சமூகம்
Published:Updated:

சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!

சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!

சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!

‘ஆட்சியை அடகு வைத்து, பதவிக்காகப் பலரிடமும் மண்டியிட்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த மரியாதையையும் குலைத்து முடித்தவர்கள், கடைசியாக ஜெயலலிதாவின் ஆளுமையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். இப்போது வைக்கப்பட்டிருக்கும் சிலை, ஜெயலலிதாவுக்குச் செய்யப்பட்டிருக்கும் உச்சபட்ச அவமரியாதை’ - சென்னையில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 24 அன்று அவருடைய உலோகச் சிலை திறந்து வைக்கப்பட்டதிலிருந்து, இப்படித்தான் விமர்சனங்கள் தெறிக்கின்றன.

அந்தச் சிலை பற்றியும், அதைத் திறந்து வைத்தவர்கள் பற்றியும் சமூக வலைதளங்களில் தொடங்கி, பல்வேறு தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுகின்றன. ஜெயலலிதாவின் சிலை யாரை மாதிரி இருக்கிறது என்பது பற்றி ஏகப்பட்ட தியரிகள் உலவுகின்றன. வழக்கம்போல, அ.தி.மு.க மீதான விமர்சனங்களுக்கு மைக் முன்பாக நின்று வீராவேச பதில் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘சிலை நன்றாகத்தான் இருக்கிறது... தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார்கள். இதெல்லாம் நாகரிகம் இல்லை. எங்களைவிட அம்மாவை மதிக்கத் தெரிந்தவர்கள் உலகத்திலேயே இல்லை’’ என்றே முதல் நாள் சீறினார். ஆனால், விமர்சனங்கள் தொடர்ச்சியாகக் கிளம்பவே... ‘‘சிலையில் மாற்றம் செய்யப்படும்’’ என்று அவர் பல்டி அடித்திருக்கிறார்.

சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!

‘ஆளுமைமிக்க ஜெயலலிதாவின் சிலை, நம் மாமல்லபுரத்திலேயே தேர்ந்த சிற்பிகளால் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் வைப்பதற்காகவே உருவாக்கப் பட்ட இந்தச் சிலையைக் கண்டுகொள்ளாமல், சரியில்லாத ஒரு சிலையை அவசர அவசரமாக ஆந்திராவில் செய்துவந்து திறந்துள்ளனர்’ என்கிற தகவல் நமக்குக் கிடைக்கவே, அதை விசாரிக்கத் தொடங்கினோம்.

ஜெயலலிதா இறந்த சில நாள்களிலேயே மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி கீர்த்திவர்மனிடம் பேசிய சசிகலா தரப்பினர்,  ‘அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் நிறுவுவதற்காக ஜெயலலிதாவின் முழுஉருவ வெண்கலச் சிலை செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து, சக சிற்பிகளுடன் சென்னையில் சசிகலா தரப்பினரை அவர் சந்தித்துள்ளார். அப்போது, ஜெயலலிதாவின் பல புகைப் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை அவர்களிடம் காட்டியுள்ளனர். பிறகு போயஸ் கார்டனுக்கு அழைத்துச்சென்று, நிறைய ஆல்பங்களைக் காட்டியுள்ளனர். அவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான புகைப்படங்களை மாதிரிக்காக சிற்பிகள் எடுத்துக்கொண்டனர்.

மாமல்லபுரம் சிற்பக் கலைக்கல்லூரி பேராசிரியர் கி.ராசேந்திரனின் ஆலோசனைகளைப்  பெற்றுக்கொண்ட ஸ்தபதி கீர்த்திவர்மன், சக சிற்பிகளுடன் இணைந்து இந்தச் சிலையை உருவாக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். சிலை வடிவமைப்பு தொடர்பான பணிகளை அவ்வப்போது மேற்பார்வையிட வந்த சசிகலா தரப்பினர், ஒவ்வொரு முறையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துச்சென்று சசிகலாவிடம் காண்பித்துள்ளனர். அவர் நிறையத் திருத்தங்களைச் சொல்லச் சொல்ல, அதன்படியே சிலையை உருவாக்கியுள்ளனர்.

சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!

‘‘இந்தச் சிலையை நாங்கள் செதுக்கினோம் என்று சொல்வதைவிட, சசிகலா பார்த்துப் பார்த்து செதுக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். சிலையைப் பற்றி சசிகலா ஒவ்வொரு முறை சொல்லியனுப்பும் திருத்தங்களும் எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட நாங்கள் சிலையை உருவாக்கி முடித்துவிட்டாலும், நுணுக்கமான பல திருத்தங்களை அவர் சொல்லியனுப்பிக் கொண்டே இருந்தார். அந்தத் திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோமா என்பதையும் புகைப்படம் எடுத்துவரச் சொல்லிப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வார்.

சிலைப் பணிகளை முடித்து, சிலைக்கான மோல்டு ரெடியாகிவிட்டது. இறுதியாக, உலோகச் சிலையாக வார்க்கவேண்டிய வேலை மட்டும்தான் பாக்கி. அந்தத் தருணத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி, சிறைக்குச் சென்றுவிட்டார் சசிகலா. அதன்பிறகு, சிலையைப் பற்றி யாரும் எங்களிடம் பேச வரவில்லை’’ என்று சொன்னார் கீர்த்திவர்மன்.

சசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை!

அவசரமாக சசிகலாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியவர்களுக்கு, ஜெயலலிதாவுக்காக மாமல்லபுரத்தில் அவர் உருவாக்கி வந்த சிலை பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போனது ஆச்சர்யமே! ஒருவேளை, சசிகலா மட்டுமல்ல... அவர் முயற்சியால் செய்யப்பட்ட சிலைகூட தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டார்களோ என்னவோ?!

- நமது நிருபர்

ரெடியா இருக்கு சிலை!

ஜெ
யலலிதா சிலை உயிரோட்டமாக வர வேண்டும் என்பதற்காக, பல கட்டங்களில் பணிகள் நடந்தன. பிரமாண்ட சிலை என்பதால், முதலில் களிமண்ணில் சிலையைச் செய்தார்கள். அதன்மீது ஃபைபர் மெட்டீரியலைப் பயன்படுத்தி அச்சு உருவாக்கினர். இந்த அச்சு, மாமல்லபுரத்தில் இப்போது தயாராக இருக்கிறது. கிட்டத்தட்ட சிலை வடிவமைப்புக்கான வேலை முடிந்தே விட்டது. இந்த அச்சில் உள்ளே இருக்கும் களிமண்ணை அகற்றிவிட்டு, மெழுகை உருக்கி ஊற்றினால், மெழுகுச்சிலை ஒரே நாளில் தயார். இதன் மீது மண் கொண்டு பூசினால், அடுத்த ஓரிரு நாள்களில் மோல்டு உருவாகிவிடும். பிறகு உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி எடுத்துவிட்டு, உலோகத்தை உருக்கி ஊற்றினால், வெண்கலச் சிலை தயார்!