Published:Updated:

காவிரித் தீர்ப்பு... கர்நாடகாவின் குரலில் பேசும் மத்திய அரசு!

காவிரித் தீர்ப்பு... கர்நாடகாவின் குரலில் பேசும் மத்திய அரசு!
பிரீமியம் ஸ்டோரி
News
காவிரித் தீர்ப்பு... கர்நாடகாவின் குரலில் பேசும் மத்திய அரசு!

காவிரித் தீர்ப்பு... கர்நாடகாவின் குரலில் பேசும் மத்திய அரசு!

‘‘உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரித் தீர்ப்பில் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்கிற வார்த்தை இடம்பெறவில்லை’’ என்று மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரித் தீர்ப்பைச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்க டெல்லியில் நடத்தப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் முடிந்திருக்கிறது. ‘‘மத்திய அரசின் சார்பில் எதையும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை’’ என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அதிகாரிகளும், மற்ற மாநில அதிகாரிகளும். தீர்ப்பு குறித்து நான்கு மாநிலங்களின் கருத்துகளை மட்டுமே மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் உ.பி.சிங் கேட்டிருக்கிறார். பின்னர், அவற்றை ஊர் திரும்பியதும் எழுத்து மூலம் அனுப்பி வைக்கும்படி சொன்னார். அடுத்த கூட்டம் பற்றியோ, அல்லது எப்போது முடிவெடுக்கப்படும் என்பது குறித்தோ, எதுவும் சொல்லவில்லையாம்.

காவிரித் தீர்ப்பு... கர்நாடகாவின் குரலில் பேசும் மத்திய அரசு!

கூட்டத்துக்குப் பின் தமிழகச் செய்தியாளர்கள் உ.பி.சிங்கை வழிமறித்துக் கேட்டபோதுதான், ‘‘தீர்ப்பில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்று சொல்லவில்லை. தீர்ப்பைச் செயல்படுத்த ஒரு ஸ்கீம் (செயல் திட்டம்) உருவாக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது’’ என்றார். தீர்ப்பு குறித்து மத்திய அரசு வாய்திறப்பது இதுவே முதல்முறை. அப்போது செய்தியாளர்கள், ‘‘காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தைத்தானே ‘ஸ்கீம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது?’’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘ஸ்கீம் என்பது வாரியமாகக்கூட இருக்கலாம். அல்லது, வேறு குழுவாகவும் இருக்கலாம். அது நீர்வளத்துறை ஆணையர் தலைமையிலான குழுவா, ஒன்பது பேர் குழுவா என்பதெல்லாம் பின்னர் முடிவு செய்யப்படும். அது ஒரு சுதந்திரமான குழுவாக இருக்கும்’’ என்றார்.

மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சொன்ன அதே ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தையைத்தான் கர்நாடகா தலைமைச் செயலாளர் ரத்தின பிரபாவும் பயன்படுத்தினார். ‘‘தீர்ப்பின்படி, அந்த ஸ்கீம் உருவாக்கப்பட்டு, எங்கள் மாநிலத்துக்கு 284.75 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், அந்தத் தண்ணீரை எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் புதிதாக அமையவிருக்கும் குழு கண்காணிக்கக் கூடாது. அணைகளின் கட்டுப்பாட்டையும் புதிய திட்டத்துக்குள் கொண்டுவரக் கூடாது’’ என்று கூட்டத்தில் தெளிவாக வலியுறுத்தினார் அவர். 

தமிழக, புதுவை அரசுகள் சார்பில் ‘மேலாண்மை வாரியம்தான் அமைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது. கேரளாவோ, ‘‘வாரியமோ, குழுவோ... எதுவானாலும் எங்களுக்குச் சம்மதம்தான். எங்களுக்கு 30 டி.எம்.சி தண்ணீர் குறைவில்லாமல் தரப்பட வேண்டும்’’ என்று கேட்டது.

இதைச் செய்தியாளர்களிடமும் அந்தந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூட்டம் முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியேறி வேறு வழியாகச் சுற்றிக்கொண்டு செய்தியாளர்கள் கண்ணிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மாலையில் தான் சென்னையிலிருந்து பத்திரிகைக ளுக்கு செய்திக்குறிப்பு வழங்கப்பட்டது.

‘‘மத்திய அரசு சொல்வது போன்று ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லையா?’’ என்று தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிவரும் வழக்கறிஞர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘இந்தத் தீர்ப்பை மட்டுமே தனியாகப் படிக்கக் கூடாது. நடுவர் மன்ற உத்தரவையும் சேர்த்துதான் தீர்ப்பை வாசிக்க வேண்டும். தமிழகத்தின் பங்கில் 14.75 டி.எம்.சி தண்ணீரைக் குறைத்ததைத் தவிர நடுவர் மன்ற உத்தரவிலிருந்து எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பிலேயே தெளிவுபடுத்தி யுள்ளது. உச்ச நீதிமன்றம் சொல்லும் ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான்’’ என்றனர்.

‘‘அரசியல் லாபத்துக்காக இப்போது இந்தப் புதிய குழப்பத்தை எழுப்பி கர்நாடக மக்களிடம் பரப்ப முயற்சி செய்கிறார்கள். நாம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் சென்றால், நமக்குச் சாதகமான பதில்தான் கிடைக்கும். ஆனால், அது நாமே தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்து வதாக அமைந்துவிடும். அதனால்தான், அந்த முயற்சியில் இறங்கவில்லை’’ என்றனர் அவர்கள்.

காவிரித் தீர்ப்பு... கர்நாடகாவின் குரலில் பேசும் மத்திய அரசு!

இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலத் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடத் தயாராகிவருகிறது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதைக் காரணமாகக் கூறி மத்திய அரசு முடிவு எடுப்பதைத் தள்ளிப்போட வாய்ப்புள்ளதாகவே டெல்லி வட்டாரத்தில் கருதுகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் சொன்ன ஆறு வாரக் கெடு இம்மாத இறுதியில் முடிவதால், நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்கவே தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியதாகவும், தற்போது எழுத்து மூலமாக ஆலோசனையைக் கேட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் காலதாமதம், நீதிமன்றத்தைச் சமாளிக்கவும், கர்நாடகத் தேர்தல் முடியும் வரை தள்ளிப்போடவும் உதவும் என்று மத்திய அரசு கணக்குப் போடுவதாகக் கூறுகிறார்கள். இதில் ஏதேனும் பிரச்னை வந்தால், கர்நாடகா இப்போது சொல்வதுபோல ஒரு குழுவை மட்டும் அமைக்கலாம் என்கிற முடிவை மத்திய அரசு எடுக்கக்கூடும் என்கிறார்கள்.

‘‘தமிழக அரசை சமாளித்து விடலாம், கர்நாடகா தேர்தல்தான் இப்போது முக்கியம்’’ என்கிறார் சீனியர் மத்திய அமைச்சர் ஒருவர். நாடாளுமன்றத்தில் தினமும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காகக் குரல் கொடுக்கும் தமிழக எம்.பி-க்கள் அதற்குமேல் கடும் நடவடிக்கைக்குத் துணிவார்களா என்பதை இனி பார்க்க வேண்டும்.

- டெல்லி பாலா