Published:Updated:

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

‘‘அன்பாகப் பேசி விசாரணை வளையத்துக்குள் விவேக்கைச் சிக்க வைத்திருக்கிறார் நீதிபதி ஆறுமுகசாமி’’ என்றபடி, நம்மிடம் ஒரு புகைப்படத்தைக் காட்டினார் கழுகார். ஜெயலலிதாவுடன் பாசமான நெருக்கத்தில் இளவரசியின் மகன் விவேக் இருக்கும் அந்தப் புகைப்படம்தான் இந்த இதழ் அட்டையில் உள்ளது.

‘‘ஜெயலலிதாவை இப்படி ஒரு தோற்றத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்’’ என்றோம்.

‘‘அதையேதான் ஆறுமுகசாமியும் சொன்னார். நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஒரு சடங்குபோல பலரும் ஆஜராகி வருகிறார்கள். இதேபோல, சம்பிரதாயமாகக் கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்துதான் விவேக் போனார். ஆனால், ஆறுமுகசாமி அவரிடம் பரிவும் கண்டிப்புமான குரலில் பேசினாராம். ‘ஜெயலலிதா, அப்போலோவில் அட்மிட் ஆன பிறகு நடந்த அனைத்தும் எங்களுக்கு வெளிச்சமாகிவிட்டன. ஆனால், அப்போலோவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன் அவருக்கு என்ன நடந்தது, அவரைச் சந்தித்தவர்கள் யார், திடீரென அவருக்கு எப்படி உடல்நிலை சரியில்லாமல் போனது என்பவையெல்லாம் நிச்சயம் உங்களுக்குத் தெரியும். எங்களிடம் ஆஜரான தீபா, தீபக் இருவருமே எல்லாம் விவேக்குக்குத் தெரியும் என்கிறார்கள். உண்மையைச் சொல்லுங்கள்’ என்றாராம்.’’

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

‘‘அதற்கு விவேக் என்ன சொன்னார்?’’

‘‘முதல்கட்ட விசாரணையில் விவேக் பெரிதாக வாய் திறக்கவில்லை. அதனால், விவேக் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவாராம்.சசிகலா, ஆணையத்தில் ஆஜராக வாய்ப்பு குறைந்துவரும் நிலையில், விவேக்கையே இறுதி சாட்சியாக மாற்றி, நிறைய விவரங்களைச் சேகரிக்க நினைக்கிறது ஆணையம். அப்போலோவில் ஜெ. ஓரளவு குணமான பிறகு எடுக்கப்பட்ட இன்னும் பல வீடியோக்கள் விவேக் கைவசம் இருப்பதாக, சசிகலாவுக்கு மிக நெருக்கமான ஓர் உறவினரே ஆணையத்தில் சொல்லியிருக்கிறாராம். அதில் சசிகலா மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட  உரையாடல்களும் இருப்பதாகத் தகவல். ஆட்சியையே தலைகுப்புறக் கவிழ்க்கக்கூடிய ஆவணங்களாக அவை இருக்கும் என்கிறார்கள். அவற்றை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என்றும் சிலர் துடிக்கிறார்களாம். சசிகலா குடும்பத்தினருடன் காரசாரமாக மோதிய பிறகும் விவேக்குடன் மட்டும் சில அமைச்சர்கள் இன்னமும் அன்பு காட்டுவதன் பின்னணியையும் இந்த வீடியோ விஷயங்களோடு முடிச்சுப் போடுகிறார்கள்.’’

‘‘ஆணையத்தில் வேறு என்ன நடந்ததாம்?’’

‘‘விசாரணை ஆணையத்தில் ஆஜரான போயஸ் கார்டன் சமையல்காரர் ராஜம்மாள், முக்கால்வாசி கேள்விகளுக்கு ‘ஞாபகம் இல்லை’ என்றே பதில் சொன்னாராம். விவேக் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. ‘கார்டனுக்கு அடிக்கடி வந்து போவார். சில நாள்கள் கார்டனிலேயே மேல் அறையில் தாய் இளவரசியுடன் அவர் தங்குவார். ஜெயலலிதாவைச் சந்திக்க மோடி வந்தபோதும் விவேக் உடன் இருந்தார்’ எனச் சொல்லியிருக்கிறார் ராஜம்மாள்.’’

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

‘‘ஓஹோ!’’

