Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

டி.கே.மோகன், ஆதம்பாக்கம்.

‘தி.மு.க-வில் இரு பதவிகள் வகிக்கும் நிர்வாகிகள் தாங்களாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று பேராசிரியர் க.அன்பழகன் கூறியிருப்பது ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பொருந்துமா?


பொருந்தவேண்டும்! அன்பழகன் அறிவிக்கிறார் என்றால், அவராக அறிவிக்க வில்லை. ஸ்டாலின் சொல்லித்தான் அறிவிக்கி றார். அப்படியானால் ஸ்டாலின் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டார். சிலரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். தனது பதவியை யாருக்கோ விட்டுத் தரத் தயாராகிவிட்டார் என்று பொருள். சொன்னபடி நடக்கிறார்களா என்று பார்ப்போம்.

இப்படித்தான் கருணாநிதியும் ஒரு முறை அறிவித்தார். கட்சிப் பதவிகளில் இருப்பவர் களிடம், ‘சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கேட்க மாட்டோம்’ என்று எழுதி வாங்கினார். ஆனால், அடுத்து நடந்த தேர்தலிலும் மாவட்டச் செயலாளர்கள் அனைவருமே போட்டியிட்டார்கள். அந்தக் கடிதங்கள் கருணாநிதியின் லாக்கரில் பத்திரமாகத்தான் இருக்கும். அப்படி ஆகிவிடாமல் அன்பழகன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கழுகார் பதில்கள்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

‘‘ஆட்சியாளர்கள் என்னைக் கேட்டால், காவிரியிலிருந்து தண்ணீர் பெற மாற்றுவழி கூறுவேன்’’ என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறாரே?


‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம்’ என்பது போல இருக்கிறது சு.சுவாமி பேச்சு. தமிழகத்துக்குச் சட்டப்படி, நீதிப்படி, நியாயப்படி காவிரியிலிருந்து கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும். அதைத் தரவில்லை. வாங்கித் தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அவர்களும் செய்யவில்லை. தான் சார்ந்திருக்கும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரதமர் மோடியிடம் சொல்லி,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லும் முயற்சியில் இறங்காத சு.சுவாமி, ‘நதியை இணைக்கலாம், கடல்நீரைக் குடிநீராக்கலாம் என்று திசைதிருப்புகிறார். இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு, எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்பது ஒருபக்கம் இருக் கட்டும். திட்டம் செயல் படுத்தப்படுவதற்குள், தஞ்சை நிலம் கருகி கட்டாந்தரை ஆகிவிடாதா? நான்கு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்தாமல், அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தியதிலிருந்தே இவர்களின் அக்கறை தெரியவில்லையா?

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

மத்திய பி.ஜே.பி அரசு தமிழ்நாட்டைப் பற்றி என்னதான் எண்ணம் வைத்துள்ளது?


நல்ல எண்ணம்தான் வைத்துள்ளது. தமிழ் நாட்டில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடவேண்டும் என்பது தான் அந்த எண்ணம்.

அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை.

ரஃபேல் ரக போர் விமான கொள்முதல் தொடர்பாக சாட்டப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி இதுவரையில் வாய் திறக்காதது ஏன்?


மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில், பாதுகாப்புத்துறைக்கு மூன்று அமைச்சர்கள் வந்துவிட்டார்கள். இதிலேயே ஏதோ ‘ரகசியம்’ இருக்கிறது என்ற சந்தேகத்தைப் பலரும் கிளப்பத்தான் செய்கிறார்கள். எத்தனையோ கேள்விகளுக்கு நரேந்திர மோடி பதில் சொல்லாமல்தான் இருக்கிறார். அவற்றில் இதுவும் ஒன்று என எடுத்துக்கொள்ளுங்கள்.

காயல் எம்.ஃபாரூக், காயல்பட்டினம்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணக்கமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருவது ஏன்?


அதிலாவது இருவரும் ‘ஒற்றுமையாக’ இருக்கி றார்கள் அல்லவா?

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டுகிறாரே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு?

