Published:Updated:

அம்மா பெயரில் கட்சி... கொடியில் ஜெ. படம்!

அம்மா பெயரில் கட்சி... கொடியில் ஜெ. படம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மா பெயரில் கட்சி... கொடியில் ஜெ. படம்!

தினகரன் சுறுசுறு

அ.தி.மு.க-வைக் கைப்பற்றப் போராடிய டி.டி.வி.தினகரன், இதோ புதுக்கொடி ஏந்தப் போகிறார்!

‘‘தமிழக மக்களின் பேரன்பைப் பெற்ற நாம், நமது லட்சியமான ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுக்கும் வரை’ அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமாகப் பயணிக்க, புதிய கழகத்தின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்தி, கழகக் கொடியேற்றிடும் நிகழ்ச்சி மேலூரில் நடைபெற உள்ளது” என்று உற்சாகமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். இதோ தமிழ்நாட்டில் மேலும் ஒரு கட்சி!

அ.தி.மு.க-வை சுமார் 30 ஆண்டுகளாக தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த சசிகலாவும், அவரின் உறவுகளுமே இப்போது அ.தி.மு.க-வுக்கு எதிராகப் புதிய இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளார்கள். அ.தி.மு.க-விலிருந்து தினகரன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும், தன் ஆதரவாளர்களை வைத்து முதல் பொதுக்கூட்டத்தை மேலூரில் பிரமாண்டமாக நடத்தினார் தினகரன். அதே மேலூரில்தான், இப்போது தனது அரசியல் கட்சியின் துவக்க விழாவையும் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார். தினகரன் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சி குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.

அம்மா பெயரில் கட்சி... கொடியில் ஜெ. படம்!

“அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது என்பது எதிர்காலத் திட்டம். அதுவரை அடையாளமாக ஓர் இயக்கம் வேண்டும். தினந்தோறும் தன்னை வந்து சந்திக்கும் ஆதரவாளர்களை ஏதாவது ஒரு குடையின்கீழ் ஒன்று சேர்க்க தினகரன் திட்டமிட்டுள்ளார். அரசியல் இயக்கம் இல்லாமல் களத்தில் அரசியல் செய்ய முடியாது என்றுதான், புதிய கட்சியைத் தினகரன் ஆரம்பிக்கிறார். கட்சி துவங்கும் திட்டத்தைப் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் தினகரன் நேரில் போய்ச் சொன்னார். சசிகலாவும் மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்துவிட்டார். இதுவரை சசிகலா குடும்பத்தில் இருந்த அனைவரும் கோலோச்சியது போல இந்தக் கட்சி இருக்காது. தினகரனின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுபவர்கள் மட்டும் இருக்கலாம். மற்றவர்கள் இதில் செல்வாக்குச் செலுத்த முடியாது. ‘இந்தச் சுதந்திரம் இருந்தால்தான் தன்னால் கட்சியை நடத்த முடியும் என்று சசிகலாவிடம் தினகரன் சொன்னார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். புதிய கட்சியை ஆசீர்வதித்து சசிகலா ஒரு கடிதம் அனுப்புவார். அதனை மேலூர் கூட்டத்தில் தினகரன் வெளியிடுவார்” என்று சொல்கிறார்கள் அவர்கள்.

தை மாதமே தனிக்கட்சியைத் தொடங்கும் ஐடியாவில் தினகரன் இருந்தபோது, சில சட்டச் சிக்கல்கள் எழுந்தன. ‘தனிக்கட்சி வேண்டாம்’ என்று தினகரன் அணிக்குள் சிலரே கருத்துச் சொன்னார்கள். குறிப்பாக, தினகரனை ஆதரித்ததால் பதவிநீக்கம் செய்யப்பட்ட 18      எம்.எல்.ஏ-க்களின் எதிர்காலத்துக்கு அது நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்ற பயம் இருந்தது. அதனால் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் போன்றவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், கட்சித் தொடங்கும் முடிவை அவர் தள்ளிப்போட்டார். இதைத் தொடர்ந்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வழக்கு தாக்கல் செய்தது. அதில், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கவும், அவர் கோரும் கட்சியின் பெயரை அவருக்கு வழங்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் உற்சாகமான தினகரன், அதன் பிறகு தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அனைத்திந்திய அம்மா அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர் அம்மா திராவிடர் கழகம் என மூன்று பெயர்களில் எந்தப் பெயரைத் தேர்ந்தெடுப்பது என்று கருத்துகளைக் கேட்டறிந்தார். தினகரன் உள்ளிட்ட பலருக்கும் ‘அனைத்திந்திய அம்மா அ.தி.மு.க’ என்ற பெயரே விருப்பமாக இருந்துள்ளது. அ.தி.மு.க-வின் கறுப்பு வெள்ளை சிவப்புக் கொடியில் சில மாற்றங்களைச் செய்து, அதையே கட்சிக் கொடியாக அறிவிக்கவுள்ளனர். கொடியில், ஜெயலலிதாவின் முகம் இடம்பெறும்.

அம்மா பெயரில் கட்சி... கொடியில் ஜெ. படம்!

கட்சியின் பெயர் மற்றும் கொடியை சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்தே அறிவிக்கும் திட்டத்தில் முதலில் தினகரன் இருந்தார். ஆனால், எங்காவது பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, அங்கே பெயரையும் கொடியையும் அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அதனால், சென்டிமென்டாக மேலூரைத் தேர்வுசெய்தார். மேலூரில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்குக் கூட்டிய கூட்டத்தைவிட, இப்போது கூடுதலான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

‘‘பெங்களூரு சிறையில் சசிகலாவை திங்கள்கிழமை மீண்டும் தினகரன் சந்தித்தித்துள்ளார். அந்தச் சந்திப்பில் கட்சியின் கொடி மற்றும் பெயரை இறுதிசெய்துள்ளார்கள். அப்போது, சசிகலா இரண்டு கடிதங்களைத்  தினகரனிடம் வழங்கியுள்ளார். அந்த இரண்டு கடிதங்களும், தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கப்பட வேண்டியவை. கட்சியின் பொறுப்பாளராக சசிகலா இருந்தாலும் முழு அதிகாரமும் தினகரன் வசம் இருக்கும். சசிகலா வழங்கிய இரண்டு கடிதங்களையும் கட்சியைப் பதிவுசெய்யும்போது தேர்தல் ஆணையத்தில் வழங்க உள்ளார் தினகரன்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

‘தற்காலிகத் தீர்வு தனிக்கட்சி... நிரந்தரத் தீர்வு அ.தி.மு.க’ என்ற நிலையில் புதிய கட்சியின் துவக்க விழா நடக்கிறது.

- அ.சையது அபுதாஹிர்