Published:Updated:

“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது!”

“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது!”

அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்

‘டி.வி-யை ஆஃப் செய்துவிட்டால்கூட திரையில் அமைச்சர் ஜெயக்குமாரின் உருவம் தெரியும்’ என்று ஆளும் கட்சியினரே கலாய்க்கும் அளவுக்கு அ.தி.மு.க-வின் ‘ஆல் இன் ஆல்’ அறிவிப்பாளராக ஜொலிக்கிறார் ஜெயக்குமார். அதனாலேயே,  எதிர்க்கட்சியினர் மற்றும் எதிர் அணியினரின் வசவுகளுக்கும் ஆளாகி நிற்பவர். ஜாலியான நமது கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன் அவர் அளித்த பதில்கள் இங்கே அப்படியே...

‘‘தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பதில் உங்களுக்கும் பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் கடும் போட்டி நிலவுகிறதாமே?’’

(சத்தமாகச் சிரிக்கிறார்...) ‘‘இந்த விஷயத்தில் யாரையும் நான் போட்டியாகக் கருதுவதில்லை. டெக்னாலஜி இன்றைக்கு ஃபாஸ்ட்டாக இருக்கிறது. எனவே, ஒவ்வொரு விஷயத்துக்கும் உடனடியாக ரியாக்ட் செய்தாக வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, ‘எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்பேன்’ என்று ரஜினி பேசியிருக்கிறாரே... உங்க பதில் என்ன?’ என்று உடனே நிருபர்கள் கேட்கிறார்கள். அன்று மாலையே காவிரிப் பிரச்னை தொடர்பாக நான்கு மாநிலங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெளிவருகிறது. கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் இதுபற்றியெல்லாம் கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான்!’’

“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது!”

‘‘ ‘அமாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் பாதை’, கமல் மரபணு மாற்றப் பட்ட விதை’ என்றெல்லாம் உடனுக்குடன் பதிலடி தருகிறீர்களே... ஏற்கெனவே பதில்களைத் தயார் செய்துவைத்திருப்பீர்களா?’’

‘‘அந்த நிமிடத்தில் தோன்றுவதைச் சொல்கிறேன். முன்தயாரிப்பெல்லாம் எதுவும் கிடையாது. சிறுவயதிலேயே பழமொழிகளைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பழமொழிகளை மனப்பாடமாக வைத்திருக்கும் பழக்கம் எனக்கு உண்டு. ஒரு விஷயத்தைப் பழமொழியோடு சேர்த்துச் சொல்லும்போது அது மக்களுக்கு எளிதாகப் புரியும்.’’

‘‘மைக் மோகன், ‘இதயம்’ முரளிக்குப் போட்டியாக பொது நிகழ்ச்சிகளிலும் மைக் பிடித்துப் பாட ஆரம்பித்துவிடுகிறீர்களே.... இப்போது வெளியாகிற புதுப் படப் பாடல்களையும் இந்த ‘சூப்பர் சிங்கர்’ பாடுவாரா?’’

(ராகத்துடன் பாடுகிறார்) ‘‘தொட்டால் பூ மலரும்; தொடாமல் நான் மலர்ந்தேன்...’ என்று அந்தக்காலப் பாடல்கள் இலைமறை காயாக காதலைக் கொண்டாடியது. அதனால் சிறுவயதிலிருந்தே இந்தப் பாடல்களைப் பாடுவதில் எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், இன்றைக்கு ‘டாடி மம்மி வீட்டில் இல்லை... தடை போட யாருமில்லை’ என்று பட்டவர்த்தனமாகப் பாடல்கள் வருகின்றன. அதனால் இந்தப் பாடல்களை நான் கேட்பதேயில்லை. கல்யாண வீடுகளில், எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக மேடைகளில் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடுவேன். வீட்டில் நான் பாத்ரூம் பாடகன் மட்டுமல்ல... குடும்பத்தினரோடு சந்தோஷமாகக் கூடியிருக்கும் வேளையிலும் எம்.ஜி.ஆர். பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு, அந்தப் பாடலோடு இணைந்து நானும் பாடுவேன். என் மனைவிகூட, ‘தாத்தாவின் பாட்டைக் கேட்டாயா...’ என்று என் பேத்திகளிடம் சொல்லிச் சிரிப்பார்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது!”

