Published:Updated:

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

எஸ்.ஐ செய்யும் ஏடாகூடம்!

“முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜுக்கு வலதுகரம் என்பதால், காவல்துறை உயர் அதிகாரிகளை மதிப்பதில்லை. புகார் கொடுக்க வருபவர்களை வெளுத்து வாங்குகிறார்’’ என்று சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ நடராஜுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

எஸ்.ஐ நடராஜின் நடவடிக்கைகள் குறித்து மேட்டூர் வட்டாரத்தில் புகார்களை அடுக்கு கிறார்கள். ‘‘மேட்டூரைச் சேர்ந்த நடராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊருக்கு அருகிலுள்ள பூலாம்பட்டி ஸ்டேஷனில் எஸ்.ஐ-யாக சில வருடங்கள் பணியாற்றினார். அப்போது முதல்வரின் அண்ணன் கோவிந்தராஜுக்கும் நடராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கோவிந்தராஜுக்கு மனைவி இல்லை. மகனுக்கும் மகளுக்கும் திருமணத்தை முடித்துவிட்ட அவர், உள்ளூரில் தனக்கென ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு ஜாலியாகப் பொழுதைக் கழித்துவருகிறார். அந்த குரூப்பில் எஸ்.ஐ நடராஜனும் ஒருவர்.

முதல்வரின் அண்ணனே நம் பக்கம் என்ற தைரியத்தில் யாரையும் மதிப்பதில்லை. நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மிதப்பு அவருக்கு. அதனால், தடாலடியாக செயல்படுவது இவரது வழக்கம். ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்க வருபவர்களைக்கூட அடித்து உதைப்பார். கணவன் முன் மனைவியையும், மனைவி முன் கணவனையும் அடிப்பது   என்றால், இவருக்கு மிகவும் பிடிக்கும். யாராவது அட்வைஸ் செய்தால் இவருக்குப் பிடிக்காது. வரும் புகார்களின் அடிப்படையில், இவரை சேலம் எஸ்.பி வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் போட்டால், கோவிந்தராஜ் தரப்பினர் பேசி அந்த டிரான்ஸ்ஃபரை ரத்து செய்துவிடுவார்கள். சமீபத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான சேகரை எஸ்.ஐ நடராஜ் தாக்கியுள்ளார். அதையடுத்து, சேலம் அதிரடிப்படைக்கு இவர் மாற்றப்பட்டார். 24 மணி நேரத்தில் நடராஜன் மீண்டும் கொளத்தூருக்கே வந்துவிட்டார்’’ என்றார்கள்.

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

பாதிக்கப்பட்ட சேகரைச் சந்தித்தோம். “நான் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிகிறேன். இரண்டு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளேன். குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் நானும் என் மனைவியும் குழந்தையை மருத்துவமனைக்குச் கூட்டிச் சென்றோம். அப்போது, என் மாமா கோவிந்தனிடம் ஆர்.சி புக் இல்லாததால் கொளத்தூர் போலீஸ் அவரைப் பிடித்து வைத்திருப்பதாக போன் வந்தது. அப்படியே ஸ்டேஷனுக்குப் போனோம். எஸ்.ஐ-யிடம், ‘சார்... அவரு எங்க மாமா. எதற்காக சார் காலையிலிருந்து உக்கார வெச்சிருக்கீங்க’ என்று மரியாதையுடன் கேட்டேன். அதற்கு அவர், ‘மூடிட்டு வெளியே போடா’ என்று சொன்னார். ‘என்ன சார் இப்படிப் பேசுறீங்க. நான் ஒரு எல்லைப் பாதுகாப்பு படை வீரன்’ என்று சொன்னேன். அதைக் கேட்காமல், கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி, என் கன்னத்தில் அறைந்தார். என் மனைவியும் குழந்தையும் கதறி அழுதும், விடாமல் என்னை அவர் தாக்கினார்.

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

மனைவி, குழந்தைகள், சொந்தம், பந்தம் என எல்லோரையும் பிரிந்து எல்லையில் இருக்கும்போதுகூட, நான் கண்ணீர் சிந்தியதில்லை. ஆனால், இந்த எஸ்.ஐ-யால் கதறியழும் சூழலுக்கு ஆளானேன். அவர் அடித்ததில் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு, மூன்று நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்திருக்கிறேன்’’ என்றார்.

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

வழக்கறிஞர் செந்தில்குமார், ‘‘எஸ்.ஐ நடராஜ் வருமானம் பார்ப்பதற்காக பாலாற்றில் மணல் அள்ளச் சொல்லி மணல் புரோக்கரை அடித்தார். அந்த புரோக்கர் மணல் அள்ளி வந்தபோது விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த னர். கொளத்தூரில் பணியில் இருந்த மின் ஊழியர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றார் என்று அவரை நடராஜ் தாக்கினார். அதைக் கண்டித்து, மின் ஊழியர்கள் மூன்று நாள்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். கொளத்தூர் முழுவதும் ஒருநாள் மின்சாரம் நிறுத்தப்பட்டது. எஸ்.ஐ நடராஜ் இப்படிப் பல அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகிறார். இவரது நடவடிக்கைகளைக் கண்டித்து பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அவரைக் கண்டித்து நான் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன். அந்தளவுக்கு அவரது அராஜகம் உள்ளது’’ என்றார்.

எஸ்.ஐ நடராஜிடம் பேசியபோது, ‘‘அப்படியெல்லாம் நான் யாரையும் அடிக்கவில்லை. யாரோ உங்களிடம் தவறாகச் சொல்லியுள்ளனர். முதல்வரின் அண்ணனுக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் கிடையாது’’ என்றார்.

சேலம் எஸ்.பி ராஜனிடம் பேசியபோது, ‘‘இந்தச் சம்பவம் பற்றி தகவல் வந்ததையடுத்து விசாரிக்கச் சொன்னேன். முதலில் எஸ்.ஐ மீது தவறு இருப்பதாக சொன்னார்கள். பிறகு விசாரணையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தரப்பில் ஏதோ முன்விரோதமாகச் செயல்படுகிறார்கள் என்று தகவல் கொடுத்தார்கள். சிறப்புப் பிரிவு போலீஸாரை வைத்து மீண்டும் தெளிவாக விசாரிக்கச் சொல்கிறேன். இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை’’ என்றார்.

முதல்வர் அண்ணனிடம் நட்பு... பொதுமக்களிடம் வம்பு...

இதுபற்றி விளக்கம் கேட்பதற்காக முதல்வரின் அண்ணன் கோவிந்தராஜுவிடம் பேச பலமுறை முயற்சி செய்தோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்