Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

சித்தர்ராஜ், தட்டார்மடம்.

ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார்?


மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவே ரஜினி கட்சியின் தொடக்க விழாதான். தனியாகச் செலவுசெய்து கட்சி ஆரம்பிப்பதற்குப் பதிலாக, ஏ.சி.சண்முகம் செலவில் கட்சியைத் தொடங்கிவிட்டாரே ரஜினி!

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பா.சீமான்ஜி பாரதி,வெள்ளானைக்கோட்டை.

ரஜினி பேசுவது புரிகிறதா?


 ‘எம்.ஜி.ஆர் வழங்கியதுபோன்ற நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்’ - இதில் என்ன உங்களுக்குப் புரியவில்லை?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு கருணாநிதியா, ஜெயலலிதாவா என்ற போட்டி இருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி இருக்கும்?

இன்றைய சூழ்நிலையில் ஸ்டாலினா, ரஜினியா?

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

‘அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்களை டி.டி.வி.தினகரன் மூளைச் சலவை செய்கிறார்’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்லியிருக்கிறாரே?


மூளைச் சலவை எதன் மூலமாகச் செய்யப்படுகிறது என்பதையும் உதயகுமார் சொன்னால் நன்றாக இருக்கும்!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவச்சிலை அவரைப் போன்றே இல்லையாமே?

‘போன்றே’ என்றால் அந்தத் தோற்றத்தில் இல்லை என்று அர்த்தம். ஆனால், சிலை அவரை நினைத்து வடிவமைக்கப்பட்டதாகவே இல்லை. சிலை செய்த ஆந்திர சிற்பிக்கு ஜெயலலிதாவின் ஒரிஜினல் படம் தரப்பட்டதா என்றே தெரியவில்லை.2011-ம் ஆண்டு முதலமைச்சரானதும் ஜெயலலிதா, தனது ஐந்து புகைப்படங்களை பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார். ‘இந்தப் படங்களைத்தான் தனது செய்திகளுக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்றார். அதில் ஒன்றைக் கொடுத்திருந்தால்கூட ‘வடிவுக்கரசியா, காந்திமதியா, வளர்மதியா, நிர்மலா பெரியசாமியா, எடப்பாடி பழனிசாமியின் மனைவியா... யார் முகம் போல இருக்கிறது’ என்ற பட்டிமன்றம் சமூக வலைதளங்களில் நடந்திருக்காது.

சிலையை வைப்பதற்கு முன்னால் யாராவது பார்த்தார்களா? அப்படிப் பார்த்தவர்கள் அதற்குமுன் ஜெயலலிதாவைப் பார்த்துள்ளார்களா? அல்லது, அதுவரை தரையை மட்டுமே பார்த்தவர்களா? இப்படியும் ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? தமிழக திரைப்பட நடிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரே கட்சியாகச் செயல்பட்டால், அந்த நடிகர்கள் கட்சி வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா?


! ஒன்று திரண்டு ஒரே கட்சியாகச் செயல்பட வேண்டாம். ஒரு மேடையில் உட்கார வையுங்கள் பார்க்கலாம். அதுவே நடக்காது. ஒன்றாகச் சேர்த்து வைத்து ஒரு படம் எடுக்க முடியுமா? இது சாத்தியமே இல்லை. ஒரு படத்தில் ஒரு ஹீரோதான் இருக்க முடியும். ஒரு கட்சியிலும் ஒரு ஹீரோதான் இருக்க முடியும்!

உமரி பொ.கணேசன், மும்பை-37.

? சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நன்கு பாடுபடுகிறாரே. அதைப் பார்த்தாவது தமிழக முதல்வர் செயல்படுவாரா?

