சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

? தானத்திலேயே உயர்ந்த தானம் எது?


! அன்னதானம்தான். உயிரைத் தழைக்க வைப்பது இந்த தானம்தான். கடந்த வாரத்தில், கேரள மாநிலம் அட்டப்பாடியில் மது என்ற இளைஞனை 16 பேர் அடித்தே கொன்றுள்ளனர். அரிசி திருடினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, காடுகளுக்குள் உணவு இல்லாமல் அலைந்துள்ளார் மது. அரிசி திருடுபோய்விட்டது என்று சொல்லி அவரை ஒரு கும்பல் அடிக்க, அவர்களுடன் வனத்துறையும் சேர்ந்து வீரத்தைக் காட்ட, பரிதாபமாக செத்துப் போனான் அந்த இளைஞன். மனிதாபிமானம் எவ்வளவு செத்துள்ளது என்பதை இந்தியாவுக்கே உணர்த்தியுள்ளது இந்தச் சம்பவம்.

‘காக்கைக்குக்கூட பருக்கை இல்லாமல் போவதுதான் துன்பங்க ளின் உச்சம்’ என்று சொன்னார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அப்படி ஒரு காலத்தை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். மதுவின் மரணம் அதைத்தான் அறிவிக்கிறது.

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘கட்சிக் கொள்கை காவியாக இருந்தால் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர மாட்டேன்’ என்று கமல் சொல்கிறாரே?

இப்படி ஆளாளுக்கு பயமுறுத்தியே ரஜினியைக் கட்சி ஆரம்பிக்க விடாமல் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது!

எம்.ஃபரூக், திருச்சி.


ரவுடிகள் பெருகவும், ரவுடி ராஜ்ஜியங்கள் தோன்றவும் போலீஸ்தானே காரணம்?


ஒட்டுமொத்தமாக போலீஸையும் குறைசொல்ல முடியாது. எத்தனையோ காரணங்களில் ஒன்றாக, ‘சில போலீஸ் அதிகாரிகளும் உடந்தை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதைவிட, காசு சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட சில சுயநல அதிகாரிகள் குற்றவாளிகளுடன் கைகோப்பதும் நடக்கத்தான் செய்கிறது. இந்த அதிகாரிகள் மூலமாக சில குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். போலீஸார் சிலரின் மறைமுக ஆதரவை வைத்தே அந்தக் குற்றவாளிகள் வளர்ந்துவிடுகிறார்கள். இன்னும் சில இடங்களில், தனக்கு வேண்டிய போலீஸ்காரரிடம் சொல்லிவிட்டே குற்றங்களைச் சில ரவுடிகள் செய்கிறார்கள். குற்றவாளிகள் தங்களுக்குள் கைகோக்கும் இடமாக சிறைச்சாலைகளும் மாறிவருகின்றன. சமீபத்தில் நடந்த இரண்டு, மூன்று குற்றச் சம்பவங்கள், சிறைச்சாலைகளுக்குள் திட்டமிடப்பட்டவை. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, காவல்துறை முழுமையாகத் தனது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்தாக வேண்டும்.

டி.ஜி.பி தொடங்கி கான்ஸ்டபிள் வரை அனைவரின் நோக்கமும் ஒன்றாக இருந்தால் மட்டும்தான், ரவுடி ராஜ்ஜியத்தை ஒழிக்க முடியும்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.


‘தி.மு.க-வும் காங்கிரஸும் கணவன் மனைவி போன்று இணைந்து செயல்பட்டு வருகிறோம்’ என்று கூறியிருக்கிறாரே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்?


அரசரின் தினகர பாசம் முடிவுக்கு வந்துவிட்டதோ?!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

‘எடப்பாடியும் பன்னீரும் தலைகீழாக நின்றாலும் தேர்தலில் வெற்றிபெற முடியாது’ என்கிறாரே தினகரன்?


மறுபடியும் வெற்றிபெறுவது அவர்களது நோக்கம் அல்ல. 2021 வரைக்கும் ஆட்சி தங்கள் கையில் இருந்தால் போதும் என்றே தவிக்கிறார்கள். அது போதாதா?

டாக்டர் சங்கமித்ரா நாகராஜன், கோவை.

‘விஜய் மல்லையா பெற்ற கடன் குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை’ என்று நிதி அமைச்சகம் கையை விரித்திருக்கிறதே?


‘ஆவணங்கள் முழுமையாக இருக்கின்றன. அவரை வாழ்நாள் முழுக்க சிறையில் வைப்போம்’ என்று சொன்னால்தான் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைய வேண்டும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

‘தினகரனால் ஒரு செங்கல்லையும் உருவ முடியாது’ என்று அமைச்சர்கள் சொன்னார்கள். தினந்தோறும்  அ.தி.மு.க-விலிருந்து பல செங்கல்களை எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து உருவிக்கொண்டே இருக்கிறார்களே?

