்டைத் துவையலும். ஓர் ஓரமாக நல்லெண்ணெய் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.

மல்லாட்டைத் துவையலோடு சுடுசோற்றைச் சேர்த்துப் பிசையும்போது கை லகுவிற்கோ, நா வழுக்கிற்கோ நல்லெண்ணெய் தேவைப்படலாம். நான் ஒருபோதும் அதைச் சேர்த்ததில்லை. எங்கள் கொள்ளைமேட்டில் மல்லாட்டையின் முதல் எதிரியே எள்தான். இப்படி நேர் எதிரிகள் இருவர் என் உணவுத் தட்டில் பகைமை பாராட்டுவதை எப்போதும் நான் அனுமதித்ததில்லை.

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை


பயணங்களில் வெளியே செல்லும்போது, ஒவ்வொரு பிரதேசத்திற்கும் எனப் பிரத்யேகமான ஓர் உணவு வாய்க்கும். ஆனாலும், வீடுகளில் வாய்க்கப்பெறும் உணவே தனித்துவமானது. எங்கள் வீட்டுக் களியையும், கறிக்குழம்பையும் தாண்டி உலகின் எத்திசையிலும் வேறொரு ருசியை இதுவரை சுவைத்ததில்லை. அம்மாவின் தனிச் சிறப்பே எதற்குமே மெனக்கெடாததுதான். பகல் 12 மணிக்குத்தான் விறகடுப்பைப் பற்றவைப்பாள் சமைக்கும் போது அம்மாவுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஓர் அடுப்பில் கறிக்குழம்பைக் கூட்டுவாள். இன்னோர் அடுப்பில் களி கிண்டுவதற்குச் சுடுதண்ணீர் கொதிக்கும். உதவிக்கு இன்னோர் ஆளை ஒருபோதும் அவள் அனுமதித்ததே இல்லை. உங்களின் கவிதைப் பிரவாகத்தின்போது இன்னொரு மனுஷனை உதவிக்கு அழைப்பீர்களா? முரட்டுப் பிடிவாதத்தோடு பல ஆண்டுகளாகக் கட்டிக் காப்பாற்றும் அவளின் தனிப்பட்ட உலகத்தில் இன்னோர் ஆளுக்கு அனுமதியில்லை.

தாம்பாளத் தட்டில் பத்திக்கப் பத்திக்க களி உருண்டைகளை உருட்டிவைப்பதற்கும், கறிக்குழம்பின் குழைவிற்குக் கொஞ்சம் ‘ஏந்தல்’ கத்திரிக்காயின் முழுமையைக் கொட்டி இறக்குவதற்குமான இடைவெளி ஒரு நிமிடத்திற்கும் குறைவானது. சமையல் நிறையும்போது அம்மாவின் முகம் வியர்வையாலும் பெருமிதத்தாலும் பிரகாசிக்கும். சிற்பத்தின் கண் திறந்த விநாடி சிற்பியின் முகம் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அம்மாவின் அப்போதைய முகம். தட்டில் களியின் மேடு மறையும் வரை கறிக்குழம்பால் நிரப்புவாள். ஒரு மழைக்கால மத்தியானத்திலோ, வெய்யிலேறிய பகல் நேரத்திலோ நீங்கள் ஒருமுறை களியையும், கறிக்குழம்பையும் சாப்பிட்டு விட்டால்போதும், வட தமிழ்நாட்டின் ஒரே ஒரு உணவிற்குமுன் உலகின் மிகச் சிறந்த நூறு சுவையான உணவையாவது ஈட்டுகட்டிவிடலாம்.

இந்தக் கேழ்வரகுக் களியோடு போட்டிபோட்டுச் சேரும் இன்னொரு குழம்பு, கருவாட்டுக் குழம்பு. அதற்கும் சேர்மானம் ஏந்தல் கத்திரிக்காய்தான். மொதக்கெண்டை, நெத்திலி, கெழங்கா, பலாப்பொடி போன்ற விசித்திரப் பெயர்களால் எங்கள் மக்கள் செல்லங்களாக அழைக்கும், இச்சிறு உலர்மீன்களின் ருசி கத்திரிக்காய்களோடு குழையும்போது, அது உலகில் யாருக்கும் கிட்டாத தனி ருசியை எங்களுக்குத் தரும்.

