Published:Updated:

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

 - கரு.முத்து
                           
2000 மாவது ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது காசுக்கு கல்வி கலாச்சாரம். அதுவரை பட்டும் படாமலும் முக்கிய சில படிப்புக்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்து சீட் வாங்கவேண்டியிருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்துதான் எல்லா படிப்புகளுக்குமே காசு வாங்குவது எழுதப்படாத சட்டமாக ஆனது. அதற்கு முந்தைய கால அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பொற்காலமாக விளங்கியது. 

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

ஒரு மாணவன் அங்கு படிக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே போதும். அழைப்புக் கடிதம் வீடு தேடி வந்துவிடும். விண்ணப்பத்தின் விலை ஐம்பது ரூபாயோ, நூறு ரூபாயோ படிப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் பல்கலைகழகத்துக்கு வந்து நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். எம்.ஏ, போன்ற படிப்புகளை ஒரு மாணவன் விடுதிகட்டணத்தோடு சேர்த்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்குள் முடித்துவிடலாம்.

பொறியியல் படிக்க இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாக ஆகும். பெரிய படிப்பான மருத்துவப் படிப்புக்கும் நிலைமை அப்படித்தான் இருந்தது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் கட்டணம் மட்டும் கட்டிவிட்டு மருத்துவம் படிக்கலாம். வேளாண்மை படிப்புகளுக்கும் அப்படித்தான் மிகக் குறைந்த கட்டணம் இருந்தது.

2000த்துக்கு பிறகு வேளாண்மை, பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புக்கள் பணம் காய்ச்சி மரமாகியது. இந்த மூன்று படிப்புக்களுக்கும் சேருவதற்கு பல்கலைக் கழகத்தில் நேரடியாக அனுமதி கிடைக்காது.  இணைவேந்தரை பார்த்துத்தான் சீட் வாங்க வேண்டும். அவரும் ஆரம்பத்தில் பணமெல்லாம் வாங்கவில்லை.

சிதம்பரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில அளவிலான முக்கிய பிரமுகர்கள்,  வருவாய்த்துறை காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் அவரை சந்தித்து பையனுக்கோ, பெண்ணுக்கோ சீட் வேண்டும் என்று கேட்டால் போதும். உடனடியாக வழங்கப்படும். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளில் கட்சிப் பதவிக்கு பலத்த போட்டி ஏற்பட்டது. ஒரு லெட்டர்பேடு இருந்தால் போதும். அதை வைத்து செட்டியாரிடம் சீட் வாங்கிவிடுவார்கள். அவரின் இந்த இரக்கக் குணத்தை பல்கலைகழகத்தின் பண ஆசை பிடித்த சில நிர்வாகிகளும் கல்வியாளர்களும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள்.

அதற்காக அவர்கள் கடைபிடித்த உத்தி ரொம்பவும் பழைய பாணிதான். எம்.ஏ.எம் ராமசாமியை எப்படியாவது அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவரைப் பார்த்ததும் காலில் விழுந்து வணங்குவார்கள். "என்ன விஷயம்?" என்று அவர் கேட்டதும்  ‘‘ஐயா எங்க சொந்தகார பையன் ஒருத்தன், ரொம்ப ஏழைங்க, இஞ்சினியரிங் படிக்க ஆசைப்படறான்யா’’ என்று சொல்லி திரும்பவும் காலில் விழுவார்கள். உடனடியாக அவர்கள் கேட்ட சீட் வழங்கப்படும். அதை  வாங்கிக் கொண்டு வந்து தங்கள் இஷ்டத்துக்கு அதற்கு விலை வைத்து விற்று காசு கொடுத்த மாணவர்களை சேர்த்தார்கள். இப்படி மருத்துவத்துக்கு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை விலை நிர்ணயித்தார்கள். வேளாண்மைக்கு ஒரு லட்சம் என்று ஆக்கினார்கள். பொறியியலுக்கு இருபத்தைந்தாயிரம் ரேட்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

ஒரு துறையில் உள்ள ஒரு பேராசியரோ அல்லது ஊழியரோ இப்படி எம்.ஏ.ம்மை பார்த்து சீட் வாங்குவதை பார்த்ததும், அதே துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஆசை துளிர்விட தொடங்கியது. அவர்களும் தனித்தனியாக சென்னைக்கு படையெடுக்க தொடங்கினார்கள். சிதம்பரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் செட்டியாரை பார்க்க அணி வகுத்தார்கள். நாளொன்றுக்கு இப்படி சில நூறுபேர் வரையிலும் தன்னை பார்க்க வருவதை கண்டதும் அவர்களை சந்திக்க மறுத்த செட்டியார், தன்னுடைய உதவியாளரான எஸ்.ஆர் என்று பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்படுகிற ராஜேந்திரனை பார்க்க உத்தரவிட்டார். சீட் வேண்டுமா ராஜேந்திரனை பார்த்தால் போதும் என்ற நிலைமை உருவானது. அப்போதுதான் செட்டியாருக்கு பணம் கொடுக்கும் வழக்கமும் ஆரம்பித்தது.

பத்து மெடிக்கல் சீட் கொடுங்க என்று கேட்டு ஒரு சீட்டுக்கு பத்துலட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை மொத்தமாக ராஜேந்திரனிடம் கொடுத்துவிட்டு சீட் வாங்கி பதினைந்து லட்சம், இருபது லட்சம் என்று வெளியில் விற்றார்கள் புரோக்கர்கள். பொறியியல் படிப்புக்கும் இப்படித்தான் மொத்தமாக ஒரு தொகையை கொடுத்துவிட்டு ஐம்பது, நூறு என்று அட்மிசன் வாங்கிவிடுவார்கள். அதனை மாணவர்களுக்கு பல ஆயிரங்களை மேலே வாங்கிக் கொண்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

இவர்களிடம் சீட்டை வாங்கி அதை தாங்கள் இன்னும் அதிக விலைக்கு விற்று பிழைப்பவர்களும் பெருத்தார்கள். இப்படி ஒட்டுமொத்த ஊழியர்களுமே ஒரு கட்டத்தில் புரோக்கர்களாகிவிட்டார்கள். தொழில் போட்டி ஏற்பட்டது. அடிதடிகள் நடந்தது. ஒரு கொலையும் நடந்துமுடிந்தது.  பல்கலை ஊழியர்களை பார்த்து  சென்னையில் செட்டியார் அரண்மனையில் வேலை பார்க்கும் அத்தனை தொழிலாளிகளுமே புரோக்கர்களாக மாறினார்கள்.

அங்கிருக்கும் துப்புரவு தொழிலாளி கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்கள். அவர்களுக்காக செட்டியார் இலவசமாக தரும் சீட்டை பெற்று அதை லட்சங்களுக்கு விற்று சம்பாதித்தார்கள்.

இவ்வளவும் நடக்கிறதே பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர் என்று எல்லோரும் இருக்கிறார்களே அவர்கள் என்ன செய்துகொன்டிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் தொடர்பு உண்டா? அதையெல்லாம் நாளை பார்ப்போம்...