சபாஷ்! உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது அதற்கான பதில்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்

? வரும் சட்டமன்றத் தேர்தலில் தீபா யாருடைய வாக்குகளைப் பிரிப்பார்?


மாதவன் வாக்குகளை!

கழுகார் பதில்கள்!

முத்தூஸ், தொண்டி.

? பக்கோடா, மிக்சர் - எது டாப்?


! மிக்சர்தான்!

பி.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.

? ‘தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை’ என்கிறாரே தம்பிதுரை?


! ‘தமிழகத்துக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்குவது இல்லை’ என்று இவர்களும், ‘மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஒழுங்காக ஒத்துழைப்புத் தருவது இல்லை’ என்று அவர்களும் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். யார் சொல்வது உண்மை என்பதை அவர்களின் மனச்சாட்சி அறியும். இருவருமே கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்பது தெரிகிறது.

உலகநாதன்,  திருவையாறு.

? சமீபத்தில் ரசித்த அரசியல் விமர்சனம்?


! நான் ரசித்த விமர்சனம் என்பதைவிட, என்னைத் துடிக்க வைத்த விமர்சனம் என்று சொல்லாம். சமீபத்தில், தூத்துக்குடியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அந்தக் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியபோது, ‘‘காங்கிரஸ் காலத்திலும் சரி...  பி.ஜே.பி காலத்திலும் சரி... ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குவதும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதும்தான் தொடர்கிறது’’ என்று வருத்தப்பட்டு சொன்னார். தினம் தினம் நடக்கிற விஷயங்களையெல்லாம் பார்க்கும்போது, அது நூற்றுக்கு நூறு சரி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

கழுகார் பதில்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஏழை மாணவி, சில ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு தேசிய வங்கியில் விண்ணப்பித்தார். இது நடந்தது 2011-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில். கடன் மறுக்கப்படவே நீதிமன்றப் படியேறினார். விதிகள் சரியாக இருந்தும், எதிர் வழக்காடியது வங்கி. 2012-ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் கல்விக்கடன் தரப்படவில்லை. சில ஆயிரம் கடன் தர முடியாது என மேல்முறையீட்டுக்குப் போய், லட்சங்களைச் செலவுசெய்து வழக்காடியது வங்கி. இதற்கிடையே வேறு வழிகளில் பணம் திரட்டி, 2015-ம் ஆண்டு தன் படிப்பை முடித்துவிட்டார் அந்தப் பெண். இந்த வழக்கில் கடுமை காட்டிய நீதிமன்றம், கல்விக்கடனைத் தராத அந்த வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

‘கல்விக்கடனைத் திருப்பித் தராதவர்களின் பட்டியல் அத்தனை பெரிதாக இல்லை. ஆனால், கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பித் தராதவர்களின் பட்டியல் பெரியது. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மட்டுமே 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளன. இதுபோன்றவர்களுக்குக் கடன்களை வாரி வழங்கும் வங்கிகள், நாளைய இந்தியாவின் தூண்களாக வளரக்கூடிய மாணவர்களை நசுக்குகின்றன’ என்று  சொல்லியிருப்பதும் அதே நீதிமன்றம்தான்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

கழுகார் பதில்கள்!

சென்னையிலிருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் கொழும்பு செல்லும் விமானங்களில்கூட, தமிழிலும் அறிவிப்பு செய்யப்படுகிறது. ஆனால், கோயம்புத்தூரிலிருந்து சென்னை வரும் விமானங்களில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அறிவிப்பு மொழியாக இருக்கிறது. ‘பெருமை வாய்ந்த மூத்த முதுமொழி தமிழ்’ என்று ஒரு பக்கம் புகழ்ந்து பேசிக்கொண்டே, சென்னை ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருதத்தில் வாழ்த்து பாடுகிறார்கள். மாநில மொழி பேசுபவர்களெல்லாம் இங்கே இரண்டாம்தர குடிமக்கள்தானே?

தமிழ் ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக, இணைப்பு மொழியாக இல்லை. அதனால்தான், இந்தியும், ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கோலோச்சுகின்றன. இதுபற்றியெல்லாம்  பேசினால், அது ‘தமிழ் மொழிவெறி’யாக பார்க்கப்படும் சூழல் உள்ளது. இதேபோன்ற முழக்கங்கள் கர்நாடகாவிலோ, மகாராஷ்ட்ராவிலோ எழும்பினால், அது அவர்களின் மாநிலப் பற்றாகப் பார்க்கப்படும்.

தமிழின் இடத்தை சமஸ்கிரு தத்துக்குக் கொடுப்பவர்கள், சமஸ்கிருதத்தில் 10 நிமிடங்கள் பேசும் திறமை படைத்தவர்களா என்று தேர்வு வைக்கலாம்!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!