‘‘வருமானவரித் துறை அதிகாரிகள், விவேக் வீட்டில் முன்பு ரெய்டு நடத்தியபோது நகைகள், லேப்டாப், சொத்து ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். விவேக்கின் லேப்டாப்பில், ஜெயலலிதாவும் விவேக்கும் அன்பாக இருக்கிற 70-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்திருக்கின்றன. ‘இந்தளவுக்கு ஜெயலலிதாவுக்குப் பாசமாக இருந்த விவேக்கிடம் ஏன் இன்னமும் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தவில்லை’ என்பது வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கிறது. அதனால், வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆணைய அதிகாரி ஒருவரைச் சந்தித்து இந்தப் புகைப் படங்களைக் காட்டினாராம். கொடநாட்டிலும் போயஸ் கார்டனிலும் ஜெ.யுடன் விவேக் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்து, விசாரணை ஆணையத்தின் பார்வை விவேக்மீது அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. போயஸ் கார்டன் ரேஷன் கார்டில் பெயர் கொண்டவர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர், போயஸ் கார்டன் முகவரியில் கட்சி உறுப்பினர் கார்டு வைத்திருப்பவர் என்கிற அடையாளங்களோடு ஜெ.வுக்கு மிக நெருக்கமான இடத்தில் அவர் இருந்ததற்கான புகைப்படங்களும் சிக்கியிருப்பதால், வீட்டு சர்ச்சைகள் தொடங்கி ஜெயலலிதாவின் கடைசி கட்ட மனநிலை வரை விவேக்குக்குத் தெரியும் என நினைக்கிறார்கள். அதனால்தான், விவேக் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். ஆரம்பகட்ட விசாரணைகளை மிகத் தன்மையான முறையில் தொடங்கியிருக்கும் ஆணையம், போகப் போக கிடுக்கிப்பிடி போடும் என்கிறார்கள்.’’

‘‘ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி சந்திப்பில் என்ன விசேஷம்?’’

‘‘மார்ச் 2-ம் தேதி முதலமைச்சரிடமிருந்துதான் ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. அப்போது, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டத்தில் இருந்தார் ஸ்டாலின். முதல்வரின் செயலாளர்தான் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். ‘இன்று கோட்டைக்கு வர முடியுமா? முதல்வர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொல்லியிருக்கிறார். ‘என்ன விஷயம்?’ என்று ஆச்சர்யமாக ஸ்டாலின் கேட்க, ‘காவிரிப் பிரச்னை சம்பந்தமாக உங்களிடம் கலந்து பேச விரும்புகிறார்’ என்றாராம் செயலாளர். ‘கழக நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக முழுமையாக அறிந்து வைத்திருக்கிற துரைமுருகனும் ஊரில் இல்லை. அதனால் நாளை வருகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். முதல்வரும் அதை ஏற்றுக்கொள்ள, 4-ம் தேதி காலையில் ஸ்டாலினும் துரைமுருகனும் கோட்டைக்குச் சென்றார்கள்.’’

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

‘‘ம்!”

‘‘முதல்வரும் துணை முதல்வரும்தான் அறையில் இருப்பார்கள் என்று ஸ்டாலின் நினைத்துள்ளார். ஆனால், அங்கே அமைச்சர் பட்டாளமே இருந்தது. பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, முதல்வர்தான் விஷயத்தை ஆரம்பித்துள்ளார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனப் பிரதமரிடம் நேரில் சென்று வலியுறுத்த அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுக் கடிதம் கொடுத்துள்ளோம். பிரதமர் அலுவலகத்துடன் போனிலும் பேசியுள்ளோம். ஆனால், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. அந்தத் துறையின் அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தியுங்கள் என்று தகவல் வந்துள்ளது. என்ன செய்யலாம்?’ என்று கேட்டாராம் முதல்வர். ‘பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, மத்திய அமைச்சரை சந்திப்பது எப்படிச் சரியாகும்? காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியமில்லை என்று சொல்லும் நிதின் கட்கரியைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை’ என்று சொன்ன ஸ்டாலின், ‘மறுபடியும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.”

‘‘அதற்கு என்ன சொன்னாராம் முதல்வர்?”

‘‘ஸ்டாலினின் பதில் அவரைப் பதற்றத்தில் தள்ளியதாம். ‘மறுபடியும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது சாத்தியமில்லை. நீங்கள்தான் சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி. உங்கள் ஆலோசனையைச் சொல்லுங்கள். அதன்படி நடக்கிறோம்’ என்றாராம். ‘பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதிலிருந்து பின்வாங்கக் கூடாது. அந்த முடிவில் மாற்றம் செய்ய வேண்டுமானால், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. அவர்களின் கருத்தையும் அறிய வேண்டும். நாமாக முடிவெடுக்கக் கூடாது’ என்றாராம் ஸ்டாலின். அதன்பிறகுதான், ‘சட்டமன்றத்தையே கூட்டி தீர்மானம் போடலாம். டெல்லியிலிருந்து ஏதாவது தகவல் வருகிறதா என்று பார்ப்போம்’ என்று முதல்வர் சொன்னாராம்.’’

