Published:Updated:

“மாவட்டத்தில் எது நடந்தாலும் மந்திரிதான் காரணமா?”

“மாவட்டத்தில் எது நடந்தாலும் மந்திரிதான் காரணமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“மாவட்டத்தில் எது நடந்தாலும் மந்திரிதான் காரணமா?”

ராமநாதபுரத்தில் சிலை சர்ச்சை

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டு, திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதனால் எழுந்த போராட்டங்கள் முடிவுக்கு வராத நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிலை பிரச்னையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“மாவட்டத்தில் எது நடந்தாலும் மந்திரிதான் காரணமா?”

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக (1996-2001) இருந்தவர் ‘சோ.பா’ என்று அழைக்கப்பட்ட சோ.பாலகிருஷ்ணன். இவர், காங்கிரஸ் மற்றும் மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய குடும்பத்தினருக்குச் சொந்தமான சோனை மீனாள் கலை-அறிவியல் கல்லூரி, முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால் என்ற இடத்தில் உள்ளது. அந்தக் கல்லூரி வளாகத்தில், சோ.பாலகிருஷ்ணனின் சிலையை அவர் குடும்பத்தினர் அமைத்துள்ளனர். அதை, இந்த மாதம் 11-ம் தேதி த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைப்பதாக இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, சுந்தர்ராஜ், சுப.தங்கவேலன், பெரியகருப்பன், சத்தியமூர்த்தி மற்றும் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ பாண்டி ஆகியோர் விழாவில் பங்கேற்க இருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சோ.பாலகிருஷ்ணனின் மகனும், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட த.மா.கா தலைவருமான சோ.பா.ரெங்கநாதன் மேற்கொண்டு வந்தார். ஆனால், அன்றைய தினத்தில் சோ.பாலகிருஷ்ணனின் சிலையைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. ‘தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனின் குறுக்கீடுதான் அதற்குக் காரணம். விழாவுக்குத் தன்னை அழைக்கவில்லை என்ற கோபத்தில் சிலையைத் திறக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்’ என்று, ‘ராமநாதபுரம் யாதவர் இளைஞர் பேரவை’ என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

“மாவட்டத்தில் எது நடந்தாலும் மந்திரிதான் காரணமா?”

இது குறித்து ரெங்கநாதனிடம் பேசினோம். “அரசியல் நேர்மைக்கு அடையாளமாகத் திகழ்பவர், என் தந்தை சோ.பாலகிருஷ்ணன். அவர் மீது ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரும் மதிப்பும் அன்பும் கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே, எங்கள் கல்லூரி வளாகத்தில் என் தந்தையின் சிலையை அமைத்துள்ளோம். அரசு விதிகளின் படி, எங்களது சொந்த இடத்தில், சாலையிலிருந்து 110 மீட்டர் தூரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சிலையை நிறுவியுள்ளோம். சிலையை ஜி.கே.வாசன் திறக்கவிருந்தார். என் தந்தைக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தனர். ஆனால், ‘சிலையைத் திறக்க அனுமதி இல்லை. மீறி திறந்தால், உங்களைக் கைது செய்வதுடன் கல்லூரிக்கும் சீல் வைத்து விடுவோம்’ என்று கலெக்டர் கூறினார். அதனால், விழாவை ஒத்திவைத்துள்ளோம்” என்றார்.

“இதில் அமைச்சர் மணிகண்டனின் தலையீடு உள்ளதாகக் கூறப்படுகிறதே?” என்று ரெங்கநாதனிடம் கேட்டதற்கு, “அதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை. அதனால், அவரை அழைக்கவில்லை. இந்த நிலையில், என் கவனத்துக்கு வராமலே அமைச்சர்மீது புகார் கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சரே என்னிடம் பேசினார். அவரிடம் இதுபற்றிச் சொல்லிவிட்டேன். உரிய அனுமதி கிடைத்தவுடன் அப்பாவின் சிலைத் திறப்பு விழா நடத்தப்படும்’’ என்றார்.

“மாவட்டத்தில் எது நடந்தாலும் மந்திரிதான் காரணமா?”

இது குறித்து அமைச்சர் மணிகண்டனிடம் கேட்டோம். “எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மாவட்டத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மந்திரிதான் காரணம் என்று சொல்வது கொடுமையாக இருக்கிறது. யாதவ மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதைக் கெடுப்பதற்காக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் செய்யும் வேலைதான் இது. தினகரனின் கைக்கூலியாக எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரான எம்.ஏ.முனியசாமி செயல்படுகிறார். இவரை, டி.டி.வி அணியைச் சேர்ந்த ஜி.முனியசாமி போன்றவர்கள்தான், எனக்கு எதிராகச் செயல்பட வைக்கின்றனர். சொந்த இடத்தில் சிலை வைப்பதற்கான அனுமதி கிடைக்க இரண்டு மாதங்களுக்கு மேலாகும். அமைச்சராக இருக்கும் நானே அம்மாவின் சிலையைத் திறப்பதற்கான அனுமதிக்காக மூன்று மாதங்கள் காத்திருக்கிறேன். எனவே, சட்டப்படிதான் இது நடந்திருக்கிறது. அரசியலில் தூய்மையான, நேர்மையான மனிதராக விளங்கிய சோ.பா-வின் சிலை திறப்புக்கு உரிய அனுமதி கிடைத்து, அந்தச் சிலை திறப்புக்கு என்னை அழைத்தால், நான் முதல் ஆளாக அந்த விழாவில் பங்கேற்பேன்’’ என்றார்.

தன் சொந்தக் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் அமைச்சர் மணிகண்டன், சோ.பா சிலைத் திறப்பு விவகாரத்திலும் அடிபடுவார் என்பது யாரும் எதிர்பார்க்காதது.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி