Published:Updated:

இடைத்தேர்தல் வேண்டாம் என்றார் ஸ்டாலின்... தினகரனுக்காகக் கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிசாமி!

இடைத்தேர்தல் வேண்டாம் என்றார் ஸ்டாலின்... தினகரனுக்காகக் கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிசாமி!
இடைத்தேர்தல் வேண்டாம் என்றார் ஸ்டாலின்... தினகரனுக்காகக் கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிசாமி!

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை என அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். `மழைக்காலம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது ஒரு காரணமாக இருந்தாலும், தி.மு.க-வுக்காக சிதம்பரம் செய்த உதவி இது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

டெல்லியில் ஐந்து மாநிலத் தேர்தல் தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், `பருவமழை காலம் என்பதால் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தற்போதைக்கு நடத்த வேண்டாம் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தற்போது வெளியிடவில்லை. மேலும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளது' எனக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தால் உற்சாகத்தில் இருக்கிறது அறிவாலயம். அதேநேரம், இப்படியொரு விளக்கத்தைத் தினகரன் தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

``மழைக்காலம் என்பதால் தேர்தல் வேண்டாம் எனத் தமிழக அரசு கடிதம் எழுதியதாகத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உண்மையில், மழைக்காலம் மட்டும் காரணம் அல்ல. அதையும் தாண்டி ஏராளமான அரசியல் கணக்குகள் இந்த அறிவிப்புகளின் பின்னால் இருக்கின்றன" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலோடுதான் இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும். அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு, அயனாவரத்தில் தோழமை வணக்கம் என்ற பெயரில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்று தி.மு.க சார்பில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்து சிதம்பரம் பேசினார். இதுகுறித்து விவாதித்த தேர்தல் ஆணைய அதிகாரிகளும், `தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை ஒழுங்காக நடத்த முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் பெயருக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது' எனப் பேசியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்துக்குச் சில தகவல்கள் சென்றுள்ளன. அதில், 'தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை நடத்தினால், தேர்தல் ஆணையத்தைக் கேலிக்கூத்தாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்' எனத் தெரிவித்துள்ளனர். இது ஸ்டாலினுக்காக சிதம்பரம் பயன்படுத்திய தனிப்பட்ட செல்வாக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். 

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தார் ஸ்டாலின். `தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்படும் ஒரு தேர்தலைச் சந்திப்போம். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 27 சதவிகித வாக்குகளைப் பெற்றோம். இப்போது உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால், நமக்கு பெருவாரியான வெற்றி கிடைக்கும். நம்மால் உள்ளாட்சித் தேர்தல் பாதிக்கப்படக் கூடாது. அதுதொடர்பாக நாம் தொடர்ந்துள்ள வழக்குகளையும் வாபஸ் பெற்றுவிட வேண்டும்' என நிர்வாகிகளிடம் பேசியிருந்தார் ஸ்டாலின். இதற்குக் காரணம், ஆர்.கே.நகருக்குப் பிறகு, திருப்பரங்குன்றத்திலும் பின்னடைவு ஏற்பட்டால், ஸ்டாலின் தலைமைக்கும் பெரும் பின்னடைவாக மாறிவிடும். அதன் பிறகு அழகிரியைக் கட்சிக்குள் சேர்த்தே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் என்பதுதான் பிரதான காரணம். இதைத்தான் அயனாவரம் கூட்டத்திலும் வெளிப்படுத்தியிருந்தார் ஸ்டாலின்" என்றார் விரிவாக.  

அதேநேரம், இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக நம்மிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, ``இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வருக்கு ஓர் அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், `திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும். திருவாரூரில் அழகிரி வெற்றி பெறுவார்' எனச் சொல்லப்பட்டிருந்தது. இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி, `ஒருவேளை அழகிரி வெற்றி பெற்றுவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே தி.மு.க-வில் அவர் ஐக்கியமாகிவிடுவார். அது நமக்கு நல்லதல்ல. திருப்பரங்குன்றத்தில் தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, தினகரன் இரண்டாவது இடத்துக்கு வருவதும் நமக்கு ஆரோக்கியமானதல்ல. அவர் இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டால், அ.தி.மு.க-வை முழுமையாகக் கைப்பற்ற முடியாது. எனவே, தேர்தல் நடக்காமல் இருப்பது நல்லது' என முடிவு செய்துவிட்டு, `மழைக்காலம்' எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். ப.சிதம்பரமும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தவே, `இதையும் மீறி நடத்தினால், நமக்கு உள்நோக்கம் இருப்பதாக விமர்சனம் கிளம்பிவிடும்' என்ற அச்சத்தின் காரணமாக இடைத்தேர்தல் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பி.ராவத்" என்றார் விரிவாக.