‘‘சமூக ஊடகங்களில் உங்களைக் கலாய்த்து நிறைய மீம்ஸ் வருகின்றனவே... உங்களுக்குப் பிடித்த மீம்ஸ் எது?’’

‘‘சிவாஜி மணி மண்டப விழாவின்போது ‘யார் அந்த நிலவு... ஏன் இந்தக் கனவு’ என்ற பாடலையும், ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்...’ பாடலையும் மேடையில் பாடினேன். அந்தப் பாடல்களுக்கு பொருத்தமான திரைக் காட்சிகளை எடிட் செய்து வெளிவந்த வீடியோ காட்சிகளை உண்மையிலேயே நான் மிகவும் ரசித்தேன். அநாகரிகமான வார்த்தைகளில் வெளிவரும் மீம்ஸ்களைப் பார்க்கும்போது மனத்துக்குக் கஷ்டமாக இருக்கும். அதனால், அவற்றைக் கண்டுகொள்வதில்லை.’’

‘‘போன வருடம், தண்ணீர் ஆவியாகாமல் பாதுகாக்க ‘தெர்மாகோல்’ திட்டத்தைச் செயல்படுத்தியதுபோல், இந்த வருடம் கோடையைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’’

‘‘தெர்மாகோல் விஷயத்தைத் தேவையில்லாமல் சோஷியல் மீடியாக்கள்தான் ஊதி ரொம்பவும் பெரிதாக்கிவிட்டன.’’

‘‘நொய்யல் ஆற்றில் அலை அலையாக நுரை பொங்கிவந்தபோதும், ‘இது மக்கள் சோப்பு போட்டுக் குளித்ததால் வந்த நுரை’ என்று அமைச்சர் கருப்பணன் சொல்லியிருந்தாரே?’’

‘‘உதாரணமாக காவிரிப் படுகையிலிருந்து நீர் வருகிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். முதலில் நீரோடு சேர்ந்து கொஞ்சம் நுரையும் வரத்தான் செய்யும். அதைப் போல வந்ததைப் பார்த்து அமைச்சர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதையும்கூட சோஷியல் மீடியாக்கள்தான் பெரியளவில் பில்டப் செய்துவிட்டன.’’

“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது!”

‘‘ஜெயலலிதா சிலையில் உண்மையிலேயே ஜெயலலிதாவின் உருவம் தெரிகிறதா?’’

‘‘கட்சியின் அடிப்படைத் தொண்டனாக, ‘நமது அம்மாவை விமர்சனம் செய்கிறார்களே....’ என்ற உணர்வில் முதலில் கோபப்பட்டுவிட்டேன். பின்னர், அவர்களது விமர்சனத்தில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டுதான், ‘விரைவில் சரிசெய்கிறோம்’ என்ற அறிவிப்பையும் வெளியிட்டோம்’’

‘‘ ‘ஆன்மிக அரசியல்’ என்றால் என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா?’’

‘‘வாய்மை, தூய்மை, நேர்மை என்று வரிசையாகச் சொல்கிறார். அது என்ன ‘மை’யோ... ஒன்றும் புரியவில்லை. ‘கட்டுண்டு வாழ்வோம், பிரிவினை நாடோம், சமநிலையில் இணைவோம்’ இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று நாங்கள் தெளிவாகச் சொல் கிறோம். ரஜினியோ, ‘கட்சியை ஆரம்பித்துவிட்டுத்தான் கொள்கையைச் சொல்வேன்’ என்கிறார். கொள்கையே இல்லாமல் எப்படிக் கட்சி ஆரம்பிக் கிறார்? கட்சி ஆரம்பிப்பதற்கான அடிப்படை ஒருங்கிணைப்புத் திறன்கூட இல்லாத ரஜினிகாந்த், அரசியலில் நிலைத்திருக்க முடியாது!’’

- த.கதிரவன்
படம்: பா.காளிமுத்து