ஏர் ஓட்டியோ, அண்டைக் கழித்தோ, நாற்றுப் பிடுங்கியோ, மத்தியானப் பசி குடலைப் பிடுங்கும்போது நீரோடும் வாய்க்காலில் குந்தி எங்கள் சம்சாரிகள் குண்டாஞ்சோற்றை, கருவாட்டுக் குழம்போடு சேர்த்துப் பிசைந்து உள்ளே தள்ளுவதை என் சிறுவயதில் வாய் பிளந்து நின்று பார்த்திருக்கிறேன். அம்மாவின் கை ருசியை அவள் எங்கிருந்து அறிந்து கொண்டாள் என்பதறிய அவள் இறக்கும் வரை பலமுறை கேட்டுப் பார்த்தேன். ஒரு பெருமிதப் புன்னகை. அவ்வளவு மட்டும்தான்.

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை

ஆட்டுக்கால் சூப் வைத்து, பத்திக்க பத்திக்க சொம்பு சொம்பாய் வீட்டிலிருப்பவருக்குத் தரப்படும். சொல்லி வைத்தாற்போல் என் தட்டில் மட்டும் இரண்டு மூன்று கால் துண்டுகள் அமிழ்ந்து கிடக்கும். கைத் துழாவலில் கால் தட்டுப்படும்போது, அப்போதுதான் முதன் முதலாகப் பார்ப்பதுபோல நன்றியின் பொருட்டு அம்மாவை ஒருமுறை பார்த்துக்கொள்வேன்.

இரவு முழுக்க ரா அடுப்பில் பூக்கவைக்கப்பட்ட ஆட்டின் கால்கள், அதனோடே சேர்த்து வேறொரு பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட மொச்சைக்கொட்டைகளோடு சேரும் சேர்மானம், எல்லா மனிதர்களுக்கும் கிட்டாத பெரும் வரம். அம்மா வரம் வாங்கி வந்திருந்தாள். ஆக, ஆட்டுக்கால், மொச்சை சேர்த்துச் செய்யப்பட்ட குழம்பு, சோற்றுக்கும் தோசைக்கும் எனப் பிரத்யேகமாகச் செய்யப்பட்டவை. ஒருபோதும் நாம் அவசரப்பட்டு அதனோடு இட்லியையோ, சப்பாத்தியையோ சேர்த்து அவமானப்படுத்திவிடக் கூடாது.

(இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்) எங்கள் வீட்டிற்கு வந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கேட்டார். “ஷைலஜா, களிக்குத் தொட்டுக்க எது மிகச் சிறந்த சேர்மானம்?”

“கறிக்குழம்பு!”

கத்திரிக்கா, கருவாட்டுக் குழம்பு இல்லை என்பதுபோல உதடு சுழித்தவரிடம்,

“பண்ணைக் கீரை ஜே.கே!” என்றபோது சட்டென மலர்ந்து, ‘அது’ என அவர் இடிபோல் சிரித்தது இப்போதும் நினைவிருக்கிறது.

பண்ணைக் கீரையென்றால்?

எங்க ஊர் கொல்லைமேடுகளில் விதைக்கப்படும் வானம் பார்த்த விதைகளில் மானாவாரி மல்லாட்டை, கம்பு, கேழ்வரகு, எள்ளு, கொள்ளு, உளுந்து, துவரையெனப் பட்டியல் நீளும். அதன் துளிர்த்தலுக்குமுன் ஆறேழு பேர்களில் எங்களால் அடையாளப்படுத்தப்படும் இக்கீரைகள் முளைக்கும். அதன் ஊட்டம், முதன்மைப் பயிரைப் பின்னுக்குத் தள்ளிவிடும்.

மல்லாட்டைக்குக் களைவெட்டிக் கொண்டே எங்கள் பெண்கள் முன் மடியில் இக்கீரைகளை ஆய்ந்து போடுவார்கள். சிறுவயது, நடுவயதுப் பெண்களின் மடிகளைவிட ஆயாக்களின் மடிகளில் இருமடங்குக் கீரை நிறையும். அக்கீரையைக் கடைந்து வடகம்போட்டுத் தாளித்தால், எட்டூருப் பகையாளிகளும் நம் பங்காளிகளாகி, ஒரு கிண்ணக் குழம்புக்காக வீட்டு வாசலில் காத்திருப்பார்கள்.

என்னுடைய ‘நீர்’ கதையில் ‘பங்குக்கறிக் குழம்பை’ப் பற்றி எழுதியிருப்பேன். பெரும்பாலும் பங்குக்கறி அகாலத்தில்தான் பங்கு பிரிக்கப்படும். விபத்திலோ, குள்ளநரியின் கவ்வலிலோ அடிபடும் ஆட்டை, ஒரு கயிற்றால் மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, அதன் தோல் நீக்கி, குடலெடுத்து, ஈரல் பிரித்து, பிச்சியை நீக்கி, அது ஓர் அறுவை சிகிச்சை நிபுணனுக்கும் கைவராது மக்கா...

