Published:Updated:

ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன் மோதல்... எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்தா?

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான தங்க தமிழ்ச்செல்வன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்' என்ற கோரிக்கையுடன் 2017-ம் ஆண்டு ஜூலை 12-ல், தினகரனைச் சந்தித்து வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இந்தப் பேட்டி வெளியாகி, தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. 

ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன் மோதல்... எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்தா?
ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன் மோதல்... எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்தா?

சிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி, பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தற்போது துணை முதல்வராகவும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவின் உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரனுக்கும் இடையே ஒரு சந்திப்பு தொடர்பாக உச்சக்கட்ட மோதல் உருவாகி, ஊடகங்களுக்கு அன்றாடச் செய்தியாகி உள்ளது.

அவர்கள் இருவருக்கும் இடையேயான அடுத்தடுத்த மோதல் பேட்டிகளால் தமிழக அரசியல் களம், கடந்த சில மாதங்களுக்குப் பின் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றே கூறலாம். தினகரன் - ஓ.பி.எஸ். மோதல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். 

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான தங்க தமிழ்ச்செல்வன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்' என்ற கோரிக்கையுடன் 2017-ம் ஆண்டு ஜூலை 12-ல், தினகரனைச் சந்தித்து வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இந்தப் பேட்டி வெளியாகி, தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன்,  "ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு என்னைச் சந்தித்தது உண்மைதான். அவருக்கும், எனக்கும் பரஸ்பரம் தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் தூதுவிட்டார். அதன்பேரில் எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டில் நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது, தான் தவறு செய்துவிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் ஓ.பி.எஸ். என்னிடம் கூறினார். ஓ.பி.எஸ். தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டபோது, அவரை ஆதரித்த 11 எம்.எல்.ஏ-க்களுடன் என்னுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார் ஓ.பி.எஸ்." என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், "எனக்கும், தினகரனுக்கும் பொதுவான நண்பர் கேட்டுக்கொண்டதால், அவரை நான் சந்தித்துப் பேசினேன். தினகரன் மனம் திருந்தியிருப்பார் என்ற எண்ணத்தில், நான் அவரைச் சந்தித்தேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என்று என்னிடம் பேசினார். அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணத்திலேயே தினகரன் என்னிடம் பேசியதால், அந்தக் கருத்துக்கு உடன்படாமல் நான் திரும்பிவிட்டேன். நான், தினகரனைச் சந்தித்தது யாருக்கும் தெரியாது. அரசியல் நாகரிகம் கருதி நான் அப்போது யாரிடமும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியுடன் நாங்கள் இணைந்தபிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார்.

சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்., அதே சசிகலாவின் உறவினரான தினகரனை ரகசியமாகச் சந்தித்த தகவல் வெளியாகி, அ.தி.மு.க. தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, "தன் ஆதரவாளர்கள் யாரிடமும் எந்தத் தகவலும் சொல்லாமல் மிகவும் ரகசியமாகச் சென்று தினகரனை, ஓ.பி.எஸ். பார்த்திருக்கிறார் என்றால், அவர் பின்னால் நின்ற எங்களையும், அ.தி.மு.க. தொண்டர்களையும் அவர் முட்டாள்களாக்கிவிட்டார். அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், முதலில் நல்ல மனுஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்துகொள்ள வேண்டும்; இதனால், ஓ.பி.எஸ்ஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது" எனச் சாடியிருந்தார். 

"அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்குப் பாதிப்பு வருமா? எடப்பாடி பழனிசாமி திடீரென்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஏன் ஆளுநரைச் சந்திக்க வேண்டும்? முதல்வர் டெல்லிக்கு எதற்காகச் செல்கிறார்?" போன்ற கேள்விகளை தமிழக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரும் சில விமர்சகர்களிடம் முன்வைத்தோம். "பொதுவாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அவருடைய ஆட்சியைக் கலைக்க வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கைவைத்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் இந்த அரசின்மீது அதிருப்தியில் உள்ளனர். ஒருபுறம், இதுபோன்ற நடைமுறைகள் மறைமுகமாக இருந்தாலும்... மறுபுறம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஒருவித பனிப்போர் எப்போதுமே நிலவி வருவதை மறுக்கமுடியாது. 

பொதுவெளியில் முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து செயல்பட்டபோதிலும், மனதளவில் அவர்கள் இருவருக்கும் ஒற்றுமை இல்லை என்றே தெரிகிறது. துணை முதல்வராக இருக்க ஓ.பி.எஸ்ஸுக்குத் துளியளவும் விருப்பமில்லை. முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அதைத்தான் அவருடைய சகாக்களும் சொல்லிவருகின்றனர். இதுதவிர தனக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் எந்தச் சலுகைகளையும் முதல்வர் எடப்பாடி செய்து தருவதில்லை என்ற மனக்குமுறலும்  தொடர்ந்து இருந்துவருகிறது. தவிர, கட்சியியைப் பொறுத்தமட்டிலும் ஒருங்கிணைப்பாளராக, தான் இருந்தாலும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதால், எடப்பாடியே கட்சியிலும் கோலோச்சுகிறார். முதல்வர் என்ற முறையில் சேலம் மாவட்டத்துக்கும், அவரின் தொகுதிக்கும் அவர் எண்ணற்ற சலுகைகளை அறிவித்து வருகிறார். இதனால் ஓ.பி.எஸ். தவிர, இன்னும் சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் கலக்கத்தில் உள்ளனர். அதற்கு உதாரணம், எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியிருந்த குற்றச்சாட்டு. இந்த நிலையில் தினகரன் - ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்த இருவரின் பேச்சால், தன் பதவிக்கு ஏதேனும் ஆபத்து வராமல் தடுப்பதற்காக என்ன செய்யலாம் என ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பேசியிருக்கலாம். அதனடிப்படையிலேயே, டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டிருக்கலாம்" என்கின்றனர், தீர்மானமாக.

தமிழக அரசியல் களத்தில் நிலவும் பரபரப்பால், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தள்ளாடத் தொடங்கிவிட்டது.