Published:Updated:

பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த 'ஏரோப்ளேன் கோரிக்கை'..!

பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த 'ஏரோப்ளேன் கோரிக்கை'..!
பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த 'ஏரோப்ளேன் கோரிக்கை'..!

ழையைக் காரணம்காட்டி, தமிழகத்தின் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்க கோரிக்கை வைத்த அ.தி.மு.க அரசு, அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று டெல்லி சென்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான விதையைத் தூவிவிட்டு வெற்றிகரமாகச் சென்னை திரும்பியிருக்கிறார்.

அ.தி.மு.க-வில் தற்போது நீடித்துவரும் உள்கட்சி மோதலால் புதிய தலைமைகள் உருவானாலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவாகவே உள்ளனர். அதனால், ஆட்சிக்குப் பாதிப்பு ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், `தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது வரும்?' என்ற பரபரப்புத் தொற்றிக்கொண்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துவிட்டு டெல்லியில் பிரதமர் மோடியையும் பார்த்துவந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பல மாதங்கள் காத்திருந்தும் ஜெயலலிதா உருவப்படம் திறக்கவராத, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வராத பிரதமர் மோடியை டெல்லிக்குச் சென்று சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எனவேதான், இந்தச் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். 

ஆனால், அ.தி.மு.க-வினரோ, `இது, தமிழக மக்கள் நலன் சார்ந்த சந்திப்பு' என்று சொல்கிறார்கள். மேலும், பிரதமர் மோடியிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது, 37 பக்கங்கள் கொண்ட 20 கோரிக்கைகளை மோடியிடம் எடப்பாடி அளித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அதில் முக்கியமாக, அரசியல் ரீதியாக, அறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் சொல்கிறார்கள். மேலும், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரை நினைவுகூரும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர்சூட்ட வேண்டும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் நிதி ஒப்புதல் வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இவற்றையெல்லாம்தாண்டி, தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியை வழங்குவது குறித்தும் பிரதமரிடம் எடப்பாடி நினைவுபடுத்தி இருக்கிறார். அதாவது, ``தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கவேண்டிய 2017-18-ம் ஆண்டுக்கான செயல்திறன் மானியம் ரூ.560.15 கோடி மற்றும் 2018-19-ம் ஆண்டு முதல் தவணையாக வழங்கவேண்டிய அடிப்படை மானியம் ரூ.1,608.03 கோடி என்று பல ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு தர வேண்டி இருப்பதையும் நினைவுபடுத்தியதுடன், துறைவாரியாகத் தமிழகத்துக்கு ஒதுக்கித்தர வேண்டிய நிதியை உடனே தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். 

இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் பிரதமர் மோடி ஒவ்வொரு முறை சென்னை வரும்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கெனவே வலியுறுத்தியவைதாம். இவை அனைத்தையும் பிரதமர் செய்துகொடுத்தால், `முதல்வரின் கோரிக்கை ஏற்பு - அ.தி.மு.க. அரசின் சாதனை' என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொல்லிக் கொள்ளலாம். இல்லையென்றால், `பலமுறை கோரிக்கை வைத்தபிறகும் மத்தியில் உள்ள மோடி அரசு நிறைவேற்றித் தரவில்லை' என்று பி.ஜே.பி-க்கு எதிராகத் தேர்தல் பிரசாரத்தின் போது சொல்லலாம் என்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தனது டெல்லி பயணத்தை வெற்றிகரமாக்கி இருக்கிறார் எடப்பாடி.

மேலும், இந்த டெல்லி பயணத்தினை தன் சொந்த மாவட்டமான சேலத்தின் நலனுக்கும் சாதுர்யமாகப் பயன்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, எடப்பாடி வைத்த கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் சேலத்தைச் சேர்ந்தன. ``சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி இடத்தில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். சேலம் - சென்னை இடையே மாலை நேர விமானங்களையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்பதே அந்தக் கோரிக்கைகள். 

எனவே, `முதல்வரின் டெல்லி சந்திப்பு வெற்றிகரமாக அமைந்துவிட்டது' என்று அ.தி.மு.க-வினர் சொல்லிக் கொண்டாலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எடப்பாடி டெல்லி சென்று வந்திருப்பது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. `அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, டி.டி.வி.தினகரன் செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியும் ஒதுக்குகிறாரே' என்ற ஆதங்கம் அவர்களிடையே எழுந்துள்ளது.