ஆட்டின் எடைக்கு ஏற்ப பத்தோ, இருபதோ பங்கு பிரியல் நடக்கும். பங்குக்கறியின் சிறப்பே ஆட்டின் எல்லா உறுப்புகளும் சமவிகிதத்தில் பிரியும். பிரிக்கும் கைகளில் நீரள்ளி கறிக்குவியலை உருட்டும் லாவகம்... ஒரு கிரிக்கெட் மேட்சில் ஸ்பின் பௌலருக்கும் சாத்தியப்படாதது. பங்கு பிரித்து முடித்தவுடன், பிரித்தவன் கண்கள் கறி உருண்டையின் மீது நிதானமாக நகரும். மேடு பள்ளங்கள் இட்டு நிரப்பப்படும். தங்கம் அளக்கும் தராசில் நிறுத்தாலும் எடை கூடுதல் குறைச்சலாக இருக்காது.

அகாலத்தில் கதவு தட்டப்பட்டுக் கறி கைமாறும் அந்நொடியே, அது எப்படியான ராத்திரியெனினும் நாம் சமைக்கத் தொடங்கிவிட வேண்டும். நம் தாமதம் பங்குக் கறியின் கவுரதைக்கு இடப்படும் சவால். நீங்கள் கறியை ஃப்ரிஜ்க்குள்ளோ, ஃப்ரீசருக்குள்ளோ வைத்தால், அது தன் ருசியை ஒரு நத்தையின் உடலைப்போல உள் நோக்கி உறிஞ்சிக்கொள்ளும்.

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை

சுடுசோறும், பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளுக்கு உகந்தவை. இதைத் திருட்டுக்கறி, களவாட்டுக்கறி எனச் சொல்வது ஆடுகளை அவமானப்படுத்தும் சொற்கள். குழம்பு கொதித்து அடங்கியதும் சுடுசோற்றோடு, தூங்கிக்கொண்டிருக்கும் வீட்டாள்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, சோற்றுத்தட்டை நீட்டிப் பாருங்கள், பிறகு அவர்கள் காலத்திற்கும் அந்த ருசியின் அடிமைகள்!

அடிபட்ட ஆடோ, மாடோ, மானோ மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுக் கறி பிரிக்கப்படும். எலும்பையும் சதைகளையும் பிரித்தெடுத்து Boneless என்ற அவமானத்தை அவ்விலங்குகளுக்குக் கிராமத்து ஆட்கள் ஒருபோதும் தருவதில்லை. ஆக, சதையோடும் எலும்போடும் ஓர் அன்னக்கூடையிலோ, ஈச்சங்கூடையிலோ கழுவி அலசப்பட்டுக் கறி கொட்டப்படும். மசாலா சேர்த்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுக் கடைகளில் தொங்கும் பிராண்டட் மசாலாத் தூள்கள் எங்கள் நாட்டு உணவுக்கு எதிரானவை. அது காய்ந்த மிளகாயும், தனியாவும், கொஞ்சம் மஞ்சளும் சேர்த்துப் பதமாக உலர்த்தியெடுக்கப்பட்டு அரைத்தெடுக்கப்படும் மிளகாய் சாந்து, கூடக் கொஞ்சம் கல்உப்பு, சரியாக நீர் கலந்து கறியில் சாற்றைப் பிரட்டி எடுத்து, அன்னக்கூடையிலேயே சில மணிநேரம் ஊறவைக்க வேண்டும். கறி நிறைக்கப்பட்ட அன்னக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஒரு சுடுபாறைக்குப் போய்விட வேண்டும். கழுவி முடிக்கப்பட்ட பாறையில் காய்ந்த விறகையும் சுள்ளிகளையும் கொண்டு ஆனமட்டும் எரியூட்ட வேண்டும். இப்போது கற்பாறையே நெருப்புப் பிழம்பாக மாறிவிடும்.

ஊறவைக்கப்பட்டக் கறித்துண்டுகளை எடுத்து பாறையில் வீச வேண்டும். நீளமான மூங்கில் குச்சிகளால் அவற்றைப் பிரட்டிவிட வேண்டும். வெந்ததும் வேகாததும் தீய்ந்ததுமாகக் கிடைக்கும் பொன்வருவல் துண்டங்களை, மெதுமெதுவாகச் சூட்டில் வாட்டி ஒன்றுபோல ஆக்கி எடுத்து, ஏதாவதொரு பெரு மரத்தடியில் போத்துவா சாராயம் நிரப்பப்பட்ட குவளைக்குப் பக்கத்தில், இந்தப் பொன்னிறத் துண்டங்களை அடுக்கிவைத்து….

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை


மதுவிலக்கு இல்லையெனினும் இதற்கு மேல் இதை எழுதிவிட முடியாது. எங்கள் ஊர் ஏரிகளில் பிடிபடும் சிறு மீன்களில் கெளுத்தியும் குறவையும் உளுவையும்தான் ருசியானவை. கெளுத்தி என்றாலே அது கைவிரல் கணத்துக்கும் சற்றுக் குறைவானதுதான். பெரும்பாலும் எல்லாக் கெளுத்தியுமே சினையுற்றிருக்கும். அம்மா அவற்றைச் செனக்கெளுத்தி எனக் கையிலெடுத்துக் காண்பிப்பாள். முட்டைகளாலான அதன் அதீத ருசி ஏழேழு ஜென்மத்துக்கும் கிட்டாத ஒன்று. மண் சட்டியில் நேற்றிரவே வைக்கப்பட்ட குழம்பில் இரவெல்லாம் மீனூரும். மூட்டப்பட்ட விறகடுப்பில் ஒரு சிறு இசைலயத்தோடு தோசை வார்க்கப்படும். குழிவிழுந்த தோசைகளை இம்மீன் குழம்புகொண்டு மூடாக்குப்போட்டுக் காத்திருந்து சாப்பிடு மகனே... வாழ்ந்ததின் ருசியை முழுவதும் உணரலாம்.

கோழிகளால் நிறைந்திருக்கும் வீடுகளாலான சுற்றுப்புறம் எனக்கும் வாய்த்திருந்த காலம் அது. எத்தனை நள்ளிரவிலும் கோணங்கியையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் தெருமுக்கில் பார்க்கும் நேரம். அது எத்தனை அகாலமாயிருப்பினும் அம்மா ரெண்டு கோழிகளின் கழுத்திற்குக் கத்தியைக் கொண்டுபோவாள். இப்போதுபோல நாட்டுக்கோழி, பிராய்லர்கோழி என்ற வகைபாடுகள் அப்போதில்லை. கோழி என்றாலே, அது வீட்டில் வளர்க்கப்பட்டு பக்கத்து வீட்டுக்கு அத்துமீறி நுழைந்து, ஊர்ச் சண்டையை ஒட்டுமொத்தமாக இழுத்துக்கொண்டுவரும் போக்கிரிக் கோழிகள்தான்.

அறுக்கப்பட்ட கோழிகளைக் கொதிநீரில் குளிப்பாட்டி, மஞ்சள் தடவி, துண்டம் போட்டு, அம்மா அதைக் கூட்டுகிற அழகே அருகிலிருந்து பார்க்கும் ஒருவனின் மனஉறுதியைக் குலைக்கும். குழம்பு கொதித்து அடங்கும்போது, லேசாகக் குழம்புச் சட்டியின் வட்டத்திற்கு நல்லெண்ணெயைக் காட்டுவாள். அது சுவை கூட்டும், ஓரத்தில் எண்ணெய் மிதக்கும். அது இன்னும் கறியின் கவிச்சியைச் சுத்தமாக இல்லாமல் செய்துவிடும் என அம்மா யாருக்கோ வகுப்பெடுத்தது காதில் இப்போதும் கேட்கிறது.

இதெல்லாம் ஒன்றுமில்லை. கேழ்வரகும் கம்பும் சரிசமமாய்ச் சேர்த்து உரலில் இடிக்கப்பட்ட மாவை, இரவு அமிர்தத்தைக் கரைப்பதுபோலக் கைகொண்டு கரைத்து, ஒரு வெள்ளைத் துணியால் வேடு கட்டிவைத்து உறியில் தொங்கவிடுவாள் அம்மா. அது இரவெல்லாம் புளித்து, காலையில் நுரைத்து இதுவரை மனிதகுலம் கண்டிராத ஓர் அதீத ருசியைத் தந்துவிடும் முனைப்போடு வீடெல்லாம் தன் மணம் பரப்பும். நீர் ஊற்றிக் கரைக்கப்பட்டக் கூழில் பச்சை மல்லாட்டைப் பயறுகளை உறித்துப்போட்டு ரெண்டு சொம்பு குடித்துவிட்டு, அத்தோடு செத்துப்போகலாம். நிறைவான வாழ்விற்கு அது ஒன்று போதாதா மானிடா!