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

‘‘ஓஹோ!’’

‘‘முதல்வர் அப்போது, ‘சட்டமன்றத்தில் விவாதம் வேண்டாம். யாரையும் கண்டித்துத் தீர்மானம் போட வேண்டாம்’ என்று சொன்னாராம். ‘கண்டித்துத் தீர்மானம் போட வேண்டாம். ஆனால், விவாதம் நடக்கவேண்டும். உண்மைகளைப் பேசியாக வேண்டும்’ என்றாராம் ஸ்டாலின். ‘கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் நம்மை பிரதமர் சந்திக்க மாட்டார்’ என்று சொன்ன ஸ்டாலின், ‘சட்டமன்றத்தைக் கூட்டி மேலும் ஒரு தீர்மானம் போடுவதால் மட்டும் அவர்கள் இறங்கிவர மாட்டார்கள். அ.தி.மு.க., தி.மு.க எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம்’ என்று அழுத்த மாகச் சொன்னாராம். இதை எடப்பாடியும் அமைச்சர்களும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதன்பின் வெளியில் வந்து விட்டார்கள் ஸ்டாலினும் துரைமுருகனும். முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையை மீடியாக்கள் முன்பாக ஸ்டாலின் உடைப்பார் என்று ஆளும்கட்சி எதிர் பார்க்கவில்லை. மார்ச் 8-ம் தேதிக்குள் சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று சொல்லிவருகிறார் ஸ்டாலின். அவரது கருத்தை மற்ற கட்சிகளும் வலியுறுத்துகின்றன. ‘பிரதமர் சந்திக்க மறுக்கிறார், அவரிடம் துணிச்சலாகவும் கேட்க முடிய வில்லை’ என்பதே முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.’’

‘‘சரிதான்!’’

‘‘இன்றைய சூழ்நிலையில் ராஜினாமா செய்வதும் நல்லதல்ல என்று நினைக்கிறாராம் எடப்பாடி. ‘தான் சொன்னால் அனைவரும் ராஜினாமா செய்வார்களா என்பதும் சந்தேகம்தான்’ என்றும் கவலைப்படுகிறார் எடப்பாடி’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், மூன்று கான்ஃபிடென்ஷியல் நோட்களை கையில் திணித்துவிட்டுப் பறந்தார்.

படங்கள்: வீ.நாகமணி,
கே.ஜெரோம்

மோடியின் வாரணாசி தொகுதியில், மார்ச் 10-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. அ.தி.மு.க-வின் வட இந்திய நிர்வாகிகள் இணைந்து நடத்தும் இந்த விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் மைத்ரேயன் செய்கிறார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசுக்குத் தமிழக அரசு பிரஷர் கொடுப்பது தனிக்கதை. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதியை, அடுத்த சில நாள்களில் தேர்தல் கமிஷன் அறிவிக்கப்போகிறதாம். அதன்பின் இரண்டு மாதங்களுக்கு தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் என்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. இதைத்தான், மத்திய அரசு செய்யப் போகிறதாம். 

  கவர்னர் புரோஹித், செலவைக் குறைக்கும் வகையில் விமானப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு ரயில் பயணங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், கவர்னர் மாளிகைக்குள் இருக்கும் ஓர் அதிகாரி தன் அம்மாவின் சிகிச்சை  செலவையும் கவர்னர் மாளிகையின் கணக்கில் கொண்டு வந்துவிடுகிறாராம்

ரஜினிக்குக் கொடுத்த தொப்பி!

