Published:Updated:

தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக்

தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக்
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக்

தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக்

இரண்டு முடிவுகள்... அவை, தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சராக இருந்த நேரத்தில் ப.சிதம்பரம் எடுத்தவை. அவற்றில் ஒன்று, தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்த நேரத்தில் எடுக்கப்பட்டது. ‘‘இந்த இரண்டு முடிவுகள் வழியாகவும் ப.சிதம்பரம் தகிடுதத்தம் செய்திருக்கிறார்’’ எனக் குற்றம் சாட்டுகிறார் நிஷிகாந்த் துபே. நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவராக இருக்கும் இவர், பி.ஜே.பி-யின் எம்.பி. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து, சிதம்பரத்துக்கு அடுத்த ‘செக்’ வைத்திருக்கிறது பொதுக் கணக்குக் குழு. ‘‘இந்த இரண்டு முடிவுகளால் மத்திய அரசுக்கு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்’’ எனக் குற்றம் சாட்டுகிறது பொதுக் கணக்குக் குழு.

நீரவ் மோடி உள்ளிட்டவர்களின் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் குறித்து பி.ஜே.பி அரசைக் கடுமையாக காங்கிரஸ் விமர்சனம் செய்துவரும் சூழலில், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸை நெருக்கடியில் தள்ள பி.ஜே.பி முடிவு செய்துள்ளது.  

தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக்

ப.சிதம்பரம் எடுத்த இந்த இரண்டு முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருப்பதைக் காரணம் காட்டி, 2013-ம் ஆண்டு மத்தியில், தங்கம் இறக்குமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. 18 நாள்கள் கழித்து இந்த முடிவு மாற்றப்பட்டது. 14.08.2013 அன்று 20:80 என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, ஒருவர் தங்கம் இறக்குமதி செய்யலாம். அவர், ஒருமுறை இறக்குமதி செய்த தங்கத்தில் 20 சதவிகித தங்கத்தை நகைகளாகச் செய்து ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, அடுத்த முறை தங்கம் இறக்குமதி செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்படும். இதுவே, 20:80 விதி. உள்நாட்டு நகை உற்பத்தியாளர் களுக்குத் தங்கம் கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இந்த விதி அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு சொன்னது.

இதில்தான் குற்றம் கண்டுபிடித்துள்ளது பொதுக் கணக்குக் குழு. ‘‘மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை இதை அப்போதே எதிர்த்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வ தற்காக நகைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குச் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிவிலக்கை இவர்கள் தவறாகப் பயன்படுத்து வார்கள். இந்த விதியில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, நிறைய பேர் தாங்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை தங்கமாக வெளிநாட்டுக்கு அனுப்பி, திரும்பவும் தங்கமாக இறக்குமதி செய்து வெள்ளையாக மாற்றிக் கொள்வார்கள் என்று சந்தேகப்பட்டது வருவாய்ப் புலனாய்வுத் துறை. அதுபோலவேதான் நடந்தது.

அது மட்டுமல்ல... இந்த நகை ஏற்றுமதி யாளர்கள் ஒவ்வொரு டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் 60 ரூபாய்) சம்பாதிக்கவும், 221.75 ரூபாய் வரியை மத்திய அரசு விட்டுக்கொடுத்தது. இதனால், அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கைக் குழு அறிக்கை சொல்கிறது. கணக்கிட்டுப் பார்த்தால், இந்த இழப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்’’ என அதிர வைக்கிறது பொதுக் கணக்குக் குழு.

சிதம்பரம் எடுத்த இரண்டாவது முடிவை இன்னும் கடுமையாக விமர்சனம் செய்கிறார், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்தன. ‘‘தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகும்வரை இருப்பது காபந்து அரசுதான். அது முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடாது என்பது சிதம்பரத்துக்குத் தெரியும். ஆனால், இந்த 80:20 விதிப்படி தங்கம் இறக்குமதி செய்யும் உரிமையை மேலும் ஏழு நிறுவனங்களுக்கு வழங்கும் முடிவை ப.சிதம்பரம் மே 13-ம் தேதி எடுத்தார். நீரவ் மோடியோடு சேர்ந்து தலைமறைவான அவரின் உறவினரான மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனமும் இதில் ஒன்று. இவற்றில் சில நிறுவனங்கள் அதற்குமுன் தங்க வர்த்தகத்தையே செய்யாதவை. ஆனால், இவர்களுக்கு இரண்டு டன் தங்கம் வரை ஒரே நேரத்தில் இறக்குமதி செய்ய அனுமதி தரப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக்

சிதம்பரம் கையெழுத்து போட்டதும், ஒரே நாளில் ஒன்பது டேபிள்களுக்கு சூப்பர்சானிக் வேகத்தில் ஓகே ஆகி வந்தது ஃபைல். மே 15-ம் தேதி - அதாவது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முதல் நாள், இது தொடர்பான குறிப்பாணையை ரிசர்வ் வங்கிக்கு பொருளாதார விவகாரங்களுக்கான துறை அனுப்பி வைத்தது. அடுத்த நாள் தேர்தல் முடிவு வெளியாகி காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது. ஆனால், அதன்பின் ஐந்து நாள்கள் கழித்து மே 21-ம் தேதி, இதற்கு ஒப்புதல் அளித்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது. 26-ம் தேதி புதிய பிரதமர் பதவி ஏற்கும் வரைகூட ரிசர்வ் வங்கி காத்திருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஏன் இந்த முடிவை சிதம்பரம் எடுத்தார்? அவருக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஏன் உடந்தையாக இருந்தார்? சிதம்பரத்துக்கு இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அல்லது இதனால் அவர் அடைந்த ஆதாயம் என்ன?’’ என்பது ரவிசங்கர் பிரசாத் கேட்கும் கேள்வி.

அடுத்தடுத்து மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளை இது தொடர்பான ஃபைல்களுடன் வரச் சொல்லியிருக்கிறது பொதுக் கணக்குக் குழு. கார்த்தி சிதம்பரம் கைது விவகாரத்தையடுத்து, சிதம்பரத்துக்கு இன்னொரு தலைவலி ஆரம்பித்துள்ளது.

- அகஸ்டஸ்,
ஓவியம்: ஹாசிப்கான்