Published:Updated:

என்.எல்.சி நிர்வாகம் பதுங்க கூடாது: ராமதாஸ்

 என்.எல்.சி நிர்வாகம் பதுங்க கூடாது: ராமதாஸ்
என்.எல்.சி நிர்வாகம் பதுங்க கூடாது: ராமதாஸ்
 என்.எல்.சி நிர்வாகம் பதுங்க கூடாது: ராமதாஸ்

சென்னை: "சட்டத்தின் சந்து பொந்துகளில் சென்று பதுங்காமல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் என்.எல்.சி நிறுவனம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக 2008ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.1411 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. இங்கு ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்களும் ஒரே மாதிரியான வேலையை செய்யும் போதிலும், நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 7ல் ஒரு பங்கு மட்டுமே, ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியாக வழங்கப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம் இன்னும் ரூ.8 ஆயிரத்தை தாண்டவில்லை என்பது வேதனையளிக்கும் ஒன்றாகும். இது தொடர்பாக தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யும்படி கடந்த 2008ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த என்.எல்.சி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுமீது நேற்று அளித்த தீர்ப்பில் என்.எல்.சி நிறுவனத்தின் போக்கை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மொத்தமுள்ள 10,372 தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யும்படி ஆணையிட்டுள்ளனர்.

##~~##
ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், ஒளியையும் ஏற்படுத்தித் தந்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதற்குப் பிறகும் இந்த பிரச்னையில் சட்டத்தின் சந்து பொந்துகளில் சென்று பதுங்காமல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் என்.எல்.சி நிறுவனம் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
2008ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் எவரேனும் ஓய்வு பெற்றிருந்தால், அவர்களுக்கும் இத்தீர்ப்பின் பயன்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.