Published:Updated:

`அந்த 60,000 வாக்காளர்களை நம்பினார் பொன்னார்!'  - நிராகரித்த ஸ்டாலின்; மோடி - எடப்பாடி சந்திப்பு பின்னணி

எங்களைப் பொறுத்தவரையில் தி.மு.க கூட்டணிதான் மெயின் ஆப்ஷன். அவர்கள் எங்களுடன் வருவார்கள் என்று நம்பித்தான் ஆளும்கட்சி மீது தொடர்ச்சியான ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

`அந்த 60,000 வாக்காளர்களை நம்பினார் பொன்னார்!'  - நிராகரித்த ஸ்டாலின்; மோடி - எடப்பாடி சந்திப்பு பின்னணி
`அந்த 60,000 வாக்காளர்களை நம்பினார் பொன்னார்!'  - நிராகரித்த ஸ்டாலின்; மோடி - எடப்பாடி சந்திப்பு பின்னணி

டெல்லி விசிட்டில் மிகுந்த உற்சாகத்துடன் தென்பட்டார் எடப்பாடி பழனிசாமி. பிரதமருடனான சந்திப்பிலும் புன்சிரிப்புடன் தோற்றமளித்தார். 'தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லாததால், அ.தி.மு.கவோடு பா.ஜ.க அணி சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பேட்டியளித்த முதல்வர், ``முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும். மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும். மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைவாக விடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்" எனப் பிரதமரிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சங்களை விளக்கினார். 

``கிறிஸ்டி ரெய்டு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் ரெய்டு என ஆளும்கட்சியினரைக் குறிவைத்த மத்திய அரசு, இப்போது இணக்கமாகச் செல்வதன் பின்னணி என்ன?" என அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் மோடியை சந்திப்பதற்கு முன்பாகவே, தனியாக அவரைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை, ஒன்று எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும் அல்லது மோடி சொல்ல வேண்டும். என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றி முன்கூட்டியே விவாதித்து முடித்துவிட்டனர். இதற்கு நான்கு நாள்கள் முன்னதாக ஆளுநருடனான சந்திப்பில் இதற்கு அச்சாரம் போடப்பட்டுவிட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஏற்படும் எனப் பேசி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில், சிறுபான்மை வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க கூட்டணிக்குத்தான் சென்று சேரும். ஜெயலலிதா இல்லாததால், மைனாரிட்டி வாக்குகள் அ.தி.மு.கவுக்குக் கிடைக்கப் போவதில்லை. தவிர, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கவும் யாரும் தயாராக இல்லை. அரசியல் களத்தில் இருவருமே தனித்துவிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அணி சேருவதில் ஆச்சர்யம் இல்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

``எங்களைப் பொறுத்தவரையில், தி.மு.க கூட்டணிதான் மெயின் ஆப்ஷன். அவர்கள் எங்களுடன் வருவார்கள் என்று நம்பித்தான் ஆளும்கட்சி மீது தொடர்ச்சியான ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழ்நிலையில், `கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது' என அஞ்சியே எங்கள் கூட்டணியை தி.மு.க. நிராகரித்துவிட்டது. கூட்டணியே இல்லாததால் திகைத்து நிற்கிறது பா.ஜ.க தலைமை. இந்த விவகாரத்தில் தி.மு.க பேராசைப்படுகிறது" என விவரித்த தமிழக பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர்,

``தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறது தி.மு.க. ஆனால், எங்களுடன் கூட்டணி அமைப்பதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எந்த லாபமும் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி அரசைக் கவிழ்ப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது. உளவுத்துறை கொடுத்த அறிக்கையின்படி, `தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது. 2009-ம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றதுபோல, எடப்பாடி பழனிசாமி பத்து எம்.பி தொகுதிகளை வெல்வார்' எனக் குறிப்பிட்டுள்ளது. அப்படிப்பட்ட எடப்பாடியை நாம் ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சில பா.ஜ.க நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது. தி.மு.கவோடு கூட்டணிக்கு நாங்கள் எவ்வளவோ முயன்றும் அவர்கள் ஒத்துவரவில்லை. ஆனால், துரைமுருகன் போன்றவர்கள், 'இன்னும் ஆறு மாதத்தில் இரண்டு தேர்தலும் வரும்' எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

எங்களோடு டீல் பேசி வந்தால் அடுத்தகட்டத்தைப் பற்றி யோசிப்போம். அப்படிச் செய்யாமல் கண்ணை மூடிக் கொண்டு, நாங்கள் பிரதமருக்கு நிகரானவர்கள் என ஸ்டாலின் நினைத்தால், அது எந்தவித அரசியல் லாபத்தையும் கொடுக்காது. ஐந்தாண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நீடிக்கத்தான் செய்யும். இந்த ஆட்சி முடிந்து தேர்தல் நடக்கும்போது, `பத்து வருடம் ஆட்சியில் இல்லாத தி.மு.க ஊழல் செய்யும்' எனக் கூறி வாக்கு கேட்பார் எடப்பாடி பழனிசாமி. அது தி.மு.கவுக்குத்தான் பாதிப்புகளை உருவாக்கும். தி.மு.கவினர் ஆசைப்படுகின்றனர். அதற்கேற்ப நியாயமாக நடந்துகொள்ளவில்லை. தி.மு.க கூட்டணி அமைய வேண்டும் என பொன்னாரும் ஆசைப்பட்டார். தி.மு.க கூட்டணியில் இருந்தபோது 50 சதவிகித வாக்குகளைப் பெற்றார் பொன்னார். மதத்தைப் பற்றிக் கவலைப்படாமல் 60,000 தி.மு.க வாக்காளர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டனர். இதை எதிர்பார்த்துத்தான் தி.மு.க அணியை அவர் விரும்பினார். தொடர்ச்சியாக ரெய்டுகளை நடத்தியதும் இந்த அடிப்படையில்தான். இப்போதும், பா.ஜ.க-வின் முதல் எதிர்பார்ப்பு தி.மு.கதான். ஸ்டாலின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட காட்சிகள் அரங்கேறும்" என்றார் விரிவாக.