Published:Updated:

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

ழுகார் நம்முன் ஆஜரானதும், ‘‘கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாள்கள் நடந்த சி.பி.ஐ விசாரணை முடிந்துள்ளதே?’’ என்ற கேள்வியைத் தூக்கிப் போட்டோம்!

‘‘கிடுக்கிப்பிடி கேள்வியாக இருக்கிறதே?” என்ற கழுகார், ‘‘கார்த்தியை சி.பி.ஐ நெருக்கி வைத்து விசாரணை செய்து வருகிறது. அவரை சி.பி.ஐ அதிகாரிகள் அமுக்கும் வேகத்தைப் பார்த்தால், திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் சில காலம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் போலிருக்கிறது. டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சி.பி.ஐ நீதிபதி சுனில் ராணாவின் நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணை நடைபெறும்போதெல்லாம்,  சி.பி.ஐ இணை இயக்குநர் வினீத் விநாயக் நேரில் வந்து முழுமையாக வழக்கின் போக்கைக் கவனிக்கிறார். நீதிமன்றத்துக்கு சிதம்பரமும் நளினி சிதம்பரமும் தவறாமல் வந்தனர். கடந்த முறை கார்த்தி ஆஜர்படுத்தப்பட்டபோது கோபண்ணா, கே.எஸ்.அழகிரி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை, போலீஸார் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கவில்லை. டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் எவரும் வந்து அவரைப் பார்க்கவில்லை. இவ்வளவுக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில்தான், சி.பி.ஐ நீதிமன்றம் இருக்கிறது. நாடாளுமன்றமும் நடந்துகொண்டிருப்பதால், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லியில்தான் உள்ளனர். ‘இருந்தும் யாரும் எட்டிப் பார்க்கவில்லையே’ என்று ப.சிதம்பரம் வருத்தப்பட்டாராம்.’’

‘‘விசாரணையில் கார்த்தி என்ன சொன்னாராம்?’’

‘‘ஏற்கெனவே கார்த்தியை மும்பைக்குக் கூட்டிச் சென்றனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்திக்கு லஞ்சம் தந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ள அந்த நிறுவனத்தின் இயக்குநர் இந்திராணி முகர்ஜி யுடன் வைத்து விசாரணை நடத்தினர். நான்கு மணி நேரம் நடந்த விசாரணையின்போது இந்திராணி சொன்னதை யெல்லாம் கார்த்தி மறுத்தாராம். ஒரு கட்டத்தில் இந்திராணி கோபமாகி, ‘உங்கள் அப்பா வையும் உங்களையும் நான் பார்த்ததும் உண்மை. உங்களிடம் பணம் தருவதாக ஒப்புக் கொண்டதும் உண்மை. நீங்கள் சொன்ன கணக்குகளில் பணம் போட்டதும் உண்மை. ஆனால், என்னிடமே பொய் சொல்கிறீர் களே?’ என முகத்துக்கு நேராக கார்த்தியிடம் கேட்டாராம்.’’

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

‘‘அப்புறம் என்ன நடந்தது?’’

‘‘மார்ச் 10-ம் தேதி சனிக்கிழமை திகார் சிறைக்குத் திடீரென கார்த்தியுடன் வந்தார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். அங்கு அடைக்கப் பட்டுள்ள கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரராமனுடன் நேருக்கு நேர் வைத்து விசாரித்துள்ளனர். பாஸ்கரராமன் கொட்டிய வாக்குமூலங்களின் அடிப்படை யில்தான் இந்த விசாரணை நடந்தது. ‘ஐ.என்.எக்ஸ் வழக்கில் பணம் பெற்ற அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் துடன் தனக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது’ என்று கார்த்தி தொடர்ந்து சொல்கிறார். இந்நிலையில், மார்ச் 7, 8 தேதிகளில் அந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் சி.பி.ஐ திடீர் சோதனை நடத்தியது. அப்போது, கார்த்தியின் மொபைல் பில், விமான டிக்கெட் போன்றவற்றுக்கான கட்டணம் அந்த நிறுவனத்தால் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளது சி.பி.ஐ. இதுதவிர, நான்கு ஹார்டு டிஸ்குகளும் கிடைத்தன. இவற்றை வைத்தே கார்த்தியிடம் கடைசி மூன்று நாள்கள் விசாரணை நடந்துள்ளது. ‘உங்களுக்குச் சம்பந்த மில்லாத நிறுவனம் எதற்காக உங்களுக்கு இந்தச் செலவுகளைச் செய்தது’ என்று கேட்டார்களாம்’’

‘‘ம்!”