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறக்கப் போனபோது, கோயம்பேடு தொடங்கி மதுரவாயல் வரை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டார் ரஜினி. பழைய மன்றக்கொடியை ஏந்தியபடி மூத்த ரசிகர்கள், புதிய பளிச் கொடியை ஏந்தியபடி இளம் ரசிகர்கள் எனக் கலவையான கூட்டமாக அது இருந்தது. ஒவ்வோர் இடத்திலும் கூட்டத்தைப் பார்த்ததும் தன்னுடைய ஆடி காரின் சன்ரூஃப் கண்ணாடியை விலக்கிவிட்டு மேலே வந்து கையசைத்தார் ரஜினி. நிறைய பேர் பொக்கேவுடன் அவரை நெருங்க முயற்சி செய்தனர். வானகரத்தில் ஒரே ஒரு பொக்கேவை மட்டும் வாங்கிக் கொண்ட ரஜினி, தன்னுடன் வந்தவர்களுக்குக் கண்ணைக் காட்ட... அவர்கள் கூட்டத்தில் நுழைந்து பொக்கேக்களை வாங்கிக்கொண்டனர். ஒரு ரசிகர், கும்பலில் நசுங்கியபடி காரை நெருங்கி ஒரு தொப்பியைக் கொடுத்தார். ரஜினி புன்சிரிப்புடன் அதை வாங்கிக்கொண்டார். ஆனால், அதைத் தலையில் அணியவில்லை. ஏனெனில், அது ஆர்.கே. நகர் பிரசாரத்தின்போது, தினகரன் அணிந்திருந்தது போன்ற ஒரு தொப்பி. 

சிக்கலில் சிதம்பரம்!

.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க போதிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை சி.பி.ஐ-யும், அமலாக்கத் துறையும் தயாராக வைத்துள்ளன. ‘‘எப்போது வேண்டுமானாலும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிகாரிகள் கைப்பற்றியுள்ள லேட்டஸ்ட் ஆதாரம், சென்னையிலிருந்தே சிக்கியுள்ளது. ஸ்காட்லாந்து ராயல் வங்கியின் சென்னை கிளையிலிருந்து 2006 - 2009 காலகட்டத்தில், கார்த்தி சிதம்பரத்தின் கணக்கிலிருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் சிதம்பரம் கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது, ஐ.என்.எக்ஸ் மீடியா மூலம் கார்த்தி பெற்ற பணம் என்று அமலாக்கத் துறை நம்புவதால், அந்த விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெற உள்ளதாம். இதனால், சிதம்பரத்துக்கும் சிக்கல் வலுக்கிறது.

மிஸ்டர் கழுகு: அப்போலோவுக்கு முன்... விசாரணை வளையத்தில் விவேக்!

மார்ச் 4-ம் தேதி டெல்லியிலிருந்து மும்பை கொண்டுசெல்லப்பட்ட கார்த்தியை, பைகுல்லா பெண்கள் சிறையில் இந்திராணியுடன் நேருக்கு நேராக வைத்து நான்கு மணி நேரம் விசாரித்துள்ளனர். 120 கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. அந்த விசாரணையில், சிதம்பரத்தை டெல்லியில் நிதி அமைச்சக அலுவலகத்திலேயே சந்தித்ததையும், கார்த்தி பெயருக்கு 10 லட்சம் டாலர் பரிமாற்றம் செய்ததையும் இந்திராணி மீண்டும் உறுதி செய்துள்ளார். ஆனால், கார்த்தி தமக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார். சி.பி.ஐ காவலில் இருக்கும் கார்த்தியிடம் வழக்கறிஞர் ஆனந்த் நடராஜன் தமிழில் பேச அனுமதிக்கப்படுவதில்லையாம். கடந்த முறை நீதிமன்றத்தில் கார்த்தியிடம் நளினி சிதம்பரம் தமிழில் பேச முற்பட, சி.பி.ஐ அதிகாரிகள் தடுத்து ஆங்கிலத்தில் பேசும்படி கூறினர். அப்போது கார்த்தி, ‘‘எங்களைச் சுட்டிக்காட்டி நீங்கள் மட்டும் ஏன் இந்தியில் பேசுகிறீர்கள்? நீங்களும் ஆங்கிலத்தில் பேசுங்கள்’’ என்றார். அதற்கு அதிகாரிகள், ‘‘நீங்கள்தான் கஸ்டடியில் இருக்கிறீர்கள். நாங்கள் அல்ல’’ என்றவுடன் அமைதியானார் கார்த்தி.

ப.சிதம்பரமும் நளினி சிதம்பரமும் டெல்லிக்கு வரும்போது பல ஆண்டுகளாகவே ஒன்றாகத் தங்குவதில்லை. காங்கிரஸ் ஆட்சி போன பிறகு, டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள வீட்டில் சிதம்பரம் தனியாக  தங்கிவருகிறார். வசந்த் விகார் வீட்டில்தான் நளினி தங்குவது வழக்கம். கார்த்தி கைது செய்யப்பட்டபிறகு, ஜோர் பாக் வீட்டில் சிதம்பரத்துடன் சேர்ந்து தங்கத் தொடங்கியுள்ளார் நளினி. இருவரும் நீதிமன்றத்துக்கு ஒரே காரில் பயணிக்கிறார்கள்.