Published:Updated:

` இனி எந்த வீட்டுக்குப் போனாலும் ஜாக்கிரதை!' - பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் அட்வைஸ்

இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமே, ` ஒரு வருஷம் எடப்பாடி முதல்வர்; ஒரு வருஷம் பன்னீர்செல்வம் முதல்வர்' என்பதுதான்.

` இனி எந்த வீட்டுக்குப் போனாலும் ஜாக்கிரதை!' - பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் அட்வைஸ்
` இனி எந்த வீட்டுக்குப் போனாலும் ஜாக்கிரதை!' - பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் அட்வைஸ்

அ.தி.மு.க கூடாரத்துக்குள் அணுகுண்டை வீசியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். பன்னீர்செல்வம்-டி.டி.வி சந்திப்பு குறித்து முதலில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் தங்க தமிழ்ச்செல்வன். ` முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறினார். ஒரு வாரத்துக்கு முன்பு, டி.டி.வி.தினகரனின் நண்பரிடம் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாகப் பேச வேண்டும்' என்றார் என்பதுதான் தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டியின் சாராம்சம். இதுகுறித்து தினகரனும் விரிவான விளக்கத்தைக் கொடுத்தார். இதற்கு பன்னீர்செல்வமும் நீண்ட பேட்டியைக் கொடுத்தார். ரகசிய சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் மறுப்பை தெரிவிக்கவில்லை. 

தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

கருணாஸ் பேசிய பேச்சின் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தைப் பார்க்கலாமா? 

`` அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சாதிரீதியாகவும் மரியாதைக்குறைவாகவும் கருணாஸ் பேசியது தவறு. அதற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அவர் பேசியது சரி என நாங்கள் சொல்லவில்லை. அவரது மன்னிப்பை அவர்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். இந்த விவகாரத்தோடு அதைத் தொடர்புபடுத்த வேண்டாம். பன்னீர்செல்வம் சந்திப்பு என்பது, ' அண்ணா தி.மு.க ஆட்சியும் அம்மா வளர்த்த கட்சியும் கெட்டுபோய்விடக் கூடாது' என்ற எண்ணத்தில் சந்தித்ததாக அவர் சொல்கிறார். அப்படிப்பட்ட நல்ல மனிதர்தான், ஜெயலலிதா இறந்ததும் சின்னம்மாவைப் பொதுச் செயலாளராக பதவியேற்க வருமாறு அழைத்தார். அவருடன் மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் சென்று சின்னம்மாவை அழைத்தனர். இவர்கள்தான் அவருடைய காலில் விழுந்து கேட்டனர்.

இவருடைய முதல்வர் பதவி பறிக்கப்பட்ட பிறகுதான் அனைத்துப் பிரச்னைகளும் தொடங்கின. கட்சியின் சின்னத்தை முடக்கினார். 11 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்துக்கொண்டு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் துணையோடு செயல்பட்டார். அப்புறம் ஏதோ, `மேலே சொன்னார்கள்' என்று எடப்பாடியுடன் இணைந்துகொண்டார். இவர் தர்மயுத்தம் கிளம்பியபோது, தமிழ்நாடு முழுக்க எங்களை எப்படியெல்லாம் இவர் வசைபாடினார். இவருடைய வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருந்ததே சின்னம்மா குடும்பம்தான். இவ்வளவு வசைகளைப் பாடிய பிறகு, தினகரனைப் பார்ப்பதற்கு அவருக்கு எப்படி மனது வந்தது. மனிதாபிமான அடிப்படையிலேயேதான் இதை நான் கேட்கிறேன். இவ்வளவு பிரச்னைகளையும் மீறி, மீண்டும் பார்க்க விரும்பியதற்குக் காரணம், மறுபடியும் பதவி கிடைத்துவிடாதா என்ற சுயநலம்தான் காரணம். அதற்காக எந்த திசைக்கும் போவதற்குத் தயாராக இருக்கிறார்." 

திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டம்தான், இதைச் சொல்வதற்கு அடிப்படையாக அமைந்ததா? 

