Published:Updated:

'96 திரைப்படத்தைப் பார்த்து உருகியது இருக்கட்டும்!’ - திருச்சி சிவாவை சாடிய தி.மு.க பேச்சாளர்கள்

'96 திரைப்படத்தைப் பார்த்து உருகியது இருக்கட்டும்!’ - திருச்சி சிவாவை சாடிய தி.மு.க பேச்சாளர்கள்
'96 திரைப்படத்தைப் பார்த்து உருகியது இருக்கட்டும்!’ - திருச்சி சிவாவை சாடிய தி.மு.க பேச்சாளர்கள்

`மூன்று நாள்களுக்குள் இரண்டாவது முறையாகப் படம் பார்த்திருக்கும் சிவா, எங்கள் கோரிக்கைகளுக்காகவும் பேசியிருக்கலாம்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் தலைமைக் கழகப் பேச்சாளர்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் `96' திரைப்படத்தையொட்டி, திருச்சி சிவாவின் பதிவுக்கு ஆதங்கத்துடன் பதில் அளித்து வருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். `மூன்று நாள்களுக்குள் இரண்டாவது முறையாகப் படம் பார்த்திருக்கும் சிவா, எங்கள் கோரிக்கைகளுக்காகவும் பேசியிருக்கலாம்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியானது `96' திரைப்படம். இந்தத் திரைப்படம் குறித்துப் பதிவிட்டுள்ள தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா, ``என்னுடைய இத்தனை வயதில் மூன்று நாள்களுக்குள் ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை பார்த்திருக்கிறேன். 

ஒரு படத்துக்கு எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையிலும் முத்திரை பதிக்கக்கூடிய தனித்துவம். இயக்கம், நடிப்பு, வசனம், கேமரா, இசை என எல்லாமே. குறைவான வசனங்கள், நடிகர்களின் யதார்த்தமான, உணர்ச்சி வெளிப்பாடுகள் (Expression). படப்பிடிப்பும் காட்சி அமைப்பும் நீண்ட தூர பேச்சில்லாத நடைகளும் கூட வசனம் இல்லாமலே நிறைய சொல்லுகின்றன. பாத்திரங்களின் உணர்ச்சிகள் எளிதாக, இயல்பாக நம்முடையதாகின்றன. காலை 5-50க்கு சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்று இரவு 10 மணியளவில் கதாநாயகி சொல்கிறபோது இடைவேளை.

கதைக்கு மீதமுள்ள சுமார் எட்டு மணி நேர நிகழ்வுகளை இடைவேளைக்குப் பின்னால் ஒண்ணேகால் மணி நேரம் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பு இயக்குநருடையதாகிறது (Unity of time). இதில் முழுவெற்றி பெற்று காட்டுகிறார் பிரேம்குமார். கதாநாயகி காரிலிருந்து இறங்கி, தங்கும் விடுதியின் வரவேற்பறை முழுதும் நடந்து, லிஃப்டில் பயணித்து, வராண்டாவைக் கடந்து, அறைக்குள் நுழைந்து, உட்கார்ந்து, கொஞ்ச நேரம் யோசித்து இத்தனை நேரமும் வசனமே இல்லை. த்ரிஷாவின் முகமும், நடிப்பும், கேமராவுமே பத்து பக்க வசனங்களுக்கு சமம். இந்தப் படம் பல தேசிய விருதுகளை பெறத் தகுதியானது. குறிப்பாக விஜய்சேதுபதி, த்ரிஷா, கௌரி ஆகியோரின் நடிப்பு. இயக்குநர் தம்பி பிரேம்குமார் தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்ந்த கலை இலக்கியம் வளர்த்த சோழமண்ணின் மைந்தன். பள்ளி, கல்லூரி காலத்தின் மறக்க முடியாத நண்பர்களோ, நபர்களோ, பசுமையான நினைவுகளோ எல்லோர் மனதிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீரும் என்றால் இந்தப் படம் ஒரு தென்றலாய் அவர்களின் நெஞ்சினை நினைவினை வருடிடும்" எனச் சிலாகித்திருந்தார். 

அவரின் இந்தப் பதிவு குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், "96 திரைப்படம் குறித்த கொள்கை பரப்புச் செயலாளரின் கருத்து வரவேற்புக்குறியது. உங்களை நம்பி உள்ள பேச்சாளர்கள் எதிர்காலம் குறித்தும் ஒரு படம் பிடித்துக் காட்டுவது நல்லது. கருவிலிருந்தே கலைஞர் வாழ்க வாழ்க என்ற பேச்சாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வாங்கி தராதது வருத்தம் அளிக்கிறது" என வேதனை தெரிவித்திருந்தார். அவரது பதிவுக்கு பின்னூட்டம் எழுதியுள்ள பேச்சாளர் செங்கை தாமஸ், ``புகழ் அஞ்சலி செலுத்த புகழ்வெளிச்சம் தேவை. குறைந்தபட்சம் சின்னத்திரை நடிகர் நடிகையாய் இருத்தல் வேண்டும் என்ற சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர், புகழ் அஞ்சலி செலுத்த கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்போன்ற உண்மைவிசுவாசிகள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

திருச்சி சிவாவிடம் பேசினோம். ``இதுபோன்ற செய்திகள் பொதுவெளியில் வந்ததையொட்டி, நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். இதுதொடர்பாக யாரும் என்னிடம் அணுகியதில்லை. இப்போது சிலர் விமர்சிப்பது புதிதாக இருக்கிறது. தலைமை சொல்லும் அனைத்துப் பணிகளையும் முறையாகச் செய்து வருகிறேன். கட்சித் தலைவர் என்னிடம் சொன்னது, ``கட்சிக்கு அப்பாற்பட்ட நடுநிலையாளர்கள், பல்வேறு துறை சம்பந்தப்பட்டவர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரை அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும்" என்பதுதான். அதையொட்டித்தான் புகழ் வணக்கக் கூட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் அனுமதி வாங்கித் தர வேண்டியதில்லை. படம் பார்ப்பது ஏன் எனக் கேட்பது, மனிதன் சோறு சாப்பிடலாமா எனக் கேட்பதைப் போலத்தான். எனக்குத் தனிப்பட்ட முறையில் கலை இலக்கிய ஈடுபாடுகள் உண்டு. இதைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றார் கோபத்துடன். 

அடுத்த கட்டுரைக்கு