Published:Updated:

தே.மு.தி.க. உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைக்க மீண்டும் அனுமதி!

தே.மு.தி.க. உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைக்க மீண்டும் அனுமதி!
தே.மு.தி.க. உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைக்க மீண்டும் அனுமதி!
தே.மு.தி.க. உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைக்க மீண்டும் அனுமதி!

சென்னை: அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைக்க மீண்டும் அனுமதி அளிப்பதாக சட்டசபையில் சபாநாயகர் அறிவித்தார்.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபால் பேசுகையில்,"தே.மு.தி.க. உறுப்பினர்கள், பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியததுவத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில், 41 நிமிடங்கள், 46 நிமிடங்கள் என்று அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசிவிட்டு, வெளியில் சென்று தங்களுக்கு உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்படவில்லை என உண்மைக்கு மாறாகத் தெரிவிப்பதையும் தொடர்ந்து சில நாட்களாகச் செய்து வந்தனர்.

பிற கட்சி உறுப்பினர்களின் பேச்சுரிமைக்கு இதனால் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடனும், இதர எதிர்க்கட்சித் தலைவர்களைக் கலந்து கொண்ட பின்னர், இனி தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு விவாதத்தின் இறுதியில் வாய்ப்பு வழங்கப்படும் என நான் அறிவித்தேன்.

##~~##
பேரவை விதிகளின்படியும், நாடாளுமன்ற நடைமுறைகளின்படியும் எந்தெந்த உறுப்பினரைப் பேச அனுமதிப்பது என முடிவு செய்வதும், அவர்களுக்கான நேரத்தை முடிவு செய்வதும், எந்த வரிசையில் அவர்கள் உரையாற்றுவது என்பதைத் தீர்மானிப்பதும் பேரவைத் தலைவரின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குள் உள்ள உரிமைகள் என்பதை நான் பலமுறை எடுத்துரைத்திருக்கிறேன்.
இருப்பினும், பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கி வைக்க வாய்ப்பு கொடுக்குமாறு பிற கட்சித் தலைவர்கள் வைத்த கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் விவாதத்தில் பங்கு கொண்டு தங்களது ஜனநாயகக் கடமைகளை ஆற்ற வகை செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் மேலான கருத்தின் அடிப்படையிலும், பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வின் உறுப்பினர்களுக்கு விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் வாய்ப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கிறேன்.
இனிவரும் காலங்களில் தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, உரிய நேரத்தில் தங்களது உரைகளை நிறைவு செய்து, அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கு உரையாற்ற நேரம் ஒதுக்குவதில் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே செய்தது போன்று தொடர்ந்து அவர்கள் அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.