‘‘மார்ச் 12-ம் தேதி விசாரணை முடிந்து அவர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டார். அவரின் அவசர ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. சிறைவாசம் உறுதியானதும் கார்த்தி முகத்தில் கவலை ரேகைகள். திகார் சிறையை நினைத்து அவர் பீதியடைந்தாராம். ‘என் அப்பா மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர். அவரது நடவடிக்கை காரணமாகக் கைதுசெய்யப்பட்ட பலரும் திகார் சிறையில் உள்ளனர். அவர்களால் எனது உயிருக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, குளியலறையுடன் கூடிய தனி அறை ஒதுக்க வேண்டும்’ என்று கேட்டார். அதை நிராகரித்த நீதிபதி, சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டார். அவருக்கு வீட்டு உணவும் மறுக்கப்பட்டது. மருந்து மற்றும் மூக்குக்கண்ணாடி கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டது. அமலாக்கத் துறை அவரைக் கைதுசெய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், விசாரணை நடத்தத் தடையில்லை. எனவே, சிறைக்குள் அவர்கள் விசாரிக்க வருவார்களோ என்று கார்த்தி கவலைப்படுகிறார்.’’ 

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

‘‘நியாயமான கவலைதான்!”

‘‘அடுத்து நான் சொல்லப்போவது சிறை மேட்டர்தான். ‘பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, முதலமைச்சர் சித்தராமையா கூறியதால்தான் சலுகைகள் வழங்கினேன்’ எனக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி சத்தியநாராயணா மனுத் தாக்கல் செய்திருப்பது கர்நாடகாவில் தீயாய் எரிகிறது. ‘என் உத்தரவுப்படி சிறையில் சசிகலாவுக்கு மெத்தை, தலையணை வழங்கப்பட்டதாக, சத்திய நாராயணா கூறியது பொய். தமிழகத்திலிருந்து எனது அலுவலகத்துக்குக் கடிதங்கள் வந்தன. மேலும், தமிழகக் குழுவினர் என் அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தனர். எனவேதான், சட்டத்துக்கு உட்பட்டு, சிறை விதிமுறைப்படி, சசிகலாவுக்கு வசதிகள் செய்து தரும்படி கூறினேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சித்தராமையா.”

‘‘சசிகலாவுக்காகக் கடிதம் அனுப்பியவர்கள் யார்? அவரது அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுத்த குழு எது?’’

‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன். ‘சிறையில் சாதாரணக் கைதியாகவே சசிகலா நடத்தப்படுகிறார். 63 வயது சசிகலாவுக்குப் பல்வேறு நோய்கள் தாக்கியுள்ளதால் சிறையில் சில அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும்’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் கொடுத்தவர் தமிழக காங்கிரஸ் பிரமுகர் ஒருவராம். சசிகலாவின் கணவர் நடராசன் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த காங்கிரஸ் பிரமுகர் இதைச் செய்தாராம். சமீபகாலமாக அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகக் கருத்து சொல்லி, சர்ச்சைக்கு ஆளானவர் அவர்.”

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

‘‘குழுவாகச் சென்று கேட்டவர்கள் யார்?’

‘‘அப்படி யாரும் கேட்கவில்லை என்று சொல்கிறார்கள். கர்நாடக உள்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டியிடம் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேசியதாகச் சொல்கிறார்கள். இதைத் தவிர யாரும் படையுடன் போய்ச் சொல்லவில்லை என்கிறார்கள்.’’