`` இவர்கள் கூட்டியது கூட்டமே இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், 32 அமைச்சர்கள்,  ஆளுக்கு 500 ரூபாய் எனக் கொடுத்து கூட்டத்துக்கு அழைத்து வந்தனர். நான் தனியாக கூட்டம் போட்டாலே பத்தாயிரம் பேர் வருவார்கள். கடந்த வாரம் அதே நண்பரிடம், ` தினகரனைச் சந்திக்க வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். இதை என்னிடம் கூறிய டி.டி.வி, ' என்ன தங்கம்...ஓ.பி நம்மைப் பார்க்கணும்னு சொல்றார். மேடையில் கடுமையாகப் பேசுகிறார்' என்றார். நான் உடனே, `அதை அப்படியே ஊடகத்திடம் சொல்லிவிடுங்கள். இருக்கும் இடத்தில் அவர் சரியாக இருக்கட்டும். இரட்டை வேடம் போடக் கூடாது' என்றேன்." 

` பெரியகுளம் தொகுதியில் கதிர்காமு வெற்றி பெற்றதற்கு நான்தான் காரணம்' என்கிறார் ஓ.பி.எஸ். இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? 

` ஒரு பெரிய மனுஷன் எதை வேண்டுமானாலும் பேசலாமா? பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட யாருமே வெற்றி பெறுவதற்கு தனிப்பட்ட செல்வாக்கு காரணம் அல்ல. என்னுடைய குடும்ப செல்வாக்கு என்றால் 500 பேர் ஓட்டு போடுவார்கள். அவ்வளவுதான். அம்மா செல்வாக்கிலும் இரட்டை இலை செல்வாக்கிலும்தான் நாங்கள் வெற்றி பெற்றோம். அம்மா இருக்கும்போது இப்படியெல்லாம் பேசியிருப்பாரா? மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார் பன்னீர்செல்வம்." 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் சந்திக்க விரும்பியதற்கு என்ன காரணம்? 

`` இதற்கு சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம். ` டி.டி.வியே முதல்வராக இருக்கட்டும். நான் சப்போர்ட் செய்கிறேன்' எனக் கூறுவதற்காக சந்திப்புக்கு அனுமதி கேட்டிருக்கலாம். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் இணக்கமான உறவு இல்லை. அவருடன் இருந்த எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பக்கம் போய்விட்டனர். நிர்வாகிகளும் பன்னீர்செல்வத்தை விட்டு விலகிவிட்டனர். மனக் குழப்பத்தில்கூட சந்திப்புக்கு அனுமதி கேட்டிருக்கலாம்." 

கொங்கு மண்டலம் பக்கம் அதிகாரம் சென்றுவிட்டதுதான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமா? 

`` கொங்குவுக்கு அதிகாரத்தைக் கொடுத்தது சின்னம்மாதான். இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமே, ` ஒரு வருஷம் எடப்பாடி முதல்வர்; ஒரு வருஷம் பன்னீர்செல்வம் முதல்வர்' என்பதுதான். அந்த ஒரு வருட கால அளவு முடிந்ததும், அதிகாரத்தை விட்டுத் தர மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. விவகாரம் வீதிக்கு வருவதற்கு இதுதான் முக்கிய காரணம். மத்திய அரசும் பன்னீர்செல்வத்தைக் கழட்டிவிட்டது போலத்தான் தெரிகிறது." 

இப்படியொரு ஒப்பந்தத்துக்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா? 

`` இதற்கெல்லாமா ஆதாரத்தை வைத்திருப்பார்கள். அவர்கூடவே இருந்த கே.சி.பழனிசாமி பேசும்போது, ` எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். மா.ஃபாவுக்கு மட்டும் பதவி கொடுங்கள்' எனக் கூறியதாகச் சொல்கிறார். ஆனால், இணைப்பு முயற்சியின்போது ஹைவேஸ் அல்லது பி.டபிள்யு.டி, ஃபைனான்ஸ், பொதுச் செயலாளர் என அனைத்தும் கொடுக்க வேண்டும்' எனக் கண்டிஷன் போட்டார் பன்னீர்செல்வம் என்கிறார். இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் ஆதாரங்கள் பல்வேறு வழிகளில் வரும். இனி வரும் நாள்களில் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் எந்த வீட்டுக்குப் போனாலும், மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். சிசிடிவி ஆதாரம் இருக்கப்போய்த்தான் பதறுகிறார் பன்னீர்செல்வம். இன்று நான்கு மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதனுடன் இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம். அதற்காகக் காத்திருக்கிறோம். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சொன்னார்கள். அது பொய்யென நிரூபித்தோம். அதேபோல்தான் உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறோம். இல்லாவிட்டால் எங்களை மறந்துவிடுவார்கள்."