! சந்திரபாபு நாயுடு சொந்தக் காலில் நின்று வென்று முதல்வர் ஆனவர். எடப்பாடி பழனிசாமிக்கு இது இரவல் பதவி. சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் உண்டு. எடப்பாடி பழனிசாமிக்கு அப்படி நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மத்தியில் ஆளும்கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களது மாநிலத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவர் சந்திரபாபு நாயுடு. இங்கே இவர்களது ஆட்சியே மத்திய அரசின் தயவில் இருக்கிறது. சந்திரபாபு நாயுடுவுக்குச் சில கனவுகள் உண்டு; திட்டங்கள் உண்டு. அவற்றைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளார். அப்படி எந்தக் கனவையும் திட்டத்தையும் எடப்பாடி இதுவரை சொல்லவில்லை. அவர் சொல்லும் நன்னெறிக் கதைகளின் மூலமாகவும் அவரது கனவுகளையோ எதிர்காலத் திட்டங்
களையோ புரிந்துகொள்ள முடியவில்லை.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

 நடிகர் வடிவேலுக்கு முதலமைச்சர் கனவு வரவில்லையே?


அவர்தான் 23-ம் புலிகேசியாக நடித்துவிட்டாரே!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

கமல் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். ஆனால், பழ.நெடுமாறன், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை ஏன் சந்திக்கவில்லை?

கமல்தான் பதில் சொல்ல வேண்டும்!

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குமுன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்குமா?


காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரம் பொருந்திய வாரியமாக இருக்குமா, அது கறாராகக் கண்காணிக்குமா என்பதெல்லாம் அப்புறம். காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்றை அமைப்பதையே கர்நாடகம் தங்களது மாநிலத்துக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கிறது. கர்நாடகத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் பி.ஜே.பி. (இந்த இடத்தில் காங்கிரஸ் இருந்தாலும்!) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது.

‘ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை எனச் சில வாரங்களைக் கடத்தினால், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விடும். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதை வைத்து சில மாதங்களைக் கடத்தலாம். அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரும். இப்படியேதான் போகும்!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கமல் யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?


கூடும் கூட்டத்திடம்!

டாக்டர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

கழுகார் பதில்கள்!

அறிவியல் பொருள்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது. ஆனால், அறிவியலை அறிந்துகொள்ளும் ஆர்வம் மக்களிடம் இல்லாமல் போனது ஏன்?

சொ
ல்லப் போனால் முன்பைவிட அறிவியல் ஆர்வம் இப்போது அதிகமாகியுள்ளதாகவே தெரிகிறது. இதற்குக் காரணம், எலெக்ட்ரானிக் பொருள்களின் பயன்பாடு அதிகம் ஆனதுதான். அன்றாட வாழ்வில் இவற்றின் பயன்பாடு கூடக்கூட, அதுபற்றித் தெரிந்துகொள்ளும் தேவையும் அதிகம் ஆகிவிட்டது. ஒரு டி.வி இருக்கும் வீட்டில் மூன்று செல்போன்கள் இருக்கின்றன. இன்றைய இளைஞர்கள் எல்லா செல்போன்களையும் துல்லியமாகக் கையாள்கிறார்கள். ‘இந்த ஆர்வம் ஒரு மனித மனத்தை அறிவியல்பூர்வமாக மாற்றிவிடுமா’ என்றால் இல்லை.

இன்றைய பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள் அனுபவபூர்வமாக மாற வேண்டும். அது மனப்பாடக் கல்வியாக இருக்கிறது. அதனால் என்ன பயன்? ‘‘புத்திக்கூர்மையின் உண்மையான அறிகுறி, அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத்திறனுடன் தொடர்புடையது’’ என்றார் ஐன்ஸ்டீன். அப்படிப்பட்ட கற்பனைத் திறனை உருவாக்குவதாக அறிவியல் பாடம் மாற வேண்டும். அந்தக் கற்பனைத் திறன்தான், அறிவியல் முயற்சிகளை மாணவர்களுக்குத் தூண்டும். நிறைய முயற்சிகளில் இறங்குவார்கள். எல்லோரும் விஞ்ஞானி ஆகப் போவது இல்லை. ஆனால், எல்லோரும் விஞ்ஞான மனோபாவம் கொண்டவர்களாக மாற அந்தக் கல்வி வழிவகுக்கும்.

அதே ஐன்ஸ்டீன்தான் சொன்னார்: ‘தவறுகளே செய்யாத ஒருவன் இருக்கிறானென்றால், அவன் புதிதாக எதையுமே முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம்.’

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற 
இமெயிலுக்கும் அனுப்பலாம்!