‘‘சசிகலாவின் வருமான வரி ரிட்டர்ன் கொடுத்தாலே பல சலுகைகள் கிடைக்குமே?”

‘‘உண்மைதான். இதைக் கொடுத்தால் சிறையில் முதல் வகுப்புச் சலுகைகள் கிடைக்கும். ஆனால், சுதாகரன் மட்டும்தான் இதைக் கொடுத்துச் சலுகை பெற்றுள்ளாராம். சசிகலா மற்றும் இளவரசியின் ஐ.டி ரிட்டர்ன் சான்றிதழைச் சிறை அதிகாரிகளிடம் கொடுக்கவில்லையாம். இதனால்தான், சிறையில் முதல் வகுப்புச் சலுகை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறதாம். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இதுபற்றிப் பேசுகிறார்களே தவிர, இதற்கான முயற்சியில் இறங்கவில்லையாம்.’’

‘‘புதுக்கட்சியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரே தினகரன்?’’

‘‘ஆமாம். அ.தி.மு.க-வைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்வரை இந்தப் புதிய கட்சியை நடத்துவாராம் தினகரன். அதன் மூலமாக  தமிழ்நாடு முழுக்க டூர் போவதும் அவரது திட்டம். சமீபத்தில் விழுப்புரம், நாகர்கோவில் வட்டாரத்துக்கு டூர் போனார். அங்கு கூடிய கூட்டம் தினகரனை மகிழ்ச்சியடைய வைத்ததாம். இந்த நிலையில், பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் அவருக்குத் தூது சென்றுள்ளன. ஆனால், பிடிகொடுக்கவில்லையாம் தினகரன்’’ என்ற கழுகார், சட்டெனப் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: திகார் வேண்டாம்! - திக் திக் கார்த்தி

மார்ச் 12-ம் தேதி சேலம் சென்றிருந்தார் முதல்வர். ரயிலில் சென்றபோதே சேலம் மாவட்டத்தில் அரசுத் துறைகள் செயல்பாடுகள் பற்றி, தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுத் தகவல்களைக் குறிப்பெடுத்துக்கொண்டாராம். மின்துறை மற்றும் பொதுப்பணித் துறையின் ஒரு பிரிவு ஆகிய இரு துறைகளின் அதிகாரிகளையும் இரண்டு மணி நேரம் வறுத்தெடுத்தாராம். மற்ற துறையினருக்கும் அர்ச்சனை அரங்கேறியது.

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்த குட்டிக் கட்சித் தலைவர் ஒருவர் கூட்டணி பற்றிப் பேச, ‘‘வேண்டுமானால் உங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு வாருங்கள்’’ என்றாராம் ரஜினி. சிரித்தபடி வெளியே வந்த அந்தத் தலைவரோ, ‘‘ரஜினி முதல்வர்... நான் துணை முதல்வர்’’ என்று உளறிக்கொட்டி வருகிறாராம்.

பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் கோட்டையில் நடந்தபோது, ‘‘டாஸ்மாக் நிறுவனத்தின் மொத்த, சில்லறை வர்த்தகத்தைத் தனியாரிடம் கொடுக்கலாம்’’ என்று சொல்லப்பட்டதாம். கட்சிக்காரர்களைக் குளிர்விக்க இந்த ஏற்பாடாம்.

அ.தி.மு.க-வில் தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த சுமார் 2,000 பேரை எடப்பாடி நீக்கிவிட்டார். காலியான இடங்களுக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் கட்சியினருக்குக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் பதவிகளை வாரிவழங்க ஏற்பாடாகிவருகிறது.

பாலிடெக்னிக் ஆசிரியர் நியமனத் தேர்வில் ஊழல் நடந்ததால், பலர் கைதாயினர். தேர்வும் ரத்தானது. வழக்கு நீதிமன்றம் போய்விட்டது. அதைத் திறம்பட நடத்தவும், இனிமேல் எந்த ஊழலும் இல்லாமல் தேர்வுகளை நடத்தவும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்-ஸை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நியமித்துள்ளார்கள். ரொம்பக் கறார்ப் பேர்வழியாம் இவர்.