‘ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை’, ‘சிறப்பு நிதி தரவில்லை’ என்பவை உள்ளிட்ட 19 வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று சொல்லி, தெலுங்குதேசம் - பி.ஜே.பி இடையே மோதல் தொடங்கியிருக்கிறது. மத்திய அமைச்சரவையிலிருந்த தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்களும், ஆந்திர அமைச்சரவையிலிருந்த பி.ஜே.பி அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். அங்கே காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் கொஞ்சம் முன்னேறிக்கொண்டு வருகின்றன. ‘தனித்தே நிற்போம்’ என்ற முடிவுக்கு பி.ஜே.பி-யும் வந்துள்ளது. இதனால்தான் இந்த முட்டலும் மோதலும். ‘‘இது பிளவுதானே தவிர விவாகரத்து அல்ல’’ என்று பி.ஜே.பி சொல்கிறது. முதலில் சிவசேனா, இப்போது தெலுங்கு தேசம் என பி.ஜே.பி தனது கூட்டணிக் கட்சிகளை இழந்து வருகிறது.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


‘தி.மு.க., அ.தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள்’ என்று கமல் கட்சியின் அறிமுகக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளாரே?


இப்படிப் பேசிய அர்விந்த் கெஜ்ரிவாலை வழிமொழிந்தோ, வழிமறித்தோ கமல் பேசவில்லையே. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரே. இதற்குத் தனது கருத்தை கமல் சொல்லியிருந்தால், மதுரைப் பேச்சு கவனம் பெற்றிருக்கும்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

விவசாயிகள், மீனவர்களின் புனர்வாழ்வுக்கு கமல் முக்கியத்துவம் கொடுப்பார் போலத் தெரிகிறதே?

கொடுத்தால் நல்ல தொடக்கம்தான்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘‘தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க கரைவேட்டி கட்டக் கூடாது, கட்டினால் அதை உருவுங்கள்’’ என்று அமைச்சர் மணிகண்டன் பேசியிருக்கிறாரே?

அ.தி.மு.க அமைச்சர்கள் இந்த ஒரு வேலையைத்தான் இதுவரை செய்யாமல் இருந்தார்கள்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

குட்டிக் கதைகளைச் சொல்வது அரசியல்வாதிகளுக்கு வாய் வந்த கலையா?

மக்கள் வாயைப் பிளந்து கேட்க ஆரம்பித்தால், அவர்களுக்கு வாய் வந்த கலைதான். கதைக்குக் காரணம் கேளுங்கள்... மாட்டிக் கொள்வார்கள்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி. அவிநாசி.


தமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் வலம் வரப்போகிறாரா?


அப்படி ஒரு தகவலும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரை ‘அரசர்’ தொடர்வார் என்றே சொல்லியிருக்கிறது டெல்லி.

நடிகர் ராதாரவி (தி.மு.க)

கழுகார் பதில்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அப்படி அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் தன்னுடைய சமீபத்திய இறுதித் தீர்ப்பில் சொல்லியிருக்கிறதா... இல்லையா என்கிற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடித்தாக வேண்டும்.

we direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today -இது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

இதற்கு மத்திய மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தங்கள் வசதிக்கு ஏற்ப பொழிப்புரை எழுதிக்கொண்டிருக்கின்றன. காவிரிநீர் பங்கீட்டைக் கண்காணிக்க, நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் இதற்கு பொருள் என்பது தமிழக அரசின் வாதம். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த நான்கு மாநில தலைமைச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில்  பேசிய கர்நாடக தலைமைச் செயலாளர் ரத்ன பிரபா, ‘‘உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை” என்று சொல்லியிருக்கிறார். இதைத் தெளிவுபடுத்தி இரு மாநிலங்களுக்கும் சமநீதி சமைக்கவேண்டிய மத்திய பிஜேபி அரசோ... கர்நாடகா சொல்லியிருப்பதையே தானும் வழிமொழிந்திருக்கிறது. இதே  கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், “தீர்ப்பில் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்று குறிப்பிடப்படவில்லை. ‘செயல் திட்டம்’ என்று சொல்வது காவிரி மேலாண்மை வாரியத்தைத்தானா என்பது கேள்விக்குரியது” என்று குழப்பியுள்ளார்.

இப்படி ஒரு குழப்பமான சூழல் உருவாகியிருப்பதை உணர்ந்து, உச்ச நீதிமன்றம்தான் தன்னுடைய தீர்ப்பைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், தீர்ப்பு வெளியான நாளிலிருந்தே இந்த சந்தேகங்கள் கிளப்பப்பட்டும், அமைதியாகவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!